Published : 08 Dec 2023 04:52 PM
Last Updated : 08 Dec 2023 04:52 PM

செங்கோட்டை முழக்கங்கள் 49 - ‘ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு!’ | 1995

இந்தியப் பொருளாதாரம் நான்காண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய திவால் நிலையில் இருந்தது. இதனை மீட்டெடுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்ட பிரதமர் நரசிம்மராவ், அநேகமாக தமது முயற்சியில் பெருத்த வெற்றியும் பெற்றார்.

1995 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரசிம்ம ராவ் ஆற்றிய சுதந்திர தின உரையின் முழு விவரம் இதோ: இன்று, 49-வது சுதந்திர தின நன்னாளில் உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களுடைய ஒத்துழைப்பு ஆதரவு மற்றும் மனவுறுதியால் இந்தியா இன்று உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஐந்தாவது முறையாக இன்று உங்களுடன் மீண்டும் உரையாடுகிறேன். எங்களது செயல்பாடுகள் பற்றியும் எதிர்காலம் பற்றி எனது சிந்தனையில் உள்ள தோற்றம் அல்லது குறியீடு பற்றியும் உங்களுக்குக் கூற வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

1991-இல் எனது அரசு பதவி ஏற்ற போது நாட்டில் நிலவிய சூழல்களை நீங்கள் அறிவீர்கள். நம் நாடு, பிளவின் விளிம்பில், பொருளாதார நெருக்கடியில், திவால் நிலைக்கு அருகில் இருந்தது. உங்களுடைய உதவி, ஒத்துழைப்பு, ஆசிகளால் இந்த அரசு, வளர்ச்சியை சாதிக்க முடிந்தது. எல்லாவற்றையும் விட, இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார நலம் மீது உலகம் இன்று நம்பிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. இது நம் அனைவரின் சாதனை. இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். இதை சாதிக்க நாம் மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் தொல்லைகள் இடையூறுகள் இருந்தன. இவை நம் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டன. இதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள். இந்த சூழல் பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரியும். (எனவே) விவரமாக சொல்லத் தேவையில்லை. இன்றுள்ள மிகப் பெரிய பிரச்சினை, உண்மையில் பிரச்சினையே அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை உள்ளது. நேற்றுகூட, வெளியில் இருந்து நமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பயங்கரவாத வன்முறையின் வெளிப்பாட்டைப் பார்த்தோம். பயங்கரவாதிகள் எந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொண்டு பீதியை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி. இது ஒரு பிரச்சினையே அல்ல. உண்மை என்னவென்றால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை நம்மிடம் இருந்து யாராலும் பறித்து விட முடியாது. இப்போதுள்ள நிலை என்னவெனில், சில பகுதிகளை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இதன் மீது சொந்தம் கொண்டாட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. அண்டை நாடாக இருப்பதால் ஆயுதங்களுடன் சிலரை அனுப்பவும், தொல்லைகளை உண்டாக்க நிதியுதவி செய்யவும் பாகிஸ்தானுக்கு சாத்தியம் ஆகிறது. இதை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்று எவராலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உலகம் முழுதும் அறியும் - இதன் பின்னால் உள்ள நோக்கம்: காஷ்மீர்.

ஜம்மு காஷ்மீரில் எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் (உலக நாடுகள்) உணர்ந்து இருக்கிறார்கள். இந்த அசம்பாவிதங்களுக்கு பாகிஸ்தானே முழுப் பொறுப்பு. தொடக்கத்தில் இருந்தே நாம் அமர்ந்து பேசி உறவை மேம்படுத்தத் தயாராக உள்ளோம். ஆனால் இந்த குறும்புகளை, (தகாத) செயல்களை (பாகிஸ்தான்) உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நாம் அமர்ந்து பேசலாம். (நமக்குள்) இருக்கும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் பதவியேற்ற உடன் அன்றைய தினமே, சிம்லா உடன்படிக்கை அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து (கடிதம்) எழுதினேன். இதற்கு முன்னதாக நாம், non-papers எனப்படும் ஆறு யோசனைகளைத் தந்தோம். இவை 'non-papers'என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் நாம் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி இருக்கிறோம். ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வ / அதிகாரம் கொண்ட மதிப்பு இல்லை. (it has no authoritative value) ஆனால் இதில் தரப்பட்டுள்ளவை பரிசீலனைக்கு உகந்தவை, நம் இருவருக்கும் இடையே பேசித் தீர்க்கப் பட வேண்டியவை. (இதற்கு) அவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் பதிலுக்கு அவர்கள், சற்றும் சாத்தியம் அற்ற நிபந்தனைகளுடன் இரண்டு papers தந்தனர். பேச்சுவார்த்தை நடத்த முன் நிபந்தனை எதுவும் கூடாது என்று சொன்னோம். ஆனால் நம்மால் என்றும் ஏற்றுக் கொள்ளவே முடியாத நிபந்தனைகளை முன் வைத்தனர். இவற்றைப் பரிசீலிப்பதை விடுங்கள்; இவற்றை நாம் தொட்டுக் கூட பார்க்க மாட்டோம். (let alone consider them, we cannot even touch them) இதற்கு என்ன பொருள்? அவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. சாத்தியமற்ற நிபந்தனைகளின் மூலம் அவர்களது விருப்பமின்மையைத் தெரியப்படுத்தினர். இன்றைக்கு இதுதான் நிலைமை.

பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அவர்கள் நிறுத்தினால், வெவ்வேறு சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும் பழக்கத்தைக் கைவிட்டால், நாம் மேற்கொண்டு செல்லலாம்; பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்த நடவடிக்கைகளின் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் விளையவில்லை. (உலக அரங்கில்) யாரும் பாகிஸ்தான் குரலை, பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மற்ற அண்டை நாடுகளுடன், உலகின் பிற நாடுகளுடன் நமக்கு உள்ளதைப் போலவே மிக நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். (ஆனால்) இது அவர்களின் கையில் தான் உள்ளது. இது பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். பல ஆண்டுகளாக அவர்கள் முயன்று விட்டார்கள். விளைவுகளையும் பார்த்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை; தூரமும் அதிகரித்து விட்டது. இந்த தூரத்தைக் கடந்தாக வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க இது ஒன்றே வழி. இதற்கு நாம் எப்போதுமே தயாராக உள்ளோம். நாம் கேட்பதெல்லாம் இந்திய எதிர்ப்பு செயல்களைக் கைவிடுங்கள்.

சமீபகாலமாக, நாட்டில் பல புதிய பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. ஒரு காலம் இருந்தது - உடனடி பலன் பெறுவதற்காக, அரசியல் லாபம் பெற வேண்டி, மதத்தின் பெயரால், சாதியின் அடிப்படையில் மக்கள் உந்தப்பட்டனர்; உணர்ச்சிகள் தூண்டப்பட்டன. மிகப்பெரிய அளவில் நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நாம் தொடங்கிய பிறகு இந்தப் போக்கு குறைந்து போகும் என்று நினைத்தேன். ஓரளவுக்கு இது நடந்தது. ஆனால் மதத்தின் பெயரால் சுரண்ட புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாய்த் தோன்றுகிறது. அரசியலுடன் மதத்தை கலக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. இந்த வழியில்,
அரசியல் மதம் இரண்டுமே அர்த்தமற்றுப் போகும்; நோக்கம் இழந்து போகும்.
(both religion and politics will lose their meaning and also their purpose.) இது எல்லாம் நாம் மீண்டும் ஒருமுறை சிந்திப்போம். மீண்டும் மதத்துக்கே (மத பிரச்சினைக்கே) திரும்பிச் செல்வதை விட, உணவு பற்றிய அடிப்படைப் பிரச்சினையை, தேசியப் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்வோம்; தீர்வுகளுக்கு முயற்சிப்போம். மதம் அரசியல் இரண்டுக்கும் அதற்கான (தனி) இடம் இருக்கிறது.

இப்போது தனிநபர் சட்டம் (Personal Law) பற்றிப் பேசப் படுகிறது. இது ஒரு பிரச்சினையாக எழுப்பப்படுகிறது. சாசனம் வடிவமைக்கப்பட்ட சமயத்தில் நிர்ணய சபையில் இது எழுப்பப்பட்டது. அப்போது சாசனத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களே கூறினார் - இது ஓர் உரிமையாக இருக்க விரும்புகிறோம். இதற்கு பொது சிவில் சட்டம் உருவாக்குவோம் என்று அர்த்தம் ஆகாது. (in the Constituent Assembly, Dr Ambedkar who has the credit of drafting our Constitution himself said that we only want to have the right. It does not mean that we will make a uniform code.) அப்படி இருக்க முடியாது. பல பிரச்சினைகள் உள்ளன. நமது சாசனத்தை நாம் மதிக்கவில்லை என்றும் பொருளாகாது. நாம் எப்போதும் நமது சாசனத்தின் படியே நடக்கிறோம். ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள், கடந்த 40 ஆண்டுகளில் இன்னல்களை தீர்ப்பதில் நாம் கொண்ட அனுபவம் - நமது முன்னுரிமைகளை எவ்வாறு தீர்மானிக்கப் போகிறோம்? நாம் வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் என்ன? இவையே மிக முக்கியமானவை என்று உணர்த்துகிறது.

எந்த பிரச்சினையின் மீது நாம் கவனம் செலுத்தப் போகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். நம் முன்னால் ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனியே சட்டங்கள் இருக்கின்றன என்று நான் புரிந்து கொள்கிறேன். இந்து, முஸ்லிம், பார்சி, கிறிஸ்தவர் இவர்கள் அனைவருக்கும் (தனித்தனியே) பொது சட்டம் இருக்கிறது. (Hindus, Muslims, Parsis and Christians, all have one uniform law for all of them) எல்லாருக்கும் பொதுவான ஒரு சட்டம் என்பது எளிதானது அல்ல. 'Uniform' என்றால் - (பள்ளி) சீருடை போன்று எல்லாரையும் ஒரே மாதிரியாக உடையணியச் செய்வது.

