Published : 01 Dec 2023 05:51 PM
Last Updated : 01 Dec 2023 05:51 PM

செங்கோட்டை முழக்கங்கள் 46 - ‘வளர்ச்சியே எங்கள் இலக்கு!’ | 1992

எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தொற்றுமை அடிப்படையிலேயே அரசின் கொள்கைகள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் பி. வி. நரசிம்மராவ் மிகுந்த கவனம் செலுத்தினார். தேவையற்ற போராட்டங்களில் உழைப்பை நேரத்தை செலவிடாமல் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடும்படி மக்களைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்திய நரசிம்ம ராவ், 1992 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை இதோ: 45 ஆவது சுதந்திர திருநாள் என்கிற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இது மிக முக்கியமான ஆண்டு; வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக மாபெரும் தியாகம் செய்த மக்களை வணங்குகிறோம். அவர்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம். அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களது ஆசைகளை இந்தத் தருணத்தில் வேண்டுகிறேன். நாம் மிகக் கடினமான மிக மகத்தான செயலை மேற்கொண்டுள்ளோம். நமது பயணம் மிக நீண்டது. ஆனால் (மேற்சொன்ன) தியாகிகள் தரும் உத்வேகத்தால் நமது பணி (ஓரளவு) எளிமையாகும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே ஓராண்டுக்கு முன்பு நான் இங்கிருந்து உங்களிடம் உரையாடினேன். அப்போதிருந்த பொருளாதார சூழல் பற்றி உங்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தேன். இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் ஓராண்டு கடந்து விட்டோம். இந்தக் காலத்தில் மேற்சொன்ன சவால்களை எதிர்கொள்வதில் கணிசமான அளவுக்கு வெற்றி கொண்டுள்ளோம் என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு இருந்ததை விட இன்று, நிலைமை பெருமளவு மாறி உள்ளது. இன்று நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையைக் காண முடிகிறது. சந்தேகம் இல்லை, கடந்த ஆண்டு, ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகள் இருந்தன. ஆனால் இன்று நாட்டுக்கு உள்ளேயோ வெளியேவோ நிலையற்ற தன்மை இருப்பதாக யாருமே கருதவில்லை.

இந்த நிலைத்தன்மை, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லவும், கடந்த ஆண்டு நான் குறிப்பிட்ட சமூக ஒற்றுமையை பராமரிக்கவும் மிக உதவியாக இருக்கிறது. ஆனாலும் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டில், நமது சமூகக் கட்டமைப்பை சிதைக்கிற, சீர்குலைக்கிற வன்முறை சம்பவம் எதையும் இந்த நாடு சந்திக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்காங்கே சில சில தொல்லைகள் மாநிலங்களில் ஏற்பட்டு இருக்கலாம்; இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன; பொதுவாக இன்று நிலைமை மிகவும் அமைதியாக இருக்கிறது. வாழ்க்கை எனும் சிற்றாறு அமைதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது; சூறாவளிகள் ஏதும் இல்லை. இது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது காரணம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற இது போன்ற சூழல்தான் தேவை.

கடந்த ஆண்டு, அரசின் சார்பாக, கருத்தொற்றுமை மூலம் செயல்படுதல் என்கிற புதிய முறையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் சரியான வழிமுறை என்று இப்போதும் உணர்கிறேன். ஏனெனில் தேசிய பிரச்சினைகள் என்பவை எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரச்சினைகள் அல்ல. இவை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் இவை நாடு முழுதிலும் பாதிப்பு ஏற்படுத்துபவை; ஆகையால் அதே வகையில் இவை தீர்க்கப்பட வேண்டும். எல்லாக் கட்சிகள் பிரிவுகள் சமூகங்களின் நம்பிக்கையைப் பெற்றே இவற்றைத் தீர்க்க முடியும். இதுதான் சிறந்த வழிமுறை; தொடர்ந்து இதே பாதையில் செல்வோம் என்று உறுதி கூறுகிறேன்.

பொருளாதாரத்தைப் பொருத்த வரை, இந்த திசையில் நாம் மிகக் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்து இருக்கிறோம். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இன்னல்களை நீங்கள் அறிவீர்கள்; அதனால் நாம் தங்கத்தை அடகு வைக்க வேண்டியதாயிற்று. நமது அன்னிய 'ரிசர்வ்' 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இல்லை; அநேகமாக அடுத்து ஒரு வாரத்தில் நாம் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போயிருப்போம்; நமது நம்பகத்தன்மை குலைந்து போய் இருக்கும். இது போன்ற கடினமான சூழலில் இருந்து நாம் தொடங்க வேண்டி இருந்தது. மிக கவனமாக எச்சரிக்கையுடன் சில நடவடிக்கைகள் எடுத்தோம். இன்று அன்னிய ரிசர்வ், 17,000 கோடி என்கிற அளவில் உச்சத்தில் இருக்கிறது, நமக்குத் தேவையான எதையும் இறக்குமதி செய்வதில் எந்த இன்னலும் இல்லை என்று கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மறுபுறம், கடந்த ஆண்டு நாம் எடுத்த நடவடிக்கைகள் விளைவாக, நமது ஏற்றுமதிகள் வளர்ச்சிக் குறிகளைக் காட்டுகின்றன. இது விஷயத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் கடந்த ஒன்றரை மாதத்தில் நமது ஏற்றுமதி, ஏறு முகத்தில் செல்லத் தொடங்கியுள்ளது. நமது தொழிற்சாலைகள் நன்கு செயலாற்றுகின்றன, உற்பத்தி பெருகுகிறது, நமது ஏற்றுமதியை அதிகரிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பதையே இது உணர்த்துகிறது.

