Published : 27 Oct 2023 07:13 PM
Last Updated : 27 Oct 2023 07:13 PM

செங்கோட்டை முழக்கங்கள் 33 - ‘கடமைகளில் இருந்தே உரிமைகள் எழுகின்றன’ | 1979

இந்தியப் பிரதமர்களில் மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்தவர்களில் ஒருவர் - சரண்சிங். முழுதாய் ஆறு மாதம் கூட பிரதமர் பதவியில் இல்லை. பிரதமராக ஒரு முறை கூட நாடாளுமன்றத்தை சந்தித்தது இல்லை. விவசாய நாடான இந்தியாவில் ஒரு விவசாயி, பிரதமராக வந்தார் என்றால், அது இவர் மட்டுமே என்று சொல்லலாம். எனவே இயல்பாகவே, நிலச் சீர்திருத்தம், விவசாயிகளின் உரிமைகள், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்திய சரண்சிங், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற காந்தியவாதி.

1979 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் சரண்சிங் ஆற்றிய உரை இதோ: இன்று நாம் 32-வது சுதந்திர நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மகாத்மா காந்தி மற்றும் பிற தலைவர்களின் தியாகம் மற்றும் உழைப்பினால், 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றோம். இந்தத் தருணத்தில் தேசத்தந்தை மற்றும் அவரது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதே முறையாகும். வெறுமனே அஞ்சலி செலுத்துவது மட்டும் போதாது.
(மரபுப்படி) எனக்கு உள்ள 20 நிமிடங்களில், சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். பொறுமையுடன் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.

சமீபத்தில் மத்திய அரசில் மாற்றம், அமைதியாக ஜனநாயக முறைப்படி நடந்தது. இது தொடர்பாக மக்களால் வெவ்வேறாக பேசப்படுகிறது. இந்த அரசு எப்படி இயங்கும் என்று கேட்கிறார்கள். விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. அதிகாரத்துக்கு வர உதவிய, (தாம் ஏறி வந்த) ஏணியை சிலர் உதறி விட்டனர். ஜூன் 24 அன்று எனது நெருங்கிய சகா ராஜநாராயணன் உடன் எனக்குள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தேன். அதற்குப் பிறகு நிகழ்ந்தவை, என்னையும் என் உடன் இருப்பவரையும் அரசில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தின.

காங்கிரஸ் ஜனதா (எஸ்) சோசலிச கட்சி நண்பர்கள், மகாராஷ்டிராவில் விவசாயி மற்றும் தொழிலாளர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்கள், ஜூலை மாத இறுதியில், 200-க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இப்போதுள்ள அரசாங்கத்தை நிறுவ விரும்பினார்கள். வேறு யாரும், வேறு எந்தக் கட்சியும், வேறு எந்தத் தலைவரும் இதைவிட அதிக எண்ணிக்கை கொண்டு இருப்பதாய் சவால் விட்டால், நாங்கள் பதவியில் இருந்து இறங்க ஒரு கணமும் தயங்க மாட்டோம்.

நானும் எனது சகாக்களோ இடைத்தேர்தலை விரும்பவில்லை. அது மிகவும் செலவு பிடிக்கும்; அதிக பிரச்சினைகளை உருவாக்கும்.எந்தக் கட்சியுமே இடைத்தேர்தலை விரும்பவில்லை. ஒருவேளை அப்படி எதுவும் நிகழ்ந்தால் நான் உங்களை சந்தித்து உங்களுடைய நம்பிக்கையை உங்களுடைய வாக்குகளைக் கோருவேன். அது சமயத்தில், காங்கிரஸ் ஜனதா (எஸ்) மற்றும் முன்னர் குறிப்பிட்ட நண்பர்களுடன் நாடு முழுதும் ஒன்றுபட்ட கட்சியை உருவாக்கி, பெரும்பான்மை பெறுவோம்.