ஒரு சமூகத்தின் தனிநபர் சட்டத்தை மற்றவர் மீது, (அல்லது மற்றவர் சட்டத்தை இவர் மீது) திணிப்பதாகி விடும். அல்லது இரண்டையுமே நீக்கி விடலாம்; மூன்றாவதாக ஒன்றைக் கொண்டு வந்து செயல்படுத்தலாம். அப்போதுதான் அது சீரானதாக ('யூனிபார்மாக') இருக்கும். வேறு எப்படியும் இருக்க முடியாது. இன்று - இது மிகக் கடினமானது; இதற்குள் நாம் நுழையக் கூடாது. (Uniform means dressing all in one way like in a uniform. It will mean imposing the Personal Law of one community on the other or the vice versa. Or remove both of them and bring a third one and implement, then only it can be made uniform otherwise it can not be. I want to say that today it is very difficult and we should not get into this.) இதனைப் பிறகு பார்த்துக் கொள்வோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று இன்றைக்கே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக இது இன்றைக்கே மேற்கொள்ள வேண்டிய பணி அல்ல. மேலும் இந்த சட்டத்தால் பாதிக்கப் படக் கூடிய ஒரு சமுதாயத்தின் விருப்பத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்த முடியாது. (We can not introduce a law against the wishes of a community which will be affected by this law.) தொன்மையான ஒரு வாக்கியம்: "Yadyapi Suddham Lokaviruddham; Na Acharniyam
Na Karaniyam."

அதாவது, என்னதான் நல்ல செயலாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் அதைச் செய்யக் கூடாது; செயல் படுத்தக் கூடாது. இது காலம் காலமாக சொல்லப் பட்டு வரும் பழைய வாக்கியம். எனவே இப்போதைக்கு நாம் இந்தப் பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன். இன்று மட்டுமல்ல, அனேகமாக இன்னும் நீண்ட காலத்துக்கு இதனை செயல்படுத்த முடியும் என்று நான் கருதவில்லை. இன்று இது குறித்துப் பேசுவது கூட சரி இல்லை என்று கருதுகிறேன்.

காஷ்மீருக்கு அப்பால், வடகிழக்கு போன்ற பகுதிகளில் அமைதி கொண்டு வர முயற்சிக்கிறோம். இந்தப் பகுதி மக்கள் வன்முறையால் மனம் நொந்து இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் பிரதான நீரோட்டத்தில் கலக்க வேண்டும். விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன்.

இனி, நீங்கள் அனைவரும் அறிந்துள்ள பொருளாதார நிலைமை குறித்து சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். சில சமயம், மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆகவே சரியான கோணத்தில் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

1991இல் நாம் திவால் நிலை விளிம்பில் இருந்தோம். 1991இல் நாடு முற்றிலும் திவாலாகிவிடும் என்று கருதினோம். மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூட நம்மிடம் பணம் இல்லை. அந்நிய செலாவணி கையிருப்பு அதல பாதாளத்தில் இருந்தது. மிகுந்த சிரமத்துடன் நிலைமையை சமாளித்தோம். கடந்த ஓராண்டுகளில் நாம் செய்தவை - ஒரு மிகப்பெரிய சாதனை என்று கூறலாம். 1991இல் கையிருப்பு ரூ.2,500 கோடி கூட இல்லை. இன்று நம்மிடம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.60,000 கோடி இருக்கிறது. நமக்கு எது வேண்டும் என்றாலும் சிரமப்படாமல் இறக்குமதி செய்ய இது வழி வகுத்துள்ளது.

தொழில்துறையை அனுமதிகள் மற்றும் உரிமங்களின் பிடியில் இருந்து விடுவித்துள்ளோம். (We have freed the industry from the shackes of permits and licenses) கட்டுப்பாடுகள் - வளர்ச்சிக்கு உதவாது. பெரிய அளவில் உரிம அனுமதி ராஜ்ஜியம் (Licence Permit Raj) முடிவுக்கு வந்துவிட்டது. இன்று, பாதுகாப்பு துறைத் தொழில்கள் தவிர்த்து ஏனைய துறைகளில் உரிமங்களும் கட்டுப்பாடுகளும் இல்லை. இவை சுமுகமாக செயல்படுகின்றன. இவையெல்லாம் மூன்றாண்டுகளுக்குள் நடந்தவை. முதல் ஆண்டில், யாரும் இங்கே வர விரும்பவில்லை; அவர்களை அழைக்கும் நிலையிலும் நாம் இல்லை. தொடக்கத்தில், நமது கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளோம் என்பதைச் சொல்லி ஏற்றுக் கொள்ளும்படி செய்ய ஏராளமான முயற்சிகள் எடுத்தோம்.

ஆனால் நம்மை யாரும் நம்பவில்லை. இன்று நாம் காணும் இந்த முன்னேற்றம், இரண்டரை ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் நாம் சாதித்தது; அதற்கு மேல் இல்லை. (In the first year, no one wanted to come here nor we were in a position to invite them. Initially we had to make a lot of efforts to convince people that we have changed our policies but nobody believed us. All this progress which we witness today has actually been made in the past two and a half years to three years only, not more than that.) உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சில தரவுகள் (data) கூறுகிறேன். ரூ.68,000 கோடி இங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.25,000 கோடி பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. மொத்தத்தில், தொழிற்துறையில் நம் நாடு வெகு விரைந்த வளர்ச்சி கண்டு வருகிறது.

