Last Updated : 12 Aug, 2015 07:15 PM

 

Published : 12 Aug 2015 07:15 PM
Last Updated : 12 Aug 2015 07:15 PM

தாயுமானவர்கள் ஆகும் தந்தைகள்... ஏன்?

தந்தை சம்பளம் வாங்கிக்கொண்டு வெளியில் வேலை செய்கிறார்; தாய் சம்பளம் இல்லாமல் வீட்டில் வேலை பார்க்கிறார். பொறுப்புகள் சமமற்றதாக இருக்கும் வரையில் பாலின பாகுபாடு மாறாது.

29 வயதான மகேஷ் வரும் செப்டம்பரில் அப்பாவாகப் போகிறார். சமீபத்தில் தன் மேலாளரிடம், தன் மனைவியின் பிரசவம் காரணமாக 10 லிருந்து 15 நாட்கள் விடுமுறை கேட்டிருக்கிறார். உடனே மேலாளரின் முகம் வித்தியாசமான தோற்றத்துக்குப் போயிருக்கிறது. குழந்தைப்பேறு குறித்து எதுவும் அறியாமல் 2 அல்லது 3 நாட்கள் விடுமுறையே போதும் என மகேஷ் முன்பு கூறியதை மேலாளர் நினைவுபடுத்துகிறார்.

41 வயதான ஜெய்தீப், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தந்தை ஆகியிருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கான ஆலோசகரான ஜெய்தீப், என்னுடைய முழு நேர வேலையை, பகுதி நேர வேலையாக மாற்றிக்கொண்டு விட்டேன். வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை. என் குழந்தையை நல்லபடியாக வளர்ப்பதே முக்கியம்", என்கிறார்.

"எனது மனைவி காப்பீட்டுத்துறையில் வேலை பார்க்கிறார். எங்களின் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே கடந்த ஆறு வருட வேலைக்காலத்தில் மூன்று பதவி உயர்வுகளை விட்டுக்கொடுத்து விட்டார்" என்கிறார் பிலிப்.

ஊடகத்துறையில் பணிபுரியும் 50 வயது வினய், தனது மனைவி, அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போன தங்கள் மகனைக் கவனித்துக் கொள்வதற்காக, அவரது வேலையை விட்டுவிட்டார் என்கிறார். நீங்கள் ஏன் வேலையை விடவில்லை எனக் கேட்டதற்கு, "என்னுடைய சம்பளம், என் மனைவியின் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதனால் அவர் வேலையை விடவேண்டியதாயிற்று" என்கிறார்.

இவர்கள் எல்லோரையும் வைத்துப் பார்க்கும்போது, சில விஷயங்கள் புலனாகின்றன. தந்தை என்பவர் சம்பளத்தோடு கூடிய வேலையை வீட்டுக்கு வெளியே செய்து, குழந்தை வளர்ப்புக்குத் தேவையான பணத்தைக் கொண்டுவருகிறார். தாய் சம்பளம் இல்லாத வேலையை வீட்டில் பார்க்கிறார்; குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகிறார். ஆணாதிக்கக் கலாச்சாரம் மிகுந்த சமூகங்களில், இத்தகைய முன்னுதாரணப் பிரிவுகளே உலகம் முழுக்க நிரம்பி வழிகின்றன.

இதனால்தான் மகேஷின் உயரதிகாரி, ’ஓர் ஆணுக்கு எதற்கு மகப்பேறு விடுமுறை?’ என யோசிக்கிறார். இதனால்தான் பிலிப்கள், வினய்கள் குழந்தை வளர்ப்புக்குத் தங்கள் மனைவிகளை சார்ந்திருக்கின்றனர். பணம் சார்ந்தே அவர்களின் பொறுப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய ஒருதலைபட்சமான பாகுபாடுகள், பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறது மென்கேர் நிறுவனத்தின் உலக தந்தைகள் குறித்த ஆய்வு.

நவீனத்துவம், உலகமயமாதல்,முதலாளித்துவம் ஆகியவற்றின் வருகையால், ஏராளமான பெண்களும் ஊதியத்துடன் கூடிய வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட பெண்கள், உலகத்தின் 40 சதவீத தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். ஆனாலும் ஊதியமில்லாத வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வதில் ஆண்களின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்கிறது அந்த ஆய்வு.

இதனால் என்ன ஆகிறது? ஊதியத்துடன் கூடிய அலுவலகப் பணி, ஊதியமில்லா பாதுகாப்புப் பணி என 'இரட்டை பணிகள்', பெண்களின் மீது சுமத்தப்படுகின்றன. ஊதியமில்லா பாதுகாப்பு பணியில், வீட்டு வேலைகள் (சமையல், துணி துவைப்பது, தண்ணீர் பிடிப்பது, சுத்தம் செய்வது) மற்றும் வீட்டு உறுப்பினர்களைப் பார்த்துக்கொள்வது (குழந்தைகள், வயதானவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள்) ஆகியவையும் அடங்கும்.

அதே ஆய்வு பின்வரும் கூற்றுகளை முன்னெடுத்து வைக்கிறது.