நமது நாட்டில் தொழில் மயமாக்கலுக்கு உதவும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் வெற்றி கண்டுள்ளோம். ரூபாய் 3,000 கோடிக்கான வாய்ப்புகள் பெற்றுள்ளோம். இந்த முதலீடு வந்து சேர சிறிது காலம் பிடிக்கலாம்; ஆனாலும் இது மிகக் குறிப்பிடத்தக்க தொகை மட்டுமல்ல; தொழில்நுட்பக் கோணத்திலும் இது மிகவும் முக்கியமானது. இத்துடன், நமது நாட்டு தொழில் அதிபர்களும் பெரிய அளவில் முதலீடு செய்யும் சாத்தியங்களும் பிரகாசமாக இருக்கின்றன.

நாம் இதுவரை பெற்றுள்ள கோரிக்கைகளின் படி, 35,000 கோடி முதல் 40,000 கோடி ரூபாய் வரை முதலீட்டுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது நமது தொழிற்துறைக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கும்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மழைப்பொழிவு குறையலாம்; இதனால் சில இன்னல்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது, நாட்டில் நல்ல மழை பொழிந்து இருக்கிறது; இதனால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம் என்று தகவல் வருகிறது. ஆகையால் நாம் நாட்டில் பொதுவாக வறட்சி இருக்காது, வளமை கூடும் என்று நம்பலாம்.

இனி நான், நமது கொள்கைகள் தொடர்பாக சிலவற்றைக் கூற விரும்புகிறேன்; சரியாக புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். முதலில், பரவலான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் மாபெரும் திட்டங்களில் நாம் ஈடுபட்டுள்ளோம். எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு திட்டமிட்டு உள்ளோம். இதுபோன்ற மாபெரும் பணியில் ஈடுபடும் போது, நாம் அதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்; நமது கவனம் சிதறி விடக் கூடாது. நமது கவனத்தை திசைதிருப்ப சில தொல்லைகள் நேரிடலாம். சில சூழ்நிலை காரணமாக ஏற்படலாம்; இன்னும் சில வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் இந்த பிரச்சினைகளை முறியடித்து, வளர்ச்சியில் முன்னேற்றத்தில் நமது சக்தியை செலுத்த வேண்டும்; இதைச் செய்ய அரசும் வைராக்கியத்துடன் இருக்கிறது.

நான் சொல்ல நினைக்கும் இரண்டாவது அம்சம் - அரசாங்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்; இந்த சக்தி, எதை நோக்கிப் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதுதான் கேள்வி. அதிகாரமற்று, பலவீனமாய், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள சக்தி அற்றவர்களாய் உள்ள மக்களைப் பாதுகாக்க, இந்த சக்தி வாய்ந்த நிறுவனம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது நம்பிக்கை; நமது குறிக்கோள். சமுதாயத்தில் சக்தி வாய்ந்த நபர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள்; ஆனால் உதவியற்று இருக்கும் மக்களுக்கு அரசாங்கமே பிரதானமாக உதவ வேண்டும். ஆனால் பலவீனமான மக்களை அரசு காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற போது, சில இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளில் ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எந்த கிராமத்துக்கு சென்றாலும், வளர்ச்சியற்று இருப்பதையே காண்கிறோம். பள்ளிக் கட்டிடங்களும் சாலைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன; இன்னும் பலவற்றைப் பற்றி மக்களுக்கு பொதுவான புகார்கள் இருக்கின்றன.

மறுபுறம், ரூ.4,000 - 5,000 கோடி முதலீட்டில் பெரும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; ஆனாலும் இந்த முதலீட்டின் பயன் நமக்குக் கிட்டவில்லை. குறைந்தபட்ச லாபம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இது மிகப் பெரிய சங்கடம். இவையெல்லாம் அரசின் நிதி, பொதுமக்களின் நிதி. ஆனால் இத்துறைகள் நன்றாக செயல்படுவதில்லை, சேவை வழங்குவதில்லை. ஆனாலும் இத்துறைகளில் நிதிப் பற்றாக்குறையை சந்தித்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் - முதலீடு செய்யப் போதுமான நிதி நம்மிடம் இல்லை. இது ஒன்றும் புதிது இல்லை. நேருஜி, இந்திராஜி, ராஜீவ்ஜி காலத்திலும் நாம் இதைக் கண்டோம். எல்லாப் பிரதமர்களின் காலத்திலும், நமது தேவைகளுக்கு ஏற்ப முதலீடுகள் இல்லை என்பதை அனுபவித்து இருக்கிறோம். ஆகவே இன்று, புதிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டி இருக்கிறது.

