Published : 22 Feb 2024 07:29 PM
Last Updated : 22 Feb 2024 07:29 PM

செங்கோட்டை முழக்கங்கள் 64 - ‘புதிய இந்தியாவை கட்டமைப்போம்’ | 2010

இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். எந்த நிலையிலும் நிதானம் தவறாத ஒரு நல்ல மனிதர். டாக்டர் மன்மோகன் சிங். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். இது பற்றி விவரங்களை அறிந்து கொள்ள இதோ... 2010 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டை தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை:

அன்பார்ந்த குடிமக்களே, நமது சுதந்திரத்தின் 63-வது ஆண்டில் உங்களை வாழ்த்துகிறேன். 1947 ஆகஸ்ட் 15 அன்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு மூவண்ணக் கொடியை இந்த சரித்திரப் புகழ்மிக்க செங்கோட்டையில் ஏற்றிய போது, தன்னை இந்தியாவின் முதல் சேவகன் என்று அழைத்துக் கொண்டார். இதே போன்ற சேவை உணர்வுடன் இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, மேக வெடிப்பு காரணமாக லடாக் பகுதியில் விலையுயர்ந்த பல உயிர்களை இழந்தோம். மறைந்து போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான பிறருக்கு எனது நெஞ்சார்ந்த அனுதாபங்கள். இந்தத் துயரமான நேரத்தில், இந்த நாடு மொத்தமும் லடாக் மக்களுடன் சேர்ந்து நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக இயன்றது அனைத்தையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி கூறுகிறேன்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று உங்களுடன் உரையாடிய போது, நமது நாடு பல இன்னல்களை சந்தித்துக் கொண்டு இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலவியது. உலகப் பொருளாதார மந்தநிலையாலும் நாம் பாதிக்கப்பட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை நாம் நன்கு பழக்கப்படுத்திக் கொண்டோம் என்பதில் மகிழ்கிறேன். பல பிரச்சினைகள் இருந்த போதிலும், உலகின் பல நாடுகளை விட நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக இருந்து வருகிறது. இது நமது பொருளாதார வலிமையைக் காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சியில் இந்த வலிமை தென்படுகிறது. இந்தியா இன்று உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக நிற்கிறது. உலகின் மிகப் பெரும் ஜனநாயகமாக நாம், உலகின் பல நாடுகளுக்கு, அவர்கள் பின்பற்ற உதாரணமாகத் திகழ்கிறோம். தமது குரலைப் பிறர் கேட்கும்படி செய்ய நமது குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. உலகம் முழுவதும் நமது நாடு மிகவும் மரியாதைடன் பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்குகளில் நமது கருத்துகள் மிகுந்த கவனம் பெறுகின்றன.

நீங்கள் அனைவருமே இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்து உள்ளீர்கள். நமது தொழிலாளர்கள், கைவினைஞர்கள், விவசாயிகளின் கடின உழைப்பே இந்தியாவை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நமது நாட்டு எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யும் துணிச்சல் மிக்க நமது வீரர்களுக்கு சிறப்பு வணக்கம். நமது நாட்டுக்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகங்கள் அனைவருக்கும் எனது அஞ்சலி.

நாம் ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்கிறோம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருக்கும். எல்லாக் குடிமக்களும் அமைதியான நல்ல சூழ்நிலையில் கண்ணியமிக்க பெருமைமிகு வாழ்க்கை வாழ முடிகிற வளமை மிக்க இந்தியாவாக இருக்கும். ஜனநாயக வழியில் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கிற இந்தியாவாக இருக்கும். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுகிற இந்தியாவாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில், இந்த திசையில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கிராம பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு நபரும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மூலம், 100 நாள் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் பெறுகிறார்.

