Published : 18 Dec 2019 13:03 pm

Updated : 18 Dec 2019 13:03 pm

 

Published : 18 Dec 2019 01:03 PM
Last Updated : 18 Dec 2019 01:03 PM

அன்புக்குப் பஞ்சமில்லை - 9 :  ’இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’

anbukku-panjamillai-9

வி.ராம்ஜி


குளிர்காலம் தொடங்கிவிட்டது. ‘ஹீட்டரைப் போடும்மா’ என்று வெந்நீர்க் குளியலுக்கு நம்மில் நிறையபேர் பழகிவிட்டோம். மார்கழி வந்துவிட்டதால், ஸ்டிக்கர் கோலம் ஒட்டப்பட்ட வாசல்களில் கூட, அழகிய மாக்கோலங்களும் ரங்கோலிகளும் மனதை மயக்குகின்றன. ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு டூவீலரில் பறக்கிறவர்களை நகரங்களிலும் வேஷ்டியையே போர்வையாகப் போர்த்திக்கொண்டு, சூடாக டீக்குடிக்க கடைக்குச் செல்பவர்களை கிராமங்களையும் பார்க்கமுடிகிறது.


’என்னங்க இது காலக்கொடுமையா இருக்குது. கார்த்திகை தீபம் ஏத்தியாச்சுன்னாலே மழை இல்லம்பாங்க. பனி பெய்ய ஆரம்பிச்சிரும்னு சொல்லுவாங்க. ஆனா, திடீர்திடீர்னு மழையும் பெய்யுது. பனியும் வாட்டுது’ என்று இயற்கையின் எகிடுதகிடைக் கண்டு புலம்புகிறவர்கள்ப் பார்த்திருப்போம். நாமே கூட புலம்பியிருப்போம்.


அலட்டல் என்ற வார்த்தை கர்வத்தைச் சொல்வதற்காகச் சொல்லப்பட்டது. திமிர்த்தனத்தைக் குறிக்கிற வேறொரு சொல்லாக இங்கே வழங்கப்படுகிறது. ‘அவங்ககிட்ட கார் இருக்குன்னு ரொம்பத்தான் அலட்டிக்கிறாங்க’, ‘அவங்க வீட்ல 42 இஞ்ச் டிவி வாங்கியிருக்காங்களாம். தெருவையே கூப்பிட்டுக் கூப்பிட்டு காமிக்கிறா’, ‘பையன் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வந்துட்டானாம். ஊரையே அழைச்சு, கேக் வெட்டுறாய்ங்க. ஏதோ அவங்க புள்ள அறிவாளி மாதிரியும் நம்ம புள்ள மக்கு மாதிரியும் ஒரு நெனைப்பு’, ‘எம் பொண்டாட்டி, எவ்ளோ நேரம் கழிச்சு வந்தாலும் அவளே கண்ணு முழிச்சு, சுடச்சுட தோசை வார்த்துக் கொடுப்பா. இந்த ஹாட்பேக்ல தோசையை அடுக்கி வைக்கிற பிஸ்னஸ்லாம் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது’.. என்பன போன்ற விஷயங்கள் எல்லாமே, கர்வத்தால் சொல்லப்படுபவை. ‘எப்பூடி?’ என்று அலட்டிக் கொள்பவை.


அலட்டல் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.


‘’உங்களுக்கு வரவேண்டிய ப்ரமோஷன் தள்ளிப்போகுதே தவிர,கிடைக்காம இருக்காது. ஏன் வீணாப்போட்டு அலட்டிக்கிறீங்க. பிபி தான் எகிறும். அமைதியா இருங்க’ என்பார் மனைவி.


‘’அவங்க அண்ணன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போனப்போ, சொந்தத் தங்கச்சியை யாரோ மாதிரிதான் நடத்துனாங்களாம். தாம்பூலப்பைல ஒத்தை மைசூர்பாக்கைத்தான் கொடுத்தாங்களாம். கம்பெனி முதலாளிகிட்ட, கூட வேலை பாக்கிறவங்ககிட்ட, ஊர்லேருந்து வந்த அம்மாவைக் கூட ‘இதான் எங்க அம்மா’ன்னு அறிமுகப்படுத்தக் கூட இல்லியாம். பாவம்ங்க அந்தப் பொண்ணு’ என்று நாலு வீடு தள்ளி இருக்கிறவர், குடும்ப உறவுகளின் சிக்கல்களுக்காக மனசைப் போட்டு அலட்டிக்கொள்வார்கள். ‘பாவம்ங்க அந்தப் பொண்ணு’ என்று அவர்களுக்காக நாமே கூட அந்த விஷயத்தையே அசைபோட்டுக்கொண்டிருப்போம்.