உதாரணத்துக்கு, 5,00 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவ வேண்டி உள்ளது. இதற்கான முதலீடு வேண்டுமென்றால், அது பொது மக்களின் நிதி. ஆனால் ரூபாய் 5,000 கோடி முதலீடு செய்ய ஒரு முதலீட்டாளர் அல்லது தொழிலதிபரைக் கண்டுபிடிக்க முடிந்தால், இதற்கான ரூ.5,000 கோடியை நாம் வேறு எங்கேனும் முதலீடு செய்யலாம். இந்த வழியில் நாம் 5,000 கோடி ரூபாயைத் தொழில்களில் முதலீடு செய்வதை சேமிக்க முடியுமானால், நம்மால் ஒரு லட்சம் தொடக்கப் பள்ளிக் கட்டிடங்களைக் கட்ட முடியும்; வெளியில் இருந்து முதலீட்டைக் கொண்டுவர முடிந்தால், ஒரு லட்சம் (புதிய) பள்ளிகளை நம்மால் கட்ட முடியும். மின்சக்தி திட்டங்களில், குடிநீர் திட்டங்களில், பாசன திட்டங்களில், கட்டுமானப் பணிகளில் நம்மால் முதலீட்டைக் கொண்டு வர முடியும் எனில், போதுமான நிதி இன்றித் தவிக்கும் கிராமங்களுக்கு இவற்றை செலவிட முடியும்.

இது ஒரு புதிய அணுகுமுறை. முற்றிலும் புதியதல்ல; இதில் நாம் காட்டும் தீவிரம் புதியது. பிறரிடம் இருந்து - இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவுக்கு வெளியே குடியேறியுள்ள நபர்களிடம் இருந்து நிதிகளை ஈர்ப்பதன் மூலம், தொழில்துறையின் நிதித் தேவையில் இருந்து நாம் விடுபடுவோம். மின்சக்தி, நீர்ப்பாசனம், சிமெண்ட், இரும்பு ஆலைகளுக்குத் தேவையான முதலீடுகளை வெளியில் இருந்து பெற முடியும் என்றால், கிராமப்புற திட்டங்களுக்கு முதலீடு செய்ய நம்மிடம் (போதுமான) நிதி இருக்கும். இதனால் இரண்டு திசைகளிலும் வளர்ச்சி இருக்கும். இவ்வகை முதலீட்டு ஏற்பாடு மிகுந்த பயன் தருவதாக இருக்கும். எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் கிராமப்புற திட்டங்கள் ஊக்கம் பெறுவதை உறுதி செய்வோம். மிகுந்த இன்னலுடன், கிராமப்புற திட்டங்களுக்காக ஐந்தாண்டுகளுக்கு 14,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். இதனை 30,000 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதனால் கிராமப்புற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் உயர்வதை உறுதி செய்வோம்.

அன்னிய முதலீடு விளைவுகள் பற்றி சிலர் பதட்டம் கொள்கிறார்கள். இவர்களுக்கு சொல்கிறேன் - இந்த தொழிற்சாலையில் இந்தியாவில் தான் நிறுவப்பட இருக்கின்றன. இந்தியாவை விட்டு அந்நிய முதலீடாக 'ஓடி விடுவதற்கு' சாத்தியமே இல்லை. புதிய சாலைகள் புதிய ரயில்வே இருப்புப் பாதைகள் போடப்பட்டால், அவை நம் நாட்டுக்கு உள்ளேதான் இருக்கப் போகிறது. அச்சப்பட ஏதுமில்லை. முதலீடுகளை வரவேற்போம். ஏனெனில் இந்த முதலீடுகளால் நன்மையே பெறுவோம். முதலீடு செய்கிற எவரும் சிறிது லாபம் ஈட்டவே நினைப்பார்கள். இதனை எதிர்க்க வேண்டியதில்லை. வணிகத்தில் லாபம் இல்லை என்றால் யாருமே முதலீடு செய்ய மாட்டார்கள். நாமும் இதனால் நம் கைவசம் இருக்கும் நிதியை கிராமப்புறத் திட்டங்களில் முதலீடு செய்வோம்.

கடந்த ஓராண்டில் ஏழை மக்களுக்காக மேற்கொண்ட திட்டங்கள் பற்றி விளக்கங்கள் தர விரும்புகிறேன். இது போன்ற திட்டங்களை முன்னெடுப்போம் என்று கடந்த ஆண்டு சொல்லி இருந்தேன். இவற்றை நாங்கள் தொடங்கி விட்டோம்; நன்கு வளர்ந்து வருகிறது என்பதை விளக்க இருக்கிறேன். முதலில் சொல்ல விரும்புவது - மிக வறிய நிலையில் உள்ள மக்களைக் கொண்ட 1,700 ஒன்றியங்களைப் பற்றியது. இவர்களுக்கு உணவுப் பொருள் கிடைக்க திட்டம் வகுத்தோம். ஜனவரி 1 முதல் 1711 ஒன்றியங்களில் இந்த திட்டத்தைத் தொடங்கினோம். ராஜஸ்தானில் இதைத் தொடங்கி வைத்தேன். இன்று நாட்டில் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.