நாடு எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளில் தலையாயது - வறுமை. உலகில் 125 நாடுகளில், நாம் 111-வது இடத்தில் உள்ளோம். அதாவது 110 நாடுகள் நம்மை விட நல்ல நிலையில் உள்ளன. மூன்றாண்டுகளுக்கு முன் நாம் இருந்த இடம் 104. இந்தக் காலத்தில் நாம் சரிந்து 111 வது இடத்துக்கு வந்துள்ளோம். இதுவே நமது வறுமையைப் பறைசாற்றும். இரண்டாவது பிரச்சினை - வேலையின்மை. ஜனதா அரசு அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து, 25 லட்சம் இளைஞர்கள் வேலை கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்கள். வேலையின்மை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் படித்தவர் படிக்காதவர் இருவருமே வேலை இன்றி உள்ளனர். நகரங்களிலும் படித்த, வேலையில்லாதோர் தெருவுக்கு வந்து விட்டனர். எனவே நாம் வேலையின்மையைப் போக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நாம் சந்திக்கும் மூன்றாவது பிரச்சினை, செல்வந்தர் - வறியவர் இடைவெளி. பிரிட்டிஷார் காலத்திலும் இந்த இடைவெளி இருந்தது. உலகில் எல்லா நாடுகளிலும் இந்த இடைவெளி ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. இதை முழுவதுமாக நீக்குவது இயலாத காரியம். இந்த இடைவெளி மேலும் அதிகரிக்காமல் குறைவதற்கு வழி காணுகிற அரசே நல்ல அரசாகும். சுதந்திரத்தில் இருந்து செல்வந்தர் வறியவர் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு சிலர் கையில் செல்வம் குவிகிறது.

இத்துடன் சமூகப்பதற்றங்களும் நிலவுகின்றன. இதற்கான காரணங்களுக்கு உள்ளே நான் செல்ல விரும்பவில்லை. ஏழைகள் தலித்துகள் நலிந்த பிரிவினர் தான் பாதுகாப்பாய் இருப்பதாக உணரவில்லை. இந்து அல்லாத பிற மைனாரிட்டி சமூகத்தவரும் இதுபோன்றே உணரத் தொடங்கியுள்ளனர். இதற்கு சரித்திர காரணங்கள் இருக்கலாம்; இப்போது விவரித்து சொல்லத் தேவையில்லை. இத்தகைய பேதங்களுக்கான அடிப்படை காரணங்களை நீக்கி நாட்டில் அமைதியும் வளமும் நிலவச் செய்வதே நமது பணி ஆகும். அடுத்த ஓராண்டுக்கு அல்லது இந்த அரசு நீடிக்கும் வரை, மதச் சண்டைகள் நிகழாமல் இருந்தாலே நாம் ஏறத்தாழ வெற்றி பெற்றதாக அர்த்தம்.

நண்பர்களே.., உடனடியாக நம்முன் உள்ள பிரச்சினை -விலை ஏற்றம். கடந்த இரண்டு ஐந்தாண்டு திட்டங்களில், நிலக்கரி மற்றும் விசை தயாரிப்புக்கான முதலீடுகள் மிகவும் குறைவு. இத்துடன், வேலை நிறுத்தங்கள் நடந்தன. கப்பல்கள் கடலிலேயே நின்றன. 45 நாட்கள் ஆகியும் கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கப் படவில்லை. இதனால் எல்லாம் விலைவாசி அதிகரித்தது. நானும் எனது சகாக்களும் உற்பத்தியைப் பெருக்குவதில் உறுதியாக உள்ளோம். இவை, தில்லியில் மட்டுமே அடங்கி இராது; விசைத் தொழிற்சாலைகளுக்கும் நிலக்கரி சுரங்கங்களுக்கும் இது விரியும். உற்பத்தி பெருகாமல் விலைவாசி இறங்காமல் இந்த நாடு வளர்ச்சி அடைய முடியாது.

