Last Updated : 10 Mar, 2017 09:35 AM

 

Published : 10 Mar 2017 09:35 AM
Last Updated : 10 Mar 2017 09:35 AM

இணைய களம்: விருதுக்கு இந்தி, சம்ஸ்கிருத பெயரைத்தான் சூட்ட வேண்டுமா?

சில நாட்களுக்கு முன்னர் ஆங்கிலச் செய்தியில் இப்படிச் சொன்னார்கள்:

“பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்குக் குடியரசுத் தலைவர் ‘நாரி ஷக்தி புரஸ்கார்’(விருது) வழங்குவார்” என்றது அந்தச் செய்தி. ‘நாரி ஷக்தி புரஸ்கார்’ என்றால் பெண் ஆற்றல் விருது.

பெண்களை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் வரவேற்கத்தக்கது தான். விருது பெறும் பெண்கள் அனைவருமே அரசியல் சார்பின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானா என்ற கேள்வியைக் கூட நான் எழுப்பவில்லை.

அந்த விருதுக்கு இப்படி சம்ஸ்கிருதப் பெயர்தான் சூட்ட வேண்டுமா என்று அருகில் இருந்த நண்பரிடம் கேட்டேன். “ஏன், விமன்ஸ் பவர் அவார்டுன்னு இங்கிலீஷில் சொன்னால் ஏத்துக்கிடுவீங்களோ? இது அந்நிய மொழி அடிமைத்தனம். ‘நாரி ஷக்தி புரஸ்கார்’ங்கிறது இந்திய மொழிச் சொல். அதை ஏன் சம்ஸ்கிருதத் திணிப்புன்னு பார்க்கிறீங்க...?” என்று கொந்தளித்துவிட்டார் நண்பர்.

அவருடைய கோபம் நியாயமானது. இந்திய மொழியில் அரசுத் திட்டங்களுக்கும் விருதுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெயர் சூட்டுவது நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சம்ஸ்கிருதம் அல்லது இந்தி மட்டும்தான் இந்திய மொழிகளா?

ஏன், ஒவ்வொரு திட்டத்துக்கும், ஒவ்வொரு விருதுக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சுழற்சி முறையில் ஒவ்வொரு இந்திய மொழியிலும் பெயர் சூட்டக் கூடாது? இந்த விருதுக்கு சம்ஸ்கிருதம் அல்லது இந்திப் பெயர் என்றால், அடுத்த விருதுக்குத் தமிழில். அதற்கடுத்த விருதுக்கு மராத்தியில், பின்னொரு திட்டத்துக்கு வங்காளியில், மற்றொரு நிறுவனத்துக்குத் தெலுங்கில் - இப்படி தேசிய மொழிகள் அனைத்திலும் பெயர் சூட்ட வேண்டியதுதானே மைய அரசு? இப்படித்தானே ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க முடியும்? நாட்டு மக்கள் பேசுகிற எல்லா மொழிகளுக்கும் சம மரியாதை தாருங்கள் என்றால், அது அந்நிய மொழி அடிமைத்தனமா?

இதை சம்ஸ்கிருத வெறுப்பிலிருந்து கேட்கவில்லை, மொழிச் சமத்துவ விருப்பிலிருந்து கேட்கிறேன்.

நண்பர் பதில் சொல்லாமல் மௌனமாக காபியைப் பருகிக் கொண்டிருந்தார். இன்னொரு செய்தி வாசிக்கப்பட்டது:

“பெண் ‘சர்பஞ்ச்’கள் கெளரவிக்கப்படுவார்கள்” (சர்பஞ்ச் ஊராட்சித் தலைவர்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x