நியாய விலைக் கடைகளுக்குப் பற்றாக்குறை இருந்தது. 6 - 7 மாதங்களில் 9,000 - 10,000 நியாயவிலைக் கடைகள் திறந்துள்ளோம். அடுத்த சில மாதங்களில் அநேகமாக மேலும் 10,000 கடைகள் திறப்போம். மேலும் இப்பகுதிகளில் கூடுதலாக 20 லட்சம் டன் உணவுப் பொருள் சப்ளை செய்து பற்றாக்குறையைப் போக்கி உள்ளோம். இந்தத் திட்டத்தை நாம் ஜவஹர் ரோஜ்கர் யோஜனாவுடன் இணைத்துள்ளோம். இந்த திட்டத்துக்காக 8 லட்சம் டன் உணவுப் பொருளை சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளோம்.

ஜவகர் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு பகுதி கூலியை உணவுப் பொருளாக வழங்குவதே நமது எண்ணம். இதனால் தொழிலாளர்கள் பசியால் வாட வேண்டி இருக்காது. கூலியின் ஒரு பகுதியை உணவுப் பொருளாக வழங்குவதால் ஒவ்வொருவரும் நாள்தோறும் இரண்டு கிலோ அரிசி அல்லது கோதுமை பெறுவார்கள்; இதன் மூலம் இப்பகுதிகளில் பட்டினிப் பிரசினை தீரும் என்பதே நமது கணக்கீடு.

கடந்தாண்டு பேசுகையில் நான் குறிப்பிட்ட மற்றொரு அம்சம் - கிராமத்துக் கைவினைஞர்கள், காலாவதியாகி விட்ட கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களால் தமது உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ள, வறுமையை போக்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெருநகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இதனால் அங்கே புதிய பிரச்சினை முளைக்கிறது. இந்தக் கருவிகளை நவீனப்படுத்த பெரிய திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 40,000 - 50,000 கிராமங்களில் உள்ள கைவினைஞர்களுக்கு அடுத்த 4-5 ஆண்டுகளில் புதிய கருவிகள் வழங்க இருக்கிறோம். இது மிகப்பெரிய ஆனால் மிகப் பயன்தரும் திட்டம். ஏனெனில் கிராமங்களில் கைவினைஞர்கள் தங்கா விட்டால், கிராமங்கள் வளம் பெறாது; பின்தங்கியே இருக்கும். ஆகவே (இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே) இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

நமது கிராமங்களில் வருவாய் ஆவணங்கள், உரிமை ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று கூறியிருந்தேன். இதனால் நீண்ட காலத்துக்கு வழக்குகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் ரத்தம் சிந்தும் சண்டைகள் நடைபெறுகின்றன. இதனைச் சரி செய்ய ஒரு திட்டம் தேவைப் படுகிறது. இந்த பிரச்சினையை நாம் கையில் எடுத்து உள்ளோம்; ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பது கூறுவதில் மகிழ்ச்சி. (மாநில) வருவாய் அமைச்சர்களை அழைத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை முடிக்குமாறு கூறவுள்ளோம்.

நில உச்சவரம்பு பற்றி பேசி இருந்தேன். உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசிடம் உள்ள நிலம் முழுவதுமாக விநியோகிக்கப் படும். இந்தப் பணி அநேகமாக முடிந்து விட்டது. ஒரு சிறிய பகுதியை மட்டுமே முடிக்க வேண்டும். சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3-4 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படாத உபரி நிலமே இல்லை என்கிற நிலையை எட்ட வேண்டும். மொத்த நிலமும் நிலமற்ற மக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டமும் (விரைவில்) நிறைவேற்றி முடிக்கப்படும்.

கடந்த ஆண்டு அறிவித்தபடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக ஒரு (நிறுவனம்) கார்ப்பரேஷன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 200 கோடி ரூபாயுடன் தொடங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் நடனுக்காக முழுமையான திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

தற்போது நாம் செய்து வரும் மாற்றங்கள், தொழில்துறையில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடும். பாதகமான தாக்கம் எதிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்காக சுமார் 2200 கோடி ரூபாயில் தேசிய புதுப்பிக்கப்பட்ட நிதி நிறுவியுள்ளோம். எங்கே எல்லாம் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகிறார்களோ, எங்கே எல்லாம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை ஏற்படுகிறதோ, இந்த நிதியில் இருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். இவர்களுக்கு பயிற்சி தர எதுவும் திட்டம் தேவைப்பட்டால் இந்த நிதியிலிருந்து அது நிறைவேற்றப்படும் என்றும் உறுதி கூறுகிறோம்.

