Published : 10 Aug 2017 10:36 AM
Last Updated : 10 Aug 2017 10:36 AM

வீட்டுக்கு வந்தது ஒரு ஃபேன்டஸி பேய்!- குறும்படங்களில் அசத்தும் இளைஞர்

ழக்கமான சினிமா பாணியில் இருந்து மாறுபட்ட கதைக் களத்தில் பயணிப்பதையே தற்போதைய இளம் குறும்பட இயக்குநர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அந்த வரிசையில் ‘ஹைவே காதலி’ என்ற 27 நிமிடக் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார், கமல் பிரகாஷ். தனது குறும்பட இயக்க அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

‘‘பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்த கதை எழுதும் ஆர்வம்தான் சினிமாத் துறையின் மீதான காதலுக்கு விதை. பள்ளிக் காலம் முடிந்து பொறியியல் துறை மாணவனாக கல்லூரிக்குள் வந்ததும், குறும்படங்கள் எடுக்கும் வேலையில் இறங்கினேன். தெய்வமே, நினைவுரை, இருமுகம், ஹோம் டெலிவரி என்கிற குறும்படங்களைத் தொடர்ந்து,

இப்போது ‘ஹைவே காதலி’ யை இயக்கி வருகிறேன். முதல் குறும்படத்தில் செய்த தவறை இரண்டாவது படத்தில் சரிசெய்வது; அதில் செய்யும் தவறை அடுத்தப் படத்தில் திருத்திக்கொள்வது என்றே நகர்ந்தன. முதல் இரண்டு, மூன்று படங்களுக்கு நானே ஒளிப்பதிவும் செய்தேன்.

ஹோம் டெலிவரி பாக்ஸில் பேய்

ஃபேன்டஸி வகை படங்களுக்கு எல்லா வயது தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் நடக்காத விஷயம் ஒன்றை நடப்பது போல கமர்ஷியல் கலந்து கொடுத்தால் அதில் சுவாரஸ்யம்தானே. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மழை வெள்ளத்தை மையமாக வைத்து ‘ஹோம் டெலிவரி’என்ற ஒரு ஃபேன்டஸி வகை கதையை உருவாக்கினேன்.

மழையின் காரணமாக அலுவலக விடுமுறையில் இருக்கிறான் ஓர் இளைஞன். அப்போது அவன் ஆர்டர் செய்த ப்ளூ டூத் ஸ்பீக்கர் பாக்ஸ் வீட்டுக்கு வருகிறது.ஹோம் டெலிவரி ஆகும் அந்த பாக்ஸில் பேய் இருக்கும். அதுதான் கதைக் களம். இது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆவியே காதலி

இதனை அடுத்து சமீபத்தில் ‘ஹைவே காதலி’ என்ற குறும்படத்தை எடுத்து வெளியிட்டேன். இது 2 மணி நேர சினிமாவுக்கான கதை. முதலில் டெமோ மாதிரி இருக்கட்டுமே என்று குறும்படமாக எடுத்தேன்.

சின்ன வயதில் இருந்து காதல் அனுபவமே இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் காதலில் விழுந்தால், என்ன நடக்கும்? அதுவும் அந்தக் காதலி ஆவி என்று தெரிந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

வெளியிட்ட முதல் வாரத்திலேயே ஒன்றரை லட்சத்தைத் தொடர்ந்து தற்போது 6 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதற்கு நல்ல விமர்சனமும் கிடைத்தது. அதை சினிமாவாக எடுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளேன். விரைவில் அறிவிப்பு இருக்கும்!’’ என்கிறார், கமல் பிரகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x