Last Updated : 09 Jun, 2018 12:00 AM

 

Published : 09 Jun 2018 12:00 AM
Last Updated : 09 Jun 2018 12:00 AM

சின்ன சின்ன வரலாறு 9: மெழுகுவத்தியின் கதை!

தலை எழுத்து, டெஸ்டினி,ஃபேட்...எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல பொருட்களுக்கும் உண்டு என்று நான் உணர்ந்த ஒரு நேரம்.....இருட்டை விலக்கி ஒளி கொடுப்பதாக இருந்த ஒரு அத்யாவஸ்யப் பொருளான மெழுகுவத்தி, தற்போது பிறந்த நாள் கொண்டாட்டம், பிரத்தியேக இரவுச் சாப்பாட்டு நேரம், மேரி மாதாவுக்குக் காணிக்கை என்று சில பல விசேஷ தருணங்களுக்கென்றும் ஆகிவிட்டது.

அப்படி இருந்தாலும் , மெழுகுவத்திகள் தங்கள் மிதமான ஒளியைக் கொடுப்பதில் குறை வைப்பதே இல்லை. இப்படி ஒரு நேர்மை குறையாத பொருளின் சரித்திரம் தெரிந்துகொள்வோமா? சுமார் ஐயாயிரம் வருடமாக உபயோகத்தில் உள்ள இதன் முதல் கண்டுபிடிப்பைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை.ஆனால் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் என்று சில குறிப்புக்கள் சொல்கின்றன.

அப்போது தயாரிக்கப்பட்ட மெழுகுவத்தி, நாணல் புற்களை முறுக்கி இளக்கப்பட்ட மிருகக்கொழுப்பில் தோய்த்தெடுத்து எரியச்செய்யப்பட்டது.இந்த தீ பந்தம் ஆர்டமிஸ் எனும் எகிப்திய கடவுளுக்காக, பிரதி மாதம் ஆறாம் தேதி ( சந்திர மாதம்) களில் எரியவிடுவார்களாம். ரோமானியர்கள், 500 பிசி காலகட்டத்தில் தற்போது உபயோகத்தில் இருப்பது போன்ற மெழுகுவத்திகளை மிருகக்கொழுப்பில் இருந்து தயாரிக்கத்தொடங்கினார்களாம்.

எண்ணெய் விளக்குகள் அன்றாட உபயோகத்திலும், இந்த மெழுகுவத்திகள் முக்கிய தினங்களுக்கான உபயோகத்திற்கும் தவிர மிகவும் அதிகமாக பரிசாகவும் கொடுக்கப்பட்டதாம். சீனாவின் க்வின் வம்சத்தின் சமாதி 1990 ல் கண்டுபிடிக்கப்பட்டபோது, திமிங்கலங்களின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்ட மெழுகுவத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வம்சம் நாடாண்டது 221-206 பிசி வரை. சீன மொழியில் தற்போது மெழுகுவத்தி என்ற வார்த்தைக்கு அந்தக்காலத்தில் அர்த்தம் ஜோதி. ஆக மெழுகுவத்தி தன்மைக்கு ஏற்றார்போல் நிஜமாகவே உருகி ஒரு பொழுதுபோக்குப் பொருளாக மாறிவிட்டது.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று நம்மிடம் கதை கூடச் சொல்ல வாய்ப்பு உண்டு. சீனாவின் ஹான் வம்சம் வந்தபோது, மெழுகுவத்திகள் தேன் மெழுகில் செய்யத்தொடங்கியதற்கான சான்றுகள் நிறைய கண்டறியப்பட்டிருக்கின்றன.இவை சுருட்டி அமைக்கப்பட்ட காகித ரோல்களில் அடைக்கப்பட்டு அரிசியைப் பதப்படுத்தி செய்த திரிகளைக்கொண்டு ஆனவையே. நம் நாட்டுக் கதைக்கு வருவோம்.

ஏலக்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவத்திகளை நாம் ஆலயங்களில் உபயோகிக்கத்தொடங்கினோம். சரி... நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு மெழுகுவத்திகள் தயாரிப்பில் இருக்க, அலெஸ்கா மாகாணத்தில் யுலேகான் எனும் வகை மீனைக் காய வைத்து அப்படியே எரித்து உபயோகப்படுத்தினார்களாம்.

