Published : 21 Jun 2021 10:09 AM
Last Updated : 21 Jun 2021 10:09 AM

திரைப்படச்சோலை 42: தண்டிக்கப்பட்ட நியாயங்கள்

சென்னை -ஜெனரல் ஆஸ்பத்திரி. நியூரோ சர்ஜன் டாக்டர் பிரபு (சிவகுமார்) கபாலத்தை திறந்து ஒரு ஆபரேஷன் செய்யறாரு. மறுநாள் காலையி்ல் அவர் குளிச்சிட்டிருக்கும்போது ஆஸ்பத்திரில இருந்து இவரோட அசிஸ்டெண்ட் சர்ஜன் போன் பண்ணி -நீங்க ஆபரேஷன் பண்ணின நோயாளிக்கு ஜூரம் அதிகமா இருக்குன்னு சொல்றாரு. இப்படிப்பட்ட சிக்கலான ஆபரேஷனுக்கப்புறம் நோயாளிக்கு ஜூரம் வர்றது சகஜம். இஞ்ஜக்சன் மேனிடால் 350 எம்.எல்., இஞ்ஜக்சன் லாசிக்ஸ் 200 எம்.எல் இஞ்ஜக்சன் டெக்கட்ரான் 100 எம்.எல்., நரம்பு வழியா குடுங்கன்னு டாக்டர் பிரபு சொல்றாரு.

காலை டிபன் முடிச்சு ஆஸ்பத்திரிக்கு கிளம்பறாரு. மனைவி ராதா (லட்சுமி) ஒரு வெள்ளை சட்டை கொண்டு வந்து தர்றா. பிரிச்சுப் பார்த்தா லேசா கறை இருந்திச்சு. மேலே கோட் போட்டுக்கப் போறீங்க. உள்ளதானே சட்டை இருக்கப் போகுது. பரவால்லே போட்டுட்டு போங்கங்கறா சம்சாரம்.

கறை எங்க இருந்தாலும் கறைதான். அது உடையில விழுந்தாலும், உள்ளத்தில விழுந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாதுன்னு சொல்லி, வேற சட்டை வாங்கிப் போட்டுட்டுப் போறார் பிரபு.

ஸ்கூல்ல கொண்டு போய் மகள் லட்சுமியை (மீனா) இறக்கி விடறாரு. அது தாங்கயூ டாடின்னு சல்யூட் அடிச்சிட்டு ஓடுது.

சாயங்காலம் வெளியில கிளம்பறப்போ -நான் புடவை மாத்தணும் கொஞ்சம் வெளியே போங்கன்னு ராதா சொல்றா.

‘நான் உன் புருஷன்தானே?’ என்கிறான் இவன்.

‘புருஷன்னாலும் வெட்கம் இருக்காதா?’ என்கிறாள் ராதா.

வாரிசு எப்போ

‘உனக்கு பிரசவம் பார்த்தவனே நான்தான். அப்ப வெட்கப்படறதுதானேன்னு கிண்டல் பண்றான். வெளியே அவனை தள்ளி விட்டு புடவை மாற்றுகிறாள்.

ஓவியக்கண்காட்சிக்குப் போறாங்க. அதில முழு நிர்வாண ஓவியத்தை பார்த்து முகம் சுளிக்கிறா ராதா. ‘குழந்தையோட நிர்வாணத்தை தாய் ரசிக்கற மாதிரி, ஒரு ஓவியன் நிர்வாணத்தை ரசிச்சு வரையறான்’ என்கிறார் ஓவியர் ராஜேஷ் (சிவச்சந்திரன்).

‘என்ன கன்றாவியோ இதையெல்லாம் கண்காட்சி வச்சு மக்கள் மனசை கெடுக்காதீங்கன்னு கோவிச்சுட்டு ராதா போயிடறா.

சிதம்பரம் -திருச்சில லீடிங் கிரிமினல் வக்கீல். அவருக்கு மூளை தண்டுவடப்பகுதியில புற்றுநோய். இது ஆபத்தான ஆபரேஷன்னு மற்ற டாக்டர்கள் சொல்றாங்க.

