Published : 24 Dec 2014 12:26 PM
Last Updated : 24 Dec 2014 12:26 PM

குருதி ஆட்டம் 15 - விஷ முத்தம்

‘ஒட்ட நறுக்கிவிடுவேன்’என ஒற்றை விரல் உயர்த்தி அந்தக் கருப்பினப் பெண் எச்சரித்துவிட்டுப் போன வேகத்தில், தன்னை நாடி இன்னொருத்தியா? ஒருவேளை… போதை மயக்கத்தில் உண்டாகும் பிரமையா?’

டி.எஸ்.பி. ஸ்காட், தன் கண்களை நம்ப முடியாமல் தவித்தான். இரு கைகளாலும் கண்களைக் கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தான். எதிரே நிற்பவள் பெண்தான்!

‘விரல் சொடுக்கி மிரட்டிய கருப்பழகி யைக் காட்டிலும் இவள் நளினமாகவும் இளமையாகவும் இருக்கிறாள். சிலம்புக் கம்பாய் செதுக்கிய திரேகம். அச்சு வார்ப்பாய் மூக்கு, முழி, உதடுகள். தொடை வரை தொங்கும் கருமுடி. அதிகமாய் போனால்… முப்பத்தைந்து வயதிருக்கலாம். கப்பல் மேல்தளத்து மங்கிய வெளிச்சத்தில் மேனி நிறம் புலப்படவில்லை. என்றாலும் பொது நிறம்தான். இந்த வகைப் பெண்களை இருபது வருஷங்களுக்கு முன்னால் எங்கோ… பார்த்த ஞாபகம். எங்கே?’

எத்தனையோ நாட்டுப் பெண்களைப் பார்த்து வந்த ஸ்காட்டுக்கு, புலப்படத் தாமதமானது. அரியநாச்சியை நோக்கி ஓரடி முன்னே போனான். ‘ஹ்… ஹாம்ம்… ஞாபகம் வந்துவிட்டது. இவள் ஆப்பநாட்டுக்காரிதான். ஆப்பநாட்டில் தான் இந்தத் திரேகக் கட்டைப் பார்க்க முடியும். அங்கிருந்து இவள் எப்படி இங்கே? ஹ்ஹா… பினாங்கு தீவுக்குப் பிழைக்க வந்தவளாய் இருக்கலாம்.’

தன்னையே நோக்கி வந்தவளாய், இளஞ்சிரிப்போடு நிற்கும் அரியநாச்சியை நெருக்கத்தில் கண்டதும் ஸ்காட்டுக்கு வாய் ஊறியது. கப்பலின் மேல்தளத்தை நோட்டமிட்டான். அங்கங்கு இருந்தாலும் கிட்டத்தில் எவரும் இல்லை. கடலை கிழித்துக் கொண்டு போகும் கப்பலின் எதிர்க் காற்று இரைச்சல் வேறு. இங்கு… யாரோடு எவர் கொஞ்சிக் குழாவினாலும், ஏன்… யாரை யார் கொலை செய்தாலும் யாருக்கும் தெரியாது. இரவும் பகலும் கத்திக் கொண்டிருக்கும் கடல்தான் பார்க்கும். காட்டிக் கொடுக்காது.

‘இதை எல்லாம் தெரிந்துதான் அவள் இங்கே ஒதுங்கி இருக்கிறாள். இந்தக் கடல் பயணத்தில் நமக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா!’ பல்லை இளித்துக் கொண்டு இன்னும் ஓரடி முன்னே போனான் ஸ்காட்.

கப்பல் முகப்போர கைப்பிடியில் சாய்ந்திருந்த அரியநாச்சியின் கருங் கூந்தல், கடற்காற்று வேகத்துக்கு பறந்து, ஸ்காட்டின் முகத்தை வருடியது.

‘நன்றி இறைவா!’ அரியநாச்சியைத் தொடும் தூரத்தில் நின்றான்.

‘லோட்டா’வைத் தவிர எல்லா முகங்களும் தவசியாண்டிக்குத் தெரிந்த முகங்கள்தான். பயம் அற்றுப் போன கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், தயங்காமல் பேசினார்.

“தவசியாண்டி… நீ ஊரை விட்டு வந்ததோடு, நம்ம ஊரு இருளப்பசாமி கோயில் கொடை நின்னுப் போச்சு. அரண்மனையை ஏதோ ஆவி புடிச்சு ஆட்டுது. நீ இந்தக் காட்டுக்குள்ளே அடிக்கிற கோடாங்கிச் சத்தம்தான் ஆவியா நுழைஞ்சு அரண்மனையை ஆட்டுதுன்னு ஊருக்குள்ளே பேச்சு. நீ வெளியேறி வந்ததுலதான் அந்த மர்மம் அடங்கி இருக்குங்கிறது மட்டும் தெரியும். அதுக்கு மேலே எதுவும் தெரியாத பெருங்குடி சனம், சாபம் சுமக்குது!”

நல்லாண்டி தொடர்ந்தார். “பெருங்குடியிலே பொண்ணு எடுக் கவோ, பொண்ணு குடுக்கவோ வெளியூர்க்காரன் எவனும் வர மாட்டேங்கிறான். ஊருக்குள்ளேயே ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சம்பந்தம் பண்ணி பிறக்கிற, நெறைய குழந்தைகள் ஊனமாப் பொறக்குது.”

