Published : 11 Jun 2021 09:59 AM
Last Updated : 11 Jun 2021 09:59 AM

திரைப்படச்சோலை 39: இன்று நீ நாளை நான்

தூக்கு தண்டனைக் கைதி பழனியப்பனாக...

சிவகுமார்

1982, அக்டோபர் 12-ம் தேதி, ‘இன்று நீ நாளை நான்’ படத்துக்குப் பூஜை போட்டோம். மேஜர் சுந்தரராஜனுடனான நட்பு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. நாடகக்குழுவில் அவருடன் 8 ஆண்டுகள் நடித்தேன்.

‘கல்தூண்’ விஜயகிருஷ்ணராஜ் கதை, சிவாஜியை ஹீரோவாகப் போட்டு மேஜர் முதல் படம் இயக்கினார். அது வெற்றியடைந்தததும் இது இரண்டாவது படம்.

பழ.கருப்பையா, மேஜரின் தம்பி சம்பத் கூட்டுத் தயாரிப்பு. கதாசிரியர் சி.ஏ.பாலன் அரசியல் கைதியாக சில காலம் சிறையில் இருந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இந்தக் கதையின் அடிநாதம்.

தூக்கு மரத்தில் நாளை தொங்கப்போகும் கைதி, தன் சோகக்கதையை சிறையில் வைத்தியம் பார்க்க வரும் டாக்டரிடம் சொல்வதாக பிளாஷ்பேக்கில் கதை விரியும்.

விதிவசத்தால் விதவையாகி வெற்று வாழ்க்கை வாழ்ந்து வரும் பாப்பாத்தி (லட்சுமி) பழனியப்பன் (சிவகுமார்) தூக்குக்கயிறை முத்தமிடும் முன் அவனைப் பார்க்க சிறைச்சாலைக்கு வருகிறாள்.

தன் இதயத்தில் இடம் பிடித்தவளை, முகம் முழுக்க தாடி மீசையுடன் கலைந்த பரட்டைத் தலையுடன் நாம் பார்க்கக்கூடாது; நாவிதனை வரச்சொல்லுங்கள். நான் சவரம் செய்து கொள்கிறேன்!’ என்று கூச்சல் போடுவான். யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபத்தில் சிறைக்கம்பிகள் மீது தலையை மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்ட தரையில் விழுந்து மயக்கமாகி விடுவான்.

அதன் பிறகு சிறை அதிகாரிகள் வேறு வழியில்லாமல் டாக்டரை (தேங்காய் சீனிவாசன்) வரவழைப்பார்கள். மருந்து போட வந்த டாக்டரிடம் தன் சோகக்கதையை பழனியப்பன் விளக்குகிறான்.

ஊர்க்கவுண்டர் பொங்கியண்ண கவுண்டர் பழைய அரசியல்வாதி. மிராசுதார். அவர் மகன் மருதாசலம் (ஜெய்சங்கர்). வீட்டு வேலைக்காரன் பழனியப்பன்.

மருதாசலம் கல்யாண வயதில் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதில் அவன் தாயாருக்கு வருத்தம். அவனுக்கு எப்படியாவது ஒரு கால்கட்டை போட்டு வீட்டில் உட்காரவைக்க அம்மாவுக்கு விருப்பம்.

அம்மா மனதைப் புரிந்து கொண்ட வேலைக்காரன் பழனியப்பன், ‘நீங்க கவலைப்படாதீங்கம்மா. இன்னிக்கு சந்தைக்குப் போறேன். எப்படியாவது ஒரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து வர்றேன்!’ என்று கிளம்புகிறோன்.

காங்கயம் காளைகளே -ஓடுங்கடா, கவர்மென்ட்டு சாலையிலே - என்ற குதூகலமான எஸ்.பி.பி., பாடல் காட்சி சேலம் ஆத்தூர் சாலையில் படமாக்கப்பட்டது.

உங்க கல்யாணம் முதல்ல

சந்தைக்கூட்டத்தில் தேவதை போன்ற ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள்தான் பாப்பாத்தி. வயதுக்கு வந்த இளைஞனான அவன் ஒரு கணம் அவள் அழகில் கிறங்கி விடுகிறான். பாப்பாத்தியும் அதை உணர்கிறாள்.

அடுத்தகணம், அண்ணனுக்குப் பார்த்து மணம் முடிக்க வேண்டிய பெண்ணை நாம் தப்பாகப் பார்க்கக் கூடாது என்று மனதை மாற்றிக்கொண்டு வீடு வந்து விஷயத்தைச் சொல்கிறான்.

மருதாசலம், பழனியப்பன் வர்ணனையில் பாப்பாத்தியை மனக்கண்ணால் பார்த்து அவளை மணம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறான்.

