Last Updated : 11 Jul, 2018 08:17 AM

 

Published : 11 Jul 2018 08:17 AM
Last Updated : 11 Jul 2018 08:17 AM

2 மினிட்ஸ் ஒன்லி - ஆர்.ஜே.பாலாஜி

வணக்கம் நண்பர்களே….

நான் உங்க ஆர்ஜே பாலாஜி. இன்றைக்கு ஜூலை 11. என் வாழ்க்கையில் இது ரொம்ப முக்கியமான நாள். ஒரே நாள்ல ரெண்டு நல்ல விஷயம் நடக்குது. ஒண்ணு, என்னோட நண்பர்களோட சேர்ந்து நானே திரைக்கதை - வசனம் எழுதின ‘எல்.கே.ஜி’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம்.

ரெண்டாவது… நிறையப் பேருக்கு கிடைக்காத, அப்படியே கிடைச்சாலும் ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு கிடைக்கிற மிகப் பெரிய பெருமையும், வாய்ப்பாவும் கருதுற விஷயம் இந்த ‘2 மினிட்ஸ் ஒன்லி’ தொடர்.

‘‘என்னப்பா பாலாஜி... ‘இந்து தமிழ்’ல நீ தொடர் எழுதப் போறியா?’’ன்னு என் வீட்ல, நண்பர்கள் ஆச்சர்யத்தோட கேட்டாலும், இதெல்லாம் நிஜம்தானான்னு என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கவும் செய்றேன். பொதுவா சினிமா, பொது வாழ்க்கையில அம்பது அறுபது வருஷங்களுக்கு மேல அனுபவம் இருக்குறவங்க, சாதிச்சவங்க எழுதினதை பார்த்திருப்போம். படிப்போம். ஆனா, 30 வயசுல இருக்குற ஒருத்தன் தொடர் எழுதறதெல்லாம் நாம பெருசா பார்க்காத, ஏன் கேள்விக்கூடப் படாத விஷயம். மத்தவங்க சொல்றது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதுக்கு நாம தகுதியானவனான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டிருக்கேன்.

கிடைக்காமல் போனது என்ன?

கடந்த 10 வருஷங்களா நிறைய ஸ்கூல், காலேஜுக்குப் போய் வர்றேன். ஆயிரக்கணக்கான இளைஞர்களோட பேசுறேன். அவங்ககிட்ட இருந்து நான் பார்த்த, தெரிஞ்சிக்கிட்ட விஷயம் பசங்களுக்கு எல்லாமும் தெரியுது. அப்படி தெரியலைன்னாக்கூட தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்காங்க. ஐ மீன் அவங்களுக்கு அவேர்னஸ் இருக்கு. அதே நேரத்துல அவங்களுக்கு கிடைக்காதது சரியான விஷயங்களை இன்ஸ்பயர் பண்ற மனிதர்கள்.

2015 டிசம்பர் மாதம் சென்னை நகரத்துல வெள்ளம் வந்தப்போ பாதிக்கப்பட்டவங்களுக்காக ஊரே ஒண்ணுகூடச் செஞ்சுது. அதுவே பிப்ரவரி மாசத்துல தேர்தல்னு வரும்போது 57 சதவீதம்தான் ஓட்டு பதிவாகுது. நமக்குள்ள இருக்குறவங்களுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்தப்போ உலகத்தையே திரும்பிப் பார்க்குற செயல்ல இறங்கின நம்மால, ஓட்டு போடணும்னு நினைக்கிறப்போ, ‘அவர் கெட்டவர், இவர் கெட்டவர்’ன்னு நினைச்சுக்கிட்டு யாருமே வேணாம்னு விலகி இருந்துடுறோம். யாராவது ஒருத்தர் இளைஞர்களை இன்ஸ்பயர் பண்ணியிருந்தா அவங்க முதல் ஆளா ஓட்டு போட ஓடிவந்திருப்பாங்க.

எடுத்ததைக் கொடுப்பேன்...

ரேடியோ ஸ்டேஷன்ல வேலை செய்றதுனால ஒவ்வொரு நாளும் நைட் ஷோ முடியும்போது ஏதாவது புதுசா பாசிட்டிவ் விஷயங்களைப் பேசணும்னு ஆசைப்படுவேன். அப்படி தேடுற நாட்கள்ல பல நேரம் பெருசா எந்த விஷயங்களும் கிடைக்காது. ஏன்னா நம்மைச் சுத்தி எல்லாமே நெகட்டிவ் விஷயங்களா இருக்கு. பாசிட்டிவ் எங்கேயுமே இல்லையான்னு சில நேரத்துல ஆதங்கமா இருக்கும்.

அதையும் மீறி நான் பாசிட்டிவ்வா பேசுறேன். எங்கிட்ட இருந்து இன்ஸ்பயர் கிடைக்குதுன்னா அதுக்கு இன்னொருத்தர்தான் காரணமா இருந்திருப்பாங்க. நான் சந்தித்த, பார்த்த சில மனிதர்கள்கிட்ட இருந்து எடுத்ததைத்தான் மத்தவங்கள்கிட்ட பகிர்ந்துக்கிறேன். அந்த மாதிரி மனிதர்கள் எல்லாம் சினிமாவுல காட்ட மாட்டாங்க. டி.வியில பார்க்க முடியாது. ரேடியாவுல அவங்க குரலை கேட்க முடியாது. ஆனா, நம்ம வாழ்க்கையில இருக்காங்க. நிறைய பெரிய பெரிய பாதிக்கிற (இம்பாக்ட்) விஷயங்களை உருவாக்கியிருக்காங்க.

