Last Updated : 20 May, 2020 12:12 PM

Published : 20 May 2020 12:12 PM
Last Updated : 20 May 2020 12:12 PM

‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் ; - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை

தமிழில் வெளியான படம் தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் வெளியாகும். இங்கே வெற்றி பெற்று அங்கே தோல்வியடைந்த படங்களும் உண்டு. மாறாக, அங்கே வெற்றிபெற்ற படங்களும் இருக்கின்றன. அப்படி, தமிழ் மொழியிலேயே அங்கே ஓடிய படங்கள் குறைவு. அதேபோல், தெலுங்கில் வந்த படம், தமிழகத்தில் தெலுங்கிலேயே வந்து வெற்றிப்படங்களானதும் மிகமிகக் குறைவு. ‘மரோசரித்ரா’ அப்படியாக வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் முக்கியமான படம்.


பாலசந்தர் தமிழில் எடுத்த பல படங்களை தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார். தெலுங்கில் நேரடியாக கதை பண்ணி உருவாக்கியதுதான் ’மரோ சரித்ரா’. கமலும் சரிதாவும் நடித்திருந்தார்கள். ‘இந்தக் கேரக்டருக்கு சரிதா ரொம்பவே பொருத்தமாக இருப்பார்’ என்பதில் உறுதியாக இருந்தார் பாலசந்தர். ‘எனக்கு ஒன்றும் தெரியாது. பாலசந்தர் சார் என்ன சொன்னாரோ அதைச் செய்தேன். ஒரு களிமண்ணாக இருந்த என்னை, ஒரு நடிகையாக உருவாக்கியது அவர்தான்’ என்று அப்போதே ‘மரோசரித்ரா’ குறித்துச் சொல்லியிருக்கிறார் சரிதா.


இனப்பாகுபாடு, ஆதிக்க வர்க்க வேறுபாடு என்பதையும் காதலையும் வைத்துக்கொண்டு, கதை சொல்லியிருப்பார். அதனால்தான், அழியாக்காதல் காவியமாக இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது ‘மரோ சரித்ரா’.


தமிழில் பல படங்களைத் தயாரித்த இராம.அரங்கண்ணல்தான் இந்தப் படத்தையும் தயாரித்தார். தைரியமாக தெலுங்கில் படம் தயாரிக்க முன்வந்ததற்கு காரணம்... கே.பாலசந்தர். கலர்ப்படங்கள் பெருகத் தொடங்கிய காலம் அது. ஆனாலும் கருப்பு வெள்ளையில் படமெடுப்பதில் எப்போதுமே ஆர்வமும் ஈடுபாடும் பாலசந்தருக்கு உண்டு. தெலுங்கில் நேரடிப் படம் எடுக்கும்போதும், தன் மீதான, தன் கதை மீதான நம்பிக்கை கொண்டே ‘மரோசரித்ரா’வை உருவாக்கினார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.


கமலும் சரிதாவும் முட்டிக்கொள்வதும் ஆரம்பத்தில் அவரை மட்டமாக நினைத்து சரிதா ஏளனமாகப் பார்ப்பதும் பின்னர் இருவருக்கும் காதல் பூப்பதும் என சாதாரணப் படமாகத்தான் ஆரம்பிக்கும். பின்னர், போகப்போகத்தான் சாதாரணமான காதலை, கவிதையாக்கி, காவியமாக்கியிருப்பார். எம்.எஸ்.வியின் இசையில் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன.


ஹீரோவும் ஹீரோயினும் துணி துவைக்கும் சத்தத்தின் மூலமாகவே பேசிக்கொள்வது, பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்களான நாயகனும் நாயகியும் மின்விளக்கை ஆஃப் செய்து, ஆன் செய்து என சிக்னல்கள் மூலம் பேசிக்கொள்வது என பாலசந்தர் ’டச்’கள் நிறையவே உண்டு.


காதலனின் புகைப்படத்தை பெற்றோர் எரித்து, ’இனி என்ன செய்வாய்’ என்பது போல் சரிதாவை குரூரமாகப் பார்ப்பார்கள். அந்தப் புகைப்படம் சாம்பலாகிக் கிடக்கும். அப்போது குடித்துக்கொண்டிருக்கும் காபியில் புகைப்படம் எரிந்த சாம்பலை எடுத்து, காபியில் போட்டு கலக்கிவிட்டு, பெற்றோரை அலட்சியமாகப் பார்ப்பார் சரிதா.
கமல், சரிதா போல் படத்தின் முக்கியமான கேரக்டர் விசாகப்பட்டினமும் அந்தக் கடற்கரையும். பாலசந்தரின் பல படங்களிலும் விசாகப்பட்டினக் கடற்கரை இடம்பெறும். இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது, அநேகமாக ‘மரோசரித்ரா’வாகத்தான் இருக்கும். கமல் சொந்தக்குரலில் தெலுங்கு பேசி நடித்திருப்பார்.


தெலுங்கில் வெளியான ‘மரோசரித்ரா’ தமிழிலும் வந்தது. கன்னடத்திலும் வந்தது. அதே தெலுங்கு மொழியில்... அதே ‘மரோசரித்ரா’ எனும் பெயரில் வந்தது. ஒரு நேரடி தெலுங்குப் படம், ஆந்திராவில் எந்த அளவுக்கு வெற்றி பெற்று, வசூல் குவிக்குமோ, அப்படியொரு வசூலைக் குவித்தது எல்லா மாநிலங்களிலும். சென்னை சபையர் தியேட்டரில் 500 நாட்களைக் கடந்து (தினசரி காலைக்காட்சி), ஓடியது. திருச்சி கலையரங்கம் தியேட்டரில் 101 நாளும் மதுரையில் 170 நாட்களுக்கு மேலும் கோவையில் 400 நாட்களுக்கு மேலும் பெங்களூருவில் 600 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை படைத்தது. கேரளாவில் மட்டும் மலையாளத்தில் ‘டப்’ செய்யப்பட்டது.
இப்படியாக, தென்னிந்திய அளவில், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது ‘மரோசரித்ரா’. படத்தின் க்ளைமாக்ஸ், ரசிகர்களை உலுக்கிப் போட்டது. உருக்கியெடுத்தது. ‘தேவதாஸ்’ படத்துக்குப் பிறகு மிகப்பெரிய காதல்காவியம் என்று கொண்டாடப்பட்டு, மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது இந்தப் படமாகத்தான் இருக்கும்.


அதுவரை, தெலுங்கிலும் கன்னடத்திலும் படம் பண்ணிக்கொண்டிருந்த பாலசந்தரையும் கமலையும் ‘மரோசரித்ரா’தான், கைபிடித்து இந்தித் திரையுலகிற்கு அழைத்துச் சென்றது. ‘ஏக் துஜே கேலியே’ என்று எல்.வி.பிரசாத் தயாரிப்பில், கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படமும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்குப் படமாகவே மொழிமாற்றம் செய்யப்படாமல் வந்து ‘மரோசரித்ரா’வைப் போல் இங்கே மகத்தான வெற்றி 80-ம் ஆண்டில் ஒருபடத்துக்குக் கிடைத்தது. அது... கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’.


1978-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி வெளியானது ‘மரோசரித்ரா’. படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகிவிட்ட போதும், சரித்திர சாதனை புரிந்த ‘மரோசரித்ரா’வை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கிறார்கள்.


காதல் சரித்திரமான ‘மரோசரித்ரா’வை இன்றைக்கும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x