ஒரு பாழடைஞ்ச பங்களாவுல, ஓவியம் வரைங்சிட்டிருக்கிற நண்பன் ராஜேஷை போய் டாக்டர் பிரபு பார்க்கறான். நிர்வாண ஓவியத்தை சகிச்சுக்க முடியாத ராஜேஷ் மனைவி தினம் சண்டை போடறா. அவன் சொத்து பத்து எல்லாம் அவ பேருக்கு எழுதி வச்சு -உனக்குப் பிடிச்ச ஆளைக் கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிட்டு பரதேசி மாதிரி இங்க வந்து தங்கியிருக்கான் ராஜேஷ்.

பிரபு, ராஜேஷை தன் வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றான். அவரது 5 வயது மகள். ஆமை வீட்டுக்குள் புகுவது போல ஓவியம் வரைஞ்சிட்டிருக்கா. ராதாவைப் பார்த்து ‘சாரிம்மா’ உங்ககிட்ட அன்னிக்கு கோபமா பேசிட்டேன் என்கிறான் ராஜேஷ்.

வாரிசு வந்தாச்சு

லண்டனின் பிரபல சர்ஜன் ஏர்ல்வாக்கர் உதவியாளரா இருந்து இதே மாதிரி ‘பிரைன் ஸ்டெம் ட்யூமர்’-ஐ நான் ஆபரேசன் பண்ணியிருக்கேன். அந்த முறையில் சிதம்பரத்துக்கு ஆபரேஷன் செஞ்சு பார்த்திடலாம் என்று சவாலாக சொல்கிறான் பிரபு.

கடுமையான குளிர் ஜூரத்தில இருந்த ராஜேசை வீட்டுக்கு அழைத்து வருகிறான் டாக்டர் பிரபு. சிம்பாலிக்காக GOLDEN FISH- அம்மா, அப்பா குழந்தை என 3 மீன்கள் உள்ள தொட்டிக்குள் BLACK FIGHTER FISH-ஐ போடுவதாக காட்டப்படுகிறது. அதாவது குடும்பத்தில் குழப்பம் வரப்போவதை பூடகமாக சொல்வார் டைரக்டர்.

‘என்னங்க, வீட்டையே ஆஸ்பத்திரி ஆக்கீட்டீங்க?’ என்பாள் மனைவி.

சின்ன வயசிலருந்து கூடப்படிச்சவன். ஜூரத்தில் பினாத்திகிட்டு தனியா படுத்திருந்தான். அதான் இங்க கூட்டீட்டு வந்தேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னை எம்.பி.பி.எஸ் படிக்க வச்சு டாக்டராக்கினதே அவன்தான். அதுக்கு கைமாறா எதையும் அவன் எங்கிட்ட எதிர்பார்க்கலை. அந்த நன்றிக்கடனை தீர்க்க எனக்கு இப்பத்தான் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

நாளைக்கு வாழ்க்கையில சவாலா ஒரு ஆபரேஷன் பண்ணப்போறேன். நெறைய புத்தகங்கள் ரெஃபர் பண்ண வேண்டியிருக்கு. அதனால ராஜேஷை அக்கறையோட கவனிச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்கிறான் பிரபு.

ஆத்து மேட்டு பாபா

‘ஜூரம் அதிகமானா 3 மணி நேரத்துக்கு ஒரு தரம் ஐஸ் ஒத்தடம் குடு!’ கணவனை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை அவளால்.

ஜூரத்தின் உச்சத்தில் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன் தடுமாறி தரையில் விழ, வேறு வழியில்லாமல் அவன் கையை, தன் தோளில் போட்டுத் தூக்கி, அழைத்துப் போய் படுக்கையில் கிடத்துகிறாள் ராதா.

‘டாக்டரான நாங்க எத்தனையோ பெண்களை தொட்டு வைத்தியம் பாக்கறோம். நர்சுகள் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு குளிப்பாட்டி உடையெல்லாம் மாத்தி விடறாங்க!’ என்கிறான் பிரபு.

‘அது உங்களுக்குத் தொழில். அடுத்த ஆண்பிள்ளைக்கு பணி விடை பண்ற அருவருப்பான வேலையிலிருந்து எனக்கு விடுதலை குடுங்க’ கெஞ்சுகிறாள் அவள்.