நான் எழுதுற இந்தத் தொடர்ல என்னைப் பற்றி இல்லாம நான் பார்த்த மனிதர்கள் பற்றியும், அவங்க செய்த மாற்றங்கள் குறித்தும்தான் சொல்லப்போறேன். கண்டிப்பா இன்னைக்கு இன்ஸ்பயரைத் தேடிட்டிருக்கிற இளைஞர்களுக்கு அந்த மனிதர்கள் ரொம்பவே இன்ஸ்பயரா இருப்பாங்க. தெரியாத அந்த முகங்கள் வெளியே தெரிய இந்தத் தொடர் ஒரு காரணமா இருக்கணும்னு தோணுச்சு. அதனாலதான் எழுதுறேன்.

நான் பார்த்த மனிதர்கள்

முதல்ல இதுக்கு ‘லைஃப் ஆஃப் மை’னு தலைப்பு வைப்போம்னுதான் நினைச்சேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ‘லைஃப் ஆஃப் பை’னு ஒரு படம் வந்துச்சே. ஒரு பையன் புலிகூடவே இருப்பான். அந்த புலியால அவன் வாழ்க்கையில நடக்கும் மாற்றங்கள் பற்றிய படம் அது. நிஜ வாழ்க்கையில் புலி மாதிரி நான் பார்த்த மனிதர்களைப் பற்றி எழுதுவோமேன்னு அந்தத் தலைப்பு இருக்கலாம்னு தோணுச்சு. ஆனா, அது இல்லாம இப்போ ‘2 மினிட்ஸ் ஒன்லி’னு அமைஞ்சுடுச்சு.

இந்தத் தலைப்புக்கும் ஒரு காரணம் இருக்கு. இந்தத் தொடரை 2 நிமிஷத்துல படிச்சிடலாம்கிறது ஒரு லிட்ரல் மீனிங்கா இருந்தாலும், நம்ம வாழ்க்கையில் ரொம்ப எளிதாக கடந்து போற மனுஷங்கக் கூட, நம்ம 2 நிமிஷங்க எக்ஸ்ட்ராவா எடுத்துட்டுப் பேசுறதுனால அவங்க வாழ்க்கையிலயோ, நம்ம வாழ்க்கையிலயோ, இல்ல நம்மைச் சுத்தி இருக்கிறவங்க வாழ்க்கையிலயோ நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு.

அந்த மாதிரி என் வாழ்க்கையில எக்ஸ்ட்ராவா 2 நிமிஷங்கள் எடுத்துக்கிட்டு, ‘யார் இவங்க? என்ன பண்றாங்க?’னு ஒரு ஆர்வத்துல பேச ஆரம்பிச்சப்போ நிறைய விஷயங்கள் கிடைத்தது. அதனாலதான் இந்தத் தலைப்பே பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு.

நான் ஒரு பார்ட்

மதுரையில என்னோட நண்பர் ஒருத்தர் பூ வித்துக்கிட்டிருந்த பொண்ணுகிட்ட, ‘‘என்னம்மா படிக்கலையா?’’னு கேட்டப்போ, அவர் ப்ளஸ் 2-வுல 1176 மார்க் எடுத்தது தெரிய வந்தது. அந்தப் பொண்ணுக்கு எப்படியாவது காலேஜ்ல ஒரு சீட்டு வாங்கிக் கொடுக்கலாம்னு இறங்கினதுதான், இன்னைக்கு 500-க்கும் மேற்பட்ட பசங்க ‘மாற்றம் எஜூகேஷன் டிரஸ்ட்’ மூலமா இலவசமா படிச்சிட்டிருக்காங்க. இந்த டிரஸ்ட்டை என்னோட நண்பர்கள்தான் நடத்துறாங்க. அதில் என்னோட பங்கும் இருக்கு.

தெரியாத ஒரு பொண்ணுகிட்ட எக்ஸ்ட்ராவா ஒரு 2 நிமிஷம் பேசினது, இன்னைக்கு 500 பசங்க இலவசமா நல்ல நல்ல காலேஜ்ல தமிழ்நாடு முழுக்க படிச்சிட்டிருக்காங்க. இந்த மாதிரி 2 நிமிஷம் எக்ஸ்ட்ராவா செலவிட்டா... நம்ம வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும்? அதைத்தான் ‘இந்து தமிழ்’ மூலம் சொல்லப் போறேன். இதுல கருத்து மட்டும்தான் இருக்குமான்னா, இல்லை; வாழ்க்கை இருக்கும்.

உலகத்துல சக்சஸ்ஃபுல் மனிதர்களோட பட்டியலை சொல்லச் சொன்னாபில்கேட்ஸ், அம்பானின்னு விரல் விட ஆரம்பிப்போம். நிறையப் பணத்தோட இருப்பதா சக்சஸ்? நிறையசந்தோஷத்தோட இருக்குறதுதானே சக்சஸ். அந்த மாதிரி நிஜமான சந்தோஷத்தோடயும் சக்சஸ்ஃபுல்லாவும் இருக்குற நிறைய மனிதர்கள் நம்மைச் சுத்தியிருக்காங்க.

அவர்களை நாம் பார்க்கப் போறோம். இது எனக்கு புதுக் களம். இதில் ஏதாவது தப்பு செஞ்சிட்டா நீங்க தாராளமா சொல்லலாம். வழி நடத்தலாம். அது எனக்கு ரொம்பவும் பயன்படும்.இனி வாரா வாரம் இந்தத் தொடர் வழியே சந்திப்போம். நிறையப் பேசப் போறோம். நிறையப் பேரை பார்க்கப் போறோம். ரெடி தானே…. நண்பர்களே!

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x