Last Updated : 01 May, 2018 10:03 AM

 

Published : 01 May 2018 10:03 AM
Last Updated : 01 May 2018 10:03 AM

காற்றில் கரையாத நினைவுகள் 10: வெள்ளித்திரையில் காண்க!

எங்கள் சின்ன வயதில் திரையரங்குகளே தேவலோகங்கள். வீட்டின் இருப்பிடத்தைச் சொல்லவும், பேருந்து நிறுத்தத்தை அடையாளப்படுத்தவும் அவையே முகவரியின் முன்மொழிவுகள். வீட்டுக்கு அருகில் இருக்கும் திரையரங்கு, கனவுலகத்துக்கான ஒற்றையடிப் பாதை!

அன்று திரைப்படம் என்பது அனைவருக்கும் கனவாக இருந்தது. கவலைகளை மறக்கும் மருந்தாக ஒற்றடம் கொடுத்தது. திரை குறித்த எதுவும் குறைவாகத் தெரிந்திருந்ததால், திகட்டாமல் தித்தித்தது. மாதம் ஒருமுறை வானொலியில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு திரைப்படம் ஒன்று ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பாகும். அதைக் கேட்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. ‘நேயர் விருப்பம்’, ‘நீங்கள் கேட்டவை’ என்று திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது, ‘யாருடைய விருப்பமான பாடல் வரப் போகிறது...’ என்று வீட்டுக்குள் போட்டியே நிகழும்.

அந்தக் காலத்தில் மாவட்டத் தலை நகரத்தில் இருக்கும் திரையரங்குகளில் மட்டுமே புதுப்படங்கள் வெளியாகும். பெரும்பாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் அதிகப் படங்கள் திரைக்கு ஓடிவரும். குடும்பத் தலைவர்கள் மாதம் ஒரு திரைப்படம் என்று நிதிநிலை அறிக்கையை நேர்செய்வார்கள். பெற்றோர் பார்த்துவிட்டு வந்து குழந்தைகள் பார்க்க அனுமதி அளிப்பது வழக்கம். இப்படி அறிவிக்கப்படாத இரண்டாம் தணிக்கை அப்போது இல்லங்களிலே இருந்தது.

குலுக்கல் சந்தோஷம்

ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வந்தால், அடுத்த படம் வரும் வரை அதையே பேசிக் களித்திருப்போம். திரைப்படத்தின் அத்தனை வசனங்களும் அத்துபடியாகியிருக்கும். அதுவும் நகரத்தில் பலமுறை ஓடி நசுங்கிக் கசங்கிய பிறகே, வீட்டுக்கு அருகில் இருக்கும் திரையரங்குக்கு வந்து சேரும். அப்போது குளிர்சாதன வசதியெல்லாம் அரிதினும் அரிது. பக்கவாட்டில் வரிசையாக இருக்கும் மின்விசிறிகள் மட்டுமே. பெண்களுக்கென்று தனி வரிசை. தனியே இருக்கைகள். மாடி உள்ள திரையரங்குகளில் இருவரும் அமர அனுமதி உண்டு. முதலில் செல்பவர்கள் மின்விசிறிக்கு அருகே இருக்கையைப் பிடிக்க முந்தியடிப்பர்.

மறுநாள் திரைப்படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைத்ததும் முதல் நாள் இரவே மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும். நண்பர்களிடம் எல்லாம் அந்த நல்ல செய்தி பரிமாறப்படும். இருப்பதிலேயே நல்ல உடையை எடுத்து அணிந்துகொண்டு எல்லோரும் தயாராகிவிடுவார்கள். முன்கூட்டியே சென்று வரிசையில் நின்று சினிமா டிக்கெட்டை வாங்கியதும் குலுக்கலில் பணம் விழுந்த குதூகலம்.

பிஹாரில் வெள்ளம்

திரையரங்கில் சிறிது நேரம் கழித்து பாட்டு போடுவார்கள். அந்தப் பாட்டும் வேறொரு படத்தின் பாட்டு. மணி ஒலித்தால் படம் போடப் போகிறார்கள் என்று பொருள். பிறகு ‘நல்வரவு’ என்று போட்டதும் அரங்கில் ஆரவாரம் ஏற்படும். அடுத்து விளம்பரச் செய்திகள். ‘பலவிதப் பற்பொடிகள் உள்ளன. சில வழவழப்பானவை, சில சொரசொரப்பானவை’ என்று ஒருவர் பேசத் தொடங்குவார். எத்தனை முறை அதைப் பார்த்திருப்போம்!