அம்மா அலட்டிக்கொள்ளவே மாட்டாள். ‘’அறுபது பவுன் நகையோட வந்தேன். இன்னிக்கி குந்துமணி கூட நகை இல்ல. யாரு பத்திரிகை வைச்சாலும் கல்யாணத்துக்குப் போயிருவேன். நாம வரணும்னுதான் கூப்பிடுறாங்க. நாம நகைநட்டெல்லாம் போட்டுக்கிட்டு வரணும்னா சொல்றாங்க’ என்பாள்.


‘35 வயசாவுது. இன்னும் உம்புள்ளைக்கு ஒரு கண்ணாலம் நடக்கலியேம்மா’ என்று யாரேனும் வந்து, சோகதூபம் போடுவார்கள். உடனே அம்மா, ’எம்புள்ள மூஞ்சியப் பாத்துட்டு எட்டுப்பத்து பொண்ணுங்க புடிக்கலைன்னு சொல்லிட்டாங்களா? இல்ல, நாலு இடத்துல விசாரிச்சோம். பையன் கேரக்டர் சரியில்லைன்னு சொல்றாங்கன்னு வேணாம்னு எவனாவது சொல்லிட்டானா? அட அதையும் விடு. ஜாதகத்துல அந்த கெரகம் இங்கே இருக்குது. இந்த தோஷம் வந்து உக்காந்துட்டிருக்குனு ஜோஸியக்காரன் சொல்லிருக்கானா? அதுவும் இல்ல. கல்யாணம், குழந்தை, உத்தியோகம்லாம் நம்மை கைல எதுவுமே இல்ல. எல்லாம் கடவுள் கையிலதான் இருக்கு. இது மட்டுமில்ல... இங்கே நடக்கிற எல்லாமே கடவுள் பாத்து முடிவு பண்றதுதான்’ என்று அம்மா சொல்ல ஆச்சரியமாக இருக்கும். அம்மாவுக்கு மகனின் கல்யாணக்கவலை இல்லாமல் இல்லை. ஆனால் போட்டு குமைந்து போய் அலட்டிக்கொள்ளமாட்டாள்.


‘சரிதான் வுடு. நடக்கிறது நடக்கட்டும்’ என்கிற மனோபாவம், பல டென்ஷன்களில் இருந்தும் கவலைகளில் இருந்தும் மிகப்பெரிய விடுதலையைக் கொடுக்கவல்லது.


‘அப்படி இப்படின்னு இவ்ளோ கடனாகிப் போச்சுன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தா, கடனெல்லாம் அடைஞ்சிருமா. அப்படி அடைஞ்சிடும்னா சொல்லு... இப்பவே உக்காந்து, நாள் முழுக்க கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன். அடப்போடா...’ என்று என் நண்பனின் அப்பா ஒருமுறை யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.


நங்கநல்லூரில் குடியிருக்கும் போது பக்கத்துவீட்டு மாமாவுடன் ஒருமுறை மனம் பேசிக்கொண்டிருந்தேன். ’’சின்ன வயசிலிருந்தே ஹார்ட்ல பிரச்சினை எனக்கு. அது பதினாறாவது வயசுலதான் தெரிஞ்சுச்சு. இதுவரைக்கும் மூணு தடவை ஆபரேஷன் பண்ணிருக்கு. இப்ப எனக்கு 53 வயசாவுது. ஆடிட்டர்கிட்ட வேலை. இதோ... சிக்கலான நெஞ்சுக்கூட்டை வைச்சுக்கிட்டுத்தான், வேலை பாத்துக்கிட்டிருக்கேன். இந்த வீட்டை வாங்கியிருக்கேன். ரெண்டும் பொண்ணுங்கதான். பெரியவளை சி.ஏ.படிக்க வைச்சேன். அவ ஒரு பன்னாட்டுக் கம்பெனில என்னை விட மூணு மடங்கு கூடுதலா சம்பளம் வாங்கறா. கல்யாணமும் பண்ணி வைச்சேன். அவ புருஷனுக்கு பெங்களூர்ல வேலை. மாப்பிள்ளைக்கு ஹெட் ஆபீஸ் ஜப்பான்ல இருக்கு. மூணு மாசம் குடும்ப சகிதமா ஜப்பான் போயிருவாங்க. போன வருஷம், எல்லாருமா சேர்ந்து ஜப்பான், டோக்கியோனு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம்.