இனி, இந்த நிதியைக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்கிறேன். வறுமை ஒழிப்புக்கு, ஏழைகளின் நலனுக்கு, பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். 1991இல் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பணம் இல்லை. 1992இல் சற்று முன்னேற்றம் கண்டோம். அந்த ஆண்டு, ஏழைகளின் மேம்பாட்டுக்காகச் சில திட்டங்கள் அறிவித்தோம். 1992 ஜனவரி 1 - ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் புத்துயிர் ஊட்டப்பட்ட பொது விநியோகத் திட்டம் தொடங்கினோம். அதாவது, குன்றுப் பகுதிகள், பாலைநிலம், பழங்குடிப் பகுதிகளில் உள்ள 1,700-1,800 வட்டங்களில் கவனம் வைத்தோம். இந்தப் பகுதிகளில் உணவு மற்றும் பிற அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம் தயாரித்தோம்.

அதேசமயம், 1992 ஜனவரி 1 அன்று, வேறொரு திட்டத்தையும் தொடங்கினோம். அது கிராமத்துக் கைவினைஞர்களுக்கானது. தச்சர், பொற்கொல்லர்.. ஆகியோர் இதில் அடங்குவர். இவர்கள் பயன்படுத்தும் கருவிகள் மிகப் பழையது; காலத்துக்கு ஒவ்வாதது. அதன் விளைவாய், உற்பத்தித் திறன் குறைந்து கொண்டே வந்தது; இதனால் பிறருடன் போட்டி போட இயலவில்லை. ஆகையால் இவர்களின் கருவிகளை மேம்படுத்தி, நவீன கருவிகள் வழங்கும் மிகப் பெரும் திட்டத்தைத் தொடங்கினோம். சுமார் இரண்டரை லட்சம் கைவினைஞர்கள் நவீன கருவிகள் பெற்றார்கள். நடப்பு ஆண்டில் இன்னும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்கப்படும். அதாவது நான்கரை லட்சம் கிராம கைவினைஞர்கள், நவீன கருவிகளுடன் செயல்படுவார்கள். இவர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இவர்கள் தமது கிராமங்களை விட்டு நகரங்களுக்கு, மாநகரங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. நம்முடைய மதிப்பீட்டின் படி, உற்பத்தித் திறனும் வருவாயும் அதிகரித்து இருப்பதால், நகரங்களுக்குச் சென்ற பலர் திரும்பி வந்து கிராமங்களில் தங்கத் தொடங்கி விட்டார்கள்.

1993இல் மகளிருக்கு அதிகாரம் வழங்கும் 'மஹிளா சம்ரிதி யோஜனா' தொடங்கினோம். இத்துடன், பணி உறுதி திட்டம் (Employment Assurance Scheme) ஆரம்பித்தோம். வறட்சிக் காலத்தில் அல்லது விவசாய வேலை இல்லாத பருவத்தில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்க இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் சுமுகமாக நடைபெற்று வருகிறது. எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கே எல்லாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மிக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 1993இல் இளைஞர்களுக்கான பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் (Prime Minister's Rozgar Yojana) உள்ளிட்ட சில திட்டங்களைத் தொடங்கினோம். 1993இல் இது மாநகரங்களில் மட்டுமே செயல்பட்டது. 1994இல் இது கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. என்ன அர்த்தம்? ஏழைகளுக்காகச் செலவு செய்ய நம்மிடம் நிதிவளம் அதிகரித்தது.

1992இல் இருந்து, வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஏராளமாக முதலீடு செய்கிறோம். நம் எல்லா திட்டங்களும் வறுமை ஒழிப்பதற்கு தான். செல்வந்தர்களுக்கு நாம் நிதி ஏதும் தரவில்லை. மாறாக, அவர்களைத் தொழிற்துறையில் முதலீடு செய்ய வைத்தோம். இவர்களின் முதலீட்டால் நாம் என்னவெல்லாம் பணம் சேமித்தோமோ அதை ஏழைகளின் நலனுக்காக செலவிடுகிறோம். இந்த ஆண்டும் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இதனால் ஏற்பட்ட தரமான மாற்றத்தை நீங்கள் காண முடியும். இதில் முதன்மையானது - நாடெங்கும் தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம். இது சில மாநிலங்களில் ஏற்கனவே இருந்தது. வேறு சில மாநிலங்களில் தொடங்கப்பட்டது; ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு நின்று போனது. நம்மிடம் தற்போது மூன்று லட்சம் டன் உணவுப் பொருள் இருப்பில் உள்ள போது, இதிலிருந்து எடுத்து, நம் குழந்தைகளுக்கு சத்தான உணவு தரலாமே என்று முயற்சிக்கிறோம். இந்தத் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த நான்கு திட்டங்களும் இன்று தொடங்கப்படுகின்றன. ஒன்று மட்டும் சொல்கிறேன் - இந்த திட்டங்கள் அனைத்தும் முதன் முறையாக மத்திய அரசால் தொடங்கப் படுகின்றன.

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்காக மற்றொரு திட்டம். குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர் இறந்து விட்டால், இயற்கை மரணமாக இருந்தால் ரூ 5,000, விபத்தில் மரணம் என்றால் ரூ 10,000 அந்த குடும்பத்துக்கு உதவியாக வழங்கப்படும். இந்தத் திட்டமும் முதன் முறையாக மத்திய அரசால் மேற்கொள்ளப் படுகிறது.

