Published : 01 Jul 2015 10:40 AM
Last Updated : 01 Jul 2015 10:40 AM

ஏ.எம்.ராஜா 10

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், சிறந்த இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா (A.M.Rajah) பிறந்த தினம் இன்று (ஜூலை 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் (1929) பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் ரேணுகாபுரம் சென்று குடியேறியது. அங்கு உயர்நிலைப் பள்ளி வரை படித்த பிறகு, வேலூர் ஊரீசு கல்லூரியில் சேர்ந்தார்.

l வேலூர் தமிழ் இசைக் கழகத்தில் நரசிம்மலு நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். வீட்டில் ஜன்னல் பக்கத்தில் அமர்ந்து புல்புல்தாரா வாசிப்பார். இந்தி பாட்டுகளையும் பாடுவார். அவரது பாட்டைக் கேட்க ஜன்னலுக்கு வெளியே கூட்டம் கூடிவிடுமாம்.

l மேற்படிப்புக்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் 1951-ல் பி.ஏ. முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றார்.

l மெல்லிசைப் பாடல்கள் பாட ஹெச்எம்வி நிறுவனம் வாய்ப்பு அளித்தது. இவரே எழுதி இசையமைத்தார். பாடல்களைப் பதிவு செய்ய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் உதவினார். இவை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகி ராஜாவுக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தன.

l ‘சம்சாரம்’ என்ற பன்மொழித் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை ராஜாவுக்கு அளித்தார் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன். இதில் அனைத்து மொழிகளிலும் இவரே பாடினார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

l மென்மையான, இனிய குரலில் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் கேட்பவர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே’, ‘தென்றல் உறங்கியபோதும்’, ‘உன்னைக் கண்டு நானாட’, ‘காலையும் நீயே’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றவை.

l சிறந்த இசையமைப்பாளரும்கூட. 1958-ல் வெளிவந்த ‘சோபா’ என்ற தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ‘பெள்ளி கானுக’ திரைப்படம் இவரை நட்சத்திர இசையமைப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. 1959-ல் வெளிவந்த ‘கல்யாணப் பரிசு’ படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘அன்புக்கோர் அண்ணி’, ‘தேன் நிலவு’ படப் பாடல்கள் மெட்டுகளுக்காகவே பிரபலமடைந்தன.

l 1950-60களின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் பாடியுள்ளார். இவரது குரல் குறிப்பாக ஜெமினி கணேசன், பிரேம் நசீர் ஆகியோருக்கு கச்சிதமாகப் பொருந்தியதாகக் கருதப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் புகழேணியின் உச்சத்தில் இருந்தார். கன்னடத் திரைப்படங்களிலும் புகழ்பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

l சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த இசைத் தம்பதியர்தான் மும்பை சென்று இந்திப் படத்துக்காகப் பாடிய முதல் தென்னிந்தியப் பாடகர்கள். ராஜா சிங்களப் பாடல்களும் பாடியுள்ளார்.

l யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாதவர். இதனால், திரையுலகில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தார். அப்போது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகள் நடத்திவந்தார். ரயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாராவிதமாக கால் தவறி விழுந்து 59-வது வயதில் இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x