Published : 04 Jun 2017 10:20 AM
Last Updated : 04 Jun 2017 10:20 AM

பெ.வரதராஜுலு நாயுடு 10

விடுதலை வீரர், பத்திரிகையாளர்

விடுதலைப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான பெ.வரதராஜுலு நாயுடு (P.Varadarajulu Naidu) பிறந்த தினம் இன்று (ஜூன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் (1887) பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி கற்கும்போது, நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. மாணவர்களை ஒன்று திரட்டி ‘முற்போக்காளர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

* அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கேற்றதால், தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. சித்தவைத்தியம், ஆயுர்வேதம் கற்றுத்தேர்ந்தார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு, புகழ் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தேசிய அரசியலில் 19 வயதிலேயே ஈடுபட்டார்.

* புதுச்சேரியில் 1908-ல் பாரதியாரைச் சந்தித்தது, இவரது சுதந்திர வேட்கையை மேலும் அதிகரித்தது. 1916 முதல் தீவிர அரசியலில் பங்கேற்றார். மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவித்துப் பேசியதற்காக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.

* உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் ராஜாஜி இவருக்காக வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார். 1917-ல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தை தொடங்கினார். பெரியகுளம் தாலுகா காங்கிரஸ் மாநாட்டில் தடையை மீறிப் பேசியதற்காக 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். காந்தியடிகள் 1920-ல் தமிழகம் வந்தபோது இவரது வீட்டில் தங்கினார்.

* காந்தியடிகள் 1922-ல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வருமானவரி கட்டாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர், காந்தியடிகள் விடுதலையான பிறகுதான் செலுத்துவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதை அரசாங்கத்துக்கு தெரிவித்து இவர் எழுதிய கடிதம் காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது.

* தமிழகம் முழுவதும் சென்று காங்கிரஸ், தேசியம், விடுதலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமை இவருக்கும் உண்டு. 1925-ல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றினார். 1929-ல் காங்கிரஸில் இருந்து விலகி, ஆரிய சமாஜத்தில் இணைந்தார்.

* இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். பாரதியார், திருவிக-வுக்கு அடுத்து, தேசியத் தமிழ் இதழியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்பட்டார். ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழ் மூலம் இதழியலில் அடியெடுத்து வைத்தார். நஷ்டத்தில் ஓடிய அந்த இதழை வாங்கி 2 ஆண்டுகள் நடத்தினார்.

* அதில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாக சாடி எழுதினார். இதன் காரணமாக இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அந்த இதழ் நின்றது. பின்னர் 1925-ல் ‘தமிழ்நாடு’ என்ற இதழைத் தொடங்கினார்.

* அதில் இவர் எழுதிய கட்டுரைகள் தேசத் துரோகமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு 9 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். பாரதியார் பாடல்களை சித்திர விளக்கங்களுடன் வெளியிட்ட முதல் இதழ் இதுதான். 1931-ல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் சென்னை பதிப்பைத் தொடங்கினார்.

* நாடு விடுதலை பெற்ற பிறகு 1951-ல் சென்னை மாநில சட்ட மேலவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல், சமூகம், தொழிற்சங்கம், இதழியல் என பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த பெ.வரதராஜுலு நாயுடு 70-வது வயதில் (1957) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x