பற்றாக்குறை இல்லாத உணவுப் பொருட்களின் விலை கூட அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன் - பேராசை கொள்ளாதீர்கள். லாபம் ஈட்டுகிற எண்ணத்தில் நாட்டு மக்களைத் துன்புறுத்துகிற செயலில் இருந்து விலகி இருக்க வேண்டும். கள்ளச் சந்தையில் லாபம் ஈட்டுவதை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். சில பொருட்களின் விலை அதிகரித்து இருந்த போதும், உணவுப் பொருட்களில் பற்றாக்குறை இல்லை; நமது தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு நாம் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துகிறோம். மழை பெய்யவில்லை என்றாலும் வறட்சியாக இருந்தாலும், விவசாயிகள் தொடர்ந்து கடுமையாக உழைப்பார்கள். உணவுப் பொருள் பற்றாக்குறை நிச்சயமாக இராது. அன்னிய செலாவணியிலும் பற்றாக்குறை இருக்காது. நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய இது உதவும்.

சில பிரிவினருக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது - தலித்துகள் ஆதிவாசிகள் நிலமற்றோர் வேலையற்றோர் மற்றும் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்டுள்ள விவசாயிகள். இதுவரை இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் இனி அரசாங்கம் இவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தும். நிதிக்குழுவின் சமீபத்திய மதிப்பீடுகளின் படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களில் 48 சதவீதம் கிராமங்களிலும் 41 சதவீதம் நகரங்களிலும் வழ்கிறார்கள். நல்ல உணவு பெற முடியாமல் இருக்கிறார்கள்.

நமது உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போது பசி எப்படி இருக்க முடியும்? வாங்க சக்தி இல்லை என்பது ஒரு காரணம். சுற்றி நிறைய உணவுப் பொருட்கள் இருந்தாலும் வாங்குவதற்கு பணம் இல்லை என்றால் ஒரு மனிதன் பசியோடுதான் இருந்தாக வேண்டும். எனவே அரசு வறுமை நிலையில், பசியில் உள்ளவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தும். இவர்களுக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றால் இந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருக்க தகுதியற்றது என்றாகி விடும்.

இந்த நாட்டில் ஒவ்வொருவரும் வளர்ச்சி பெற வேண்டும்; விவசாய உற்பத்தி பெருக வேண்டும்; கிராம கைத்தொழில் ஊக்கம் பெற வேண்டும். பிரிட்டிஷார் இங்கே நுழைந்தபோது மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் கிராம கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் இருந்த போதும், 9 சதவீதம் பேர் மட்டுமே தொழில் புரிகின்றனர். லட்சக்கணக்கான கார்கள், டெல்லியிலும் மும்பையிலும் வானை முட்டும் உயர்ந்த கட்டிடங்கள், ரேடியோ தொலைக்காட்சி வைத்திருக்கும் ஏராளமானோர் இருந்த போதிலும், 1707 முதல் 1857 வரையிலான ஜஹாங்கீர், அவுரங்கசீப் காலத்தை விட இன்று நாம் வறிய நிலையில் பலவீனமாக இருக்கிறோம்.

நகரங்களில் வாழும் நண்பர்களே, இந்த அரசுக்கு எதிராக செய்தித்தாள்களில் வரும் பல்வேறு செய்திகளுக்கும் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஒன்று மட்டும் சொல்வேன் - மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே வணிகம், போக்குவரத்து, தொழில்துறை முன்னேற முடியும். கிராமவாசிகளும் வேலையற்றோரும் ஏழைகளும் வாங்கும் சக்தி பெற்றால் அன்றி நமது தொழிற்துறை பெருகாது, நமது நாடும் வசதி பெறாது. விவசாயம் அல்லாத தொழில்களில் பெருவாரி மக்கள் ஈடுபடும் நாடுதான் செல்வந்த நாடாகக் கருதப்படும். நமது நாட்டில் 1951-ல் 10 சதவீதம் பேர் மட்டுமே தொழில்களில் ஈடுபட்டனர்; 1961-ல், 1971-லும் இதே நிலையில் தேங்கி நின்றது. விவசாயமும் வளர்ச்சி பெற்றால் தொழிற்துறையும் பெருகும். வேறு வழி இல்லை. எனவே நாம் கிராமங்களில் குடிசைத் தொழில்கள் பெருக ஊக்கம் அளிப்போம்.

