Last Updated : 20 Apr, 2021 03:17 PM

 

Published : 20 Apr 2021 03:17 PM
Last Updated : 20 Apr 2021 03:17 PM

கரோனா 2-வது அலை; தடுப்பூசியின் அவசியம் என்ன? முகக்கவசம் அவ்வளவு முக்கியமா?- ஆராய்ச்சியாளர் கூறும் விளக்கங்கள்; அறிவுறுத்தல்கள்

2020 மார்ச்சில்தான் இந்தியா முதன்முதலில் கரோனா ஊரடங்கைச் சந்தித்தது. நாடு அதுவரைக்கும் சந்தித்திராத நிலவரம் அது. 21 நாட்கள் இரவு, பகலாக வீடுதான் எல்லாமே என ஆகியிருந்தோம். ஆனால், எதற்கும் நேரமில்லாமல் கவச உடைக்குள் புழுங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

முழு ஊரடங்காக 21 நாட்கள், அப்புறம் சில தளர்வுகளுடன் 21 நாட்கள் என ஆரம்பித்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்த வேளையில் இதோ கரோனா 2-வது அலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அன்று எங்கோ உத்தரப் பிரதேசத்தில் ஒலித்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை புகார்கள் இன்று பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால், நாம் இதை எல்லாவற்றையும் மறந்துவிட்டு முகக்கவசத்தை நாடியில் மாட்டிக் கொள்கிறோம், சமூக இடைவெளியைப் பழங்கதையாக மாற்றி வைத்திருக்கிறோம், கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தைக் கைகழுவி நிற்கிறோம். தடுப்பூசிகளைப் பற்றி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறோம். உலகமே ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் சிக்கியிருக்கும் சூழலில் நமக்கு நாம் தான் சிறந்த ரட்சகராக இருக்க முடியும்.

கரோனா இரண்டாவது அலைக்கு நாம் எப்படி காரணமாகியிருக்கிறோம்? இரண்டாவது அலையில் ஏன் தொற்று பல நூறு மடங்கு அதிகரித்து வருகிறது? கரோனா வைரஸ் எத்தனை முகங்களுடன் உருமாறியிருக்கிறது? தடுப்பூசி ஏன் அவசியம்? தற்காப்பு முறைகள் என்னென்ன? தடுப்பூசி வதந்தி ஏன் வைரஸை விட ஆபத்தானது? குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் சிதைக்கிறோமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விரிவாக, ஆழமாகப் பதிலளித்திருக்கிறார் முனைவர் பாலாஜி ராகவேந்திரன். இவர், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ ஆய்வுப் பிரிவின் இணைப் பேராசிரியாக இருக்கிறார். கரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

அவருடனான நேர்காணலில் இருந்து:

கரோனாவுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று இந்த இரண்டாவது அலைக்குப் பின்னரும் பேசுகிறார்கள். ஒரு ஆராய்ச்சியாளராக அப்படி ஓர் அரசியல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிச் சொல்லுங்கள்...

கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னால் நிச்சயமாக எவ்வித அரசியலும் இல்லை. கரோனா உலகின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே இருந்திருந்தால் அப்படியான பேச்சுகளை நாம் ஆராய்ந்திருக்கலாம். ஆனால், இன்று உலகம் முழுவதும் கரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் நம் கண்முன் நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் கரோனாவே ஓர் அரசியல் என்று பேசுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல ஆபத்தானவர்கள்.

இந்த உலகம், நிறைய பெருந்தொற்றுகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், கரோனாவுக்கு மட்டும் தான் அதீத நெருக்கடியைக் கொடுத்துள்ளதா?

கரோனாவைப் போல் ஒரு பெருந்தொற்று 1918-ல் வந்தது. ஸ்பேனிஷ் ஃப்ளூ என்பது அதன் பெயர். அதன்பின்னர் சரியாக நூறாண்டுகளுக்குப் பின்னர் இப்போது கரோனா பெருந்தொற்று வந்திருக்கிறது. 1918 நிலவரத்தை நாம் புத்தகங்களில்தான் படித்திருக்கிறோம். ஆனால், இப்போதைய நிலவரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அதிக முக்கியத்துவம், அதிக நெருக்கடி இருப்பதாக உணர்கிறோம். பாதிப்பை நேரடியாக அனுபவிப்பதன் விளைவே தவிர எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை.

