Published : 27 Jul 2020 11:14 AM
Last Updated : 27 Jul 2020 11:14 AM

‘நீட்’டும் தாளாண்மை

“மாற்றத்தை ஏற்கின்ற உயிரினங்கள் பிழைக்கின்றன ;
வலிமையான மாறாத உயிரினங்கள் மறைகின்றன !!”
- சால்ஸ் டார்வின்

பரிணாம வளர்ச்சி மனிதனுக்கு மட்டுமே என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் , இயற்கை நமக்கு அவ்வப்போதுவிடும் சவால்களில் ஒன்று கரோனா அச்சுறுத்தல்!!

நன்றாகப் பகுத்து நோக்கினால், மனித இனத்திற்கு முன்பே தோன்றி , பல்வேறு பரிணாம வளர்ச்சியடைந்த இந்த வைரஸ் போன்ற உயிரினங்களே மாற்றத்தை ஏற்கும் உயிரினமாக விளங்குகின்றது.

இந்தச் சவால்களை ஏற்கும் நிலையில் இந்தியாவில் முன்னணியில் நிற்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது!!

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு அறுபது ஆண்டுகளில், அடுத்தடுத்த அரசுகளின் கொள்கைக் கோட்பாட்டில் வளர்ந்து நிற்கின்றன. இந்தியாவில் அதிக கரோனா பரிசோதனைகள், அதிக மருத்துவக் கல்லூரிகள், அதிக உள்கட்டமைப்பு வசதிகள், அதிக ஆக்ஸிஜனுடன் படுக்கை வசதி, அதிக செயற்கை சுவாசக்கருவிகள் - இவை அனைத்திலும் தமிழக அரசு மருத்துவமனைகளே முன்னணி வகிக்கின்றன!!

இங்கு அரசுமருத்துவமனையில் முன்னின்று களமாடும் மருத்துவர்கள், செவிலியர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், தொன்னுற்று எட்டு சதவீதம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்!!

இவர்கள் அனைவரும் 2016, நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள். தற்சமயம் தங்களைச் சார்ந்த மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர் . இதில் அரசு மருத்துவர்கள் பெரும்பாலானோர் சாதாரணக் குடும்பத்திலிருந்தும், சிறு ஊர்களிலிருந்தும், முதல் தலைமுறை கல்வி பெற்றவர்களாக - தங்கள் உழைப்பால் சிறந்த மதிப்பெண்கள் பெற்று - இந்த நிலை அடைந்துள்ளனர்!

தங்களைச் சார்ந்த சாமானிய மக்களுக்கு அரசு மருத்துவமனையே சிறந்த வழி என்றுணர்ந்தவர்கள்!
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகப் பாடப் பிரிவு நூல்களையே கற்றவர்கள். நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள்.

பொதுமக்களிடம், பொதுவாகப் பரப்பப்படும் பொய்கள் என்ன?

1. மருத்துவக் கல்விக் கட்டணம் மிக அதிகம். பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்க இயலும்!

2. குறைந்த மதிப்பெண்கள் பெற்று, சிறப்பு இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரி இடம் பெறுகின்றனர்!

3. தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள் !

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் .

பணமிருந்தால் நான் மருத்துவராகி இருப்பேன் என்று சொல்லும்போது - தமிழக அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை அறிந்து கொள்வோம். நாங்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் , அனுமதிக் கட்டணம் அனைத்தும் சேர்த்து வருடம் ரூபாய் 790 . தற்சமயம் இந்தக் கட்டணங்கள் சுமார் ரூபாய் 13,600. உலகிலேயே மருத்துவக் கல்விக்கான மிகக் குறைந்த கட்டணம் இதுவாகவே இருக்கும்!

குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் ,சிறப்பு இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான தேர்வு பெற்றவர்கள் என்ற குற்றச்சாட்டு, முடியாதவர்கள் வைக்கும் வாதம் . இதற்கு சமூக நீதியினால் -தமிழகத்தின் இட ஒதுக்கீட்டில் , திறந்த ஒதுக்கீடு ( OC) உச்ச மதிப்பெண்கள் பெற்ற, அனைத்துப் பிரிவினரும் அதில் பங்கேற்கலாம். இதில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட , தாழ்த்தப்பட்ட மாணவர்களே பெரும்பான்மையான இடத்தைக் கைப்பற்றினர்
2016க்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டில் வாயிலாக சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றவர்களின் மதிப்பெண்கள் முறையே 99.5 சதவீதத்திலிருந்து 97.5 சதவீதத்துக்குள் முடிந்துவிட்டது .

பணம் இல்லாமல் , இட ஒதுக்கீடு இல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முடியவில்லை என்று அடுத்த முறை யாரேனும் சொன்னால் - அவரின் மதிப்பெண் பட்டியலைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா? என்று கேள்வி எழுப்புங்கள்!!