பெண்கள், ஆண்களைக் காட்டிலும் 2.5 சதவீத ஊதியமில்லா பாதுகாப்புப் பணிகளைச் செய்கின்றனர். இந்தியப்பெண்கள் 10 முறை அதிகமான வேலைகளைச் செய்கின்றனர். 'இதில் ஆணென்ன பெண்ணென்ன? இருவரின் வேலைகளுமே அதே குடும்பத்துக்குத்தானே' எனச் சிலர் கேட்கலாம். ஆனால் ஊதியத்துடன் கூடிய வெளி வேலைகளைச் செய்யும் ஆண்களுக்குத் தான் சமுதாய மதிப்பு உயர்கிறது. அவர்களே மற்ற கேளிக்கை, கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

ஒரு தாய் குழந்தை இல்லாத பெண்ணைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே சம்பாதிக்கிறாள். 30-39 வயதுக்கிடையிலான 88 சதவீத தாய்களின் சம்பாதிக்கும் திறன் சரிந்துகொண்டே செல்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் பொறுப்புகள் சமமற்றதாக இருக்கும் வரையில் பாலின பாகுபாடு மாறாது. குழந்தை, வீடு சார்ந்த பணிகளில் ஆண்களும் சமமாக ஈடுபட்டால் ஒழிய இப்பாகுபாடு மறையாது. தாயுமானவராகத் தந்தை மாறினால்தான் குடும்பத்திலும், சமுதாயத்திலும் கலாச்சார, உடல்நல, பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் ஏற்படும்.

அர்ப்பணிப்புடன் இருக்கும் தந்தைகள், தங்கள் குழந்தைகள் மற்றும் மனைவிகளிடத்தில் குறைவான அளவே வன்முறையை காண்பிக்கின்றனர். சங்கிலித் தொடர்பாக மகனும், வன்முறையில் பெரியளவில் நாட்டமில்லாதவனாக வளர்கிறான். தந்தைமையின் ஈடுபாட்டால், ஆண், பெண் ஆகிய இருவரின் மன நலமும், அவர்களுக்கிடையேயான உறவும் நேர்மறை விளைவுகளைக் கொண்டுவருகிறது.

இதைப் பொருளாதார ரீதியாகவும் கணக்கிடலாம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஆண்களுக்குச் சமமாக வேலை செய்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.7 ட்ரில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என ஆய்வு சொல்கிறது.

டயப்பர் மாற்றுவது, குழந்தையைக் குளிக்க வைப்பது, பாலூட்டுவது போன்றவை தாயின் கடமையே என்ற தங்களின் நிலைப்பாடை, பல்வேறு இந்தியத் தந்தைகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வீடு மட்டுமே நமது திறனைப் பயன்படுத்தக்கூடிய ஒரே இடம் என்ற எண்ணம் பல பெண்களின் வேலைக்குச் செல்லவேண்டிய விருப்பத்தைக் கலைத்துப் போடுகிறது.

ஹவோவி வாடியா என்னும் ஆராய்ச்சியாளர், இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என சில அம்சங்களைப் பட்டியலிடுகிறார். இதன்படி,

மாற்றங்கள் முதலில், அலுவலகத்தில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். ஆண் பெண் என்ற பாலின பாகுபாடு இல்லாமல் ஆண்களுக்கும் மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஆண்களும் குழந்தை வளர்ப்பு, வீட்டுவேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான மகப்பேறு கால விடுமுறைகள் குறித்த கொள்கைகள் தெளிவாய் வரையறுக்கப்பட வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், ஆண்களின் மனநிலை மாறவில்லை எனில் எந்தப் பயனும் இல்லை. அவர்களின் சுய சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பொருளாதார பிரச்சனை, பாலினப் பணிகள் பாகுபாட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேலை காரணமாக, குடும்பங்களில் இருந்து தொலைவில் பணிபுரியும் ஆண்களின் நிலை என்ன?

இன்னொரு முக்கியப் பிரச்சனையும் இதில் இருக்கிறது. பெரும்பாலான தந்தைகள், தங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிட நினைத்தாலும் அது நடப்பதில்லை. பொருளாதார ரீதியிலான பயம் இதற்கு முக்கியக் காரணமாய் இருக்கிறது. ஆதிவாசிகளின் சமூக அமைப்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நீலகிரி மலையில் வாழும் சமீபத்தில் தந்தையாகி இருக்கும் கங்காதரன் பின்வருமாறு சொல்கிறார்.

"ஒரு மாதத்துக்கு முன் எனக்கு மகன் பிறந்த செய்தியைக் கேட்டபோது, மிகவும் ஆர்வமாக இருந்தது. அவனை வளர்க்கும் பொறுப்பு என்னுடையதோ, எனது மனைவியுடயதோ, என் குடும்பத்துடையதோ மட்டுமல்ல. எங்கள் சமூகத்தைச் சார்ந்தது அது".

ஆதிவாசி குழந்தைகள், அச்சமூகத்தினராலேயே வளர்க்கப்படுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் சமூகமே பொறுப்பெடுத்துக் கொள்கிறது. ஓர் ஆதிவாசி தந்தைக்கு இருக்கும் சிந்தனை நமக்கு இருக்கிறதா? தாயிடம் மட்டுமே பொறுப்பைத் தள்ளிவிட்டு ஓடுவது சரியா? குழந்தைகள் வளர்ப்பில், குடும்பம் தாண்டி, சமுதாயத்தின் ஆதரவே, பாகுபாட்டைக் களைந்து நற்குடிமகன்களை தேசத்தில் உருவாக்கும்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x