பொதுவாகவே, நம்மைச் சுற்றிப் பல கோடி வைரஸ்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாக மனித எதிர்ப்பு சக்தி கடந்துவிடுகிறது. எப்போதாவது ஏற்படும் இத்தகைய பெருந்தொற்றுதான் கொஞ்சம் திக்குமுக்காட வைத்துவிடுகிறது.

சார்ஸ், மெர்ஸ், ஸ்வைன் ஃப்ளூ, எபோலா வைரஸ், நிபா வைரஸ் என வைரஸ்களை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எபோலா வைரஸ், நிபா வைரஸ்கள் கரோனாவைவிட மிகக்குறைந்த காலகட்டத்தில் உடலில் ரத்த உறைவு போன்ற மிகமிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், அவை பரவும் தன்மை கரோனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. அதனாலேயே இன்று கரோனா சர்வதேச அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது. மேலும், எபோலாவைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பு போற்றுதற்குரிய அளவு இருந்தது.

இந்த இரண்டாவது அலையில் நாம் கரோனாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பற்றி எல்லாம் ஆராயாமல் தற்காப்பு, சுய கட்டுப்பாடு, பொது நல சிந்தனையை வளர்த்துக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

இந்தியாவில் கரோனா முதல் அலை; இரண்டாவது அலை.. நீங்கள் என்ன மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

வேகமாகப் பரவும் தன்மை. இதுதான் நான் இரண்டாவது அலையில் பார்க்கும் மிகப்பெரிய வித்தியாசம். ஒரு நூற்றாண்டுக்கு வந்த ஸ்பேனிஷ் ஃப்ளூவும் இப்படித்தான் இருந்தது. முதல் அலை சற்று குறைவாகவும், இரண்டாவது அலை அதைவிட பல நூறு மடங்கு அதிகமாகவும், அடுத்தடுத்த அலைகளும் அச்சுறுத்தும் வகையிலும் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அதன் தாக்கம் குறையத் தொடங்கியது. அதுபோலவே இப்போது கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கரோனா வைரஸில் ஏற்படும் மரபணு மாற்றங்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி பல்லாயிரக்கணக்கான உருமாறிய கரோனா வைரஸ்கள் உருவாகியிருப்பது தெரியவருகிறது. இதை அச்சுறுத்தலுக்காக சொல்லவில்லை. நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் கரோனா மரணங்களைத் தவிர்க்க முடிவதில்லையே ஏன்?

மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் ஒன்றே. சரியான நேரத்தில் சிகிச்சைக்குச் செல்வது மட்டுமே மரணத்தைத் தடுக்கும். கரோனா வைரஸ் நுரையீரலின் அல்வியோலார் டைப் 2 செல்களைத் தாக்கும்போது நிலைமை மோசமாகிவிடுகிறது. சாதாரண சளி, காய்ச்சல் என நமக்கு நாமே சிகிச்சை எடுத்துவிட்டு மூச்சுத்திணறல் வந்த பின்னர் மருத்துவமனைக்குச் சென்றால் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு அதிக வாய்ப்பாகிவிடுகிறது. ஆகையால் நீங்கள் நோய்த்தொற்றுக்கு அதிகம் எக்ஸ்போஸ் ஆக வாய்ப்பிருந்தது எனக் கருதினால், இல்லை தொடர்ந்து ஒரு நாளைக்கு மேல் உடல் சோர்வு, கால் வலி, தலைவலி, காய்ச்சல், சளி என எந்த அறிகுறி தென்பட்டாலும் தயங்காலும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது மட்டுமே மரணத்தை வெல்லும் வழி. கரோனா வந்தாலே மரணம் என்ற அச்சமும் மடமையே.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் கரோனா வைரஸுக்கு அதிகம் எக்ஸ்போஸ் ஆவது மருத்துவர்கள், செவிலியர்கள்தானே. அவர்களின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் மட்டும் சுமார் 500 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா வார்டில் பணிபுரிகின்றனர். அப்போது அவர்கள் பலமடங்கு அதிகமான வைரஸ் லோடை எதிர்கொள்கின்றனர். தடுப்பூசி, சத்தான உணவு, பிபிஇ கவச உடைகளை மட்டுமே நம்பி களத்தில் சேவை செய்கின்றனர். குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் கூட கிடைக்காமல் எளிதில் தொற்று ஏற்படும் அபாயத்தில் பணியாற்றுகின்றனர்.

