Published : 23 Dec 2015 10:23 AM
Last Updated : 23 Dec 2015 10:23 AM

ராம்விருக்-ஷ பேனிபுரி 10

இந்தி இலக்கியப் படைப்பாளி, விடுதலை வீரர்

இந்தி இலக்கியப் படைப்பாளியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராம்விருக்-ஷ பேனிபுரி (Ramvriksha Benipuri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பிஹார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பேனிபுர் கிராமத்தில் (1899) பிறந்தார். கிராம பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளம் வயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், முஸாபர்பூர் கல்லூரியில் சேர்ந்தார்.

# ரவுலட் சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியிருந்த நேரம் அது. காந்திஜியின் அறைகூவலை ஏற்று கல்லூரிப் படிப்பைத் துறந்தார். விடுதலை இயக்கத்தில் இணைந்தார்.

# ஜெயப்பிரகாஷ் நாராயணின் நெருங்கிய சகாவாக இருந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது, ஹசாரிபாக் சிறையில் இருந்து அவர் தப்பிச் செல்ல துணை நின்றார். பின்னாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

# சிறந்த பேச்சாளர். இவரது பேச்சு, செயல் அனைத்திலும் தேசிய உணர்வு நிறைந்திருக்கும். ஆங்கில ஆட்சியைக் கண்டித்து புரட்சிகரமான கட்டுரைகள், நாடகங்களை எழுதிக்கொண்டே இருப்பார். இதனால் அடிக்கடி கைது செய்யப்பட்டார். போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

# சிறையில் இருக்கும்போதும், மக்களிடம் சுதந்திரக் கனலை மூட்டும் படைப்புகளை எழுதுவார். விடுதலையாகி வெளியே வரும்போது, மூன்று, நான்கு புத்தகங்களின் கையெழுத்து பிரதிகளுடன் வருவார். அவை தற்போதும் இந்தி இலக்கியத்தின் பொக்கிஷங்களாக போற்றப்படுகின்றன. இவரது பெரும்பாலான படைப்புகள் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டவை.

# ‘பதிதோங் கே தேஷ் மே’, ‘அம்பபாலி’ உள்ளிட்ட நாவல்கள், ‘மாட்டி கீ மூர்தே’ கதைத் தொகுப்பு, ‘சிதா கே ஃபூல்’, ‘லால் தாரா’, ‘கைதி கீ பத்னீ ’, ‘கெஹு அவுர் குலாப்’ உள்ளிட்ட கட்டுரைகள், ‘சீதா கி மான்’, ‘சங்கமித்ரா’, ‘அமர்ஜோதி’, ‘சகுந்தலா’, ‘நேத்ர தான்’ உள்ளிட்ட நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

# இவரது படைப்புகளில் தேசப்பற்று, இலக்கியப் பற்று, தியாகத்தின் மகத்துவம் ஆகியவை கருப்பொருளாக அமைந்திருக்கும். நீண்ட கதைகளையும் எழுதியுள்ளார். இவரது நாடகங்களில் பெரும்பாலானவை சரித்திர நாடகங்கள். இவர் சிறந்த பத்திரிகையாளரும்கூட. ‘யுவக்’ என்பது உட்பட ஏறக்குறைய ஒரு டஜன் பத்திரிகைகள், இதழ்களை வெளியிட்டுள்ளார்.

# சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் நோக்கில் தனது பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற தாகம் கொண்டிருந்தார்.

# மாநிலங்களவை உறுப்பினராக 1957-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். எளிமையின் வடிவம், உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர். புரட்சி வீரர், உன்னதமான தேச பக்தர், தலைசிறந்த இலக்கியவாதி, சிறந்த பத்திரிகையாளர் என்று போற்றப்பட்டார்.

# சிறந்த படைப்பாளியும், மனிதநேயம் மிக்கவருமான ராம்விருக்-ஷ பேனிபுரி 69-வது வயதில் (1968) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது. பிஹார் மாநில அரசு இவரது பெயரில் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கி வருகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x