இந்த ஆண்டு நமது அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வோர் இந்தியரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலனைப் பெறுவார்கள், அதற்கு பங்களிக்கவும் செய்வார்கள். நமது வளர்ச்சியில் பெண்களின் சமபங்கை உறுதி செய்ய, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மகளிர் ஒதுக்கீட்டுக்கான முயற்சிகள் எடுத்துள்ளோம். இதுவும் அன்றி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பல வலிமைகள் நமக்கு இருந்தாலும், சில தீவிரமான சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். நமது சமுதாயம் அவ்வப்போது மதம், மாநிலம், சாதி, மொழி ரீதியாகப் பிரிவுபடுகிறது. சகிப்புத்தன்மையும் பெருந்தன்மையும் நமது மரபின் அங்கங்களாகும். இந்த மரபுகளை நாம் வலுப்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நாம் போதே, நமது சமுதாயம் மேலும் அறிவார்ந்ததாய் மாற வேண்டும். நமது பார்வை நவீனமாய் முன்னோக்கி இருக்க வேண்டும்.

நமது விவசாயிகளின் நல்வாழ்வில், வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் நமது அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. 2004-ல் நாம் அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதற்கு முந்திய 7 - 8 ஆண்டுகளில் இந்திய வேளாண்மையின் நிலைமை அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதை உணர்ந்தோம். விவசாயத்தில் பொது முதலீட்டை இந்த அரசு அதிகரித்தது. மாவட்ட அளவில் வேளாண் திட்டமிடலை நாம் ஊக்குவித்தோம். கடந்த சில ஆண்டுகளில் நமது விவசாய வளர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் நமது இலக்கில் இருந்து நாம் இன்னும் நீண்ட தூரத்தில் இருக்கிறோம். விவசாய வளர்ச்சி விகிதத்தை 4 சதவீதமாக உயர்த்துவதற்கு நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

நமது குடிமகன் யாரும் பசியால் வாடாமல் இருக்க நமது அரசு உணவு பாதுகாப்பு வளையத்தை விரும்புகிறது. இதற்கு, விவசாய உற்பத்தி அதிகரிக்க வேண்டும்; விவசாய உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். பசுமைப் புரட்சிக்கு பிறகு (இன்று வரை) விவசாயத்தில் நமது நாடு பெரிய அளவில் தொழில்நுட்ப சாதனை எதையும் காணவில்லை. வறண்ட நில வேளாண்மைத் தேவைகளை எதிர்கொள்ள நமக்குத் தொழில்நுட்பம் தேவை. கூடுதலாக, பருவநிலை மாற்றம் நிலத்தடி நீர் குறைவு மண்வளம் குன்றியது போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ள நமது வேளாண்மை, திறமை பெற்றதாய் இருக்க வேண்டும்.

இது விஷயத்தில் நார்மன் போர்லாக் ஒரு சிறப்பு இடம் வகிக்கிறார். சுமார் 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பு இவர், மேலும் உற்பத்தித் திறன் கொண்ட புதிய கோதுமை விதைகளைக் கண்டுபிடித்தார். இந்திரா காந்தியின் தலைமையின் கீழ், இந்த விதைகளை ஏற்று இந்தியா பசுமைப் புரட்சியை சாதித்தது. தெற்கு ஆசிய போர்லாக் நிறுவனம், இந்தியாவில் நிறுவப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய விவசாயிகளுக்கும் தெற்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளுக்கும் இந்த நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட விதைகள் பெற வசதி செய்யும்.

உற்பத்தியைப் பெருக்க ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகளுக்கு லாபம் தரும் விலைகளை வழங்க அக்கறை எடுத்துள்ளோம். கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2003-04 இல் குவின்டாலுக்கு ரூ.630 ஆக இருந்த, கோதுமைக்கான ஆதரவு விலை, கடந்த ஆண்டு ரூ.1100 ஆக உயர்த்தப்பட்டது. நெல்லுக்கான விலை குவின்டலுக்கு ரூ.550-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்தது. ஆனால், விவசாயிகளுக்கு உயர் விலை வழங்குவதன் விளைவாக, வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

கடந்த சில மாதங்களாக உயர் பணவீக்கம் உங்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவேன். உணவுப் பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது ஏழைகள் தான் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். விலைவாசி உயர்வால் ஏழைகளுக்கு ஏற்படும் சுமையை இயன்ற அளவு குறைக்க முயற்சித்து வருகிறோம். உயர் பணம் வீக்கத்துக்கான காரணத்துக்குள் நான் இன்று நுழைய விரும்பவில்லை.