தெரிந்தே உயிரைப் பணையம் வைக்கின்றனர். நாம் அதைத் தெரிந்து கொண்டே அலட்சியம் காட்டினால், அவர்களின் மரணத்துக்கு கரோனாவுடன் கைகோத்து நாமும் பொறுப்பாவோம். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயல்படாவிட்டால் நமக்கு சிகிச்சையளிக்க ஆளில்லாமல் உயிரை இழக்கும் அவலம் கூட வரலாம். மருத்துவர்கள், செவிலியர்கள் நமக்காக சேவை செய்கிறார்கள் நாம் அவர்களுக்கு நெருக்கடி தராமல் இருப்போம்.

அதற்காக, நம் வீட்டு விழாக்களை, நம்மூர் திருவிழாக்களை, ஏன் நம் நாட்டுத் தேர்தல்களைக் கூட கொஞ்சகாலம் தள்ளிவைத்தால் தவறில்லை. இதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். கரோனா முதல் அலை ஆரம்பித்து சில காலத்தில் நான் மலேசியாவிலிருந்து இந்தியா வந்தேன். அப்போது அங்கு மொத்த கரோனா எண்ணிக்கை வெறும் 9000 மட்டுமே. அதன்பின் அங்கு ஒரு தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலுக்காக கோலாலம்பூரில் இருந்து மட்டும் ஷபா எனும் பகுதிக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வந்தனர். பிரச்சாரத்தின் போது சமூக விலகல் எல்லாம் மறைந்துபோனது. அதன்பின் அவரவர் ஊர் திரும்பியவர்கள் யாரும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் இல்லை; பரிசோதனை செய்துகொள்ளவும் இல்லை. விளைவு வெறும் 9000க்குள் கட்டுப்படுத்தப்பட்ட தொற்று 1,82,000 கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்றும் அன்றாடம் குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். பெருங்கூட்டம் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பேராபத்து.

கரோனா வைரஸ் பல்லாயிரக்கணக்கில் உருமாறிவிட்டதாகச் சொல்கிறீர்கள். பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசியோ பிரத்யேகமாக கோவிட்-19க்கு எதிராக உருவாக்கப்பட்டது. அப்படியென்றால் இந்தத் தடுப்பூசியின் பலன், பயன்தான் என்ன?

முதலில், இப்போதுள்ள கரோனா தடுப்பூசி 100 சதவீதம் நோயைத் தடுப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசிக்குப் பின்னர் 100 பேருக்கு கரோனா தொற்று வந்தால் அதில் 90 பேர் தீவிர சிகிச்சைக்குச் செல்ல வெகுநிச்சயமாக வாய்ப்பிருக்காது. தீவிர சிகிச்சைக்குச் செல்லும் 10 பேரிலும் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கலாம். வெகுஜனங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்தவர்களை சாட்சியாகக் கூறலாம். திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு அதன்பின்னர்தான் தொற்று ஏற்பட்டது. ஆனால், அவர் தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஆகையால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்காதீர்கள்.

இந்தியாவில் இப்போதுள்ள கரோனா தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்டு. இவற்றில் முதல் ரக தடுப்பூசி கரோனா வைரஸை செயலிழக்கச் செய்து உடலில் செலுத்துவது. இதன் மூலம் உடல் நமக்குள் ஏதோ வைரஸ் வந்துவிட்டது என எண்ணி அதற்கான எதிர்ப்புசக்தியை உருவாகும். உள்ளே செலுத்தப்படும் வீரியமற்ற வைரஸால் பல்கிப் பெருக முடியாது.

அதுபோல் கோவிஷீல்டு தடுப்பூசி என்பது கரோனாவின் ஸ்பைக் புரோட்டீன் (முள் போன்ற பகுதியில் இருக்கும் புரதம்) கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த முள் புரதம் ஆன்ட்டிபாடிக்களை உருவாக்கும்.