இதே போன்று, மகப்பேறு நலத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது. மகப்பேறு காலத்தில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத, தேவையான மருந்துகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாத ஏழைப் பெண்களுக்கு உதவுகிற திட்டம். இது அவர்களுக்கு நிதியுதவி தருவதற்கான திட்டம்.

இவையெல்லாம் விட மிக முக்கியமான முற்றிலும் புதிய திட்டம் இருக்கிறது. ஏழையிலும் ஏழைக்கும் காப்பீடு திட்டம் - கேள்விப்பட்டது உண்டா? அநேகமாக இல்லை. ஏனெனில், காப்பீடு என்பது செல்வந்தர்களுக்கு மட்டும்தான் என்றே நாம் அறிவோம். அவர்களால் மட்டுமே அதற்காகச் செலவிட முடியும். ஏழைகள் என்றுமே காப்பீடுக்குள் வந்தது இல்லை. ஏழைகளிலும் ஏழைக்கும் காப்பீடு தரும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்குகிறது. இரண்டு வித காப்பீடுகளை யோசித்துள்ளோம். ஒன்று - செல்வந்தர்களுக்கானது. மற்றது - ஏழைகளுக்கானது. இவர்கள் காப்பீடுக்கான தவணைத் தொகையில் பாதியை செலுத்தினால் போதுமானது.

மீதியை மத்திய / மாநில அரசாங்கம் செலுத்தும். மக்கள் எல்லாரையும் காப்பீட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம்தான் என்று நமது அனுபவம் காட்டுகிறது. இதை நாம் குழு காப்பீடு (group insurance) முறையின் கீழ் கொண்டு வருகிறோம். இது தனி நபருக்கு ஆனதல்ல. ஒட்டுமொத்த கிராமம் அல்லது வட்டம் - ஒரே அலகு (unit) என்று கொள்ளப் படும். அந்த கிராமத்தில் ஒரு சிலர் மட்டுமே காப்பீடு எடுத்திருந்தாலும் கூட, இதன் பலன், அங்குள்ள ஒவ்வொருவரும் ரூ.5,000 காப்பீடு பெறுவார்கள். காப்பீட்டு முறையில் இது ஒரு புதிய கருத்துரு (concept).ஏழையிலும் ஏழையைச் சென்று சேர்வதற்கு இந்த அரசு முயற்சித்து வருவதை நீங்கள் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

குழந்தை தொழிலாளர் முறையை நீக்க ஒரு திட்டம் தொடங்கியுள்ளோம். அதிலும் குறிப்பாக சுகாதாரக் கேடு மற்றும் ஆபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க திட்டம் தொடங்கப்படுகிறது. ஓராண்டாக இந்தத் திட்டத்தின் மீது பணி நடைபெற்று வருகிறது; நல்லபடியாக வளர்ந்து வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழைகளின் முன்னேற்றத்துக்காக இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொண்டே வருகிறோம். எதுவுமே ஒரே ஒரு முறை திட்டம் அல்ல. (it is not one time prigramme) 1991, 1992 அல்லது இந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் எதுவும் ஒரு ஆண்டுகளில் நிறுத்தப்படமாட்டாது. எந்த ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டாலும், சந்தேகம் வேண்டாம், அது ஒரு - தொடர் திட்டம். தகுந்த பரிசீலனைக்குப் பிறகே திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. 1991இல் தொடங்க முடியாத திட்டங்கள் 1992இலும் 1992இல் தொடங்க முடியாத திட்டங்கள் 1993இலும் தொடங்கப்பட்டன.

அதாவது தேவையான வளங்கள் (resources) கிடைப்பதை உறுதி செய்த பிறகே இந்தத் திட்டங்களை மேற்கொள்கிறோம். இதனால் தான் இன்று தொடங்கப்படும் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் (உடனடியாக) நாடு முழுவதும் செயல்படுத்தப் படவில்லை. அதற்குப் போதுமான வளங்கள் (தற்போது) நம்மிடம் இல்லை. ஆனால் மூன்று ஆண்டுகளில் (முழுமையாக) நிறைவேற்ற விரும்புகிறோம். மிக வறியவர்கள் வாழும் சுமார் 250 வட்டங்களை இவ்வாண்டு தேர்வு செய்துள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுதையும் கொண்டுவர விரும்புகிறோம். இறைவன் விரும்பினால், இரண்டு ஆண்டுகள் அல்ல; ஓராண்டிலேயே இந்த திட்டத்தை நாம் முழுதாய் நிறைவேற்றுவோம்.

1996 இறுதிக்குள் இதை நிறைவேற்ற வாய்ப்புகள் உள்ளன. நான் சொல்லவருவது - எல்லாவற்றையும் கணக்கிட்டு, எந்த அளவு இயலுமோ அந்த அளவுக்கே தொடங்குகிறோம். மிகுந்த ஆலோசனைக்குப் பிறகே தொடங்குகிறோம்; செயல்படுத்துகிறோம். இதனால் மக்கள் பெறும் பலன்கள் வெளிப்படையானவை. நீங்கள் அனைவரும் அதைக்காண முடியும்.

