Published : 13 Aug 2016 10:16 AM
Last Updated : 13 Aug 2016 10:16 AM

டி.கே.மூர்த்தி 10

தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி (T.K.Murthy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருவனந்தபுரம் - கன்னியா குமாரி வழித்தடத்தில் அமைந் துள்ள நெய்யாத்தங்கரை என்ற ஊரில் பிறந்தவர் (1924). தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது முழுப் பெயர். இவரது குடும்பத்தினர் பரம்பரை பரம் பரையாகத் தஞ்சை அரண் மனை இசைக் கலைஞர்கள்.

* திருவனந்தபுரம் அரண்மனையில் வித்வான்கள் மிருதங்கம் வாசிப்பதைக் கேட்ட சிறுவனுக்கு மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏழு வயதிலேயே பிறந்தது. இவர் விரும்பியபடி மிருதங்கம் வாங்கிக் கொடுத்தார் அப்பா.

* இவருக்கு 9 வயது இருந்தபோது குடும்பத்துடன் ஒரு திருமணத் துக்குச் சென்றார். திடீரென்று அங்கிருந்த தவில் வித்வான் எழுந்து போய்விட்டார். கெட்டிமேளம் கொட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறுவன் கிருஷ்ணமூர்த்தி தவிலை எடுத்துக் கச்சிதமாக வாசித்தார். அனைவரும் திகைப்படைந்துவிட்டனர்.

* கையில் மிருதங்கம் கிடைத்த பிறகு தானாகவே மிருதங்கம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன் என்று இவர் கூறியுள்ளார். திருவனந்த புரம் பஜனை மடத்தில் ராமநவமி உற்சவத்தில் நீலகண்ட பாகவதருக்காக மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

* சிறுவனின் வாசிப்பைக் கேட்ட தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் தன்னோடு வந்துவிடுமாறு கூறினார். பின்னர் அப்பாவின் அனுமதியுடன் சிறுவனை அழைத்துச் சென்றார். அப்போது இவருக்கு வயது ஒன்பது.

* இவருக்குப் பத்து வயதாக இருந்தபோது முதல் கச்சேரி நடைபெற்றது. அடுத்து 1935-ல் மகாராஜபுரம் விசுவநாத ஐயர் பாட்டுக்கு தனது குருவுடன் சேர்ந்து சிஷ்யனும் வாசிக்க, இவரது வாசிப்பில் மயங்கிய மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் இவருக்கு 1000 ரூபாய் பரிசளித்தார்.

* இவருக்கு முன்பாகவே அங்கே தங்கியிருந்த பாலக்காட்டு மணி ஐயரும் இவரும் சேர்ந்து சாதகம் செய்து வந்தார்கள். வைத்தியநாத ஐயர் இவருக்கு முறைப்படி மிருதங்கம் கற்றுக்கொடுத்தார். இவரது 25-வது வயதில் இவரது குரு இறந்த பிறகு சென்னையில் குடியேறினார். எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி அய்யர், அரியங்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மதுரை எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.

* 55 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எஸ்.ஸுக்கு மிருதங்கம் வாசித்துள் ளார். பெண்களுக்கு வாசிப்பதைப் பிரபல வித்வான்கள் விரும்பாத அந்தக் காலத்தில் பட்டம்மாள், வசந்தகுமாரி, சுந்தராம்பாள், பிருந்தா உள்ளிட்ட பிரபல பாடகிகள் அனைவருக்கும் வாசித்துள்ளார். சின்ன வித்வான், பெரிய வித்வான், ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது என்று இவர் கூறுவார்.

* இலங்கை, ரோம், அமெரிக்கா, ஜெர்மனி, பாரிஸ், ஜெனிவா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் என பல வெளிநாடுகளுக்கும் சென்று மிருதங்கம் வாசித்துள்ளார். மிருதங்கம் மட்டுமல்லாமல் கடம், கஞ்சிரா ஆகியற்றையும்கூட வாசிப்பார். தவிர, கொன்னக்கோல் வாசிப்பிலும் திறமை பெற்றிருந்தார்.

* 15,000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வாசித்துள்ளார். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது உள்ளிட்ட பல விருதுகளும், நந்தி நாத நிபுணர் பட்டமும் பெற்றுள்ளார். இன்று 93-வது வயதில் அடியெடுத்துவைக்கும் டி.கே.மூர்த்தி தற்போதும் இசைப் பணியாற்றி வருகிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x