மூன்றாவதாக அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டிலுள்ள எம்ஆர்என்ஏ (MRNA VACCINE). இது மரபணு சார்ந்தது. இது ஒரு மெசஞ்சர் போல் செயல்பட்டு உள்ளே உள்ள செல்களுக்கு கரோனா வைரஸ் தாக்கினால் எத்தகைய எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

இதுதவிர ஃபைஸர், ஸ்புட்னிக் 5 உள்ளிட்ட இன்னும் சில தடுப்பூசிகள் உள்ளன. இவை எல்லாமே கரோனா வைரஸுக்கு எதிரானது தான். அதில் எத்தனை உருமாற்றம் வந்தாலும் அடிப்படையில் கரோனா ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்க்கக் கூடியதே. இப்போது உருமாறியுள்ள வகையறாக்கள் பரவும் தன்மையில்தான் மாற்றத்தைக் காட்டியிருக்கிறதே தவிர பாதிப்பளவில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது.

ஆனால், இந்த அலையில் இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறதே? அதுபோல் பிரேசிலிலும் கூட இளைஞர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறதே?

நிச்சயமாக. இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதை நாம் வேறு பார்வையில் அணுக வேண்டும். கரோனா பரவ ஆரம்பித்தபோது வயதானவர்கள், இணை நோய் கொண்டவர்களையே அதிகமாகத் தாக்கும் என்ற மனப்பான்மை இருந்தது. அதனால், மற்றவர்கள் தங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தாங்களே தளர்த்திக் கொண்டார்கள். குறிப்பாக இளம் வயதினர். அதனால், அதிகமாக வைரஸுக்கு எக்ஸ்போஸ் ஆகும்போது அதிக அளவில் இளைஞர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிவிடுகிறார்கள். இரண்டாவதாக நான் ஏற்கெனவே சொன்னதுபோல் இப்போதுள்ள மியூட்டன்ட் வகைகள் அதிவேகமாகப் பரவுகின்றன. அதனால், வயது, பாலினம், இணை நோய் என இவை எதுவுமே இப்போது பொருட்டாக இல்லாமல் போய்விட்டது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி.. இது பற்றி உலக சுகாதார அமைப்பே ஏதும் சொல்லவில்லை. கரோனா பெருந்தொற்றில் கல்வியிழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது குழந்தைகள்தான். இதற்கு என்ன தீர்வு?

குழந்தைகளைக் கட்டமைப்பதில் பள்ளிக்கு நிகர் வேறெதுவுமே இல்லை. அவர்களுக்கு சமூக ஒழுக்கத்தை பள்ளிகள் மட்டும்தான் வெகு சரியாக, மிகச் சிறப்பாகக் கற்றுக் கொடுக்க முடியும். அந்தவகையில், இந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பள்ளிக்கூடத்தைப் பார்க்கவே வாய்ப்பு கிடைக்காத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நிலை மிகவும் வேதனையளிக்கிறது. கரோனாவுக்கான தடுப்பூசி முயற்சியில் உலக அளவில் 18 வயதுக்கு மேற்பட்டோர்தான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இப்போதுதான் சைடஸ் (Zydus) போன்ற சில நிறுவனங்கள் குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துகளை (Nassal Vaccine) ஆய்வு செய்துவருகிறது. இது 8 வயதிலிருந்தே பலனளிப்பதாக சில ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. முறையான ஆய்வு, அனுமதிக்குப் பின்னர் இந்தத் தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பும் கூட. ஒரு கட்டத்தில் அனைத்து வயதினருமே தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்டால், நோய் வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற புதிய நம்பிக்கையுடன் இயல்புக்குத் திரும்பலாம்.

ஆனால், கரோனா தடுப்பூசி 10ல் இருந்து ஓராண்டுக்கு மட்டுமே பலனளிக்கும் என்கிறார்களே?

