Published : 03 Sep 2016 10:49 AM
Last Updated : 03 Sep 2016 10:49 AM

அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன்

காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது

- ஹெலன் கில்லர்

மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அடிமேல் அடிவைத்துச் சென்றேன். எங்களைச் சுற்றி குறுக்கும், நெடுக்குமாக மோட்டார் பொருத்தப்பட்ட நூற்றுக்கும் மேலான மீன் வண்டிகள் ‘டர் புர்’ என்று கடந்துச் சென்றன.

இந்த மீன்பாடி வண்டிகள் வீநோதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. வண்டியின் முன்னால் காஸ் சிலிண்டர்களைப் போல வடிவமைக்கப்பட்ட இன்ஜின். அதன் மேற்பகுதியில் ஸ்டியரிங். அதை நின்ற நிலையிலேயே ஆட்கள் ஓட்டிச் செல்கிறார்கள். பின்னால் உள்ள பெட்டிப் போன்ற பகுதியில் மீன்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் இந்த மீன்களைக் கண்டவுடன் என் கணவரும், நானும் பிரம்மிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஒவ்வொரு டியுனா மீனும் திமிங்கில சைஸில் இருந்தன. ’’ஒரு மீனின் எடை எவ்வளவு இருக்கும்? சொல்லுங்கள் பார்க்கலாம்!’’ என்றார் எங்கள் வழிகாட்டி.

ஆசிரியர் முன் விடைதெரியாத மாணவர்களாக விழித்தோம்.

300 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் என்றதும், ‘வாவ்’ என்று கைதட்டி, மகிழ்ந்தேன். இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றோம். தரையில் திரும்பிய திசைகளில் எல்லாம் டியுனா மீன்கள். எல்லாமே உறைய வைக்கப்பட்டிருந்தன. மரம் அறுக்கும் மெஷின்களைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அதில் இந்த மீன்களை வாயில் கொக்கி போட்டு இழுத்துச் சென்று துண்டு, துண்டுகளாக வேண்டிய

அளவில் வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். பிறகு, அழகாக தெர்மோகோல் பெட்டிகளில் அடுக்கி வெளி மார்க்கெட்டுகளுக்கு அனுப்புகிறார்கள். 300 கிலோ மீன், மூன்று நிமிடங்களில் பெட்டியில் ஐக்கியமாகி விற்பனைக்கு சென்றுவிடுகிறது. வெட்டப்பட்ட டியுனா மீன்களின் தலைகள் ஒருபுறம் மலைபோல் குவிந்து கிடந்தன.

ஏலம் விடும் பகுதியை அடைந்தோம். அங்கும் பிரம்மாண்டமான டியுனா மீன்கள் படுத்த நிலையில் எண்கள் அடங்கிய அட்டையை தாங்கி இருந்தன. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டாலர் வரை விற்கப்படும் என்று அறிந்து மலைத்தேன்.

ஏலம் தொடங்குவற்கு முன் விலை கேட்போர் ஒவ்வொரு மீனாக பார்த்து, அதன் வயிற்று பகுதியில் இருந்து சிறிது சதையை வெட்டி எடுத்து, அதில் எவ்வளவு கொழுப்புச் சத்தும், எண்ணெய் பசையும் இருக்கிறது என்று பரிசோதிக்கின்றனர். அதிக எண்ணெய் இருக்கும் டியுனா மீன்கள் அதிக விலைக்குப் போகின்றன. டியுனாவை வாங்குவோர் கைகளினால் சில சைகைகளை செய்ய, அதை புரிந்துகொண்டு ஏலம் விடுவோர் போடுகிற சத்தம் விநோதமாக இருக்கிறது. ஆறு, ஏழு டியூனாக்கள் கண் இமைக்கும் நேரத்தில் விற்கப்படுகின்றன.

சுகிஜி மீன் அங்காடியின்உள் பகுதியை விட்டு மெதுவாக வெளியே வந்தோம். நாகக் கன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறேன், அவை வசிப்பதாக சொல்லப்படும் கதைகளையும் உலகங்களையும், திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், வாழ்நாளில் மறக்கமுடியாத இந்த டியுனா கன்னிகள் நிறைந்த உலகத்தையும், அவற்றோடு நடமாடி அவற்றால் வாழ்வாதாரம் பெரும் மனிதர்களையும் அன்றுதான் பார்த்தேன்.

