Published : 20 May 2020 08:35 PM
Last Updated : 20 May 2020 08:35 PM

டிரம்ஸின் இனிமையைப் புரியவைத்த புருஷோத்தமன்!

ஸ்வரங்களாகிய குதிரைகளைப் பூட்டியது பாட்டுத் தேர். ஒவ்வொரு பாட்டும் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் எங்கே நிற்க வேண்டும் எங்கே திரும்ப வேண்டும் என்ற தாளக் கடிவாளத்தைக் கொண்டு இளையராஜாவின் பாட்டுத் தேரை `அன்னக்கிளி’ தொடங்கி ஓட்டிவந்த சாரதி புருஷோத்தமன்.

இளையராஜா திரை இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பாகவே அவர் நடத்திய பாவலர் இசைக் குழுவிலேயே வாசித்திருப்பவர் டிரம்மர் புருஷோத்தமன். டிரம்மராகவும் இசை நடத்துனராகவும் இளையராஜாவுக்கு உற்ற துணையாக இருந்த புருஷோத்தமன் ஓரிரண்டாகத்தான் இளையராஜாவின் நேரடியான இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் இருந்தார்.

உலகின் எந்த மூலையில் புதிதாக இசை சார்ந்த தொழில்நுட்பக் கருவிகள் வந்தாலும் ஆர்வமுடன் அதை நமக்கான இசையாக மாற்றிக் கொள்ளும் திறமை இயல்பாகவே புருஷிடம் இருந்தது என்கிறார் பிரபல கிதாரிஸ்ட்டும் புருஷோத்தமனின் அண்ணனுமான சந்திரசேகர்.

காட்சிகளே இல்லாத பாடல்

“பொதுவாகப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகுதான் அந்தப் பாடலுக்கான காட்சிகளைப் படம் பிடிப்பார்கள். ஆனால் மகேந்திரன் இயக்கத்தில் `மருதாணி’ என்னும் படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்தான் `புத்தம்புது காலை’ பாடல். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதோடு அந்தப் படம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நல்ல பாடலை வீணாக்காமல் சேர்க்கலாமே என்றுதான் பாவலர் கிரியேஷன்ஸ் எடுத்த `அலைகள் ஓய்வதில்லை’ ஒலித் தகட்டில் இந்தப் பாடலையும் சேர்த்தனர். இந்தப் பாடலின் ஒலிப்பதிவு நடக்கும்போது, ஒரு சம்பவம் நடந்தது.

காலையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு ஆகும் நேரத்துக்கு முன்பாக நண்பர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து ஒரு தாள வாத்தியக் கருவியை எடுத்துவந்திருக்கிறேன் என்று எனக்குத் தகவல் தெரிவித்தார். உடனே, அவரைச் சந்தித்து அந்தக் கருவியை வாங்கிக் கொண்டு நேரடியாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்றுவிட்டேன். இரண்டு பிளாஸ்டிக் டப்பாக்கள் போல் இருந்த அந்தக் கருவியோடு என்னென்ன ஒலிகள் அதில் இருக்கின்றன என்று அறியும் வசதியும் இருந்தது. அதை அப்படியே ராஜா சாரிடம் காட்டினேன். அந்தக் கருவியோடு மின் இணைப்புகளைப் பொருத்தி, வாசித்த முதல் சவுண்டே ராஜா சாருக்குப் பிடித்துவிட.. அவ்வளவுதான் டேக் போய்விட்டோம். புத்தம்புது காலை பாட்டு முழுவதும் வரும் அந்த ரிதம். காட்சிகளே இல்லாத அந்தப் பாடலுக்கு, அந்த ரிதம் சவுண்டைக் கேட்டதுமே பாடலைப் பலரும் நினைவுகூரும் சம்பவங்களும் நடந்தன” என்று அந்தப் பாடலின் உருவாக்கத்தின்போது நடந்த சம்பவத்தை பெருமையோடு ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் டிரம்மர் புருஷோத்தமன்.

இளையராஜா, புருஷைப் புகழ்ந்த தருணம்

இளையராஜாவுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் சந்திரசேகரும் புருஷோத்தமனும் முறையே கிதார் டிரம்ஸ் வாசித்திருத்திருக்கின்றனர்.

புருஷோத்தமனே ஒரு பேட்டியில் “இளையராஜாவும் நானும் 'அன்னக்கிளி' படம் வெளிவருவதற்கு முன்பாகவே இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கிறோம்” என்று சொல்லியிருப்பதிலேயே இளையராஜாவுக்கும் புருஷோத்தமனுக்கும் இடையில் இருக்கும் நட்பின் ஆழம் புரியும்.

ஒரு லைவ் ஷோவில்… வயலின் செக்ஷன், காற்று (Wind Instruments) வாத்தியங்கள் பிரிவு, தாள வாத்தியங்கள் பிரிவு என ஒருங்கிணைந்து ஓர் இசைக் கோவையை வாசித்து முடித்தவுடன்.. இளையராஜா, “இது எல்லாத்தையும் கட்டி மேய்ப்பவர் புரு” என்று புருஷோத்தமனை ரிசிகர்களிடம் அறிமுகப்படுத்தியதில் புருஷோத்தமனின் அபரிமிதமான இசை ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும்.

டிரம்மருக்கு இலக்கணம்

எவ்வளவுதான் எலக்ட்ரானிக்ஸுக்கு இடம் இருந்தாலும் வாத்தியக் கலைஞருக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுதான் இளையராஜா, புருஷின் முதன்மையான நோக்கமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு வித்தியாசமான தாளக் கட்டு இருக்கும். பாட்டின் சத்தத்துக்கு மீறி இசையின் சத்தம் கேட்கக் கூடாது என்ற புரிதல் அவர்களின் யோசனையாக இருந்தது. அந்த அடிப்படையிலேயே புருஷின் டிரம்ஸ் பங்களிப்பு இருக்கும். டிரம்ஸ் என்றாலே டமடம என்று வேகமாக சத்தமாக வாசிப்பது அல்ல, இனிமையாக வாசிப்பது என்பதை நிரூபித்தவர் புருஷோத்தமன்.

`ஹையட்ஸின்’ `புருஷ்’ மறைந்தது!

மேலே ஒரு பித்தளைத் தட்டு கீழே ஒரு பித்தளைத் தட்டு. இரண்டுக்கும் இடையே லேசான இடைவெளி. இரண்டு தட்டுகளும் சேர்ந்திருக்கும் போது ஒரு ஒலி. பிரியும் போது ஒரு ஒலி கேட்கும். டிரம்ஸின் ஒரு பாகமான இதற்குப் பெயர் `ஹையட்ஸ்’. அதன் இனிமையை கேட்பவர்களுக்குப் புரியவைத்து, ஹையட்ஸின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் புருஷ். அவரின் இழப்பு டிரம்ஸ் எனும் வாத்தியத்துக்கே ஏற்பட்ட பேரிழப்பு என்றுதான் சொல்லவேண்டும!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x