உண்மை தான். இதை ஒரு சறுக்கலாக நினைக்காமல் தடுப்பூசி எடுத்த ஓராண்டுக்கு தற்காத்துக் கொள்ளும் வரமாகப் பார்க்கலாமே. நாம் அம்மை நோய்க்கு செலுத்தும் தடுப்பூசி எல்லாம் ஒரு முறை செலுத்திவிட்டால் போது எப்போதும் அத்தகைய நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடும். ஆனால், அத்தகைய தடுப்பூசியாக இப்போதுள்ள கரோனா தடுப்பூசி இல்லை. அது உருவாகும் வரை, சில குளிர்பிரதேச நாடுகளில் ஃப்ளூ வைரஸுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது போல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் சிலருக்கு பக்கவிளைவுகள் அதிகமாகவும், சிலருக்கு பக்க விளைவுகளே இல்லாமலும் இருக்கின்றன. இதனை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் சில விஷமிகள் லேசான பக்க விளைவு ஏற்படாவிட்டால் உங்களுக்குத் தடுப்பூசி செயல்படவில்லை என்று அர்த்தம் எனப் பிரச்சாரம் செய்கின்றனர். இது பற்றி உங்கள் கருத்து?

இதில் சிறிதும் உண்மையில்லை. மனித உடல் அமைப்பு ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு தனிநபரின் உடல் செயல்திறன் வெவ்வேறு. அதனால் சிலருக்குப் பக்கவிளைவுகள் வரலாம்; சிலருக்குப் பக்கவிளைவுகள் வராமல் இருக்கலாம். எளிதான உதாரணம் சொல்கிறேன். நாம் குழந்தைகளுக்கு அம்மை, தட்டம்மை, டெட்டனஸ், போலியா எனப் பல தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளைக் கொடுக்கிறோம். நம் வீட்டிலேயே பார்த்திருப்போம். இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்குத் தடுப்பூசிக்குப் பின் சில உபாதைகள் ஏற்பட்டிருக்கும். ஒரு குழந்தை தடுப்பூசிக்குப் பின்னர் வெகு இயல்பாகவே இருந்திருக்கும். ஆனால், ஆண்டுகள் கடந்த பின்னர் இரண்டு குழந்தைகளும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதைக் கண்டிருப்போம். அப்படித்தான் கரோனா தடுப்பூசியும், பக்கவிளைவு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது நிச்சயம் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கியிருக்கும். அதையும் மீறி சந்தேகம் ஏற்படின், இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட இருவாரங்களுக்குப் பின் ஆன்ட்டிபாடி பரிசோதனை செய்து கொண்டு எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேவையில்லாத வதந்திகளைப் பரப்பாமல் இருக்க இது உதவும்.

தடுப்பூசி பக்கவிளைவு பற்றி பேசும்போது ஆஸ்ட்ராஜெனிக்கா மருந்தால் ஜெர்மனி, இத்தாலியில் ரத்த உறைவால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட முடியாது அல்லவா?

இத்தாலி, ஜெர்மனியில் ஆஸ்ட்ராஜெனிக்கா மருந்தால் ரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்தது உண்மையென்று பல ஆய்வுக்கட்டுரைகளும் ஆமோதிக்கின்றன. அதற்கான காரணமும் கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக கரோனா வைரஸ் அதிதீவிர பாதிப்பில் ரத்தம் உறைதல் பிரச்சினையும் ஒன்று. அதுதான் தடுப்பூசி பக்கவிளைவிலும் ஏற்பட்டிருக்கிறது. பல கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும்போது இப்படியா 30, 40 உயிர் பலி நடந்திருக்கிறது. எண்ணிக்கை அளவில் குறைவென்றாலும் உயிரிழப்பு ஏற்கமுடியாத ஒன்று. ஆனால், இதுபோன்ற பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவ ரீதியாக இத்தகைய இழப்புகளைக் கடினமான மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். வெகு சீக்கிரமாக தடுப்பு மருந்து வேண்டும். ஆனால், அதில் ஜீரோ பக்கவிளைவுகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றக்கூடியது அல்ல. இப்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் நமக்கு நற்பயன் தரும்.