நம்முடைய கிராமத்து பெண்கள் தெருக்களில் கல் உடைக்கிறார்கள். அவர்களுடைய மூதாதையர் என்ன செய்தார்கள்? அவர்கள் சுயமாகத் தொழில் புரிந்தார்கள். குடிசைத் தொழில் செய்தார்கள் கைத்தொழில் செய்தார்கள். பிரிட்டிஷார் காலத்தில் இந்தக் கைத்தொழில்கள் மறைந்து போயின. நாமும் இதைக் கண்டு கொள்ளவில்லை. கிராமங்களில் கைத்தொழில்களை மீண்டும் நிறுவுதலை நாம் வலியுறுத்துகிறோம். பண்ணை உற்பத்தியை அதிகரிப்பதிலும் நாம் முனைவோம். பிற தொழில்களில் ஈடுபட கிராம மக்களை ஊக்குவிப்போம். பெரும்பான்மையோர் நிலத்தை மட்டுமே சார்ந்து இருந்தால், நம்மால் வளமையை எட்ட முடியாது.

நண்பர்களே, மரபுப்படி, நான் 20 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றக் கூடாது. இன்னும் சிலவற்றைக் குறித்து பேச விரும்புகிறேன். ஆனால் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.

மகாத்மா காந்தியின் போதனைகளை உங்களுடைய, எனது சகாக்களுடைய, பொது ஊழியர்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மகாத்மா காந்தி சொல்லுவார் - 'விளைவுகள், வழிகளை நியாயப்படுத்தாது' (ends do not justify means). ஓர் இலக்கை எட்டுவதற்கு, எத்தனை புனிதமான இலக்காக இருந்தாலும், என்ன வழி வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்பது தகாது. புனிதமான இலக்கை அடைவதற்கான வழிகளும் புனிதமாக இருத்தல் வேண்டும். இந்த அறிவுரையை நீங்களும் பொது ஊழியர்களும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இல்லையேல் ஊழலை அகற்ற முடியாது. ஊழலுக்கு எல்லை இல்லை. தலைவராக யார் இருந்தாலும், திட்டங்கள் எத்தனை நல்லதாக இருந்தாலும், ஊழல் புரிகிற மக்கள் கொண்ட நாடு என்றைக்குமே வளர்ச்சி காணாது.

மகாத்மா காந்தி மேலும் சொல்லுவார்: ஒரு பொது ஊழியருக்கு, பொது வாழ்க்கை தவிர்த்து தனி வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. அவரைப் பொறுத்த மட்டில், வாழ்க்கை என்பது ஒன்று (முழுமையானது) அதில் பாகங்கள் கிடையாது. (For Gandhiji, life is one and there is no compartmentalisation) ஒரு மனிதனின் பொது வாழ்க்கை தூய்மையாக இல்லை என்றால், நீங்களே யூகித்துக் கொள்ளலாம், அவனது தனிப்பட்ட வாழ்க்கையும் தூய்மையாக இருக்காது. அவனால் நாட்டுக்கு உண்மையாக சேவை செய்ய முடியாது.

மூன்றாவதாக மகாத்மா காந்தி சொன்ன, அனேகமாக நாம் எல்லோரும் மறந்து விட்ட வாசகம் - 'கடமையை நன்கு புரிவதில் இருந்தே உரிமைகள் பிறக்கின்றன'. நம்மைச் சுற்றிலும், உரிமை கேட்டு அதிக ஊதியம் கேட்டு நிற்போரைப் பார்க்க முடிகிறது. இது சரிதான். மக்கள் தங்களை உரிமைகளைப் பெறுவது அவசியம். ஆனால் அவர்களது உரிமைகள், கடமைகளிலிருந்து பொறுப்புகளில் இருந்து எழுகின்றன. நமது கடமையை சரியாக செய்யவில்லை எனில் எப்படி உரிமைகள் தோன்றும்? உற்சாகமும் கடின உழைப்பும் தேவை. மன்னிக்கவும், நாம் கடினமாக உழைக்கத் தயாராக இல்லை.

