Published : 24 Dec 2015 08:32 PM
Last Updated : 24 Dec 2015 08:32 PM

சர்ச்சைக்குள்ளான சென்னை சீரழிவு சொல்லும் ஆவணப்படம்!

மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.

இதனால் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லியும், பொருத்தம் இல்லாத உள்ளடக்கம் என்று யுடியூபில் வெளியிடக் கோரியும், ஏராளமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த நாடகக் கலைஞரான வைஷ்ணவி சுந்தர், "பாலியல் வன்முறையைத் தாண்டி, அந்த வார்த்தையை வேறு இடத்தில் பயன்படுத்துவது என்பது மனிதத்தன்மை அற்ற செயல். மிகவும் அற்பமான விஷயமும் கூட. இந்தத் தலைப்பு, உணர்வே இல்லாத வகையில் மோசமாக இருக்கிறது. தயவு செய்து ஆவணப்படத்துக்குப் பொருத்தமான பெயரை மட்டும் தலைப்பாக வையுங்கள்.

சிலர் ரேப் என்கிற வார்த்தையின் வீரியத்தை உணராமலே, அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தவிர இன்னும் பலர், படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மெட்ராஸ் சென்ட்ரல் குழுவில் ஒருவரான பிரதீப் முத்து, படத்தின் தலைப்பு சரியே என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், "நாங்கள் சென்னை வெள்ளத்தின் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவே அந்தத் தலைப்பைத் தேர்தெடுத்தோம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம்; எங்கள் குழுவிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்கள் தாய்நாடான சென்னைக்கு நடந்ததை எடுத்துக்காட்டவே அத்தகைய தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் இணைப்பைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, "மனிதரால் ஏன் இந்த அழிவு ஏற்பட்டது என்பது குறித்த சிறந்த ஆவணப்படம் இது. பெயரைத் தவிர" என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சிம்புவின் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்கும் எதிர்வினைப்பாடல், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணப்பட இணைப்பு