மூன்றாவது பொய் ‘நீட்’ தேர்வினை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள அச்சப்படுகின்றனர் - என்ற வாதம் , தவறானது!!

நீட் தேர்வுக்கான முறையை தமிழகம் எதிர்ப்பதற்கான காரணம் வசதிமிக்கவர்கள், நகரங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை இரண்டு வருடம் படிக்க வசதியும் வாய்ப்பும் உள்ளதால் சிலருக்கு மட்டுமே இது பயனுள்ளதாக அமையும் என்ற ஐயப்பாடு பலருக்கு இருக்கிறது!!

பெரும்பாலான தமிழக மருத்துவர்கள் இதனை வருத்தத்துடன் தெரிவிப்பதற்கும் , சில காரணங்கள் உள்ளன. தங்களுடைய மகன், மகளுக்கு நீட் தேர்வின் மூலம் எளிதாக மருத்துவக் கல்வியில் இடம் பெற வாய்ப்பு இருந்தாலும், தங்களைப் போன்று முதல் தலைமுறை மருத்துவர்கள் இனி வருவது கடினம் என்ற எண்ணம் உள்ளது! சமுதாயத்தில் சூழ்நிலையினால் பின்தங்கி நிற்கும் மாணவர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு போட்டி என்ற எண்ணமும் இல்லை!!

தற்சமயம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, நீட் தேர்வினை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்கள் சிலரிடம் பேசினேன். இவர்களின் பெற்றோர்கள் அனைவரும் மருத்துவர்கள். மேலும் இம்மாணவர்கள் நடுவண் அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். பள்ளிப்படிப்பின்போதே , பிற நேரங்களில் கடந்த இரண்டு வருடங்களாக தனியார் சிறப்புப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வுக்காகத் தயார் நிலையில் இருப்பவர்கள். இறுதித் தேர்வில் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்.

இதில் குறும்புக்கார மாணவரிடம் பேசும்போது, அவரின் நீட் தேர்வு பற்றிய தெளிவு மிக நுட்பமாக இருந்தது. முடிந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணிற்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை. எதிர்வரும் தேர்வைப் பற்றியே முழு கவனத்தில் இருந்தார். மாணவியிடம் பேசியபோது , தன் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் வரை நினைவுகூர்ந்தார். இவை அவரின் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தை உணர்த்தியது !

கடலிலே நீச்சல் அறிந்தவர் கரை தேடி நீந்தும்போது , சரியான திசையிலும், மனம் தளராமலும், சோர்ந்து போகும் போது மிதந்து இளைப்பாறவும் மனநிலையில் இருப்பவர்கள் கரை சேருவர். அச்சப்பட்டு , நம்பிக்கை இழந்தால், அது கல்லைக்கட்டி கடலில் விழுவது போன்றே முடிந்துவிடும். போட்டித்தேர்வுகளும் இவை போன்றதே !!

“ உன்னை அறிந்தால் -நீ உன்னை அறிந்தால்,
உலகத்தில் போராடலாம்”

சின்னாளம்பட்டியிலிருந்தும் , ஊழியக்காரன் புதூரிலிருந்தும் -எங்களுடன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்கள், இப்போது உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். முதல் தலைமுறை மருத்துவர்களான நாங்கள் பயின்றபோது பெற்றோர்களிடமிருந்தோ, சமுதாயத்திலிருந்தோ எந்த அழுத்தமோ, உந்துதலோ இல்லை! முழுவதும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மூத்த மாணவர்களின் வழிகாட்டுதல் நன்கு அமைந்தது!!

“பல தோல்விகளைச் சந்தித்தேன் ... வெற்றி கிடைத்தபோது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்துகொண்டேன்..!!”

என்ற வாசகம் , எங்கள் விடுதி அறையில் பொறித்து வைத்திருந்தோம் !

தற்சமயம் மருத்துவக் கனவுடன் ஏங்கி நிற்கும், நன்கு படிக்கக் கூடிய சிற்றூர்களைச் சார்ந்த , வசதி வாய்ப்பு குறைந்த மாணவர்களின் நிலை என்ன ?

தற்சமயம் அவர்கள் பயிலும் தமிழகப் பாடப்பிரிவு நூல்களும் , நீட் மூலம் மருத்துவம் சேர்ந்த மாணவர்களின் தனியார் பயிற்சி தெரிவுவிடை ( MCQ ) நூல்களையும் , சுயமாக தெளிவுற ( மனப்பாடம் அல்ல) கற்றறிதல் வேண்டும் . ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, வெற்றி பெறும் வரை இதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற தாளாண்மை வேண்டும்! இதைப் போன்ற கடுமையான முடிவுகளை, வளர்இளம் பருவ வயதில் எடுப்பது என்பது, மிகவும் கடினம்.