ஆனால், அவன் தந்தை, பாப்பாத்தி குடும்பப் பின்னணியை விசாரித்து ஆசைநாயகியாக இருந்த ஒருத்திக்குப் பிறந்த பாப்பாத்தியை மருமகளாக ஏற்க மறுக்கிறார்.

ஆனால், மருதாசலம் பிடிவாதம் வென்று திருமணம் நடந்தேறுகிறது.

‘மாப்பிள்ளை நல்ல பிள்ளை ஏழூரு பண்ணைக்குள்ளே- ஏ புள்ளே’ என்று திருமண வரவேற்பில் பழனியப்பனும், வள்ளியும் (சுலக்ஷ்னா) குழு நடனம் ஆடி மகிழ்விக்கிறார்கள்.

அரசியலில் ஏதாவது ஒரு பதவியைப் பிடித்த பின்தான் முதல் இரவு என்று வைராக்கியமாக இருந்த மருதாசலம் தேர்தலில் தோற்றுப் போய் மனமுடைந்து குடிக்கு அடிமையாகி, உருக்குலைந்து மரணப்படுக்கையில் பாப்பாத்தியைப் பார்த்து உனக்கு நான் எந்த சுகமும் அளிக்கவில்லை. சோலையாக மலர்ந்திருக்க வேண்டிய உன் வாழ்க்கையை நான் பாலைவனமாக மாற்றிவிட்டேன். நான் இறந்தபிறகு நீ விருப்பப்பட்டால், உனக்குப் பிடித்த ஒருவனை மறுமணம் செய்து சந்தோஷமாக வாழ இப்போதே வாழ்த்துகிறேன்!’ என்கிறான்.

ஊருக்கு கணவன்- மனைவி

கணவனைப் பறிகொடுத்தவள் மனநிம்மதியுடன் வாழவிடாமல், எம்.எல்.ஏ என்ற பெயரில் வல்லூறு ஒன்று வட்டமிடுகிறது. எப்படியாவது அவளை அடையக் காத்துக் கொண்டிருக்கிறது. இடையில் பாப்பாத்தி, பழனியப்பனுக்கு ஊருக்குள் தனக்கு நெருக்கமான சின்ன வயது தோழி வள்ளியை மணம் முடித்து வைக்கிறாள். வள்ளி பழனியப்பன் வாழ்க்கையில் இல்லற சுகம் இனிதே நடந்து பெண்குழந்தை பிறக்கிறது. அதைத் தன் குழந்தைபோல் பாப்பாத்தி வளர்க்கிறாள்.

‘பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று; பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று!’ என்ற நிலையில் வள்ளி வாழ்க்கையில் இன்பமும், பாப்பாத்தி வாழ்க்கையில் துன்பமும் தொடர்கிறது.

நடைப்பிணமாக வாழ்ந்த பாப்பாத்தி எதிர்பாராத சூழலில் பழனியப்பனைத் தனியே சந்திக்கிறாள். காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பலத்த மழை பிடித்துக் கொள்கிறது. ஆலமரத்தடியே இருவரும் ஒதுங்குகிறார்கள். குளிரில் நடுங்கும் பழனியப்பனின் ஈரத் தலையைத் துவட்ட முந்தானையை நீட்டுகிறாள் பாப்பாத்தி.

எனக்கு வெட்கமா இருக்கு

தன் திருமணம் பற்றிய நினைவுகளில் மூழ்கிய பாப்பாத்தி எவ்வளவோ கனவுகளுடன் உங்கள் அண்ணனை மணந்தேன். அவருக்குத் தாலிகட்டிய மனைவி என்று பெயருக்கு வாழ்ந்தேனே தவிர எங்களுக்குள்ளே எந்த உறவும் பிணைப்பும் இல்லை. அவர் போன பின், நிம்மதியாக வாழவிடாமல் ஊர் கண்களிலிருந்து தப்பிக்க தினந்தோறும் போராடுகிறேன்.

இந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு விருப்பமிருந்தால் நாம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாள்.

அவன் தயங்குகிறான்.

‘ஏன் யோசிக்கிறீர்கள். முதன்முதல் சந்தையில் என்னைப் பார்த்தபோது என் மீது உங்களுக்கு ஆசை ஏற்படவில்லையா? உண்மையைச் சொல்லுங்கள்!’ என்று கேட்பாள்.

ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அதற்கெல்லாம் அந்தஸ்து வேண்டாமா? அதனால்தான் அண்ணனுக்கு மணம் முடித்து வைத்தேன் என்கிறான்.

அண்ணன் இப்போது உயிரோடு இருந்தால் இந்தப் பேச்சுக்கே இடமில்லை. வெறும் மரமாய் நிற்கிற எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்கிறாள் பாப்பாத்தி.