மின்வசதி இல்லாத, விரைவில் மின்வசதி கிடைக்க வசதி இல்லாத கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த கிராமங்களில் சூரிய மின்சக்தி கிடைக்க 8,00 கோடி ரூபாயில் ஐந்தாண்டுத் திட்டம் வகுத்து இருக்கிறோம். இதற்கு முன்னர் இதுபோன்ற திட்டத்துக்கு இவ்வளவு நிதியும் இவ்வளவு கவனமும் ஒதுக்கப் பட்டதே இல்லை. சூரியக் கடவுள் நமக்கு மிகப் பெரிய அளவில் (எரி)சக்தி வழங்குபராக இருக்கிறார். இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்குதான் தொழில்நுட்பம் குறித்த கேள்வி எழுகிறது. வாதப்படி இது சாத்தியம்தான்; ஆனால் தொழில்நுட்பம் என்று வருகிற போது, இந்த திட்டம் மிகவும் செலவு தருவது இதை நம்முடைய விவசாயிகளால் செய்ய முடியாது என்று சொல்லப் படுகிறது.

நமது விஞ்ஞானிகள் மேற்கொண்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு வேண்டிய விதத்தில் இதைத் தர முடியும் என்று இப்போது சொல்லப்படுகிறது. இந்த திசையில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாக இருந்துள்ளன; இதன் விளைவாக, இதுவரை மின்சாரம் சேராத தொலைதூரப் பகுதிகளில் 'ஸ்டாண்ட் அலோன்' என்ற கிணறு போன்ற பகுதியில் சூரியத் தகடுகள் பொதிக்கப்படும். இந்த சூரிய தகடுகள் சூரியனிலிருந்து சக்தி பெறும்; வெப்பத்தை மின்சாரமாக மாற்றும்; இது, பம்புகளில் (எரி) சக்தியை உருவாக்கும். இங்க திட்ட மிகப் பெரிய அளவில் செயல் படுத்தப்படும்; கிராமத்து மக்களின் (எரி) சக்தித் தேவைகளை இது நிறைவேற்றும். எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறதோ அது அங்கேயே தயாரிக்கப்படும்.

எங்கெல்லாம் இதற்கான சோதனைகள் நடந்தனவோ, அங்கெல்லாம் இது, விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ஏனென்றால் சாதாரண மின்சாரம், (எப்போது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பதால்) 'நம்பத் தகுந்ததாய்' இல்லை; இதனால் விவசாயம் மோசமாக பாதிக்கப்படுகிறது. எனவே இந்த புதிய, சூரிய மின்சக்தி திட்டம் அவர்களை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தை மிகப்பெரிய அளவில் தொடங்க இருக்கிறோம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டேன். வீணாய்க் கிடக்கும் நிலத்தை மேம்படுத்துவது தொடர்பாக மிகப்பெரிய திட்டத்தை நாம் முன்னெடுக்க இருக்கிறோம். எல்லா கிராமங்களிலும் மிகப் பெரிய நிலப்பரப்பு வீணாகவே கிடக்கிறது. இங்கெல்லாம் மரங்களை வளர்த்து இந்த இடங்களை பசுமையாக வளமானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இந்த திட்டம், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும். இதனை மனதில் கொண்டு, ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ளோம். இதனால் இந்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படும். இதற்காக நமது ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய தொகை ஒதுக்கப் பட்டுள்ளது.

நலிந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினருக்காக கடந்த ஓராண்டில் நாம் தொடங்கிய திட்டங்கள் பரவலாக பெரிய அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பட்டியல் இனமக்களுக்காக தனியே ஒரு 'கார்ப்பரேஷன்' நிறுவப் பட்டுள்ளது. பெண்களுக்காக ஒரு தேசிய ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இவை திறம்பட செயல்படுவதற்காக, தம்முடைய பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற ஏதுவாக, தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அதிகாரம், சிறுபான்மை ஆணையத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. மற்ற பிற ஆணையங்களைப் போலவே இந்த ஆணையத்துக்கும் சட்டத் தகுதி நிலை வழங்கியுள்ளோம். இதனால் இந்த ஆணையத்தின் உரிமைகள் தெளிவாகின்றன; சுதந்திரமாக இவற்றைப் பயன்படுத்த முடியும். ஆகவே இது வேறு எந்த சட்ட ரீதியான ஆணையத்தைப் போன்றே அதிகாரம் கொண்டதாக இருக்கிறது. சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சற்று முன் சொன்னது போல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு கார்ப்பரேஷன் நிறுவப்பட்டுள்ளது. தலையில் சகதிகளை சுமந்து செல்லும் துப்புரவுப் பணி, மனிதாபிமானம் அற்றது; ஒருவரின் கண்ணியத்தை குறைக்கக் கூடியது. முற்றிலுமாக தடை செய்யப் பட வேண்டும். எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கி உள்ளோம். தேவைப்பட்டால் இதனை இன்னும் அதிகரிப்போம். துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகளை கவனித்துத் தீர்ப்பதற்காக ஓர் ஆணையம் அமைக்கத் தீர்மானித்துள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன; அடுத்த சில நாட்களில் இது செயலுக்கு வந்துவிடும். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்த பிரிவினரின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள, தீர்த்து வைக்க இது மிகப்பெரிய அளவில் உதவியாய் இருக்கும்.