எந்தத் தனிநபராக, நிறுவனமாக, அரசாங்கமாகவே இருந்தாலும், நீண்ட காலத்துக்கு தனது வருமானத்தை விட அதிகமாய் செலவு செய்ய முடியாது. நமது பொருளாதாரத்தை அறிவார்ந்த முறையில் நிர்வகிப்பது நமது பொறுப்பு. அதிக கடன் காரணமாக எதிர்காலத்தில் நமது வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படக் கூடாது. நமது பெட்ரோலியத் தேவைகளில் 80 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். 2004-க்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை விட மிகக் குறைவாகவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரித்தல் அவசியமாகி இருந்தது. இதை நாம் செய்திருக்கா விட்டால், மாநிலங்களின் சுமையை பட்ஜெட்டால் ஏற்றிருக்க முடியாது; ஏழைகளுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்புத் திட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும்.

சுதந்திரத்துக்குப் பிறகு 63 ஆண்டுகளில், வளர்ச்சிப் பாதையில் இந்தியா நீண்ட தூரம் வந்துள்ளது. ஆனாலும் நாம் சேர வேண்டிய இடம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. நமது மக்கள் தொகையில் பெரும்பாலோர் இன்னமும், வறுமை, பசி மற்றும் நோயால் அவதியுற்று வருகின்றனர். 2004 இல் நமது அரசு வந்த போது, முன்னோக்கிய சமூக திட்டத்தின் கீழ், ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க நாம் தீர்மானித்துள்ளோம். வளர்ச்சியின் பலன்கள் சாமான்யனை அடைய வேண்டும் என்று விரும்புகிறோம். சமுதாயத்தின் சமூக பொருளாதார நலிவடைந்த பிரிவினரின் நலனை இலக்காய்க் கொண்ட திட்டங்களைத் தொடங்கியுள்ளோம்.

ஏழைகள், எஸ்சி எஸ்டி பிரிவினர், சிறுபான்மையர், மகளிர் மற்றும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனுக்கு நாம் உறுதி கொண்டுள்ளோம். இந்த இலக்குகளை எட்ட நமக்கு இன்று புதிதாக திட்டம் தேவையில்லை. ஆனாலும், ஊழலைக் குறைத்து, பொது நிதியின் தவறான உபயோகத்தை தடுத்து, ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை நாம் மேலும் திறம்பட செயல்படுத்த வேண்டும். மாநில அரசுகள் பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் குடிமைச் சமுதாய குழுக்களுடன் சேர்ந்து இதனை நாம் சாதிக்க வேண்டும்.

சமய சார்பின்மை நம் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று. எல்லா மதங்களையும் சமமாக மதித்து நடப்பது நமது நாட்டின், நமது சமுதாயத்தின் மரபாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியா, புதிய மதங்களை வரவேற்று வருகிறது. அவை எல்லாம் இங்கே செழிப்பாக வளர்ந்துள்ளன. சமய சார்பின்மை என்பது நமது சாசன கடப்பாடுமாகும். சமூக அமைதி மற்றும் ஒற்றுமையைப் பராமரிக்க இந்த அரசு உறுதி கொண்டுள்ளது. சிறுபான்மையரைப் பாதுகாத்தல், அவர்களின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றுதல் - நமது கடமையாகக் கருதுகிறோம்.

இதனால்தான், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளின் நலனுக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல சிறப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான நிதியுதவி ஆகியன இதில் அடங்கும். இந்த திட்டங்கள் நல்ல விளைவுகளைத் தந்துள்ளன. இந்தப் பணியை நாம் இன்னும் தீவிரமாக முன் கொண்டு செல்வோம்.

கடந்த ஆறு ஆண்டுகளாக கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு நாம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டத்தில் இந்த இரண்டு துறைகளில் மேம்பாடு மிக முக்கிய அடிப்படைக் கூறாகும். வரும் ஆண்டுகளில் இன்னும் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக அவசியமாகும். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த இரண்டு துறைகளும் அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் பெறவில்லை.

பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்த நிலைமையை மாற்ற முயற்சித்தோம். இன்று அநேகமாய் நமது நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வியை அணுக முடியும். இன்று நாம் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எல்லா மட்டங்களிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

சமுதாயத்தின் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும், ஏழை அல்லது பணக்காரராக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும், தனது முழுத் திறனையும் பயன்படுத்த, நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகத் திகழத் தேவையான கல்வி வழங்கப்பட வேண்டும். மாநில அரசுகளுடன் சேர்ந்து, நேர்மை மற்றும் கடின உழைப்புடன், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் கடந்த ஆறு ஆண்டுகளில் நாம் தொடங்கிய புதிய திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்துவோம். இந்த இரண்டு துறைகளில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த, உயர் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இரண்டு தனித்தனி கவுன்சில்களை நியமிக்க விரைவில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வருவோம்.

ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நல்ல சுகாதார சேவைகள், அவசியமானவை; ஆனால், நமது மக்களின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்ய இவை போதுமானதாக இல்லை. நம்ம கிராமங்கள் நகரங்கள் மாநகரங்களில் தூய்மையும் நல்ல சுகாதாரமும் தேவை. இல்லையேல், பல நோய்களை வராமல் தடுப்பது கடினமாகப் போய்விடும். இந்தத் தொழில் நமது நாடு பின்தங்கி இருக்கிறது என்பது உண்மை. தம்மைச் சுற்றி சுத்தம், சுகாதாரத்தைப் பராமரித்தல் எல்லா குடிமக்களின் ஆதாரப் பொறுப்பு என்று கருதுகிறேன்.

தூய்மை இந்தியா என்கிற திட்டத்தின் கீழ், பள்ளிகளில் தொடக்கத்தில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் கற்றுத் தரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த திட்டத்தை வெற்றியடைய செய்ய உதவுமாறு மாநில அரசுகள் பஞ்சாயத்து நிறுவனங்கள் குடிமைச் சமுதாயக் குழுக்கள் மற்றும் சாமானிய குடிமக்களை வேண்டுகிறேன்.

நம் ஒவ்வொருவரின் தேவைக்கும் பூமியில் தேவையான அளவுக்கு உள்ளது; ஆனால் ஒவ்வொருவரின் ஆசைக்கும் அல்ல - என்று மகாத்மா காந்தி கூறினார். பூமியின் வளங்களை சாமர்த்தியமின்றி பயன்படுத்தியதால், பருவநிலை மாற்ற பிரச்சினை விளைந்துள்ளது. நமது இயற்கை வளங்களை அறிவுடன் அக்கறையுடன் பயன்படுத்த வேண்டும். நமது வனங்கள் ஆறுகள் மற்றும் மலைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் - எதிர்வரும் சந்தேகங்களுக்கான நமது பொறுப்பாகும். பொருளாதாரம் வளர்ச்சிக்கான நமது திட்டங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்த நமது அரசு முயற்சிக்கும்.

நமது கட்டுமானத்தில் பெரிய குறைபாடு உள்ளது. இது நமது பொருளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் விநியோகிப்பதில் பற்றாக்குறை உள்ளது. நமது சாலைகள் துறைமுகங்கள் விமான நிலையங்கள் ஆகியன உலகத் தரத்தில் இல்லை. நல்ல தரமான கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவையான வளங்களை, அரசாங்கத்தால் மட்டுமே கூட்டி விட முடியாது. ஆகவே நமது முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்த முயல்கிறோம்.

கட்டுமானத்தை மேம்படுத்த 2004-க்குப் பிறகு நாம் எடுத்த நடவடிக்கைகள், பயன் தரத் தொடங்கியுள்ளன. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, டில்லியில் புதிய விமான நிலைய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தேன். மிகக் குறுகிய சாதனை காலத்தில் முடிக்கப்பட்ட அபாரமான முனையம் இது. நமது கட்டுமானங்களை மேம்படுத்த இத்தகைய முயற்சிகளை நாம் தொடர்ந்து எடுப்போம்.