நீங்கள் பிற நாடுகளை கவனித்தால் தெரியும். அங்குள்ள மக்கள் தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் பள்ளிகளில் காலை எட்டு மணிக்கு பணி தொடங்குகிறார்கள். மாலை ஐந்து வரை உழைக்கிறார்கள். நடுவே சுமார் 40 நிமிடம் மட்டுமே இடைவெளி. வேலை நிறுத்தங்கள் மிகக் குறைவு. தேவை கேட்டு போராடுவது மிக குறைவு. ஜப்பானில் ஒரு தொழிலாளி, தான் மகிழ்ச்சியாக இல்லை எனில், அந்த மணிக்கட்டில் கருப்பு துணி கட்டிக் கொள்கிறான்; அவ்வளவுதான். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை.

பிற நாடுகள் செழித்து இருக்கின்றன என்றால் அவர்கள் உற்சாகத்துடன் பணிபுரிகிறார்கள். நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அதிக வசதிகள் வேண்டும் அதிகம் சுகம் வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கான விலை கொடுக்கத் தயாராக இல்லை. நாடு என்றாலும், தனி நபர் என்றாலும், தகுந்த விலை தராமல் உலகத்தில் எதுவும் கிடைக்காது. இன்று மேலை நாடுகள் செல்வச் செழிப்புடன் இருக்க, வசதியாய் இருக்க, வறண்ட தரிசு நிலத்தில் மாடு வளர்த்து உலகத்துக்கே தரமான பால் தருகிற நாடாக இஸ்ரேல் இருக்க அந்த நாட்டு மக்களின் கடின உழைப்பே காரணம். நாம் வளமான நாடாக மாற வேண்டுமெனில், கடின உழைப்பைத் தரத் தயாராக இருக்க வேண்டும். இது எனக்கும் எனது அமைச்சவை சகாக்களுக்கும் கூடத்தான். குறையாத கடின உழைப்பால் மட்டுமே நாம் முன்னேற முடியும்.

அயல் உறவு கொள்கையைப் பொருத்தமட்டில், யாரோடும் அணி சேர மாட்டோம் என்கிற நமது கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து உறுதியாக இருப்போம். காரணம் இதுதான் நமது நாட்டுக்கு நன்மை பயக்கும். எத்தனை வலுவான நாடாக இருந்தாலும் அதன் பக்கம் சார மாட்டோம். மகாத்மா காந்தியின் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உலகில் அமைதி ஏற்படுத்த முடியும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதே முடிவையே உலகம் பின்பற்றும் - இன்று அல்லது நாளை அல்லது நாளை மறுநாள்.

நம்முடன் ஒரு அங்கமாக இருந்த நமது அண்டை நாடு பாகிஸ்தான் குறித்து நான் பேச விரும்புகிறேன். அணுகுண்டு தயாரிக்க பாகிஸ்தான் முயல்வதாகக் கேள்விப்படுகிறோம். யாருக்கு எதிராக அவர்கள் இந்த குண்டை தயாரிக்கிறார்கள்? சீனாவுடன் நட்பாக இருக்கிறார்கள். ரஷ்யா உடன் எந்த சச்சரவும் இல்லை. எனவே நானோ என்னுடைய சகாக்களோ அல்லது நமது நாட்டு மக்களோ இந்தியாவுக்கு எதிராக தான் இதை தயாரிக்கிறார்கள் என்று கருதினால் அது உண்மைக்கு மாறானது அல்ல.

அணுகுண்டு தயாரிப்பது இல்லை, அணு ஆயுதப் போட்டியில் இணைவதில்லை என்பது நமது முடிவு. ஆனாலும், பாகிஸ்தான் தாழ்ந்த முடிவில் தீர்மானமாக இருந்து தொடர்ந்து குண்டுகளை தயாரித்தால், நானும் எனது சகாக்களும் நமது முடிவை மறுபரிசீலனை செய்ய உந்தப்படுவோம்.

இத்துடன், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட எல்லா ஜனநாயக சக்திகளும் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து எனது அரசுக்கு உதவ முன் வருமாறு வேண்டுகிறேன். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 32 - “நம்பிக்கையுடன் முன்னேறுவோம்” | 1978

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x