Last Updated : 28 Feb, 2016 09:23 AM

 

Published : 28 Feb 2016 09:23 AM
Last Updated : 28 Feb 2016 09:23 AM

மன்னா.. என்னா? - மக்கள் ஆதரவும்... கருத்துக்கணிப்பும்!

மன்னர் தலைமையில் நடக்கும் மந்திரி பிரதானிகள் கூட்டத்தில் மகாமந்திரி உரையாற்றுகிறார்.. ‘‘மன்னா! நாட்டின் அடுத்த மன்னராக ஆகிவிடும் கனவில் பலர் மிதக்கிறார்கள். பலர் கண்ணாடி முன் நின்று பதவிப் பிரமாணமே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கவலையின்றி இருக்கிறீர்களே. உங்களுக்கு எத்தனை பேரின் ஆதரவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?’’

மன்னர் கிருதாவை சொறிந்து சின்சியராக யோசிப்பார் என்று எதிர்பார்த்து மந்திரிக் கூட்டம் அவரையே பார்த்துக்கொண்டிருக்க.. குபுக்கென்று எழுந்த மன்னர் குபீரென்று சிரித்தார்.

‘‘ஹா..ஹ்..ஹா! மிஞ்சிப்போனால் 2 சதவீத மக்கள்தான் எனக்கு எதிராக இருப்பார்கள். மீதி 98 சதவீத மக்களும் இந்த நாட்டில் என் அனுதாபிகள்தான். விரைவில் இதை நிரூபிக்கிறேன்.

யாரங்கே!

மன்னரை ஆதரிப்போர் யார், எதிர்ப்பவர்கள் யார்? என்று நம் தேசம் முழுவதும் உடனடியாக கருத்துக்கணிப்பு நடத்த உத்தரவிடுகிறேன். அதன் முடிவுகள் உடனுக்குடன் என்னை வந்து சேரவேண்டும்.’’

மன்னர் உத்தரவுப்படி, கருத்துக்கணிப்புகள் நடக்கின்றன. ஏராளமானோரை சந்தித்து கருத்து கேட்ட பிறகு, மன்னரிடம் வருகின்றனர் அரண்மனை சிப்பந்திகள்.

‘‘மன்னா! ஒரு லட்சத்து பதினாலாயிரத்து முந்நூத்தி எழுபத்தெட்டு பேரை சந்தித்துவிட்டோம். ஆனால், என்ன கொடுமை என்றால் அந்த ஒரு லட்சத்து பதினாலாயிரத்து முந்நூத்தி எழுபத்தெட்டு பேரும் நீங்கள் கூறிய அந்த 2 சதவீத வகையறாவை சேர்ந்தவர்கள். உங்களை ஆதரிக்கிற 98 சதவீத வகையறாக்களில் ஒரு பயல்கூட இன்னும் எங்கள் கண்ணில் படவில்லை.’’

இதைக் கேட்டு மன்னர் மூர்ச்சையாகிவிட்டாராம்! அரண்மனை வைத்தியர் விரைந்து வந்துகொண்டிருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x