எங்கோ பார்த்தவாறு நின்ற தவசியாண்டி, திரும்பி ரத்னாபிஷேகம் பிள்ளையைப் பார்த்தான்.

“ஒரு தலைமுறைச் சனம் குலசாமி கோயில் திருவிழாவையே பார்க்கல. சாமியாடி இல்லாம நடக்கிற கொடை, தாலி இல்லாம நடக்கிற கல்யாணத்துக்குச் சமம். ஊர் பிழைக்கணும்னா இந்த வருஷம் கோயில் திருவிழாவை நடத்தணும். எங்கக் காலம் எப்படியோ ஓடிருச்சு. சின்னஞ்சிறுசுகள் சேதாரமில்லாம இருக்கணும். ஊரைப் பிடிச்ச இந்த சாபம் தீர்றது உன் கையிலதான் இருக்கு தவசியாண்டி. உனக்கு, யார் மேல என்ன கோபம் இருந்தாலும் குலதெய்வம் இருளப்பசாமிக்காக நீ வந்து திருவிழாவை நடத்திக் கொடுக்கணும்.”

தவசியாண்டி, ஏதோ யோசனையில் இருப்பதை கவனித்த கணக்குப்பிள்ளை, “தவசியாண்டி… நீ என்ன நிபந்தனை விதிச்சாலும் நாங்க சம்மதப்படுறோம்.” என்றார்.

“ரெண்டே ரெண்டு நிபந்தனைதான். இனிமே எக்காரணம் கொண்டும் நீங்க யாரும் இந்தக் காட்டுக்குள்ள வரக் கூடாது. ரெண்டாவது, நான் அரண்மனைக்குள்ள வர மாட்டேன்.” தீர்க்கமாய் சொன்னான் தவசியாண்டி.

நல்லாண்டி முந்தினார். “சம் மதம்ப்பா… சம்மதம்! இனிமே நாங்க யாரும் இந்தக் காட்டுப் பக்கம் தலை வெச்சுக் கூட படுக்க மாட்டோம். நீ கோயிலுக்கு வந்து கொடையை நடத்தி கொடுத்தாப் போதும். அரண்மனைக்குள்ள வரவே வேண்டாம்.”

இரும்பு ஏணிப்படிகளை விட்டு இறங்கி, அறை நோக்கி நடந்த துரைசிங்கம், பூட்டிக் கிடந்த வாசலில் நின்றான். அறைச் சாவி அரியநாச்சியிடம் இருந்தது. தன் பின்னால் அத்தை அரியநாச்சியும் நடந்து வருவதாக நினைத்திருந்தான். உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தவன், திரும்பிப் பார்த்தான். அரியநாச்சியைக் காண வில்லை. இங்கிருந்தே ஏணிப்படி வரைப் பார்த்தான்.

காணோம். துணுக் குற்றவன் ஓடினான். ஏணிப்படிகளில் விறுவிறுவென ஏறினான். கப்பல் மேல்தளத்துக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். வெளிச்சம் படர்ந்த இடங்களில் யார் யாரோ நின்றார்கள். அரியநாச்சியைக் காணோம். பேதலித்தவனாக முன்னும் பின்னும் நடந்தான்.

தவசியாண்டி குடிசை நோக்கி நடந்தான். கணக்குப்பிள்ளை நல்லாண்டி வகையறாக்கள் பெருங்குடி நோக்கி காட்டுக்குள் நடந்தார்கள்.

கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத் துக்கு ஏதோ உறைத்தது. ‘அரண் மனைக்குள்ளே நுழைய மாட்டேன்’ என்கிற இதே வார்த்தையைத்தானே, சென்னைப் பட்டணத்திலே வெள்ளை யம்மா கிழவியும் சொன்னாங்க. தவசியாண்டியும் சொல்றானே!’ நினைப்பை முழுங்கிக் கொண்டார்.

தவசியாண்டியின் நடையில் துள்ளாட்டம் தெரிந்தது. ‘இரை சிக்கிருச்சு! நம்ம கோடாங்கிக்கு மனுசத் தோல் மாட்டிற வேண்டியதுதான்!’

துரைசிங்கம் கொதித்துப் போய் நின்றான். ‘கப்பல் முகப்போரம், நம் கண் முன் நிற்பவள் அத்தை அரியநாச்சியா! ஸ்காட்டைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டு…’ கூசும் கண்களை மூடினான். தகப்பன் ரணசிங்கத்தை நினைத்து குமுறி குமுறி அழுதான். ‘அப்பா… உங்க தியாகம் எல்லாம் வீணாப் போச்சே அப்பா! நான் இருந்த இருபது வருஷ வனவாசம்… இதைப் பார்க்கத்தானா? உங்க தங்கச்சி இவ்வளவு கேடு கெட்டவளா? ச்சேய்…!’ கண்களைத் திறந்தான்.

தன்னை முத்தமிடும் மயக்கத்தில் மதி கிறங்கிய ஸ்காட்டை இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கி, இடது கைவாக்கில் கடலுக்குள் விட்டெறிந்த அரியநாச்சி, காற்றில் ஆடிய கூந்தலை வளைத்து, கோடாலிக் கொண்டை இட்டாள்.

- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x