‘ என் தலைவிதியை நிர்ணயம் பண்ற ஆபரேஷன் நாளைக்கு. அது முடியற வரைக்கும் நீ என்ன சொன்னாலும் என் காதில் ஏறாது!’

‘நாளைக்கு நம்ம திருமண நாள். வழக்கமா கோயிலுக்கு போவோம். நாளைக்கு எப்படி?’

அம்மா படத்துக்கு முன்னால பூஜை பண்ணீட்டு சாயங்காலம் கோயிலுக்குப் போகலாம்!’

விடிந்தது. அம்மா படத்தின் முன் பூஜை முடித்து கணவன் பாதம் தொட குனிந்தாள். கழுத்திலிருந்த தாலி கழண்டு கணவன் காலில் விழுந்தது.

‘என்னங்க இது அபசகுனம்? ’

‘அப்படி பார்க்காதே நாளைக்கு ஆபரேஷன் சக்ஸஸ்ன்னு நெனைச்சுக்க!’ என்று பதில் சொன்னாள்.

எங்கே உன் கண்பார்வை

மறுநாள் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை தலைமேலே தூக்கி சுற்றி உடனடியாக எனக்கு ஒரு முத்தம் கொடு!’ என்று கெஞ்சி வாங்கிக் கொள்கிறான்.

நண்பன் ராஜேஷ் குணமடைந்து நண்பனிடம் விடைபெறுகிறான்.

‘எங்கேடா போகப் போறே?’

‘எங்கே போறேன்னு எனக்கே தெரியாது. ஆனா எங்க இருந்தாலும் உங்க குடும்பத்தை மறக்க மாட்டேன்!’ என்கிறான் ராஜேஷ்.

பத்திரிகையாளர் சந்திப்பு ஆஸ்பத்திரியில்... இந்த வெற்றிக்கு காரணமா எதைச் சொல்லுவீங்க?- பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.

‘ஒரே காரணம் என் மனைவி. தன்னோட குடும்பப் பிரச்சனையைத் தான் மட்டுமே சுமந்துகிட்டு என்னை என் தொழில்ல சாதிக்க துணையா இருந்தவள் என் மனைவி ஒருத்திதான். இந்த வெற்றியை அவளுக்கு

சமர்ப்பிக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஓடி ராதா, ராதா என்று அழைக்கிறான்.

வீடெங்கும் ஒரே நிசப்தம். மாடிக்கு ஓடி தேடினான். படுக்கை மீது ஒரு கடிதம். ‘என் தெய்வத்திற்கு. தூசுபடிந்த ஓவியம் என்றால் துடைத்து விடலாம். நான் மாசு படிந்த ஓவியம். உங்கள் முகத்தில் விழிக்கும் தைரியம் எனக்கில்லை. உங்கள் நினைவாக குழந்தை லட்சுமியை என்னுடன் அழைத்துப் போகிறேன். என்னை மன்னித்து மறந்து விடுங்கள்- இப்படிக்கு ராதா.

உயிரே போய் விட்டது அவனுக்கு. உலகமே தலைகீழாகச் சுற்றியது. கால் போன போக்கிலே போனான். காசி பக்கம் ஒரு மரத்தடியில் அன்னந்தண்ணியில்லாமல் சுருண்டு கிடந்தான். ஒரு சந்நியாசி எழுப்பி, ‘யார்? ஏன் இப்படி படுத்திருக்கிறாய்?’ என்று கேட்டார்.

நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யலே. ஆண்டவன் என்னுடைய வாழ்க்கையை ஏன் இப்படி சிதறடிச்சான்னு தெரியலை. என்று முனகுகிறான்.

சொந்த பந்தத்துடன் நீ வாழ்ந்த வாழ்க்கை உன் சந்தோஷத்தை சூரையாடிடுச்சு. ஆன்மாவுக்காக வாழ்ந்து பார். அமைதி கிடைக்கும்னு தேற்றுகிறார் சந்நியாசி.

பத்து ஆண்டுகள் கோட்டுப் போட்ட சந்நியாசியாக கோயில் கோயிலாக சுற்றுகிறான். மூலிகை வைத்திய முறை அத்தனையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு சமாதியாகி விடுகிறார் சந்நியாசி.