செய்திச்சுருளைப் போடும்போதே கை தட்டல் ஒலிக்கும். ‘செய்திச்சுருள்’ என்றால் அரதப் பழசாக இருக்கும். ‘பிஹாரில் வெள்ளம்’ ஏற்பட்ட செய்தியை அங்கு வறட்சி நிலவும்போது போட்டுக் காண்பிப்பார்கள். இந்தியா கிரிக்கெட்டில் எப்போதோ ஜெயித்ததைப் பார்த்து, எதுவென்று தெரியாமல் கை தட்டுவார்கள். மூலப்படத்தைப் போடும்போது எத்தனை ரீல்கள் என உற்றுப் பார்ப்போம். அதிக ரீல்கள் என்றால் அதிக மகிழ்ச்சி, அதிக நேரம் படம் பார்ப்போமே என்றுதான். இடைவேளையில் முறுக்குத் தட்டுடன் விற்பனையாளர்கள் படையெடுப்பார்கள். இஞ்சிமொரப்பாவைப் பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்டால் மருந்துக்கடைகளை எல்லாம் மூடிவிடலாம்போலத் தோன்றும். தண்ணீர் தாகம் எடுத்தாலும் அடக்கிக் கொள்வோம். திரையரங்கின் மூலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குவளைகள் நடுத்தர வீட்டு நாயை ஞாபகப்படுத்தும். திரும்பி வரும்போது தியேட்டர் வாசலில் விற்கும் ‘பாட்டுப் புத்தகம் ஒன்றை 10 பைசாவுக்கு வாங்கி வருவோம். அடுத்த நாள் அதில் உள்ள பாடல்களை நாங்கள் பாட, வீட்டில் உள்ளோருக்கு விதவிதமாகத் தலைவலி எடுக்கும்.

‘மாடர்ன் தியேட்டர்ஸ்’

எந்த ஊருக்குச் சென்றாலும் திரைப்படம் பார்ப்பதே பொழுதுபோக்கு. கிராமத் திரையரங்குகளில் மணல் தரையில் பல படங்களைப் பார்த்திருக்கிறோம். அங்கெல்லாம் ஜெனரேட்டர் இருக்காது. மின்தடை ஏற்பட்டால் எப்போது மீண்டும் மின்சாரம்வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்போதெல்லாம் தியேட்டர்களில் நான்கு இடைவேளைகள் வரும். பார்த்த படத்தையே மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அலுப்பு ஏற்படாத அனுபவம்.

சேலம் நகரத்தில் வரிசையாகத் திரையரங்குகள். கிராமத்து மக்கள் எதற்காக நகரத்துக்கு வந்தாலும் படம் பார்க்காமல் திரும்புவதில்லை. ஆங்கிலத் திரைப்படம் மட்டுமே காண்பிக்கும் ‘சென்ட்ரல்’, ‘நியூ இம்பீரியல்’ என்ற திரையரங்கங்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் ‘உமா தியேட்டர்’ இருந்தது. அதில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் நாங்கள் பார்த்தோம். அன்று திரையரங்கில் டிக்கெட் கொடுப்பவரை தெரிந்து வைத்திருப்பது பெருஞ்செல்வாக்கு. திரையரங்க உரிமையாளர்களே அன்று ஊரில் பெரிய பணக்காரர்களாக அறியப்பட்டார்கள்.

படப்பிடிப்புகளின் தலைநகராக சேலம் ஒருகாலத்தில் இருந்தது. ஏற்காடு அடிவாரத்தில் இருக்கும் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ அன்று பிரபலமான திரைப்பட நிறுவனம். இன்று ‘உமா தியேட்டர்’ இல்லை. நாங்கள் சின்ன வயதில் படம் பார்த்த பல அரங்குகள் இன்று வணிக அங்காடிகளாகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்குள் இருந்த பல திரைக்கதைகள் கிழித்தெறியப்பட்டதைப் போல மனமெங்கும் வருத்தங்கள். அடிவாரத்தைக் கடக்கும்போது ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ பற்றிய பேச்சு வந்து மனத்தை அமுக்கும். எத்தனை மகத்தான காவியங்களை அந்த நிறுவனம் படைத்தது என்று எண்ணிப் பார்க்கத் தோன்றும்.