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து சமீப காலத்தில் அதிகம் பேசப்படுகிறது. இந்தியாவில் ஏதேனும் ஒரு பாகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால், அமைதி ஒற்றுமை பாதிக்கப்பட்டால், சாமானியன் தான் மோசமாக பாதிக்கப்படுகிறான். ஆகையால், குடிமக்கள் அமைதியாக வாழ, அமைதியான இணக்கமான சூழலில் தனது வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுதல் அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். நக்சலிசம் - நமது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு தீவிரமான சவால். கடந்த சில மாதங்களில் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கு பலியான பாதுகாப்பு படைகளின் பணியாளர்கள் அலுவலர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

முன்னரே சொன்னேன், இப்போதும் சொல்கிறேன் - நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதில் தனது பொறுப்பை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும். வன்முறையில் ஈடுபடுபவரை நாம் உறுதியுடன் கையாளுவோம். நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மாநில அரசுகளுக்கு நம்மால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்குவோம்.

வன்முறையை கைவிட்டு அரசுடன் பேசி சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த எம்மோடு கரம் சேர்க்குமாறு நக்சல்களை மீண்டும் ஒருமுறை வேண்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தினேன். இந்தச் சந்திப்பில் எட்டப்பட்ட கருத்தொற்றுமையை முழுமையாக நிறைவேற்றுவோம். இந்த சந்திப்பில் கூறப்பட்ட ஓர் அம்சத்தை இங்கே மீண்டும் கூற விரும்புகிறேன். நக்சலைட் சவாலை சந்திக்க மத்திய அரசு மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றுவது அவசியம்.

நான் முன்னரே சொன்னது போல, நக்சலைட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளன. இவற்றில் பல பகுதிகளில் நமது ஆதிவாசி சகோதர சகோதரிகளே மிகுந்து உள்ளனர். இந்த பகுதிகளின் புறக்கணிப்பை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நோக்கத்துக்காக ஓர் அகன்ற திட்டத்தை வடிவமைக்கும்படி திட்டக் குழுவை கேட்டு இருக்கிறேன். இது முழுமையாக நிறைவேற்றப்படும். வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் நமது ஆதிவாசி சகோதர சகோதரிகள் கலக்க வேண்டும் என்பதே நமது லட்சியம்.

பல நூற்றாண்டுகளாக இவர்கள் வனப் பொருட்களை சார்ந்தே இருக்கிறார்கள். வாழ்வாதாரத்துக்கான புதிய மூலங்களை உருவாக்காமல் இதனை மாற்ற முடியாது. இவர்களிடம் இருந்து பெறப்படும் நிலத்துக்கு போதுமான இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, வளர்ச்சி திட்டங்களில் நமது ஆதிவாசி சகோதர சகோதரிகளுக்கும் பங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக வேறு ஒன்றும் சொல்ல விரும்புகிறேன். நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு இயந்திரம் மக்களின் உணர்வு அறிந்து நடந்து கொள்வது மிகவும் அவசியம். அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது; நமது ஆதிவாசி சகோதர சகோதரிகளின் சிறப்பு தேவைகளை உணர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். இந்தத் தேவைகளுக்கு மாநில அரசுகள் போதுமான கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன்.

வடகிழக்கு மாநிலங்கள் மீது நமக்கு சிறப்பான பொறுப்பு இருக்கிறது. இந்த பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொள்ள முயற்சிக்கிறோம். சமீப மாதங்களாக நமது நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் விரும்பத் தகாத நிகழ்வுகளைப் பார்க்கிறோம். மாநிலம் அல்லது பழங்குடி என்கிற பெயரில் நடைபெறும் சச்சரவுகள் நமக்கு துன்பத்தையே தரும் என்பதை வடகிழக்கு பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சிக்கலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள, உரையாடலும் பேச்சு வார்த்தையுமே ஒரே வழி. மத்திய அரசைப் பொருத்த மட்டில், பிரச்சினைகளை தீர்த்து வளர்ச்சிக்கு வழிகாட்டும் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க எப்போதுமே தயாராக உள்ளோம்.