எனக்கு நெஞ்சுல பிரச்சினை, நெஞ்சுல பிரச்சினைன்னு புலம்பினா இன்னும் நெஞ்சுல பிரச்சினை ஜாஸ்தியாதான் ஆவும். இந்த வண்டி இவ்ளோ தூரம் ஓடினதுக்குக் காரணம்... எதுக்கும் எப்பவும் அலட்டிக்கவே மாட்டேன்’ என்றார், சிரித்துக் கொண்டே!


வண்டி பஞ்சர் ஆகி, நடுவழியில் நின்றாலே டென்ஷனாகி, ‘நல்லா எடுத்திருக்கேன்யா இந்த ஜென்மத்தை’ என்று தலையிலடித்துக் கொள்கிறவர்கள்தானே நாம்.


அந்தப் பெண்மணிக்கு குமரி மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம்தான் சொந்த ஊர். பேச்சில் நாகர்கோவில் தமிழ் புறப்பட்டு வரும். கேட்கவே இதமாக இருக்கும். இருசக்கர வாகனங்களை டீலர் எடுத்துள்ள ஷோரூமில் வேலை பார்க்கிறார். இந்த வேலைதான் என்றில்லாமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அவருடைய டேபிளுக்கு எதிரே உட்கார்ந்தால், ஒரு பதினைந்து நிமிடம் கழித்துத்தான் நம்மிடம் பேசமுடியும் அவரால். அவ்வளவு வேலை பார்ப்பார்.


பூமியே கொட்டாவி விட்டுக்கொண்டு, அயர்ச்சியுடன் இருக்கிற ஓர் மதிய வேளையில் மூன்று மணிவாக்கில், அங்கே ஷோரூமிற்குச் சென்றேன். எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார். ’நாகர்கோவில் பக்கமா’ என்று பேச ஆரம்பித்தோம்.


‘அப்புறம்... கணவர் எங்கே வேலை பாக்குறாரு’ என்றேன்.


‘அவர் எந்த வேலையும் பாக்கலியேன்னு பிரிஞ்சு இங்கே வந்துட்டோம்’ என்றார். அதிர்ந்து போய் அவரைப் பார்த்தேன். அவரே தொடர்ந்தார்.
‘’உலகத்துலயே கொடுமை எதுதெரியுமா சார். காதலிக்கறது. அதைவிடக் கொடுமை... லவ் பண்ணினவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறது. இன்னும் கொடுமை என்னடான்னா... அவன் சோம்பேறியா, ஊதாரியா, வேலைவெட்டி எதுக்கும் போகாம இருக்கறது. இதுவுல நடுவால இருக்கற கொடுமை... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு பெத்தவங்களே எதிரி மாதிரி பேசாம இருக்கறது.


