Published : 09 Apr 2021 11:32 AM
Last Updated : 09 Apr 2021 11:32 AM

திரைப்படச்சோலை 21: பானுமதி

சிவகுமார்

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல; இந்தியத் திரையுலகில் என் அறிவுக்கு எட்டியவரை பானுமதி அம்மையார் போல பன்முகத்திறமை படைத்த ஹீரோயின் யாருமே இல்லை.

அவரே கதை, திரைக்கதை எழுதுவார். படத்தை இயக்குவார். தயாரிப்பாளரும் அவரே. பாடல் இனிமையாகப் பாடுவார். இசையமைப்பார். ஜோதிடம் சொல்லுவார். ஓவியமும் தீட்டுவார். அவரே கதாநாயகியாகவும் நடிப்பார்.

முதன் முதல் அவரை நான் சந்தித்தபோது எனது காந்தி ஓவியத்தை காட்டினேன். பத்து நிமிடம் மெளனமாகப் பார்த்தார். என் பக்கம் திரும்பினார். ‘‘சிவகுமார். இந்த படம் வரைஞ்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு சந்தோஷம், சினிமாவுல நடிக்கும் போது கிடைக்குதா?’ என்று கேட்டார்.

‘‘சான்சே இல்லே!’’ என்றேன்.

‘‘உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’’

‘‘இல்லேம்மா. ஒண்ணரை வருஷமா பொண்ணு தேடிகிட்டிருக்கோம்!’’

‘‘ஜாதகத்தை கொண்டு வாங்க!’’

பார்த்தார். பிப்ரவரியில் இது நடந்தது.

‘‘வருகிற செப்டம்பர் 1974-க்குள்ளே உங்களுக்கு நிச்சயம் கல்யாணம் நடக்கும். அப்படி நடக்கலேண்ணா இளம் விதவை ஒருத்திய குழந்தையோட கூட்டிகிட்டு வந்து அவளுக்கு ஒரு வாழ்க்கை குடுங்க!’’ என்றார்.

‘‘அம்மா!’’ என்று அதிர்ச்சியடைந்தேன்.

‘‘நிச்சயம் செப்டம்பருக்குள்ளே நடக்கும். தைரியமா போங்க!’’ என்றார்.

எனக்கு ஜூலை 1-ந்தேதி கல்யாணம் நடந்தது.

பானுமதி

பானுமதி அம்மாவின் அப்பா வெங்கட சுப்பையா கொஞ்சம் வசதியானவர். இவருக்கு மூத்தமகள் பானுமதி. கண்ணுக்குள் வைத்து வளர்த்தவர். செல்லம் என்றால் அப்படி ஒரு செல்லம். பானுமதி காலில் அடிபட்டால்; அப்பா கண்ணில் நீர் வடியும்.

அப்படி வளர்ந்தவர், திரையுலகில் உதவி டைரக்டராக இருந்த ஏழைக்குடும்பத்து இளைஞன் ராமகிருஷ்ணாவை காதலித்து -தந்தையை விடுவதா -காதலைத் துறப்பதா என்று போராடி கடைசியில், வீட்டை விட்டு சொல்லாமல் ஓடி, ராமகிருஷ்ணாவைத் திருமணம் செய்து வந்து, அப்பா காலில் விழுந்து கண்ணீர் விட்டுக் கதறியதை அவ்வளவு உருக்கமாக தன் சுய சரிதையில் சொல்லியுள்ளார்.

நடிப்பு சுத்தமாகப் பிடிக்காதாம். விதி வேறு விதமாக என் தலையில் எழுதி விட்டதால், வேண்டா வெறுப்பாக கடைசி வரை நடித்தேன். அலட்சியமாக நான் நடித்தது அவ்வளவு பிடித்து விட்டது ரசிகர்களுக்கு என்கிறார். தான் நடித்த படங்களில் 95 சதவீதம் படங்களை இதுவரை பார்த்ததே இல்லை என்கிறார்.

கணவன் திரைப்படத்துறையில் இருந்ததால் மிகச்சிறிய வயதிலேயே, சொந்தப்படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். ஸ்டுடியோ சொந்தமாக வாங்கி விட்டார்.