நாம் இப்போதும் ஒரு குச்சியில் காய்ந்த மீனைச் சொருகி அதை மெழுகுவத்தியாக உபயோகிக்கலாம். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிக வருடங்களுக்குப்பின் தான் மெழுகுவத்தி உபயோகத்திற்கு வந்தது. காரணம் இவர்கள் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு விளக்குகள் உபயோகித்தார்கள். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் இந்த எண்ணெய் கிடைப்பது அரிதான போது, மெழுகுவத்திகள் இங்கேயும் எரியத்தொடங்கின .

ஐரோப்பிய நாடுகளின் முதல் மெழுகுவத்தி, ஆடு அல்லது மாட்டின் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. ஆனால் இதன் உற்பத்தி உண்டாக்கும் துர்நாற்றம் ,அரசாங்க ஆணையில் போய் முடிந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் , மாற்றாக தேனீக்களின் மெழுகு கொண்டு தயாரிக்கத்தொடங்கின.

ஆனால் இந்த மெழுகின் அதீத விலையால், மெழுகுவத்திகள் தேவாலயங்களில் மற்றும் அரசவை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டன இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மெழுகுவத்திகள் தலைகாட்டத் தொடங்கின. லண்டனில் 1330 ல் தொடங்கப்பட்ட தி வாக்ஸ் சாண்ட்லர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மெழுகுவத்திகள் தெரு விளக்காக உபயோகிக்கப்பட்டன.

மிருகக்கொழுப்பில் தொடங்கப்பட்டு, தேனீ மெழுகிற்கு மாறி, பின் ஆடு மாடு கொழுப்பிற்கு தாவி பின் ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் தலைகளில் இருந்து எடுக்கப்படும் ஸ்பெர்மாசெடி எனும் எண்ணெய்க்குச் சென்று ,பின் ரேப்சீடிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்குத் தாவி,ஒரு வழியாக 19ம் நூற்றாண்டை அடைந்தபோது மெழுகுவத்திகள் தயாரிப்பு ஒரு மாபெரும் உற்பத்தித் தொழிலாக உருவெடுத்தன.

1848 ல் முதன் முதலாக ஜேம்ஸ் எங்க் என்பவரால் பாரஃபின் வாக்ஸிலிருந்து மெழுகுவத்திகள் தயாரிப்பு தொடங்கியது. பாரஃபின் மிகவும் சுலபமாக எரிந்து போகக்கூடிய தன்மை கொண்டது. ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைத்த அடுத்த நிமிடமே அது எரிந்து முடித்துவிட்டால் அதன் உபயோகம் மட்டுப்படும். அந்த நூற்றாண்டின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிரின் பாரஃபின்னுடன் கலக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட்டது.

தற்போது தயாரிக்கப்படும் மெழுகுவத்திகளில் 60% பாரஃபின் , 35% ஸ்டியரிக் அமிலம் , 5% தேனீ மெழுகு சேர்க்கப்பட்டு செய்யப்படுகின்றன. 1990 க்குப்பிறகு இதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தேவை என்று பார்க்கப்பட்ட மெழுகுவத்தி இப்போது அலங்காரப்பொருளாக பார்க்கப்படுவதால் நிறம் ,மணம் ,குணம் என்று பல்வேறு மாறுதல்கள் தலைக்காட்டத்தொடங்கின.ஃப்ளாக் சீட், சோயா,பனை எண்ணெய் எனப் பலவிதமான கலவைகள் தேவைக்குத் தகுந்தபடி தற்போது சேர்க்கப்படுகின்றன.

மெழுகுவத்திகள் ஒரு காலத்தில் நேரம் கணிப்பதற்கு. உபயோகப்படுத்தப்பட்டன. மெழுகுவத்திகளின் உடலில் ஆங்காங்கே வெட்டுக்கள் போடப்படும். அவை நேரக்கணக்கைச் சொல்லும். ஆக தன் நேரத்தையும் நம் நேரத்தையும் கணக்கில் வைத்திருக்கும் மெழுகுவத்திகள் இன்னும் நிறையக் காலம் எரிந்தபடி இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x