‘வள்ளி ஒத்துக் கொள்வாளா?’ என்று அவன் கேட்கும்போதே அவன் இசைந்து விட்டான் என்பது தெரிகிறது.

‘அவளிடம் நான் பேசுகிறேன்!’ என்று பாப்பாத்தி சொல்லி சமாதானப்படுத்துகிறாள். இவள் நினைத்தது போல் வள்ளி அவ்வளவு எளிதாக இந்த முடிவை ஏற்கவில்லை. தமிழ் மண்ணில் எந்த உத்தமியும் எதை வேண்டுமானாலும் மற்ற பெண்ணுடன் பங்கு போட்டுக் கொள்வாள். கணவனை யாரும் மனதால் நினைப்பதைக் கூட அனுமதிக்க மாட்டாள்.

பால்யத் தோழிகள்

தான் பிரசவத்திற்காக தாய் வீடு போயிருந்த சமயத்தில் தன் கணவரை மயக்கி, அவருக்கு 2-ம் தாரமாக வாழ்க்கைப்பட பாப்பாத்தி முயற்சி செய்தாள் என்றறிந்ததும் துடித்துப் போனாள் வள்ளி. அப்போதுதான் பிறந்த பச்சைக்குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு, விடாமல் பெய்யும் மழையில் கணவனைக் கட்டாயப்படுத்தி கட்டை வண்டியை பூட்டச் சொல்லி பாப்பாத்தியை சந்திக்கப் பயணமாகிறாள்.

சிறுவயது முதல் பழகிய தோழி என்று அன்பு காட்டியது- வீட்டோடு தன் கணவரையும், தன்னையும் வைத்துக்கொண்டு வேலை வாங்கியது -குழந்தை மீது பாசம் இருப்பது போல் நடித்தது -எல்லாம் என் கணவரை கைக்குள் போட்டுக் கொள்ளத்தானே என்று சீறி பாப்பாத்தி மீது பாய்ந்தாள்.

பின்னால் ஓடி வந்த கணவன் தடுப்பதற்குள், பாப்பாத்தி தலைமுடியைப் பிடித்து உலுக்கி, அரிவாள்மனையைத் தூக்கி வெட்டப்போனாள். விபரீதம் நடப்பதைத் தடுக்க வள்ளியைப் பிடித்து இழுத்துத் தள்ளினான் பழனியப்பன். கீழே விழுந்தவனின் நெற்றியில் அரிவாள்மனை பட்டு ரத்தம் கொட்டியது.

தாலிகட்டிய நாள் முதல் இந்த 8 வருஷத்தில் ஒரு நாள் கூட என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு வார்த்தை பேசாத நீ, இந்த சக்களத்தி போதனையில் என்னை உதறித் தள்ளுகிறாயா? அடச் சீ நீயும் ஒரு மனுஷனா? - என்று வார்த்தையில் திராவகம் சேர்த்து வீசிவிட்டு, மின்னல் போல் பாய்ந்து எதிரே இருந்த 60 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்து விட்டாள்.

பழனியப்பன் உடனே குதித்து தேடி எடுத்து வந்து மேலே கட்டிலில் போட்டு, உயிர் பிழைக்க எவ்வளவோ செய்து பார்த்தான்.

பாப்பாத்தியையும், தன்னையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற வள்ளிக்காக பரிதாபமாகக் கதறினான்.

வள்ளி இறந்துவிட்டாள். பழனியப்பன் தூக்கிலே தொங்கிவிடுவான். பாப்பாத்தி எப்படியும் தனக்குக் கிடைப்பாள் என்று நாக்கில் நீர் ஊற காத்துக் கொண்டிருக்கிற ஓநாய் எம்.எல்.ஏ, ஊரில் பொய் சாட்சி ஜோடித்து கோர்ட்டில் பழனியப்பனைக் கொலைகாரன் என்று நிரூபிக்கிறான்.

பொன்வானம் பன்னீர் சிந்துது

‘ஆசைநாயகி பாப்பாத்தியோடு வாழ்க்கையைத் தொடர கட்டிய மனைவியை அடித்துக் கிணற்றில் போட்டுக் கொன்றுவிட்டான் பழனியப்பன்’ என்று வழக்கை ஜோடித்துவிட்டான்.

கடைசி சாட்சியாக பழனியப்பனின் 5- வயது மகள், நீதிபதி கேட்டபோது -தன் தாயை அடித்து அப்பா கீழே தள்ளியதைப் பார்த்தேன். அம்மா தலையில் ரத்தம் வழிந்தது- என்று சொல்லி விட்டாள். ‘சர்க்கம் ஸ்டான்ஷியல் எவிடன்ஸ்’ ஆக வைத்து பழனியப்பனுக்கு தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி. பல கோர்ட்டுகள். மேல் முறையீடுகள் செய்தும் விடுதலை கிடைக்கவில்லை. 4 ஆண்டுகள் ஓடிவிட்டன.

