கரோனா விளைவு; பொதுப் போக்குவரத்துக்கு குட்பை: சைக்கிளுக்கு வந்தனம் சொல்லும் ஐரோப்பியர்கள்!

கரோனா விளைவு; பொதுப் போக்குவரத்துக்கு குட்பை: சைக்கிளுக்கு வந்தனம் சொல்லும் ஐரோப்பியர்கள்!
Updated on
1 min read

கரோனா வைரஸால் உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் பழைய வாழ்க்கை எப்போது திரும்பும் என்பதுதான் எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. கரோனா வைரஸ் எப்போது உலகை விட்டுச் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்ற குரல்கள் கேட்பதுதான், இப்போது மக்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு என்பது மட்டுமே நிதர்சனம்.

வீட்டை விட்டு வெளியே வந்தால், முகக்கவசம் அணிய வேண்டும்; கைகளை சானிடைசர் அல்லது சோப்பு நீரால் அவ்வப்போது கழுவவேண்டும் என்பது எழுதப்படாத விதிகளாகி வருகின்றன. இவை மட்டுமல்ல, மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, பொதுப் போக்குவரத்தைத் தவிர்ப்பது, எந்த இடமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஓர் அடி எட்டியே இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதும் சில காலங்களுக்கு விதிகளாகலாம்.

அந்த வகையில் பொதுப் போக்குவரத்துக்கு குட்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் இங்கிலாந்துவாசிகள். ‘சொகுசுவாசிகள்’ என்று பெயரெடுத்த இங்கிலாந்து நாட்டினர், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், கரோனா தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கார் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் சுற்றிவந்தவர்கள், தற்போது கிடப்பில் போட்டுவைத்திருந்த இரு சக்கர மோட்டார் வாகனம் அல்லது சைக்கிளைத் தூசு தட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரோனா வைரஸ், உடல் நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலமாகப் பேண வேண்டிய அவசியத்தையும் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. எனவே, இருசக்கர மோட்டார் வாகனத்தைவிட, சைக்கிளில் செல்வது உடல்நலனுக்கு நல்லது என்பதால், சைக்கிள் பக்கம் தங்களுடைய பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள் இங்கிலாந்துவாசிகள். கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்தில் சைக்கிள் விற்பனை 200 மடங்கு அதிகரித்திருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள சைக்கிள் கடைகளில் முன்பு வாரத்துக்கு 20-30 சைக்கிள் விற்பனையானதே பெரிய விஷயம். இப்போது என்னவென்றால், தினமும் 50 சைக்கிள்கள் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள். இதேபோல பழைய சைக்கிள்களைப் பழுது பார்க்கும் கடைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் பொதுமக்கள் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். பணக்கார ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள், சைக்கிளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு லைஃப் ஸ்டைலை மாற்றிவிட்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்த நிலை நம் நாட்டிலும்கூட வரலாம்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இதுதானோ?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in