“தன்னை வென்றான் தரணியை வெல்வான்’’

பல பெற்றோர்கள் , படிப்பைத் தவிர வேறொதும் வாழ்க்கைக்குதவாது என்ற நிலை, குழந்தைகள் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைக்கும். கல்வி என்பதும் படிப்பு என்பதும் வேறு என்று பெற்றோர்கள் உணர வேண்டும்!! குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதுபோன்று, விளையாட்டுத் திடலுக்கும் , சொற்பொழிவிற்கும் அழைத்துச் செல்லுங்கள். விளையாடும்போது , தடுமாறி விழுந்தால் தானாகவே எழுந்து நிற்கும் திறனே கல்வி என்பது! விளையாட்டுப் போட்டியிலும், கலைக்கழகப் போட்டியிலும் வெற்றி , தோல்விகளைச் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை, எந்தப் பாடப்புத்தகமும் கற்றுத் தருவதில்லை !

“அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்,
ஆண்டவனே நீ ஏன்? எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!”

தாளண்மைப் பற்றிய தரவுகளை ஆசிரியர், வாரம் ஒருமுறையேனும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். எனக்கு உந்து சக்தியாக இருந்த ஒரு வீரரை இங்கு பகிர்கிறேன் .

கரோலி டாகஸ் ( Karoly Takacs), ஹங்கேரி நாட்டின் போர்ப்படையில் அதிகாரியாகவும், அந்த நாட்டின் மிக சிறந்த வலதுகை துப்பாக்கி சுடும் வீரராகவும், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என்ற நிலையிலும் இருந்தார். 1938 ஆம் ஆண்டு தன்னுடைய 28 ஆம் வயதில், போர்ப் பயிற்சியின்போது கையெறிகுண்டு வெடித்து தனது வலதுகையினை முழுவதும் இழந்தார். 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றார் . அப்போதைய உலக சாம்பியனான, கார்லோஸ் வலோட்டி , வலது கை இல்லாத டாகஸ்சைப் பார்த்து, ‘ எதற்காக லண்டன் வந்தாய்?’ என்று கேட்டார். அதற்கு டகாஸ், ‘நான் இங்கு கற்க வந்துள்ளேன்’ என்றார்.

1948 லண்டன் ஒலிம்பிக், 1952 ஹெல்சின்கி ஓலிம்பிக் இரண்டு போட்டியிலும் கரோலி டகாஸ் உலக சாதனைப் புள்ளிகளுடன் இடது கை போட்டியாளராக தங்கம் வென்றார்! இதைப் போன்ற கடுமையான சூழ்நிலையில்தான் இன்றைய கிராமப்புற, சிற்றூர் மாணவர்கள், வாய்ப்பே இல்லை என்ற நிலையை மாற்றி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் .

“வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே”

பத்தாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு பல உயர்பள்ளிகளில் இலவசமாக இடமளிக்கின்றனர் .இத்தகைய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டக்கூடியவர்கள் ஆசிரியர்களே! இந்தப் போட்டித் தேர்வுகளில் எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும், படித்த பாடங்களை, தெளிவுறப் பகுத்தறிந்து படித்துள்ளார்களா என்பதையே தேர்ந்து ஆய்வு செய்கின்றனர்.

நம்மைப் போன்றோர் இவர்களுக்கு உதவ முடியுமா? எளிய வகையில் உதவலாம். பெருநகரங்களில் உள்ளவர்கள், தங்கள் வீட்டில் அல்லது அக்கம் பக்கத்தில் நீட் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பயிற்சி நூலினை சிற்றூரில் பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்களுக்குக் கொடுத்து உதவுதல், தொடர் பலனை அளிக்கும். மேலும், நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் நிரப்புவது மிகக் கடுமையான சவாலாக இருப்பதால், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் மாணவர்களுக்கு உதவலாம்.

பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் எண்பது முதல் தொன்னூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களும் , ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும்போது, சிற்றூர்களில் தொன்னூறு சதவீதத்திற்கு மேல் வாங்கும் மாணவர்கள், நீட் தேர்வில் முயன்று வெல்லலாம்!!

முன்னர் கேட்ட மூன்றாவது கேள்விக்கான பதில் மேலே குறிப்பிட்டதில் உணராதவர்களுக்கு - கடந்த மூன்று வருடங்களாக, பட்ட மேற்படிப்பு நீட் தேர்வில் ( MD/ MS PG seats ) நமது தமிழக மாணவர்களே அதிக தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்த வருடம் தமிழக மருத்துவர்கள் 11,681 பேர் நீட் பட்டமேற்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமக்கு அடுத்த நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து 9,792 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மருத்துவர்கள் தாளாண்மை மிக்கவர்கள். சாதாரணச் சூழ்நிலையிலும், சிற்றூர்களிலும், தமிழகப் பாடநூல் திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மூலமாகவே ஐந்தாண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ் இடம் பெற்றவர்கள்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது , ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்!!

- மரு.சேகுரா

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x