நமது பொருளாதார செயல் முறையில் ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னதாக நாம் அரிசி நெல் அல்லது கோதுமை - ஏற்றுமதி செய்து வந்தோம். ஆனால் இப்போது நாம் கச்சா பொருட்கள் (raw materials) ஏற்றுமதி செய்வதில்லை. இப்போது, இங்கே தயாரிக்கப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அல்லது பிற உற்பத்திப் பொருள்களே ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கிறது. உலக சந்தையில் இது வெற்றிகரமாகப் போட்டியிடுகிறது. நமது ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. ஓராண்டுக்கு உள்ளாக நமது ஏற்றுமதி, 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில் இது சாதாரணமல்ல; மிகப் பெரிய சாதனை. நாட்டில் செய்யப்படும் முதலீடுகளுக்கு எதிராக சிலர் குரல் எழுப்புகிறார்கள். இது பெரிய மனிதர்களுக்காக செய்யப்படுவது என்கிறார்கள். இந்தக் கூற்று முழுக்கவும் தவறானது. எரிசக்தி பெட்ரோலியம் இரும்பு உள்ளிட்ட கட்டுமான துறைகளில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் 80 சதவீத முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கிற, நுகர்வோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதை இலக்காய்க் கொண்டது அல்ல. இதை நிரூபிப்பதற்கு நம்மிடம் தரவுகள் உள்ளன.

பால் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் நாம் உள்ளோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்கா மட்டும்தான் நம்மை விட அதிகமாய் பால் உற்பத்தி செய்கிறது. கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளில் பால் உற்பத்தியில் நம் நாடு இந்த அளவு முன்னேற்றம் காணும் என்பதை கற்பனை செய்து பார்க்கவும் கடினமாக இருக்கிறது. ஆனால் இது உண்மையில் நடந்துள்ளது.

வேளாண் பொருட்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான உரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். ஆனாலும் சில புகார்கள் உள்ளன; மேலும் (பல) கோரிக்கைகள் உள்ளன. உரத்தின் விலை அதிகரித்துள்ளது. இது குறித்து பரிசீலித்து வருகிறோம். விவசாயிகளுடன் பேச்சு நடத்தி மேலும் எதுவும் தேவை என்றால் அதையும் தருவோம். கவலை வேண்டாம். நம் விவசாயிகள், அதிசயத்தக்க சாதனை புரிந்துள்ளார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். இதேபோன்று அவர்கள் தொடர்ந்து முன்னேறட்டும்; தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று உறுதி கூறுகிறேன்.

இதுவரை இந்த ஆண்டுக்காக நான் முன்வைத்த திட்டங்கள் எல்லாம் சமூக முன்னேற்றத்தை விரைவுபடுத்துதலை, சமூக நலனை முன்னெடுத்தலை இலக்காய்க் கொண்டவை. இவற்றை நாம் மிகப் பெரிய அளவில் முன்னெடுக்கிறோம். கிராம சமூக சேவைகள் தொடர்பான இந்த திட்டங்களில் ரூ.18,000 கோடி செலவு செய்கிறோம். 1991இல் இது ரூ.8,000 கோடியாக இருந்தது. ஆகவே நாம் செலவு செய்யும் இந்தப் பணம் - ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும்; வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தும்; அவர்களின் வாழ்க்கை தரும் உயர புதிய வாய்ப்புகளை உண்டாக்கும். இது மிகப் பெரிய திட்டம். இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டோம். வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது. இது ஒரு தொடர் வினை. தொழில் மயமாக்கல் மூலம் கிடைக்கும் முதலீட்டால் சேமிக்கப்படும் தொகை முழுவதும் வறுமை ஒழிப்புக்கான இந்த மிகப் பெரிய திட்டத்தில் செலவு செய்யப்படும். இதை நாம், நாடு தழுவிய திட்டமாகச் செய்கிறோம். உண்மையில் இன்னும் மேன்மேலும் அதிகம் செலவு செய்ய இருக்கிறோம். இதுதான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிற கொள்கை.

இது தொடர்பாக தவறான புரிதலை உண்டாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நான் சொன்னது மட்டும் தான் உள்ளது; வேறு திட்டங்கள் இல்லை என்று யாரும் கருதி விட வேண்டாம்.

நமது எல்லையில் நாம் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். ஆராய்ச்சி திட்டங்களில் நாம் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து மேற்கொள்வோம். உயர்கல்வி வழங்கும் ஐஐடி போன்ற நிறுவனங்கள் அறிஞர்களை வழங்குகின்றன. இவர்களுக்கு, உலகம் முழுதிலும், வேலை கிடைப்பதில் சிரமம் இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நபர்கள் வருகிறார்கள். இந்த கல்வி நிறுவனங்களை நவீனமயம் ஆக்கி மேலும் வலுவாக்க விரும்புகிறோம். இதை நாம் செய்கிறோம். ஆனால் இதைவிடவும் பெரிய திட்டம் பள்ளிகளுக்காக வைத்துள்ளோம். கல்வி அறிவின்மை இந்த நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இந்த நூற்றாண்டு இறுதி உலகில் மிக அதிக எண்ணிக்கையில் கல்வி அறிவு பெறாதவர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம் என்று சொல்லப் படுகிறது. இப்படி ஒரு காட்சியை எண்ணிப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. ஆகவே நாங்கள் தீர்மானித்து உள்ளோம்; நான் பிரகடனமாக அறிவிக்கிறேன் - GDPயில் ஆறு சதவீதம், கல்விக்காக செலவிடப் படும்.