காலம் காலமாய் நம்மைத் தொடர்ந்து வரும் சில பிரச்சினைகளை குறித்துப் பேச விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அரசு மிக நன்றாக பணியாற்றுகிறது, மக்களும் இந்த அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சி. பஞ்சாபைப் பொருத்த வரை, அங்கு தோன்றியுள்ள பிரச்சினைகளள் பற்றி நாம் நன்கு அறிவோம்; இவற்றுக்குத் தக்க தீர்வு காண்பதில் தீவிரமாக இருக்கிறோம். கடினமான முடிவுகள் எதுவும் இருக்க முடியாது. எல்லா தரப்பினரோடும் பேசி இணக்கமாய் ஒவ்வொரு முடிவும் எடுத்து வருகிறோம். ஒன்றுமே நடக்கவில்லை என்று சிலர் சொல்லலாம்; ஆனால் அப்படி இல்லை என்று மட்டும் உறுதியாய்க் கூறுகிறேன்.

நாம் என்ன செய்ய நினைக்கிறோம்.. நாம் எந்த திசையில் நகர்கிறோம்.. என்பதற்கான அறிகுறியை விரைவில் காண்பீர்கள். சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப் படுகிறது; நாம் சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கொலைகள் தொடர்கின்றன என்பது உண்மை. இது ஒரு மகிழ்ச்சியான சூழல் இல்லை. இது நம்மை அதிர்ச்சி தருகிறது. இந்தப் போராட்டத்தில் நாம் சிக்கி இருக்கும் போது சில இழப்புகள் தவிர்க்க முடியாது போகின்றன. ஆனாலும் பொதுவாக அங்கே சூழல் மனநிறைவு தரும்படி உள்ளது. பஞ்சாபில் நிலையாக அமைதிக்கான நாள் வரும் என்று (நம்பிக்கையுடன்) காத்திருக்கிறோம். எல்லைக்கு அப்பால் இருந்து தூண்டுதல் வருகிறது என்பது வேறு விஷயம். நான் பலமுறை கேட்டுக் கொண்டும் இத்தகைய நடவடிக்கைகள் இருந்து அவர்கள் ஒதுங்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் தருகிறது.

அசாமில் நிலைமை, சந்தேகமின்றி மேலோங்கி உள்ளது. அங்கே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. வன்முறை பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் வன்முறையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து கொள்ள தீர்மானித்துள்ளார்கள். பெரும்பான்மையான மக்கள் திரும்பி வந்து தமது ஆயுதங்களை சமர்ப்பித்து உள்ளார்கள். ஆனாலும் சிலர் இன்னமும் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களை நாம் எதிர் கொள்ள வேண்டும். இதைத்தான் நாம் செய்து வருகிறோம். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று நம்புகிறேன்.

காஷ்மீர் பிரச்சினை இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு நிலைமை சமமற்ற திருப்பங்கள் நிகழ்கின்றன; ஆனாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இது எனக்கு திருப்தியாக இல்லை. ஏனென்றால் இந்தியாவின் ஒவ்வொரு மூலையும் ஜனநாயக அமைப்பு முறைக்குள் வராத வரை நமக்கு திருப்தி ஏற்படாது. அங்கே நிலைமை சரியான உடன், இந்திய சாசனத்துக்கு உட்பட்டு நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதில், மக்கள் அரசு பதவி ஏற்றுக் கொள்வதில் மிக ஆர்வமாக உள்ளோம்.

மண்டல் ஆணைய பிரச்சினையைப் பொறுத்தவரை, எனது நிலைப்பாட்டை ஏற்கனவே நன்கு தெளிவுபடுத்தி உள்ளேன். இப்போதைக்கு இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் முன் இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வரும்; அது செயல் படுத்தப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதம் ஒதுக்கீடு பெற வேண்டும்; அப்போதும், ஏழைக்கும் வசதி உள்ளவருக்கும் இடையே, ஏழைக்கு அது முதலில் கிடைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. மொத்தத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்புகள் தரப்பட வேண்டும். இதற்கு மேல் அது போகாது. இதுதான் நமது முடிவு. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 19 சதவீதம் ஒதுக்கீடு தர விரும்புகிறோம். ஆனால் இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் முன்னால் இருக்கிறது. அது தரும் தீர்ப்பை செயல்படுத்துவோம்.

