Published : 25 Jul 2020 03:18 PM
Last Updated : 25 Jul 2020 03:18 PM

வறுமையுடன் போராடும் பருத்திவீரன் புகழ் நாட்டுப்புறப் பாடகி காரியாபட்டி லட்சுமியம்மா: ஒய்வூதியம் வழங்க அரசு கருணைக் கரம் நீட்டுமா?

காரியாபட்டி லட்சுமியம்மாள்

மதுரை

'ஊரோரம் புளியமரம்..' என்ற பாடல் எங்காவது ஒலிக்கும்போதே, நடிகர்கள் கார்த்தி, சரவணனுடன் நம் கண் முன் வந்து நிற்பார் பெரிய பொட்டும், ஓங்குதாங்கான உடல்வாகும் கொண்ட கிராமத்துப் பெண். ஆனால், அவர் பெயர் லட்சுமியம்மா என்று நம்மில் பலருக்குத் தெரியாது. அவரது பெயர் மட்டுமல்ல, அவரின் தற்போதைய வறுமை நிலையும் கூடத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒழுகும் ஆஸ்பெஸ்டாஷ் ஷீட் வீட்டில் பெற்ற விருதுகளைக் கூட வைக்க இடமில்லாமல் அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பருத்தி வீரன் புகழ் நாட்டுப்புற பாடகி காரியாப்பட்டி லட்சுமியம்மாள் வறுமையில் வாடுகிறார்.

தமிழ் நாட்டுப்புறக் கலையை வளர்த்த முதுபெரும் கலைஞரான இவருக்கு கலைமாமணி விருதும், ஒய்வூதியம் கிடைக்கவும் அரசு கருணை காட்ட வேண்டும் நாட்டுப்புறக் கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘பருத்திவீரன்’ பட புகழ் நாட்டுப்புற பாடகி லட்சுமியம்மாள், மதுரை பரவை முனியம்மாளுக்கு இணையாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்றவர். இவர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்தவர்.

பரவை முனியம்மாள் சினிமாவுக்கு செல்வதற்கு முன் வரை, இவரும், லட்சுமியம்மாளும் சேர்ந்துதான் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பட்டித்தொட்டிகளுக்கெல்லாம் சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடி வந்துள்ளனர்.

பரவை முனியம்மாள் தூள் படம் மூலம் சினிமாவில் உச்சம் தொட்டப்பிறகு லட்சுமியம்மாள், தனியாக நாட்டுப்புற பாடல் கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தார்.

2007-ம் ஆண்டு, இயக்குநர் அமீர் மூலம் லட்சுமியம்மாளுக்கும் ‘பருத்திவீரன்’ படத்தில் ஒரு நாட்டுப்புற பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரே பாடல் மூலம் பரவை முனியம்மாள் போல் இவரும் சினிமாவிலும், நாட்டுப்புறக் கலைஞர்கள் மத்தியிலும் புகழ்பெற்றார். ஆனால், லட்சுமியம்மாளின் உடல் நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் மற்ற பாடல்களை பாடுவதை விட கடினம். இதற்கு நல்ல குரல் வளம் மட்டும் போதாது, நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி உரத்த குரலில் பார்வையாளர்களை நொடிப்பொழுதில் ஈர்க்கும் கனீர் வார்த்தைகளால் பாட வேண்டும்.

ஆனால், 2016-ம் ஆண்டு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் லட்சுமியம்மாளால் முன்போல் பாட முடியவில்லை. அதனால், 6 படங்களோடு லட்சுமியம்மாளின் சினிமா ஆசையும், நாட்டுப்புறப் பாடல் கச்சேரிகளுக்கும் முடிவுக்கு வந்தது. உடல் நலமில்லாமல் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்தார்.