ஜம்மு காஷ்மீரில், வன்முறையைக் கைவிடும் எந்த நபர் அல்லது குழுவோடும் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம். இந்த நிபந்தனைக்குள், அரசு முறைமையில் சாமானியனின் பங்களிப்பை அதிகரிக்கும், அவர்களின் நல்வாழ்வை விரிவுபடுத்தும் பேச்சுகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் வன்முறையில் சில இளைஞர்கள் உயிரிழந்தனர். இதற்காக நாம் ஆழமாக வருத்தப்படுகிறோம். வன்முறைக் காலங்கள் முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய வன்முறையால் யாருக்கும் பயன் இல்லை. நாட்டின் எந்தப் பகுதியின் அல்லது எந்தக் குழுவின் கோரிக்கையையும் தீர்த்து வைக்க தேவையான பெருந்தன்மை மற்றும் இணக்கமான அணுகுமுறை இந்திய ஜனநாயகத்துக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளுடன் ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டேன். இந்த நடவடிக்கையை இன்னும் முன்கொண்டு செல்ல முயற்சிப்போம். நமது நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு குடிமகன்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் - நாட்டின் நன்மைக்கும், அவர்களின் நன்மைக்கும் ஜனநாயக வழிமுறையை ஏற்றுக்கொண்டு நம்மோடு கைகோர்க்க வேண்டும்.

நமது அண்டை நாடுகளில் வளமை அமைதி மற்றும் ஒற்றுமையை நாம் விரும்புகிறோம். நமது அண்டை நாடுகளுடன் உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். பாகிஸ்தானைப் பொரு த்த வரை, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு அவர்களின் எல்லையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் அரசுடனான எல்லாப் பேச்சுகளிலும் இதை நாம் வலியுறுத்தி வருகிறோம். இது செய்யப்படாத வரை, பாகிஸ்தானோடு நம்முடைய பேச்சுவார்த்தை வெகு தூரம் முன்னேற முடியாது.

நமது புகழ் மிக்க கலாச்சார மரபுகளைப் பற்றியும் சற்றே கூற விரும்புகிறேன். சமீப நாட்களில் நமது அரசியல் பேச்சுகளில் கடினமான விரும்பத்தகாத சொற்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது நம்முடைய பெருந்தன்மை பணிவு மற்றும் சகிப்புத்தன்மை மரபுகளுக்கு எதிரானது. ஜனநாயகத்தில், ஒரு முன்னேறும் சமுதாயத்தில், குறை கூறுதலுக்கு இடம் இருக்கிறது. ஆனாலும், அது கண்ணியமற்றதாய் இருக்கக் கூடாது. முக்கியமான பிரச்சினைகளின் மீது, விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் வழியே, எதிர்த்தரப்பு கருத்துகளையும் பரிசீலிக்கும் திறன் நமக்கு வேண்டும். இதனை எல்லா அரசியல் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவங்க இருக்கின்றன. இது இந்தியாவுக்கு குறிப்பாக டெல்லிக்கு ஒரு பெருமைமிகு தருணமாகும். இந்த விளையாட்டுப் போட்டியை தேசிய திருவிழாவாக கருதி இதன் வெற்றிக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா, நம்பிக்கையுடன் விரைந்து முன்னேறுகிறது என்பதை உலகத்துக்குத் தெரிவிக்கும் குறியீடாக காமன்வெல்த் போட்டியின் வெற்றி அமையும்.

நமது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நமது கனவுகள் நினைவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது தேசத்தின் கொடி மிக உயரப் பறப்பதை உறுதி செய்ய இந்த சுதந்திர தின நாளில் தீர்மானித்துக் கொள்வோம். வளர்ச்சி மற்றும் வளமையின் பாதையில் நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம். அன்பான குழந்தைகளே என்னோடு சேர்ந்து சொல்லுங்கள்: ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x