அப்படித்தான் ஓடுச்சு ஏழு வருஷம். இவனும் திருந்துன பாட்டைக் காணோம். எங்க வீட்ல என்னைச் சேத்துக்கலை. நானும் கிடைக்கிற வேலைக்கெல்லாம் போனேன். எங்கிட்ட இருந்த பதிமூணரை பவுன்ல, ஒரு கிராம் கூட அடகு வைக்கக்கூடாதுங்கறதுல உறுதியா இருந்தேன். ஆனா, இந்தக் காலம்தானே நமக்கு எஜமான். அதுல ஒரு கிராம் கூட இப்போ எங்கிட்ட இல்ல. எல்லாத்தையும் வித்தான். குடிச்சான். கிறிஸ்துமஸ்க்கு எங்க பொண்ணுக்கு டிரஸ் கூட வாங்கித் தரலை. ஆனா அவனுக்கு சட்டை பேண்ட்டும் ஒரு ஃபுல் பாட்டில் பிராந்தியுமா வந்து நின்னு சிரிக்கிறான். அவ்ளோ கேடுகெட்டவனே சிரிக்கும் போது, நாம ஏன் அழணும்னு முடிவு பண்ணினேன். அழுததெல்லாம் போதும்டா சாமின்னு ஊரை விட்டே வந்தேன். நாகர்கோவில்லேருந்து இங்கே மறைமலைநகர் பக்கத்துல காட்டாங்குளத்தூருக்கு வந்துட்டேன்.


திருநெல்வேலில என் கூட படிச்சவ, இங்கே ஒரு காலேஜ்ல புரபஸர். அவ வீட்டுக்குப் பக்கத்துலதான் எனக்கு வீடு. அவதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தா. அவ மூலமாத்தான் ஊர்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘லவ் பண்றவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, வீட்டை விட்டே ஓடிப்போன பொம்பள, இப்போ வேற யார் கூடயோ இருக்கிற தொடர்புல, ஊரை விட்டே ஓடிட்டாய்யா’ன்னு பேசிக்கிட்டாங்களாம். ‘எம்பொண்ணு அப்படிலாம் பண்ணமாட்டா. அப்படியெல்லாம் அவளை நாங்க வளர்க்கல’ன்னு அம்மா நெஞ்சுல அடிச்சிக்கிட்டு அழுதாளாம். ‘அப்படி தொடர்புகிடர்பு இருந்தாலும் இருக்கும், யாருக்குத் தெரியும்?’னு என் புருஷன் சொல்லிருக்கான்.

அவன் இடுப்புல ஒரு உதைவிட்டு அவனை குப்புறத்தள்ளினானாம் என் தம்பி. ‘குடும்பத்தைக் காபந்து பண்ணத்தெரியாதவன்கிட்ட இருக்கறதுக்கு எங்கேயோ யார் கூடயோ எங்க அக்கா நிம்மதியா இருக்கறது மேல்’னு சொல்லிச் சொல்லி அடிச்சானாம். ‘என் பொண்ணு ஆத்துலயோ குளத்துலயோ விழுந்து செத்தாக்க, அதுக்கு நீதாண்டா காரணம்’னு அப்பா, அவனோட சட்டையைப் புடிச்சு உலுக்கியெடுத்துட்டாராம்.


ஒரு சினிமா மாதிரி இதையெல்லாம் சொன்னாங்க. நானும் சினிமா சீன் மாதிரியே, கைத்தட்டி ரசிச்சுட்டு அமைதியா இருந்துட்டேன். புருஷன் ஊதாரிதான். சோம்பேறிதான். அப்பவே என் குடும்பம் சேர்ந்துருச்சுன்னா, அவன் கொஞ்சம் மாறியிருப்பானே. கொஞ்சம் கொஞ்சமா, தேறி, குடும்பத்தைக் காப்பாத்தியிருப்பானே. அப்போ, அப்பா வரல. அம்மா வரல. தம்பி திரும்பிக் கூட பாக்கல. இதைப் பத்திலாம் கவலைப்பட்டுகிட்டே இருந்தா, மிச்சசொச்ச வாழ்க்கையையும் இன்னும் ஒரு விள்ளல் கூட சிதையாம இருக்கிற எம்பொண்ணு வாழ்க்கையையும் வீணடிச்சதா ஆகிரும். அதான்... பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற மாதிரி எப்பவும் முகத்தை உர்ருன்னு வைச்சிக்கிட்டிருக்கறவ, எப்பவும் எல்லார்கிட்டயும் சிரிச்ச மாதிரியே இருக்கேன்.