இன்று எண்ணற்ற படப்பிடிப்பு நிறுவனங்கள் அடுக்ககங்களாகவும், கல்லூரிகளாகவும் மாறி காணாமல் போய்விட்டன.

‘பொதிகை’யில் சினிமா

திரைப்படம் உச்சத்தில் இருக்கும்போது தொலைக்காட்சி மூலை முடுக்குகளுக்கும் வந்து சேர்ந்தது. வட இந்தியாவில் இருக்கும்போது நாங்கள் சித்திரமாலாவில் வரும் ஒரே ஒரு தமிழ்ப் பாட்டுக்காக ஒற்றைக் காலில் தவம் இருப்போம். சமயத்தில் தமிழ்ப் பாட்டு வராமல் ஏமாற்றமடைவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும். அப்போது வருகிற விருந்தினரை எந்த வீடும் ரசித்ததில்லை. வீட்டை வெளியில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து தொலைக்காட்சியில் படம் பார்த்தவர்கள்கூட உண்டு. கிரிக்கெட் நடக்கும்போது சிலர் தொலைக்காட்சிப் பெட்டியை தங்கள் வீட்டு வாசலில் அனைவரின் வசதிக் காக வைப்பார்கள். அன்று தொலைக்காட்சி என்பதே அபூர்வம்.

கல்லூரிக்குச் சென்றபோது வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கத்தில் வாரந்தோறும் திரைப்படங்கள். நாயகிகள் அழுகிற காட்சி வருகிறபோது ஒளிக்கற்றையின் நடுவே கைகளை நீட்டி குறும்புக்கார மாணவர்கள் கண்களைத் துடைத்து விடுவது உண்டு. இன்று திரைப்படம் என்பது முன்கூட்டியே முடிவு செய்யும் நிகழ்வு.

எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் யாருக்கும் இல்லை. எந்த அரங்கம் என்பதை மட்டுமல்ல, எந்த இருக்கை என்பதையும் இருக்கிற இடத்திலேயே தீர்மானித்து பதிவுசெய்யும் வசதி. இடம் பிடிக்கிற முஸ்தீபோ, முன்கூட்டியே செல்கிற மும்முரமோ சிறிதும் இல்லை. ஆனாலும் படம் தொடங்கிய பிறகு குழல்விளக்குடன் இருக்கையை அடையாளம் காணும் கூட்டம் குறைந்தபாடில்லை.

ஒரே நாளில் பட்டிதொட்டிகளிலும் புதுப்படங்கள் வெளியாகிவிடுகின்றன. 3 நாட்கள் ஓடினால் போதும் முழுத்தொகையும் வந்துவிடும் என்கிற நிலையில் ‘வெற்றிகரமான 50-வது நாள்’ என்ற சுவரொட்டியை எங்கேயும் காண முடிவதில்லை. அன்று மொத்தப் பட வசனமும் நினைவில் இருக்கும். இன்று சென்ற முறை பார்த்த படமே மறந்து போகுமளவு தொலைக்காட்சியிலும், அரங்குகளிலும் படங்களின் வரிசை.

வணிக வளாகங்களில் வெளிநாட்டு வரலாற்றுச் சின்னங்களைப்போல சுத்தமான அரங்குகள். பளபளக்கும் கழிப்பறைகள். நடுங்கும் குளிர்சாதன வசதி. பணத்துக்கேற்ப நொறுக்குத்தீனி. இத்தனையும் இருந்தாலும் அன்று காத்திருந்து படங்களைப் பார்த்திருந்த மகிழ்ச்சி எங்கள் தலைமுறைக்கு எப்போதும் இருக்காது. கொசுக்களை மீறி, மூட்டைப்பூச்சிகளைத் தாண்டி சண்டைக் காட்சிகளுக்கு கை தட்டிய காலம் இனி ஒருபோதும் வரவே வராது.

- நினைவுகள் படரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x