ஆற்றுக்கு நடுவே ஒரு மேடை. அதில் ஒரு ஆலமரம். அதன் வேர்கள் மேடையைத் துளைத்து வெளியே வந்து நீரில் மிதக்கின்றன. அந்த மேடையில் அடைக்கலம் ஆகிறார் முன்னாள் டாக்டர் பிரபு.

ஆற்றங்கரையோரம் ஒரு பாழடைந்த மண்டபம். அதில் கண்ணில்லாத தாயும், பதினாறு வயது மகளும் தங்கியிருக்கிறார்கள். பூவிற்கும் பதினாறு வயதுப் பெண் சாமியாருடன் பழக்கமாகி, அவருக்கு தாடிபாபா என்று பெயர் சூட்டுகிறாள். தாடி பாபா ஆடு, பூனைக்கெல்லாம் வைத்தியம் பார்ப்பதைப் பார்த்து, ‘பாபா! நீ மிருகங்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பியா? மனுஷங்களுக்கும் வைத்தியம் பார்ப்பியா?’ எனக்கேட்க -மனிதர்களுக்கும் வைத்தியம் பார்ப்பேன்- என்கிறார் பாபா. ஒரு இரவு உடல் நலமில்லாத தாய்க்கு வைத்தியம் பார்க்க பாபாவை அழைத்துப் போகிறாள்.

நான் பெரிய சர்ஜன் மனைவி

‘அம்மா! பாபா வந்திருக்காரு. என்ன வியாதியா இருந்தாலும் குணப்படுத்திடுவாரு!’ என்று அறிமுகப்படுத்துகிறாள் மகள். அம்மா பக்கவாட்டில் படுத்திருந்தவள்- பார்வையற்றவர் -திரும்பி, பாபா பக்கம், ‘வாங்க பாபா’ என்றழைத்தபோது, பாபா தலையில் இடி இறங்கிய உணர்வு.

பார்வையற்றவள் தன் ஆருயிர் மனைவி. கிழிந்த புடவையோடு, வாடிய முகத்தோடு தரையில் படுத்திருந்தவளைப் பார்த்து நிலை குலைந்து விடுகிறார் பாபா. சுதாரித்து நிற்கையில் - அம்மா கைய நீட்டு, உனக்கு என்ன வியாதின்னு நாடி பார்த்து பாபா மருந்து குடுப்பாரு- என்கிறாள் மகள்.

மனைவி கையை நீட்ட, தடுமாறியவாறு பாபா நாடியை தொட்ட போது மின்னல் வெட்டியது போல அதிர்ச்சியில் மனைவி, ‘யார் நீங்கள்? உங்கள் கைபட்டவுடனே உடம்பே சிலிர்க்கிறது!’ என்று பதட்டமாக பதில் சொல்கிறாள்.

இதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? ஒன்று சேர்ந்து பழைய வாழ்க்கை வாழ்ந்தார்களா? பூக்காரப் பெண் தீப்பெட்டி தொழிற்சாலை முதலாளியம்மா ராஜம்மா மகனை காதலித்தாளே, காதல் நிறைவேறியதா? பாபா அப்படியே கடைசி வரை வாழ்ந்து விட்டாரா? அவர்தான் புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் டாக்டர் பிரபு என்று உலகுக்குத் தெரிய வந்ததா?

பாபா என்று ஆலமரத்தடியில் படுத்திருந்தவர், தன் கணவர் என்று தெரிந்த போது ராதாவின் உணர்ச்சி எப்படி இருந்தது என்பது பிற்பகுதி படம்.

நானும் லட்சுமியும் 18 படங்களில் நடித்துள்ளோம். தண்டிக்கப்பட்ட நியாயங்கள் படம் போல அந்நியோன்னியமான கணவன் -மனைவியாக உருக்கத்தின் உச்சமாக நாங்கள் நடித்தஒரு படம் இதுதான். இதை உருவாக்கிய கலைஞன் எம். பாஸ்கர். தமிழ் திரைக்கு 3 அற்புதமான படங்களை என்னை வைத்து எடுத்தார். இந்தப் பிறவியில் அதற்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.

----

அனுபவிக்கலாம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x