உண்மையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் கொள்கை அறிக்கையில் இது கூறப் பட்டுள்ளது. இன்று நாம் இதைச் செய்ய முடியும். கல்வியைப் பெருக்க இத்தனை பெரிய பணியை மேற்கொள்ள ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கி நடத்துகிற (வலுவான) நிலைக்கு இன்று நாம் வந்துள்ளோம். இது செய்ய இந்த நாடு தீர்மானமாக உள்ளது.

வேலைவாய்ப்பு திட்டங்களில் சில கசிவுகள் இருக்கலாம். சில தவறுகள் நடந்துள்ளன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இந்தத் தவறுகளை சரி செய்ய முயற்சிப்போம். குறைகளைப் பெரிதாக்கி எதிர்மறை எண்ணத்தைப் பரவ விடுதல் நல்லதல்ல. இங்க திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் ஒத்துழைப்பது நமது கடமையாகும். இதில் உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்.

உலகில், வளரும் நாடுகள் பல உள்ளன. இவை எப்போதுமே வளரும் நாடுகளாகவே இருக்க விரும்பவில்லை. வளர்ந்த நாடு என்கிற நிலையை எட்ட இந்த நாடுகள் முயற்சிக்கின்றன. இது போன்ற நாடுகள் நமக்கு அருகில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ளன. இவற்றில் பல, அடுத்த 25 ஆண்டுகளில் வளரும் நாடு என்ற நிலையை எட்டுவதில் உறுதியாகச் செயல்படுகின்றன. நம்மிடம் வளங்களுக்கு குறைவில்லை; திறமையான மனித வளத்துக்கு குறைவில்லை; நம்முடைய மன உறுதிக்கும் குறைவில்லை. அதனால் தான், அடுத்த 25-30 ஆண்டுகளில் வளந்த நாடுகளுக்கு இணையான இடத்தை நாம் எட்டுவது சாத்தியம் என்று கருதுகிறேன். நம்மிடம் திறன் இருக்கிறது. ஆனால் ஒன்று - நம்முடைய திறமையை தேவையற்ற விஷயங்களில் வீணாக்கக் கூடாது; நம்முடைய இலக்கை ஏற்றுவதற்கே முழு மனதுடன் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். நம் இலக்கின் மீது நாம் குறியாக இருந்தால், வெற்றி நமதே.

நமது எதிர்கால குறித்து நான் இவ்வளவு தான் கூறுவேன். ஒரு காலத்தில் வலிமையாக பெரிதாக இருந்தது நம் நாடு. பிற நாடுகள் செய்ததைப் போன்று நாமும் மன உறுதியுடன் நமது திறன்களை ஒன்றாய் அர்ப்பணிக்க வேண்டும். அப்போது நம்மால் முன்னேற முடியும்; இலக்கை எட்ட முடியும். சாதனைகளுக்கு குறைவிருக்காது. எதிர்காலத்தைப் பார்க்கிறேன்; தெளிவாகப் பார்க்கிறேன். நான் சொல்வதோடு, உலகில் எந்த நாடும் உடன்படாமற் போகாது. ஒவ்வொரு நாளும் நம்முடைய திறனை அங்கீகரித்து இருக்கிறது. அவர்கள் நம் நாட்டுக்கு வந்து மேலும் மேலும் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் நம்மோடு கூட்டு வணிகம் செய்ய, எந்தப் பங்கையும் ஏற்றுக் கொள்ள, நமது நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான பங்களிப்பைத் தரத் தயாராக இருக்கிறார்கள்.

இன்று நம்மிடம் எதற்கும் பஞ்சமில்லை. நமக்குத் தேவை எல்லாம் - இலக்கை சாதிப்பதற்கான கவனம், மனவுறுதி. இந்த இரண்டும் இருந்தால் நமக்கு பிரச்சினையே இல்லை.

நான் குறிப்பிட்ட திட்டங்கள் இன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும். இந்திரா மகிளா யோஜனா திட்டத்தை, மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இந்த மாதம் (ஆகஸ்ட்) இருபதாம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தை அவர்தான் வடிவமைத்தார். இதற்காக நிறைய உழைத்தார். ஆகவே இந்தத் திட்டத்தை அவருடைய பிறந்த நாளில் தொடங்க விரும்புகிறோம். பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டத்துக்காக 200 வட்டங்கள் (blocks) அடையாளம் கண்டுள்ளோம். இது மிகவும் தீவிரமான திட்டம். இந்த மாதம் இருபதாம் தேதி தொடங்கும்.


