Published : 14 Jun 2016 02:31 PM
Last Updated : 14 Jun 2016 02:31 PM

யூடியூப் பகிர்வு: பெங்களூருவின் குப்பை மேலாண்மையாளர்கள்!

சங்கராபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 30 நபர் குழுவினர், பெங்களூருவின் வீதிகளை சுத்தப்படுத்துவதில் முனைப்போடு இறங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர்.

கிழக்கு பெங்களூருவில் சுமார் ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் குடிசைப்பகுதி சங்கராபுரம். இது ஒயிட்ஃபீல்ட் ஐடி வளாக வருகையின் காரணமாக சிதைந்து போனது. இங்கு 300 ஆண்களும், 280 பெண்களும் வசிக்கின்றனர். வீட்டு வேலை செய்பவர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்தவர்கள் இப்போது மாதம் ஆறாயிரம் வரை சம்பாதிக்கின்றனர். 'சதார்' என்ற பெயரிட்ட குழுவின் கீழ் இவர்கள் வேலை பார்க்கின்றனர். பெண்களை அதிகமாகக் கொண்ட இந்தக் குழுவில் இப்போது 30 பேர் பணிபுரிகின்றனர்.

நிகழ்ந்த மாற்றம்

15 வருடங்களுக்கு முன் தனித்தனியாக சிறுசிறு வேலைகள் பார்த்தவர்களை, பெங்களூரு மாநகராட்சி அலுவலர் ஒருவர் ஒன்றிணைந்து பணிபுரியச் சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கிறார். குப்பைகளை திரட்டும் வேலையை ஆரம்பித்தவர்கள், நாளடைவில் தங்களின் சுற்றுப்புறத்தில் தொடங்கி ஒயிட்ஃபீல்ட் வரை இருக்கும் தெருக்களை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

மாதம் 50 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இவர்களின் பயணம் மெல்ல மெல்ல குப்பைகளை அள்ளிக் கொண்டு செல்ல 4 லட்சம் மதிப்பிலான ட்ராக்டரை வாங்கும் வரை சென்றிருக்கிறது.

பின்னர் மாநகராட்சியின் அதிகாரங்கள் செயலிழக்க, ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே என்னும் நவீன மாநகராட்சி அமைப்பு வந்தது. இதனால் ஒப்பந்ததாரர்கள் உள்ளே வர இவர்கள் பணி சிக்கலானது. அன்றிலிருந்து தங்களை ஒப்பந்தக்காரர்கள் சாராத தனி குப்பை மேலாண்மை அமைப்பாக இயங்க அனுமதி வேண்டி, இப்போது வரை போராடி வருகிறார்கள்.

தன்னம்பிக்கை மனிதர்களின் முன்னேற்ற காணொலியைக் காண