

நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், “அப்பா, பிரிட்டன் மக்கள் இன்னும் இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“ஏன், இருக்காங்களே! ஏன் அப்படிக் கேட்கறே?”
“இல்ல, இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்னு நினைச்சேன்!”
அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. “காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு வரலாற்றுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்திரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்
காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?
“உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்னு சொல்லித் தந்தாங்களா?”
“இல்லப்பா…”
“அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?”
“அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலப்பா. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா, அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்னு நினைச்சேன்!”
இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்திரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடிய வகையில்தான் இருந்தன. ஆனால், அவள் அது புரியவில்லை என்கிறாள்.
காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குத்தான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், “இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது” என்ற வரி “பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்” என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து, ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.
அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகத்தான் இருந்தது. ஒரே ஒரு குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பது போல, சுதந்திரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால், வ.உ.சி-யைத் தெரிய வில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகத்தில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தர மாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?
http://nchokkan.wordpress.com/