இன்னும் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். இது (செங்கோட்டை) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கிருந்து தான் பகதூர் ஷா ஜாஃபர் ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் இணைந்து செயல்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் இங்கேதான் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையில் தான், வேறு எங்கு எந்த வழக்கிலும் வாதாடாத பண்டித ஜவஹர்லால் நேரு, நீதிமன்றத்தில் இவர்களைக் காப்பதற்காக முன் வந்தார் என்பதை நினைவு கூர்கிறேன். அந்த அளவு இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. விசாரணை நடந்த அந்த இடத்தை மியூசியம் ஆக மாற்ற இருக்கிறோம். இந்த தியாகிகளின் செயலை (இன்றுள்ள) மக்கள் கண்டு பாராட்ட ஏதுவாக இந்த அருங்காட்சியகம், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று செயல்படத் தொடங்கும்.

நமது விடுதலைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த அயல் மண்ணிலிருந்து உழைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் வி கே கிருஷ்ண மேனன் ஆகியோரின் பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறோம். அவரை நூற்றாண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம். இந்த பெரிய தலைவர்களின் நூற்றாண்டு கொண்டாடத் திட்டம் வைத்துள்ளோம். செங்கோட்டை கொத்தளத்துக்குள் வர இருக்கிற அருங்காட்சியகம், இந்த மாபெரும் தியாகிகளை துணிச்சல் மிக்க வீரர்களை வரும் தலைமுறைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இது எனது ஆழமான நம்பிக்கை. நமது கடந்த கால வரலாற்றின் நினைவாக இந்தத் திட்டம் இருக்கும்.

நமது அயல் உறவு கொள்கையை பற்றியும் சுருக்கமாகப் பேச விரும்புகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் நமது அயலுறவுக் கொள்கை வெற்றிகரமாக அமைந்தது. முன்னதாக பண்டித நேருவின் காலத்திலும் அது வெற்றி கரமாக இருந்தது. இதை முன்னெடுத்துச் செல்ல இந்திராஜி, ராஜீவ் ஜி ஊக்கம் அளித்தனர். இந்தப் போக்கை நாம் தக்க வைத்துள்ளோம். உண்மையில் 'பனிப்போர்' முடிவுக்கு வந்தபின் நமது கொள்கை ஓரடி முன்னேறி இருக்கிறது. பனிப்போர் முடிவால் உலகில் ஒரு புதிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் நட்புறவைப் பேணுதல், ஒரே சமயத்தில், எளிதாகவும் இருக்கிறது; அரிதாகவும் இருக்கிறது.

எல்லாரோடும் நாம் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம் நமது நாட்டு நலனையும் முழுவதுமாகப் பாதுகாக்க வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமில்லை. இது சற்றே கடினமான பணி. இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயலாற்றி வருகிறோம். நட்பு நாடுகளுடன் நமது உறவை மேலும் வலுப்படுத்தி உள்ளோம். நம்முடன் இணக்க உறவு இல்லாத நாடுகளோடும் உறவை மேம்படுத்தி இருக்கிறோம். நாம் எல்லா நாடுகளோடும் நல்ல உறவு வைத்துள்ளோம். அவர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது. காஷ்மீர் மற்றும் பிற பிரச்சினைகளை குறித்து அவர்களுக்கு விளக்கி உள்ளோம். நம்முடைய கொள்கைகளை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்.

இத்தகைய நல்ல உறவு நமக்கு அவர்களுடன் இருக்கிறது. இது நமக்கு நல்லது. தடைகள் இல்லாத நமது வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். வணிகத்தில் போட்டி இருக்கலாம். இன்று ஒவ்வொரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுடன் சிறிய கருத்து மோதல்கள் இருப்பதை கவனிக்க முடியும். இவை பதட்டத்தை உருவாக்கலாம்; ஆனால் உறவு முறிந்து விடாது. இதற்கு நாம் ஒரு வழி கண்டாக வேண்டும். பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். கத்தி முனையில் நடப்பது போன்றது இது. இதை நாம் செய்கிறோம்; தொடர்ந்து செய்வோம்.

நமது அயலுறவுக் கொள்கை நமது நாட்டு நலனை முழுமையாகப் பாதுகாக்கும் என்று உறுதி கூறுகிறேன். அதே சமயம் மாறி வரும் உலகச் சூழலில் நமது பங்கை நாம் முறையாகச் செய்வோம். சந்தேகம் வேண்டாம்.

அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். ஆனால், இந்த விவரங்களை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியமாகும். இவற்றை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். சில திட்டங்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் போது, முழுமையான தோற்றம் காணப்பட வேண்டும். ஆகவே கடந்த சில ஆண்டுகளில் என்ன சாதித்தோம் என்பதை எனது கடமை என்று கருதினேன். இதைச் செய்துள்ளேன். ஐந்தாவது முறையாக நான் உங்கள் முன் நிற்கிறேன். நான் சொன்ன உண்மைகளின் அடிப்படையில் இந்த அரசாங்கத்தை பற்றி நீங்களே சொந்தமாக மதிப்பீடு செய்து கொள்ளலாம். ஒட்டுமொத்த பார்வையில், இந்த அரசின் சாதனைகள் பாராட்டப்படும்; மக்கள் தங்கள் ஆசிரியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன். இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இனி உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன். கவனமாய் கேட்டதற்கு நன்றி. நமது தேசிய முழக்கத்தை எழுப்புவதில் என்னோடு இணைந்து கொள்ள உங்களை அழைக்கிறேன். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 48 - ‘நம்பிக்கையுடன் வாருங்கள்!’ | 1994

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x