சில நாட்களுக்கு முன் ஒரு பிரச்சினை - அபாயகரமான எல்லைகளை தொட்டி விடும் என்று நாம் அஞ்சுகிறோம். இதில் தீர்வு காண ஈடுபட்டோருக்கு எனது நன்றி. இவர்களின் ஒத்துழைப்பால் தான் நாடு தழுவிய நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது. நான் குறிப்பிடுவது அயோத்தியா பிரச்சினை. இது ஏதோ ஒரு கோயில் அல்லது மசூதி பிரச்சினை அல்ல. அப்படி பார்த்தால் அது தவறான பார்வை. இது நமது நாட்டின் ஒற்றுமை பற்றிய பிரச்சினை. நமது சமுதாயத்தில் நமது நாட்டு கிராமங்களில் நூறாண்டுகளாக நிலவி வரும் பாரம்பரிய ஒற்றுமையை காப்பதும் தக்க வைப்பதுமே இன்று முக்கிய பிரச்சினை ஆகியுள்ளது. கோயில், மசூதி பிரச்சினைக்கு அப்பால் நாம் ஒரு தவறான அடி எடுத்து வைத்தாலும், அந்தத் தவறான நகர்வால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே நாம் ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். மிக அபாயகரமான திருப்பம் நேரிட்ட போதெல்லாம் நம்மால் அதனைத் தணிக்க முடிந்து இருக்கிறது. இன்னமும் நேரம் இருக்கிறது.

குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக சம்பந்தப்பட்ட எல்லாரோடும் பேசி சமரசத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம். எல்லோரோடும் பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே நமது நிரந்தரக் கொள்கை. இத்தகைய தீர்வு இரண்டு சமூகங்களின் சமய உணர்ச்சிகளையும் தீர்ப்பதாய் இருத்தல் வேண்டும். ஒருவேளை ஏதோ காரணத்தால் இது சாத்தியம் இல்லை என்றால் பிறகு நீதிமன்ற தீர்ப்பு எல்லாரையும் கட்டுப்படுத்தும். இதுதான் நம்மிடம் உள்ள ஃபார்முலா. ]

கண்ணைக் கவரும் கோயில் கட்ட வேண்டும் என்பதே நமது விருப்பம்; கொள்கை. ஆனால் மசூதி அப்படியே நீடிக்க வேண்டும். இதுவே நமது பார்முலா நமது வைராக்கியம் நமது முடிவு. இந்த இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்வோம். பேச்சுகளின் போது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற தீர்வை எட்டுவது சாத்தியமானால் அது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றம்; யாரும் எதிர்க்க மாட்டார்கள். என்ன மன உறுதியுடன் என்ன குறிக்கோளுடன் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நான் சர்வதேச நிலைமை பற்றி சிலது கூற விரும்புகிறேன். அண்டை நாடுகளுடன் நமது உறவு நன்கு மேம்பட்டு வருகிறது. பாகிஸ்தானை பற்றி மட்டுமே தனியாகக் கூறுவது கடினம். பாகிஸ்தான் பிரதமருடன் நான்கு முறை பேசி உள்ளேன். எங்கள் பேச்சு மிகவும் இனிமையாக இருந்தது. ஆனால், ஓர் அடி முன்னேறிச் செல்ல நினைக்கிற போது, ஏதோ நிகழ்ந்து விடுகிறது; அங்கேயே நின்று விடுகிறோம். இதை யார் ஏன் எப்படி செய்கிறார்கள் என்பதை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம். பேச்சுகள் தொடர வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால், காஷ்மீர் - இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, எந்த சக்தியாலும் அதனை இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாது என்பதை தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நமது அடிப்படை நிலைப்பாடு. இது ஏற்றுக் கொள்ளப் பட்டால் பிறகு வேறு எந்த புரிதல் அல்லது சமரசத்தையும் நான் பரிசீலிக்கலாம்; நமது உறவு மேம்பட தொடர்ந்து உழைக்கலாம். இதுதான் நமது அடிக்கோடு. இதில் சந்தேகமே வேண்டாம்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற பிறநாடுகளுடன் நமது உறவு வெகு சிறப்பாக இருக்கிறது. நமது நெருங்கிய நட்பு நாடான சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு தோன்றிய புதிய நாடுகளோடும் நமது உறவு நன்றாக இருக்கிறது. இந்த நாடுகளின் தலைமைகள் நமது நாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்; அவர்களின் நாட்டுக்கு வருகை தர அழைப்பும் விடுத்துள்ளனர். இவர்களுடன் நமது நட்பு மேலும் விளக்கமாய் மேலும் நெருக்கமாய் வளர்ந்து வருகிறது. இந்தியா மேலும் செயல் திறன் மிக்க பங்கு ஆற்ற வேண்டி உள்ளது. அணிசேரா இயக்கம் நம்மிடம் உள்ளது. கடந்த 2-3 ஆண்டுகளில், இந்த இயக்கத்தில் சிறிய தொய்வு இருப்பதைக் காண்கிறோம். மீண்டும் புத்தகத்துடன் செயல்படச் செய்வோம்.

