Last Updated : 13 Jun, 2020 09:36 AM

4  

Published : 13 Jun 2020 09:36 AM
Last Updated : 13 Jun 2020 09:36 AM

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடலாமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்பால் தற்போது அதிக பிரபலமானதும் பேசும் பொருளாகவும் மருத்துவத்துறையினரிடையே அதிக விவாதப் பொருளாகவும் ஆகி உள்ளது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை. குளோரோகுயின் மாத்திரையை மலேரியாவுக்குக் கொடுப்பார்கள் என்று ஓரளவு நமக்குத் தெரியும். ஒருவகை மூட்டுவலிக்கும்கூட மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை, கரோனாவைப் பக்கத்திலேயே நெருங்கவிடாது போன்ற தோற்றத்தை ட்ரம்பின் பேச்சு ஏற்படுத்திவிட்டது.

ட்ரம்ப் பேசியவுடனேயே இதற்கு மவுசு பல்மடங்கு பெருகிவிட்டது. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாட்டின் அதிபரே, ‘இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் நல்ல பலனை அளிக்கக் கூடியவை. நானே சாப்பிட்டு வருகிறேன்’ என்று சொன்னதும் பலரும் மருந்துக் கடைக்கு படை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கடையில் இருக்கிற ஸ்டாக்கும் காலியாகத் தொடங்கிவிட்டது. நண்பருடைய தம்பி ஒருவர் மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக சொன்னார். என்ன டோசில் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா என்று கேட்டதற்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார். அவருடைய அக்கா, தங்கை என்று குடும்பத்தில் அனைவரையும் சாப்பிட வைத்துவிட்டாராம். இன்னொருவர் மருந்து மொத்தக்கடையில் பெரிய சிபாரிசு பிடித்து 3 அட்டை மாத்திரை வாங்கினாராம்.

இதுபோல் வாங்கிச் சாப்பிட்டவர்களுக்கு எப்படிச் சாப்பிட வேண்டும், எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று தெரியாது. ஊடகங்களில் இந்த மாத்திரை குறித்த பேச்சு வலுக்கவே பலருக்கும், வாங்கிச் சாப்பிடலாமே என்ற எண்ணம் தோன்றுவது நியாயம்தான். உயிர் தொடர்புடைய பிரச்சினையாயிற்றே. எல்லோரும் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பது அரசின் கவனத்துக்கு வந்ததும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கொடுக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அதுவரையிலும் சாதாரண மாத்திரையாக இருந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றது. கவுண்டர் சேல்சில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சரி, இதைச் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் எற்படும் தெரியுமா?

எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவுகள் என்பது தவிர்க்க முடியாதுதான். ஒரு காலத்தில் மருத்துவ உலகினர் பென்சுலின் மருந்தை அற்புதமான ஆண்டிபயாட்டிக்காகக் கொண்டாடினார்கள். ஆனால், பின்னாளில் அதே பென்சுலினால் எதிர்பாராமல் ஏற்பட்ட மரணங்களை நாம் மறந்துவிடவில்லை.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் இ.சி.ஜி. எடுத்து இதயத்தை ஆய்வு செய்து இதய மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இதைச் சாப்பிட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில்கூட செய்தி பரவியது. எனவே, இதய நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எக்காரணம் கொண்டும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக தலைவலி, வயிற்றுப்போக்கு, ஒருவித அசெளகரியம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதெல்லாம் சாதாரணமானவை.

மாத்திரையால் கண்ணில் என்ன பிரச்சினை?

இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன் கண்மருத்துவரிடம் கண்களை ஆய்வு செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கக் கண்மருத்துவச் சங்கம் அறிவுறுத்துகிறது. குறிப்பாக, கண்ணின் விழித்திரை நலமாக இருக்கிறதா என்று விழித்திரையை ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை அளவுக்கதிகமாகவோ நீண்ட நாட்களுக்கோ எடுத்துக்கொள்பவர்களுக்குத் தான் கண்ணில் பாதிப்பு அதாவது விழித்திரை நச்சுப்பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், சாப்பிடும் முன் கண்களை ஒருமுறை ஆய்வு செய்துகொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.

ஏனெனில், இந்த மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய விழித்திரை நச்சுப்பாதிப்பு எனபது மீண்டும் சரி செய்ய முடியாத நிரந்தர பார்வையிழப்பு ( Irreversible blindness ) என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மாத்திரை சாப்பிடும்போது ஏற்படும் பார்வைப் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளை ஒருவரால் உடனடியாக அறிய முடியாது. பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகே உணர முடியும். எனவே, மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்மருத்துவரிடம் கண் ஆய்வு செய்ய வேண்டும்.

விழித்திரை நச்சுப்பாதிப்பு பார்வைத்திறன், பக்கப்பார்வை, இரவுப்பார்வை மூன்றையும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு முன்னரே சொன்னதுபோல் சாப்பிடும் மாத்திரையின் அளவைப்பொறுத்தும் எத்தனை நாட்கள் சாப்பிடுகிறார் என்பதையும் பொறுத்தது என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சர்வயோக நிவாரணி அல்ல

கரோனா வைரஸால் ஏற்படும் மரணத்திலிருந்து நம்மைக் காக்க உதவும் சர்வயோக நிவாரணி போன்ற தோற்றத்தை ஹைட்ராக்சிகுளோரோகுயினுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்துவிட்டார். இந்த மாத்திரை கரோனா நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் என்பது இதுவரையிலும் ஆய்வின் மூலம் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. ட்ரம்பின் கருத்துக்கு அமெரிக்க மருத்துவர்களும் எம்.பிக்கள் சிலரும்கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் மாத்திரை சாப்பிட வேண்டிய அளவு அவர்களுக்குத் தெரியும். ஆனால், பொதுமக்கள் தாமாக வாங்கிச் சாப்பிடும்போது அளவு தெரியாமல் சாப்பிட்டுப் பக்க விளைவுகளுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கை

உயிர்மேல் அனைவருக்குமே ஆசைதான். அதே நேரம் கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுயவைத்தியமாக மருந்துக்கடையிலோ அல்லது நண்பர்களின் உதவிமூலமாகவே இந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிடும் முன் ஒருமுறை இந்த மாத்திரை தேவைதானா என்று மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. சுய மருத்துவம் எப்போதுமே ஆபத்தானதுதான். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி விடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மூலம் கரோனாவில் இருந்து தற்போதைக்கு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிகள் இருக்கின்றன.

இந்தக் கட்டுரையை முடிக்கும்போது உலக சுகாதார நிறுவனம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைத் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பழமையான மருத்துவ ஆய்விதழான ‘லான்செட்டில்’ வெளியான ஆய்வறிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்துவது அவர்கள் இறக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில்தான் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பு அம்சத்தைச் சுட்டிக்காட்டி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.

கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x