இங்கிலாந்து மார்க்கரேட் தாட்சர், இந்தியாவில் இந்திராகாந்தி, தமிழ்நாட்டில் ஜெயலலிதா போல இரும்பு மனுஷி பானுமதி.

15 வயதிலேயே மாடர்ன் தியேட்டர்ஸ் சந்தனத்தேவன் படத்தில் நடித்தவர். 25 வயதில் லைலா மஜ்னு -தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நடித்து ஹிட் கொடுத்தவர். 25 வயதில் ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் -படத்தில் 1949-ல் எம்.கே.ராதா ஜோடியாக நடித்த ஹீரோயின். 1952-லேயே பரணி பிக்சர்ஸ் சொந்தமாகத் துவக்கி ‘காதல்’ படத்தை தயாரித்து கதாநாயகியாக நடித்தவர். அப்போது அவர் வயது 28.

ஜூபிடர் ‘ராணி’ படத்தின் நாயகி. 1953-ல் ‘சண்டி ராணி’ படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்து கதாநாயகியாக அவரே நடித்து, தன் சொந்த ஸ்டுடியோ பரணியில் படமாக்கியவர்.

அலிபாபா

அதனால்தான் மலைக்கள்ளன் -படத்தில் நடிக்கும்போது புகழ்மிக்க கதாநாயகி ஆகி விட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபாவிலும், மலைக்கள்ளன் - படத்திலும் நடிக்கும்போது பானுமதி கால்ஷீட்டுக்கு தவமிருப்பார்கள்.

மலைக்கள்ளன் -படத்துக்கு ஒப்பந்தமாகும்போது, ‘மந்திரிகுமாரி’ ஹீரோ எம்ஜிஆர் என்னோடு நடிக்கிறாரா என்று கேட்டாராம். 1947-ல் ராஜகுமாரியில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த போதிலும், கதாநாயக அந்தஸ்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த நேரம் அது. மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி- வெற்றிப்படங்கள் என்றாலும் கதாநாயகி பெயர் தாங்கி வந்த படங்கள் -ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அவை.

‘மலைக்கள்ளன்’தான் எம்ஜிஆரை முழு கதாநாயகனாக நிலை நிறுத்திய முதல்படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை இப்போது பார்த்தாலும், பானுமதி மீதுதான் கதை, காட்சிகளின் அழுத்தம் அதிகம் இருக்கும். ‘அழகான பொண்ணு நான்’, ‘மாசிலா உண்மைக்காதலே!’ ‘என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையில்தானே’ , ‘உன்னை விட மாட்டேன்’ என்று பாடல்கள் மட்டுமல்ல, காட்சியிலும் அவருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். எம்ஜிஆருக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தைப் போல 3 மடங்கு அதிகம் சம்பளம் அவர் வாங்கியதாகச் சொல்லுவார்கள். காரணம் கதாநாயகிகளுக்கு டிமாண்ட். அந்த அம்மையார் எழுதி இயக்கி, தயாரித்து, நடித்த ‘இப்படியும் ஒரு பெண்’ -படத்தில் இளம் ஹீரோவாக நானும் குமாரி பத்மினியும் நடித்தோம்.

ஒரு பெண்மணி 25 ஆண்டுகள் ஸ்டுடியோவை நடத்துவதும், சொந்தப் படங்கள் எடுத்து லாபம் பார்ப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வெற்றி தோல்விகள், ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் எல்லா தொழில்களிலும் உள்ளதுதான்.

பட்ஜட்டுக்குள் ‘இப்படியும் ஒரு பெண்’ படத்தை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.

நாடோடி மன்னன்

சிவகுமாருக்கு அவுட்டோரில் பாடல்காட்சி படமாக்க வேண்டும் என்று சொன்னார். ஊட்டியோ, கொடைக்கானலோ போக வேண்டி இருக்கும் என்று நான் நினைத்திருந்தேன்.

பாடல் காட்சி என்றவுடன், 4 நாட்களுக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்து அடுக்கி பெட்டியை எடுத்து வந்தேன். ‘பெட்டியெல்லாம் வேண்டாம் சார்; நீங்க மட்டும் வாங்க போதும்!’’ என்றார் டிரைவர். ஏறி அமர்ந்தேன். பரணி ஸ்டுடியோவுக்குள், பானுமதி அம்மா வீட்டு போர்டிகோவில் கார் நின்றது.