நிறைவாக சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நேர்மையாக சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கிறவர்கள். அதேசமயம் ஊழல் சக்திகளுக்கும் குறைவில்லை. வங்கிகளில் பங்குச்சந்தைகளில் மக்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது திடீரென்று ஏற்பட்டது; பிறகு உணர்ந்து கொண்டோம். குறைபாடுகளை களைந்து சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பாக குற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தகவல் கிடைத்த உடனேயே அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விடுகிறது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நிகழாமல் தடுப்பதைப் பொருத்தவரை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஏற்கனவே அமைக்கப் பட்டு, செயல்படத் தொடங்கி விட்டது. இதன் அறிவுரையை அரசாங்கம் அப்படியே பின்பற்றும். மீண்டும் ஒருமுறை உறுதி கூறுகிறேன் - இந்த நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு, ஊழலுக்கும் ஊழல்வாதிகளுக்கும் இங்கே சற்றும் இடமில்லை; யாரும் தப்பிக்க விடமாட்டோம். சட்டம் தனது கடமையைச் செய்யும். சட்டத்தின் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது. இதில் எந்தத் தளர்வும் இருக்காது. இதை உங்கள் முன்னால் தெளிவு படுத்துகிறேன்.

அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நமக்கு அமைதி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். நமது நாட்டில் சில பிரச்சினைகள் மக்களை இணைக்கிறன; சில பிரச்சினைகள் மக்களைப் பிரிக்கின்றன. அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு இப்படியே பிரச்சினைகளை எழுப்புவதற்கு சற்று இடைவேளை விடுவோம். நம்மை இணைக்கிற பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துவோம். நம்மைப் பிரிக்கும் பிரச்சினைகளை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மறந்து இருப்போம். இவை இருக்கத்தான் செய்யும்; ஆனால் மறந்து விடுவோம். (சண்டை மூட்டுவதற்காக) சிறிது காலத்துக்குப் பிறகு இவை மீண்டும் எழுப்பப்படும். ஆனால் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு, இத்தகைய சச்சரவுகளுக்கு இடம் இல்லை. எல்லாப் பிரச்சினைகளும் தேசிய பிரச்சினைகளே. நமது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதிப்பவை. எது அவசரமோ அந்த பிரச்சினைகளை முதலில் அணுகுவோம். புதிய பிரச்சினைகளைத் தனியே வைப்போம். இடைவேளைக்கான எனது கோரிக்கையை மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது மட்டும் நிகழ்ந்தால், அது நம்ம நாட்டுக்கு மிகப் பெரும் பயன் தருவதாக இருக்கும்.

இன்னொன்றும் கூற நினைக்கிறேன். நாங்கள் அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். அரசாங்கம் எடுக்கும் அவசர முடிவுகளால் பின்னாளில் இன்னல்கள் அதிகரிக்கும். அவசரமாக முடிவெடுக்கும் போது (அப்போதைக்கு) இனிமையாக ஒலிக்கும். ஆனால் பின்னாளில் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இவை மேலும் குழப்பங்களுக்கு வழி வகுக்கும். ஆகவே நாம் எதையும் அவசரத்தில் செய்ய மாட்டோம். கவனமான பரிசீலனைக்குப் பிறகே எதையும் செய்வோம். நாம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்போம். ஒருமுறை முன்னே அடி எடுத்து வைத்தால் பிறகு பின் வாங்க மாட்டோம். எங்கள் அணுகுமுறை ஒருதலைப் பட்ச அணுகுமுறையாக இருக்காது. நமது பார்வை - மொத்த சமூகத்துக்கான, மொத்த நாட்டுக்கான தொலைநோக்குப் பார்வையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையைத்தான் நாங்கள் பின்பற்றப் போகிறோம்.

மூன்று அம்சங்களுக்கு நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறேன். இந்த மூன்று அம்சங்களில் நமது நாட்டில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தி முன்னேறுவோம் என்றால், காலம் காலமாக நம்மை பின் தொடர்ந்து வரும் பிரச்சினைகளை நம்மால் முறியடிக்க முடியும்; அபார வளர்ச்சி கண்டு பிற நாடுகளுடன் போட்டி போட இயலும். இது நடக்கவில்லை என்றால், அற்ப பிரச்சினைகளில் நாம் சிக்கிக்கொண்டால், நாம் பின்தங்கியே இருக்க வேண்டியது தான். இந்த அம்சங்களை சிந்தித்துப் பார்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். இந்த மூன்று சூத்திரங்களுக்கு (ஃபார்முலாக்களுக்கு) நீங்கள் ஆசிர்வதித்தால், நம்மை யாராலும் எதிர்த்து நிற்க முடியாது. இந்த மூன்று அம்சங்களில் நாட்டு மக்களின் ஆதரவை ஆசிகளைக் கோருகிறேன். இதனை நீங்கள் நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

(அதிக) நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். இன்னமும் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். (என்று நம்புகிறேன்) இன்று இந்தத் தருணத்தில் நாம் நம்பிக்கை தரும் எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும். பல மகிழ்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சற்றே மகிழ்ச்சி குறைவான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எதிர்காலம் மிகுந்த நம்பிக்கை தருவதாய் உள்ளது. இந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற்ற நடை போட உங்களை அழைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளைக் கோருகிறேன். ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்!

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 45 - ‘துணிச்சலான முடிவு... அபாரமான விளைவு!’ | 1991

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x