Published : 25 Apr 2017 10:12 AM
Last Updated : 25 Apr 2017 10:12 AM
ஒரு ஜனநாயகக் குடியரசு நாட்டில் அரசின் முழு கவனமும் மக்கள் நலன் சார்ந்தே இருக்க வேண்டும். அதிலும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், தாங்கள் மக்கள் பக்கம் சார்ந்தே நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
தமிழகம் தற்போது சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், சென்னையில் மத்திய அமைச்சரைக் கொண்டு கூட்டம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் திரைப்பட நடிகர்கள்.
ஒவ்வொரு துறையினரும் தங்களது குறைகளை அரசுக்குச் சொல்லி தீர்வுக்கு வேண்டுகோள் விடுப்பதில் தவறில்லைதான். ஆனால், தங்களை வாழவைக்கும் பொதுமக்கள் சொல் லொணாத் துயரத்தை அனுபவிக்கும் வேளையில் இக்கூட்டம் தேவை தானா?
அக்கூட்டத்தில், மிக வலுவாக வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை - திருட்டு விசிடி பற்றியது. தரமான நல்ல திரைப்படமாக இருந்தால், மக்கள் தாமாகத் திரையரங்குகளை நோக்கி வரமாட்டார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். திருட்டு விசிடி விவகாரத்தில் சிலரது பேச்சும், நடவடிக்கை யும் பட்டவர்த்தனமாக சட்ட வழி முறைகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
முறைப்படி காவல்துறைக்குத் தெரிவித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுவதை தவிர வேறு எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது சட்டவிரோதம்தான்.
சில வாரங்களுக்கு முன்பு, தென் மாவட்ட நகரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கவலை தருகிறது. ஒரு பேருந்தில் புதிய திரைப்படம் போட்டுக் காட்டப் பட்டதாம். அதில் நடித்த கதாநாயக னின் ரசிகர்கள் 4 பேர், பேருந்தில் இருந்தவர்களைக் கீழே இறக்கி விட்டு, பேருந்தை காவல் நிலையத் தில் ஒப்படைத்துள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விவகாரம் என்னவாகவும் இருக்கட்டும், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தைக் கைப்பற்றியது மிகக் கடுமையாக தண்டிக்கப் படவேண்டிய சட்டவிரோதச் செயல். ஆனால் என்ன நடந்தது? ‘ரசிகர்கள்’ என்ற போர்வையில் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இது முற்றி லும் தவறான, அபாயகரமான போக்கு. பேருந்தை ‘கடத்திய’ 4 பேரும் அப்போதே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
பொதுவாகவே, ரசிகர்களை சட்டவிரோதச் செயலுக்குத் தூண்டிவிடுவதாகவே நடிகர்களின் பேச்சு அமைந்து வருகிறது. வெளிப்படையாக ஊடகங்கள் முன்பாகவே ‘வீர வசனம்’ பேசும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எப்போதும் எடுக்கப் படுவது இல்லை. ஏன் இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?
திருட்டு விசிடியை ஆதரிக்கவில்லை. அதேநேரம், பாடப் புத்தகங்கள் தொடங்கி, தலைசிறந்த நூல்கள் வரை, அனைத்தையும் ‘ஜெராக்ஸ்’ எடுத்து சுற்றுக்கு விடப்படுகிறதே, அதை ஏன் யாரும் கண்டிப்பதில்லை? இந்த அநியாயமான வழிமுறைக்கு எதி ராக ஒரு சலசலப்போ, முணு முணுப்போகூட எழுவதில்லையே.
கேளிக்கை வரி விலக்கு, அரசு நிதி உதவி, விருதுகள், பாராட்டுகள் என்று திரையுலகம் மீது அரசுகள் காட்டும் கரிசனம் சற்றும் ஏற்புடையதல்ல. ஆண்டு முழுக்க தரக்குறைவான பல படைப்புகளைத் தந்துவிட்டு, ‘தரமான’ ஒன்றை மட்டும் காட்டி, மதிப்புமிகு விருதுகளைப் பெறுகிற சாமர்த்தியசாலிகளை என்ன சொல்வது?
எப்படியோ போகட்டும் என்றுவிடலாம்தான். ஆனால், மக்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கெல்லாம் தாமாக வலியச் சென்று ஆதரவு தெரிவிக்கிற ‘நல்ல மனம்’ கொண்டவர்கள், வறட்சி நிவாரண நிதியாக ஏதேனும் ஒரு தொகையை மத்திய அமைச்சரிடம் தந்திருந்தால் பாராட்டி இருக்கலாம். மாறாக, தங்களுக்கு ‘பாதுகாப்பு’ வேண்டும்; சலுகைகள் வேண்டும்; அதற்காக டெல்லிக்கு வரவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
திரைத் துறையினர் மட்டுமல்ல; நிலையான நல்ல ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள்கூட, குறைந்தபட்சம் தங்கள் ஒருநாள் ஊதியத்தை, விவசாய நிவாரண நிதியாகத் தந்து உதவலாம். நமக்குச் சோறு போடுபவர்கள் நிம்மதியாக வாழ, நிவாரணப் பணியில் நேரடியாகப் பங்களிக் கலாம்!
கோடைகாலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு வெயிலின் பாதிப்பு மிக மோசமாக இருக்கலாம். நீர்நிலைகள் வறண்டு, பொதுமக்களின் குடிநீர் தேவையைக்கூட முழுவதுமாக நிறைவேற்றி வைக்கமுடியாத சூழல். மக்களின் துயரங்களைப் போக்குவதில் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் தங்களது முழு கவனத்தையும் செலுத்தவேண்டிய தருணம் இது.
உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் என்று பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் அரசுகள் களத்தில் இறங்கிப் பணியாற்றினால் மட்டுமே மக்களுக்கு ஓரளவேனும் நிவாரணம் கிடைக்கச் செய்ய முடியும்.
வறட்சி நிலை மாறி இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் வரை, கேளிக்கை தொடர்பான எந்தக் கோரிக்கைக்கும் அரசுகள் செவிமடுப்பதே கூடாது. அதை விடுத்து, தேவையற்ற நிகழ்ச்சிகள், கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்தால், அது மக்கள் மனங்களில் நம்பிக்கையின்மை ஏற்படக் காரண மாகிவிடும். மாறாத வடுவாக நிலைக்கவும் கூடும். அது, மக்களாட்சி முறைக்கு நல்லதல்ல.
சாமானியர்கள்தான் ஜனநாயகத் தைத் தாங்கிப் பிடிப்பவர்கள். அவர்கள்தான் சட்டத்துக்கு அஞ்சி நடப்பவர்கள். அவர்களால்தான் ஆட்சியும், அதிகாரமும், பதவியும், பவிசும். முதலில் அவர்கள் தங்கள் துயரங்களில் இருந்து வெளியில் வரட்டும். அதுவரை கேளிக்கைகளுக்கு என்ன அவசரம்?
கடைசியாகப் பார்த்துக்கொள்ள லாம். அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்கட்டும். ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT