Published : 10 Jun 2019 16:37 pm

Updated : 10 Jun 2019 16:37 pm

 

Published : 10 Jun 2019 04:37 PM
Last Updated : 10 Jun 2019 04:37 PM

நெட்டிசன் நோட்ஸ்: கிரேசி மோகன் - முதல் முறையாக அழ வைக்கிறார்!

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு நெட்டிசன்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

D S Gauthaman


கோடிக்கணக்கான மக்களைக் கவலை மறந்து, கண்களில் நீர் வருமளவு சிரிக்க வைத்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழ் மக்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே செலவிட்ட கிரேசி மோகனுக்கு நன்றியும், ஆழ்ந்த இரங்கலும்... சென்று வாருங்கள் நகைச்சுவை அட்சயப் பாத்திரமே!

Maria Sivanandam

மனமிருந்தால் மார்க்க பந்து..

விரசமில்லா நகைச்சுவைக்கு வழி வகுத்தவர்.

மறக்க முடியாத தொலைக்காட்சித் தொடர்கள்..

Shan Karuppusamy

கிரேசி மோகன் திரும்பி வரவேண்டும். தனக்கான இரங்கல் செய்திகளை அவரே பார்த்து சிரிக்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

மகிழ்ச்சியைப் போதித்தவர் விடைபெற்றுக் கொண்டார். ஈடில்லாத இழப்பு.

Vidya Subramaniam

OMG! Crazy...! நம்ப முடியவில்லை.

Gopalakrishnan Sankaranarayanan

நகைச்சுவைக் கலைஞர், எழுத்தாளர். கிரேசி மோகனின் நாடகங்களும் திரைப்பட வசனங்களும் கோடிக் கணக்கானவர்களை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கின்றன. 1990-களில் கமல்ஹாசன் - கிரேசி மோகன் இணை தமிழ் சினிமாவில் மதிப்புமிக்க நட்சத்திர இணையாகக் கோலோச்சியது.

கிரேசி மோகனின் நகைச்சுவையில் பெருமளவில் உருவக் கேலி, சாதி, இனம், மதம் பொருளாதார நிலை சார்ந்து ஒருவரை கிண்டலடிப்பது ஆகியவை அறவே தவிர்க்கப்படும் (சில விதிவிலக்குகள் இருக்கலாம்). பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசமும் இருக்காது.

தனது நாடகங்களில் ஜோசியம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளைக் கிண்டலடித்திருக்கிறார். எப்போதும் யாரையும் புண்படுத்தாத பண்பாளராக இருந்திருக்கிறார். அவரது மறைவு நகைச்சுவைத் துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகவ் மகேஷ்

இத்தனை நாட்கள் நம்மைச் சிரிக்க வைத்தவர் இன்று அழவைத்துவிட்டார்!

Karthick Krishna

சுஜாதா, பாலகுமாரன், கிரேசி மோகன் போன்றவர்களுக்கு ஈடு இணையில்லை.. அவர்களின் ஸ்டைலைப் பின்பற்ற மட்டுமே முடியும். ஆனாலும் அவர்கள் அடைந்த உயரத்தை யாராலும் தொட முடியாது.

Vijayashalini S

நானெல்லாம் அதிகமா சினிமா பார்க்காத ஆளு; அதுவும் பார்த்த படத்தையே திரும்ப பார்க்கறது வழக்கத்துலயே இல்ல. ஆனா அவரோட காமெடி ஸ்க்ரிப்ட், டயலாக்ஸ்களுக்காகவே பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா போன்ற சில படங்களை எப்பொழுது டிவி யில் போட்டாலும் பார்ப்பேன்.

Suresh Seenu

ஏன் சார் இத்தனை அவசரம்?

ம்.. நாங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.

Abdul Hameed Sheik Mohamed

இளம் வயதில் தூர்தர்ஷனில் அவர் நாடகங்களை பைத்தியமாகப் பார்த்து சிரித்திருக்கிறேன். சமகால மத்தியதர வாழ்வின் அபத்தங்களை அவரது நாடகங்கள் சுய எள்ளலுடன் நகையாடின. உலகில் சிரிப்பு மறைந்துவரும் காலத்தில், கிரேசி மோகனும் மறைய வேண்டுமா?

Mugil Siva

கிரேசி மோகன் முதலும் கடைசியுமாக நம்மை அழவைத்துவிட்டார்.

#சிRIP

கிருபா

கிரேசி மோகன் - மறக்கமுடியாத ஆளுமை. . நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞன் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

ரஹீம் கஸ்ஸாலி

சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன். 'அபூர்வ சகோதரர்கள்', 'அவ்வை சண்முகி', 'மைக்கேல் மதன காமராஜன்', 'சதி லீலாவதி', 'வசூல் ராஜா', 'பம்மல் கே.சம்பந்தம்' என்று கமலின் காமெடி படங்களிலெல்லாம் வசனகர்த்தாவாக இருப்பார் கிரேசி மோகன்.

அவர் வசனம் என்றால் சிரிப்புக்கு நூறு சதவீதம் கியாரண்டி என்று நம்பி போகலாம். அதேபோல் ஜானகி, மைதிலி என்ற கேரக்டர்கள் ஒரு படத்தில் இடம் பெற்றாலே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் இது கிரேசியின் வசனம் என்று. அந்த அளவுக்கு அந்தப் பெயர்கள் மீது கிரேசிக்கு கிரேஸ்.

ரூபிணி தேன்மொழி

எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா இருக்கற மாதிரியே காமெடி எழுத இவரால மட்டுந்தான் முடியும்...நல்ல நடிகரும் கூட.

Yuva Krishna

மேடைநாடகத்தில் வசூல் சக்கரவர்த்தியாக ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டுகளை மாட்டிக் கொண்டிருந்த எஸ்.வி.சேகருக்கு ஒரே போட்டியாக இருந்தவர் கிரேஸி மட்டுமே.

வெங்கடேஷ் ஆறுமுகம்

கிரேஸி மோகனின் 'கே.பி.டி சிரிப்பு ராஜசோழன்' புத்தகத்தைப் படித்துள்ளீர்களா? ஒரு வகையில் 23 -ம் புலிகேசிக்கு இன்ஸ்பயராக இருந்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்..

அதில் வரும் 'கேன கிறுக்க சிம்மன்' எனும் மன்னர் அடிக்கும் லூட்டியெல்லாம் கிரேசியின் எழுத்தில் படிக்கவேண்டும் உங்களைப் படிக்கும் போதே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.. ஆனால் அதை எழுதியவர் தான் இன்று நம்மை அழவைத்து விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார். அந்த சிரிப்பு ராஜனுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்!

ஷேக் முஹமது

ரசிக்கத்தக்க உடனடி உரையாடல்கள் எனில் கிரேசி மோகன்தான்.. பட்டாசு சரவெடி ரகம். வசனங்களுக்கப்பால் நல்ல வெண்பா எழுதும் திறமையுடைவர். 'காதல் படிக்கட்டுகள்' தொடர் ஜூவியில் வந்தபோது தம் காதலித்து சேர முடியாத ஒரு பெண்ணைப் பற்றி கூறும்போது பெண் குழந்தை பிறந்தால் அவள் பெயர்தான் வைக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தேன். இது எப்படியோ என் மனைவிக்குத் தெரிந்துவிட்டது போல இரண்டையும் பையனாகவேப் பெற்றுக்கொடுத்துவிட்டாள் என்று முடித்திருப்பார்.

சர்வ நிச்சயமாக கிரேசி மோகன் உரையாடல் அமைந்தது நாடகமோ, சினிமாவோ, துணுக்கோ மன அழுத்தத்தை உடைக்கும் வல்லமையுடையவை.

Kumaran Karuppiah

நாடக உலகின் மாபெரும் இமயம், ஆச்சர்யப் பட வைக்கும் அருமையான படைப்பாளி..

Giridaran Giri

மறைந்தார் சாக்லேட் கிருஷ்ணா.. அவரின் வசனங்கள் என்றும் மறையாது.

Sivaram Narayanaswamy

ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது மகிழ்ச்சி...

பரிமேலழகன் பரி

இசையால் மட்டுமே படங்கள் ஹிட் ஆவது இளைய ராஜாவால் மட்டுமே சாத்தியம். அதைப் போலக் காமெடி ஸ்கிரிப்ட், வசனங்களால் மட்டுமே படங்கள் ஹிட் ஆனது இவருக்கு மட்டுமே சாத்தியம். எனக்குத் தெரிந்து இவர் பணியாற்றிய எந்தப் படமும் ஃப்ளாஃப் ஆனதில்லை.

ஒரு ஜோக்குக்குச் சிரித்து முடிக்கும் முன்பே அடுத்தடுத்து ஜோக்குகள் தெறித்து விழுவது இவரின் பயங்கரமான ஸ்பெஷாலிட்டி. 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்' போன்ற படங்கள் இவ்வகை. 'ரட்சகன்' இவர் சீரியஸாக எழுதிய ஒரே படம். அதிலும் 'நான் கெட்டவனுக்குக் கெட்டவன், நல்லவனுக்கும் கெட்டவன்' என்று பன்ச் எல்லாம் கலக்கி இருப்பார்.

சாதாரணன்

ஆள்மாறாட்டக் கதைகளின் அற்புதமான வசனகர்த்தா, நகைச்சுவை மேடை நாடகங்களின் கதாசிரியர், நல்ல நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

Gokularaj Jagannadhan

எமனையும்

சிரிக்க வைக்க கிளம்பினாயோ?!

Pattukkottai Prabakar Pkp

கிரேஸி மோகனின் புத்திசாலித்தனமான நகைச்சுவை வசனங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நாடகங்களை ரசித்துச் சிரித்திருக்கிறேன். எனக்கு அழவே தெரியாது என்பவர்.

சிறந்த நகைச்சுவைக்கு எழுதுகிறவரிடம் ரைமிங்கும், அதைப் பேசுகிறவரிடம் டைமிங்கும் முக்கியம் என்பவர். இவருடைய நாடகக் குழுவிலிருந்து வந்து வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகரானவர் சதீஷ். கிரேசி மோகனின் நகைச்சுவை நரைப்பதே இல்லை...

Kuppuswamy Ganesan

யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை, வார்த்தை விளையாட்டு, அபத்த நகைச்சுவை... எல்லாவற்றிலும் கிரேசி மோகன் தமிழில் வேறு உதாரணம் காட்ட முடியாத நகைச்சுவையாளர்.

எப்போது நினைத்தாலும் ரசித்து சிரிக்க வைக்கும் அவருடைய எண்ணற்ற நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன. முதல் முறையாக கிரேசி மோகன் அழவைக்கிறார்.


நெட்டிசன் நோட்ஸ்கிரேசி மோகன் அழ வைக்கிறார்கமல்ஹாசன்கிரேஸி மோகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author