பத்துமணிலேருந்து ஏழு மணி வரை வேலை. என் புரபஸர் தோழி, ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தா. அவளோட ஸ்டூடண்ட் புராஜக்ட், அசைன்மெண்ட், தீஸீஸ்னு எல்லாமே எங்கிட்ட கொடுக்கறாங்க. இதுவொரு சம்பளமாவே, மூணு வேளை சாப்பிடவும் வாடகை தரவும் மளிகை சாமான் வாங்கவும்னு போதுமானதா இருக்கு. பதிமூணரை பவுனையும் குடிச்சே அழிச்சானில்லையா. இப்போ, என் பொண்ணுக்கு குருவி சேக்கறா மாதிரி கொஞ்சம்கொஞ்சமா, பதினாறு பவுன் சேத்துருக்கேன். என் தோழியோட காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிறா.


’அப்பா நம்மளை சேத்துக்கலியே. அம்மா நம்மளைப் புரிஞ்சுக்கலியே. தம்பிக்குக் கூட நம்மகிட்ட பிரியம் இல்லியே. எல்லாத்துக்கும் மேல உருகி உருகி லவ் பண்ணின புருஷன்கிட்டேருந்து துளியூண்டு கூட அன்பு கிடைக்கலியே... இப்படி... கிடைக்கலியே... இல்லியேன்னெல்லாம் வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா, அப்புறம் எம்பொண்ணுக்கிட்ட நான் எப்படி அன்பா இருக்கமுடியும். எனக்குக் கிடைக்காத அன்பையெல்லாம் மொத்தமா தேடி சேகரிச்சு, அவளுக்குத் தரணும். அதோட என்னோட கனிவையும் பாதுகாப்பையும் அவளுக்குப் புரியவைக்கணும்.


அவ புரிஞ்சுக்கறா. அப்படியே புரிஞ்சுக்கலன்னாலும் இந்த பூமி நான் நிக்கிற இடத்தைப் பொளந்து, என்னை அப்படியே உள்ளே இழுத்துப் போட்டு மூடிடவா போவுது. அட இதுவும் போகட்டும் வுடுன்னு இருந்துடவேண்டியதுதான்’’ என்றார், மெல்லியதாக புன்னகைத்தபடி!
எனக்குத்தான் நெஞ்சுக்கூட்டுக்குள் எதுவோ அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு.


எழுந்து, ‘வரேம்மா’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். ‘அண்ணே’ என்றார்.


‘என்னடா இவ. நாகர்கோவிலானு ஒத்தை வார்த்தை கேட்டு ஆரம்பிச்ச பேச்சுல, மொத்த வாழ்க்கையையும் சொல்லிட்டானு தப்பாகிப்பா நினைச்சுக்காதீங்கண்ணே. ஒம்பது வருஷமா மனசுக்குள்ளேயே வைச்சிருந்தது, உங்ககிட்ட அப்படியே கொட்டிட்டேன்.
ஏன் தெரியுமாண்ணே? இப்படி தாடியும் மீசையுமா, எப்பவும் நெத்தில விபூதி, குங்குமத்தோட என் தம்பியும் உங்களை மாதிரித்தான் இருப்பாண்ணே. அதான் நீங்க கேட்டதும் பொலபொலவென கொட்டிட்டேன்’


அதுவரை அழாமல் இருந்த அந்தப் பெண், பொசுக்கென்று அழுதுவிட்டாள். கர்ச்சீப்பால் முகம் மூடிக்கொண்டு, விருட்டென்று எழுந்து பின்பக்கம் போய்விட்டாள்.


‘விடுறா எதுக்கு அலட்டிக்கிட்டு? ஓடுறபடி ஓடட்டும். நடக்கிறபடிதான் நடக்கும்’ என்றெல்லாம் சொன்னாலும் அன்புக்கு ஏங்கும் சூழல்தான் மிக மிக மோசமானது. தனக்குக் கிடைக்காத அன்பை, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று வக்கிரமாகவும் உக்கிரமாகவும் எண்ணாமல், தான் பெறாத அன்பை, எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவரும் செயல்படுபவருமான உலகில்... அன்புக்குப் பஞ்சமே இல்லை!


- வளரும்


அன்புக்குப் பஞ்சமில்லை - 9 :  ’இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?’அன்புக்குப் பஞ்சமில்லைவாழ்வியல் தொடர்வாழ்க்கை தொடர்அன்பைச் சொல்லும் தொடர்உளவியல் தொடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author