மானேஜர் வந்தார். ‘சார் மேக்கப் போட்டுட்டு, மாடிக்கு வாங்க!’ என்றார். ஒன்றும் புரியவில்லை. பூம், பூம் மாடு மாதிரி தலையாட்டி விட்டு, ஒப்பனை போட்டு மாடி ஏறினேன். 3 அடி உயரத்தில் 2 ஸ்டூல்கள். எதிரெதிரே போட்டிருந்தனர்.

ஒரு ஸ்டூலில் நான் அமர வேண்டும். எதிர் ஸ்டூலில் குமாரி பத்மினி. காமிராவை லோ ஆங்கிளில் டிராலிபோட்டு தயார் செய்தார்கள்.

என் கையில் படகு ஓட்டும் துடுப்பு. குமாரி பத்மினி கையில் ஒன்று. பாடல் வரி வரும்போது துடுப்பு போடுவது போல பாவனை செய்தவாறு வாயசைப்பு இருக்க வேண்டும். காமிரா ‘டைட் பிரேமில்’ இருந்ததால் இடுப்புக்கு மேல் பகுதி என் முகம், கைகள் துடுப்பு போடுவது மட்டும் படத்தில் தெரியும்.

4 டிராலி ஷாட்டில், பல்லவி, சரணம், இரண்டில் சில வரிகள் படமாக்கப்பட்டன. தரையில் கைக்கெட்டும் தூரத்தில் பக்கெட்டில் தண்ணீர் எனக்கும் பத்மினிக்கும் வைத்தார்கள். பாடிக் கொண்டே குனிந்து பக்கட் தண்ணீரை கையால் அள்ளி பத்மினி முகத்தில் தெளிக்க வேண்டும். பதிலுக்கு அவரும் பக்கெட் தண்ணீரை அள்ளி என் முகத்தில் தெளிக்க வேண்டும். படகில் பாடிக் கொண்டே ஏரி நீரை இரைத்து விளையாடுகிறோமாம். ஏரியும் இல்லை. தண்ணீரும் இல்லை. படகும் இல்லை. குளோசப்பில் இவைகளை மட்டும் படமாக்கினார்கள்.

பின்னர் டைட் க்ளோஸில் என் முகம் மட்டும் கம்போஸ் செய்து சில வரிகள் பாட்டுக்கு வாயசைப்பு செய்த பின்-பாடல் காட்சி முடிந்து விட்டது. நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். எனக்கு அதிர்ச்சி.

அம்பிகாபதி

கொடைக்கானலில் 1949-களில் என்.டி.ராமாராவும், பானுமதியும் ‘லாங்-ஷாட்டில்’ படகு ஓட்டிய பகுதிகளுடன் இந்த க்ளோஸ்-அப் ஷாட்டுகளை எடிட்டிங்கில் இணைத்து முழு பாடலாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

மேஜர் சுந்தரராஜனை வரச்சொல்லி, ஜிப்பா துண்டு போட்டு, அட்சதையை கையில் கொடுத்து, காமிராவின் வலது பக்கம் அட்சதையைத் தூவி, கண்களின் நீர் வைத்து ஆசி கூறுங்கள் என்றார்கள். பின்னர் பாரத்கோட் போட்டு, மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தவாறு, ‘அடடே. சம்பந்தி வாங்க!’ என்று கூறியவாறு காமிராவுக்கு வெளியே வரச்சொன்னார்கள்.

இப்படி 4 ஷாட்ஸ் எடுத்து விட்டு, உங்களுக்கு இந்தப்படத்தில் வேலை முடிந்து விட்டது என்றவுடன் மேஜர் மயக்கம் போட்டு விழவில்லை. லாங் ஷாட்டில் ராஜநளா என்ற தெலுங்கு நடிகர் நடித்ததை எடிட் செய்து இணைத்து விட்ட கொடுமை நடந்தது.

இந்தப் படத்தில் நடிக்க அட்வான்ஸ் கூட வாங்கவில்லை. என் வரையில் 60 சதவீதத்திற்கு மேல் இப்படத்திற்கான காட்சிகள் படமாகி விட்டன.