ஒரு கட்டத்திற்கு கையில் பணமில்லாமல் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் சேர்ந்தார். மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால், அவரது குரல் வளத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் முன்போல் மீட்டுக் கொடுக்க முடியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இவரால் முன்போல் கச்சேரிக்கு செல்ல முடியவில்லை. வலது கால் ஊனம் என்பதால் நடக்கவும் முடியவில்லை. வருமானம் இல்லாமல் வீட்டிலே முடங்கினார். கூலி வேலைகளுக்குச் செல்லும் இவரது 2 மகன்களுக்கு அவர்தம் குடும்பத்தை காப்பாற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.

ஆனாலும், அவர்கள் உதவியால் மூன்று வேளை மருந்து, மாத்திரை சாப்பிட்டு வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார். பெற்ற விருதுகளை கூட வைக்க இடமில்லாமல் ஒழுகும் ஆஷ்பெட்டாஷ் ஷீட் வீட்டில் குடியிருக்கிறார்.

தற்போது அவரது இரு மகன்களும் கரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களால் முன்போல் லட்சுமியம்மாளின் மருத்துவத்திற்கு உதவ முடியவில்லை.

மருந்து மாத்திரைகள் வாங்கக் கூட பணமில்லாமல் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறார் 70 வயதான இந்த முதுபெரும் நாட்டுப்புறக் கலைஞர் லட்சுமியம்மாள். மருந்து மாத்திரை சாப்பிடாததால் உடல்நிலையும் மோசமாகி கொண்டிருக்கிறது.

அவரது மகன் வீரகுமார் கூறுகையில், ‘‘நான் அம்மாவின் கச்சேரிகளில் தவில் வாசிப்பேன். 2016-லிருந்து அம்மா கச்சேரிக்கு போகாததால் நானும் அண்ணனைப் போல் கூலி வேலைக்கு போய்தான் அம்மாவையும், என்னோட புள்ளக்குட்டிகளையும் காப்பாத்துறேன்.

நாங்களும் அம்மாவுக்கு மாற்றுத்திறனாளி ஒய்வூதியத்திற்கு பலமுறை எழுதி விட்டிருந்தோம். பதில் கிடைக்கவில்லை. நலிவடைந்த நாட்டுப்புற கலைஞருக்கான உதவித்தொகைக்கு எழுதிப்போட்டிருந்தோம். அதற்கும் பதில் வரவில்லை, ’’ என்றார்.

லட்சுமியம்மாள் கூறுகையில், ‘‘20 வயதில் பாட ஆரம்பிச்சேன். கும்பி பாட்டு, ஒப்பாரி பாட்டு, தாலாட்டுப் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, பக்திப் பாட்டு, என எல்லாம் பாட்டும் நல்லாவே பாடுவேன். 50 வருஷமா ஆயிரக்கணக்கான கச்சேரிகளில் பாடிட்டேன். ஆரம்பத்துல உள்ளூர் திருவிழாக்கள்ல கும்பி பாட்டுப்பாட போவேன்.

அப்புறமா, பரவை முனியம்மாளுடன் பின்னணி பாட கூட போனேன். எங்க இணைக்கு சுற்றுப்பட்டிகள்ல நல்ல வரவேற்பு கிடைச்சது. வானொலி, கேசட்டில் பாடி அந்த ஆண்டவன் புண்ணியத்துல சினிமாவிலும் பாடிவிட்டேன். அதிலிருந்து கச்சேரி தொடர்ந்து கிடைத்தது. பெரிய வாய்ப்பு கிடைச்சதால, அதை தக்க வைக்க சாப்பிட கூட நேரமில்லாமல் அலைச்சலால் உடம்புக்கு முடியல. அதிகமாக கத்தி பாடினதுல ரத்தாகுழாயில் அடைப்பு வந்துட்டு. எவ்வளவோ செலவு பண்ணியும் குணமாகல. சாப்பாடு என் புள்ளைங்க போட்டுறுவாங்க. மருந்து மாத்திரை வாங்கவாது உதவித்தொகை கொடுத்தா நல்லாயிருக்கும், ’’ என்றார்.

ஆனால், நாட்டுப்புறக் கலைஞர்கள் இவருக்கு அரசு கலைமாமணி விருதுதோடு உதவித்தொகையும் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரசின் கருணைக் கரம் நீளுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x