சுகிஜி அங்காடியின் வெளிப்புற மார்க்கெட்டும், பிரமிக்க வைத்தது. அங்கு குட்டிவியாபாரிகள் ஆக்டோபஸ் முதல், ராட்சத சைஸ் நண்டுவரை கடல் உயிர்வாழ் இனங்கள் அனைத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள், கடல் பாசியைக் கூட விட்டு வைக்கவில்லை. பதம் செய்யப்பட்ட மீன்கள் பாக்கெட்டுகள் பேக்செய்து அழகாக அடுக்கப்பட்டிருந்தன. நடு கடையில் ஒரு ராட்சத ஆக்டோபஸ்ஸை அப்படியே உப்பு தடவி உலர வைத்திருந்தார்கள்.

அழகான பிளாஸ்டிக் டிரேக்களில் இருந்த தண்ணீரில் இறால்கள், மீன்கள் சிப்பி மீன்கள், நத்தை வகைகள் ராட்சத நண்டுகள் ஆக்டோபஸ்கள் என்று உயிரோடு வலம் வந்தன. அப்பப்பா! என் விரிந்த கண்கள் இயப்பு நிலைக்கு வர வேகு நேரமாகிவியது. காலை மணி ஒன்பதை தொட்டிருந்தது. பசி வயிற்றைப் பிராண்ட தொடங்கியது. அதைப் புரிந்துகொண்ட வழிகாட்டி, ’’வாருங்கள் சுகிஜி அங்காடியைச் சுற்றி இருக்கும் உணவங்களில் அருமையான காலை உணவு கிடைக்கும் சாப்பிடலாம்’’ என்றார். சரி என்று சந்தோஷத்துடன் அவரைப் பின் தொடர்ந்தோம்.

ஏனோ என் மனது மட்டும் சிறிது குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. நாங்கள் ஜப்பானில் காலடி எடுத்து வைத்த அன்று, எங்கள் ஹோட்டலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயங்க செய்தோம். அப்போது அதில் சில விளம்பரங்கள் ஓடியது. கடல் அலைகளுக்கு நடுவே ஒரு மனிதர் நின்றுகொண்டு, உயிருடன் இருக்கும் இறாலை முதலில் கைகளில் ஏந்தி, பிறகு அதை அப்படியே வாயில் போட்டு மென்று விழுங்கி, பிறகு ஜப்பானிய மொழியில் சொன்னது விளங்கவில்லை. என்றாலும், அவருடைய முகபாவங்களை வைத்து அதன் சுவை மிக நன்றாக இருப்பதாக வெளிப்படுத்துகிறார் என்பது தெளிவாகப் புரிந்தது.

இப்படி பல கடல்வாழ் உயிரினங்களை அவை உயிருடன் இருக்கும் போதே அப்படியே சமைக்காமல் உண்பதை பார்த்து அதிர்ந்துபோனோம்!

ஆகையினால்ம் சுகிஜி மீன் அங்காடியின் உணவகங்களில் என்ன கிடைக்கப்போகிறதோ என்ற கலக்கம் இருந்தாலும் , நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்ற தைரியத்துடன் நடந்தேன்.

இது இங்கே மிகப் புகழ் வாய்ந்த உணவகம் என்று சொல்லியபடி வழிகாட்டு அதனுள் சென்றார். கூட்டம் மிகுதியாக இருந்தது. சிறிது நேர காத்திருப்புக்குப் பின் உட்கார இடம் கிடைத்தது.

‘’நான் ஊனியை (0ni) சாப்பிடப்போகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்றார். நாங்கள் யோசித்து முடிப்பதற்குள், அவர் கேட்ட ஊனி வந்துவிட்டது.

ஒரு தட்டில் ஆறு ஊனிகள், அதாவது முள்ளமைப்புடைய கடல்வாழ் உயிரினம் (urachi) ஆங்கிலத்தில் ‘ யுரேசி’ என்று அழைக்கப்படுவது, உருண்டையாக கரிய நிறத்தில் உடல் முழுவதும் கூரான ஊசியைப் போன்ற முட்களுடன், நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, தட்டில் இருந்த கூரான் கத்தியை எடுத்து ஊனியை வழிகாட்டு அறுக்கத் தொடங்கினார்.

அந்த யூனி ஐந்தாக பிடிக்க, அதனுடைய இனப்பெருக்க உறுப்புகளை, முட்டைகளோடு இருந்தது, சாப் ஸ்டிக்ஸ் கொண்டு வழித்து எடுத்து, சாஸில் முக்கி, ருசித்து சாப்பிட்டார். இப்படி பச்சையாக அவர் சாப்பிட்டதை பார்த்து திகைத்தேன். இது எவ்வளவோ பரவாயில்லை, பக்கத்து மேஜைக்கு வந்த அயிட்டத்தைப் பார்த்து என் தலை சுழலத் தொடங்கியது.

- பயணிப்போம்.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x