தூக்குக்குப் போகும் முந்தைய நாள் மாலை பாப்பாத்தியும் ,பழனியப்பனின் 2 மகள்களும், ராணுவத்திலிருந்து திரும்பிய பழனியப்பன் அண்ணனும் அவனைப் பார்க்க வந்தனர்.

சிறை அதிகாரி அனுமதியுடன், ‘செல்’லுக்குள் இருந்தவாறே தன் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டிவிட்டான். ‘இந்தக் கொலைய அப்பாதான் செஞ்சேன்னு இன்னும் நீ நம்பறியாம்மா?’ என்று மூத்த மகளைக் கேட்டான்.

இப்போது அவளுக்கு 9 வயது. ‘என்னை மன்னிச்சிடுங்கப்பா. அப்போ நான் சின்னப் பொண்ணு. எதுவும் புரியலே. இந்தக் கொலையை நீங்க செய்யலேன்னு இப்ப எனக்கு நல்லா தெரியும்பா!’ என்பாள் மகள்.

‘போதும், இனி நிம்மதியா நான் சாவேன்’ என்பான் பழனியப்பன்.

‘சாவதற்கு முன்னால் உன் கடைசி விருப்பம் என்ன?’ என்று சிறை அதிகாரி வந்து கேட்பார்.

‘ 2 காரணங்களுக்காக நான் உயிரோட இருக்க ஆசைப்படறேன். இந்தக் கொலையை நான்தான் பண்ணினேன்னு என் மகள் நினைச்சிட்டிருக்கா. அது உண்மையில்லைன்னு அவளுக்குப் புரியவைக்கணும். கடைசியா ஒரு தடவை பாப்பாத்தியப் பாக்கணும்!’ என்பாள்.

ஒரு கோரிக்கை பூர்த்தியாகி விட்டது.

அடுத்துப் பாப்பாத்தியைப் பார்த்து, ‘நான் போனதுக்கப்புறம், எங்கண்ணனை கல்யாணம் பண்ணிட்டு, என் 2 மகள்களுக்கும் நீங்க ரெண்டு பேரும் தாயும், தகப்பனுமா இருந்து வளர்த்து ஆளாக்கி விடுங்க. அது போதும்’ என்று நெஞ்சுருகக் கதறிச் சொல்வான்.

உடனே பாப்பாத்தி, ‘என்னய்யா சொல்றே? மணந்தவனோடதான் வாழக் கொடுத்து வைக்கல. மனதால நினைச்சவனோடயும் வாழ விதி விடலே. இதுக்கப்புறமும் இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கணுமா? நீயே போகப்போறே. அப்புறம் எனக்கெதுக்குய்யா வாழ்க்கை!’ என்று முந்தானைக்குள் ஒளித்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் நெத்திப் பொட்டில் சுட்டு சரிந்து விடுவாள்.

‘பாப்பாத்தி! போயிட்டியா! போ. இன்னிக்கு நீ- நாளைக்கு நான்!’ என்பான் பழனியப்பன். ‘இன்று நீ நாளை நான்’ பட டைட்டில்.

சேலம் சிறைச்சாலை ஒரிஜினல் கண்டம் பிளாக்கில் என் சிறைக்காட்சிகளை விசேஷ அனுமதி பெற்று, சிறை அதிகாரிகள் ராமநாதன்-மாதவய்யா தயவில் படமாக்கினோம்.

சிறைக்கைதிகள் பயன்படுத்திட ஸ்பீக்கர்- மைக் செட் வாங்கித் தந்தேன். சேலம் ஆத்தூர் பாதையில் வாழப்பாடியிலிருந்து தெற்கே 6 மைல் தொலைவில் சிங்கபுரம் கிராமம். அதையொட்டிய வனப்பகுதியில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கு லட்சுமியும் -நானும் நடிக்கும் காட்சியைப் படமாக்கினோம்.

எல்ஆர்என் ஷண்முகம் வீட்டில் சேலத்தில் எங்கள் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாயின.

‘வள்ளி ஒத்துக்குவாளா?’ என்று பழனியப்பன் கேட்டபோது அந்தக் கதாபாத்திரம் கீழிறங்கி விட்டது என்று பத்திரிகைகள் விமர்சித்தன. எதார்த்த வாழ்க்கை -லட்சிய வாழ்க்கையாக எல்லோருக்கும் அமைவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

---

அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x