தடுப்பூசி போடுவதில் இருக்கும் தயக்கம் இன்னும் நீங்கவில்லை. அச்சம் விலக ஆரம்பிக்கும்போது சில நிகழ்வுகள் தடுப்பூசி பயத்தை அதிகரித்துவிடுகின்றன. தடுப்பூசி அச்சத்தை எப்படித்தான் கடந்துவருவது?

இது மிகவும் அவசியமான கேள்வி. கரோனா தடுப்பூசி போட விருப்பம் இருந்தும் அச்சம் காரணமாகத் தயங்குவோர் CRP Test (C-reactive Protein Test) சி ரியாக்டிவ் புரதச் சோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நான் இதுவரை எந்த வித மருத்துவப் பரிசோதனையும் செய்துகொண்டதில்லை. எனது உடலின் நிலவரம் பற்றித் தெரியாததால் எனக்குத் தடுப்பூசி அச்சம் இருக்கிறது என நினைப்பவர்கள் மட்டுமே இந்தப் பரிசோதனையை செய்து கொள்வது நலம்.

இதேபோல் டி-டைமர் (D-dimer) பரிசோதனை என்றும் ஒன்றுள்ளது. இந்தப் பரிசோதனை உடலில் ஏதேனும் ரத்த உறைவுகள் ஏற்கெனவே இருக்கிறதா எனக் கண்டறிந்து சொல்லும். மருத்துவ மொழியில் டீப் வெயின் த்ராம்போஸிஸ் Deep vein thrombosis (DVT), பல்மோனரி எம்போலிஸம் Pulmonary embolism (PE) போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

இதுவும் இல்லாவிட்டால் உங்கள் குடும்ப மருத்துவரிடம் வழக்கமான ஒரு உடற்பரிசோதனை செய்து கொண்டு அதன் முடிவுகளைப் பொறுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்தப் பரிசோதனைகளில் ஏதேனும் உடலில் பிரச்சினை இருப்பது உறுதியானால் அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு அதுவரை கரோனாவில் இருந்து தற்காத்துக் கொண்டு பின்னர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். எப்படியானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே இந்தப் போரில் பெரிய ஆயுதம்.

ஒருவேளை நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை எனப் பிடிவாதமாக இருந்தாலும் பரவாயில்லை. தடுப்பூசியால் மரணம் நேரும் போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

முகக்கவசம் அணிவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முகக்கவசம் அதுவும் சற்று தரமான கவசம் நம் உயிர்காக்கும் எளிய கவசம். கரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையுமே தாக்குமா என்றால் அதற்கு உறுதியான விடையில்லை. கரோனா வைரஸ் தாக்கிய அனைவருக்குமே மரணம் தானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதில். ஆனால், இவை எல்லாம் நேராமல் இருக்க முகக்கவசம் மிக மிக அவசியம். அதிலென்ன நமக்கு அத்தனை கஷ்டம், அவ்வளவு அலட்சியம்.

உங்களுக்கு கரோனா வைரஸ் ஏற்பட்டு அது எந்தவித சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உங்களைக் கடந்து செல்லலாம். ஆனால் உங்களுக்கு அருகில் இருப்பவர்களின் உடல்நிலை அப்படி இல்லாமல் இருந்தால், நீங்கள் நோய் பரப்பி ஓர் உயிர் போனால் அது எவ்வளவு பெரிய துயரம். அதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணியுங்கள். முக்கியமாக சுத்தமான முகக்கவசம் முழுவதுமாக வாய், மூக்கை மூடியிருக்கும்படி அணியுங்கள்.

கரோனா தடுப்பில் யாருக்கு முக்கியப் பங்கு? அரசுக்கா இல்லை தனிநபருக்கா?

கரோனா தடுப்பில் முக்கியப் பங்கு, பொறுப்பு அரசுக்கும் மக்களுக்கும் சமமாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை வகுத்துத் தரும் கூடுதல் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை முழு ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். அரசாங்கம் கரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், முன்புபோல் நிறைய கோவிட் மையங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் குறிப்பாக சித்தா போன்ற மாற்று மருத்துவம் மூலம் லேசான அறிகுறி உள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதால் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு படுக்கை தட்டுப்பாடு இருக்காது.

இவ்வாறு முனைவர் பாலாஜி ராகவேந்திரன் தெரிவித்தார்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x