எனக்குத் திருமணம் முடிவாயிற்று. கோவை அவிநாசி தாண்டி ஒரு அத்துவானக்காட்டில் வேலுமணி அம்மா 5 ஆயிரம் பேர் உட்காருகிற மாதிரி பந்தல் போட்டுக் கொடுத்தார். ஆசிரியர் குமாரசாமி அண்ணா, ‘எவ்வளவு செலவாகும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. எதற்கும் ஒரு 20 ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு வந்து விடு!’ என்றார்.

பரணி பிக்சர்ஸ் அலுவலகத்தில் கேட்டேன். சரியான பதிலும் இல்லை. காசும் வருகிறாற்போல் இல்லை. தேவர் அண்ணாவிடம் என் சம்பளப்பணத்தில் -கைமாத்தாக 15 ஆயிரம் ரூபாய் வாங்கிப் போய் திருமணத்தை முடித்துக் கொண்டு வந்தேன்.

ஏவிஎம்மில், ‘கிரஹப்பிரவேசம்’ -படப்பிடிப்பில் பானுமதி அம்மா மானேஜர் வந்து, பணக்கட்டை காட்டினார். நான் சட்டை செய்யவில்லை. திருமணம் முடிந்து விட்டது. இப்போதைக்கு பணத்தேவை இல்லை என்று கண்டிப்பாக சொல்லி அனுப்பி விட்டேன்.

திருமண வரவேற்புக்கு அம்மா வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உதவி இயக்குநர் கம்பெனி சார்பில் வந்து போனார்.

ஜெமினியுடன்

மறுநாள் காலையில் 8 மணிக்கு அம்மையார் போன். நான் வேறு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். மாலைக்குள் 4 முறை அவரே வீட்டுக்குப் போன் செய்தார். கடைசி போனில் மாட்டிக் கொண்டேன். ‘என்ன சிவகுமார்! காலையிலிருந்து பல தடவை உங்க வீட்டுக்கு போன் பண்ணீட்டேன். நீங்க கிடைக்கலே. இதோ இப்ப கிளம்பிட்டேன். அரை மணிநேரத்தில் வீட்டுக்கு வர்றேன்!’ என்றார்.

‘அம்மா! நீங்க இங்க வந்து வாழ்த்தற அளவுக்கு நான் பெரிய ஆளில்லே. ஆசிர்வாதத்தை உங்க வீட்ல வந்து, நாளைக்கு நானே வாங்கிக்கறேன்’

‘நிச்சயம் வருவீங்களா?’

‘கண்டிப்பா வருவேன்!’

மறுநாள் துணைவியுடன் சென்றேன். ஆள் உயர லட்சுமி சிலை -செந்தாமரையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை. மற்ற கடவுள்களும் உண்டு. விதவிதமான பழத்தட்டு, பூ வகைகள். மாலைகள். சாம்பிராணி புகை என்று ஒரே தெய்வீகச் சூழ்நிலை. மந்திரம் ஓதி பூஜை முடித்து ஒரு தட்டில் மனைவிக்கு புடவை -எனக்கு வேட்டி சட்டை, அதன் மேல் எனக்கு தரவேண்டிய பணக்கட்டு.. அம்மா தட்டை நீட்டினார்.

நான் அம்மா முகத்தைப் பார்த்தேன். ‘சாமி பிரசாதம் வேண்டான்னு சொல்லக்கூடாது!’ என்றார். வாங்கிக் கொண்டேன்.

ரஞ்சனுடன்

உத்திராடம் நட்சத்திரம், மகரராசி -பயங்கர கோபக்காரன். ஆனா நேர்மையானவன் அம்மா. கொஞ்சம் ஸ்ட்ராங்கா கடிவாளம் போட்டு வை!’ என்று மனைவிக்கு அறிவுரை சொல்லி விடை கொடுத்தார். எப்படியோ சரித்திர நாயகியுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு சந்தோஷம்தான். அதை விட செப்டம்பர் மாதம் அவர் சொன்ன தேதிக்கு முன் பெண் கிடைத்து தாலி கட்டியதில் அதை விட சந்தோஷம்

-

அனுபவிப்போம்

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x