Published : 19 Oct 2023 07:18 PM
Last Updated : 19 Oct 2023 07:18 PM

செங்கோட்டை முழக்கங்கள் 28 - ‘உற்பத்தி பெருகும்... எதிர்காலம் ஒளிரும்’ | 1974

27-வது சுதந்திர தினக் கொண்டாட்டம். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் எதிர்காலம் பற்றிய தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி மக்கள் உற்சாகத்துடன் உழைக்க அழைப்பு விடுத்தார்.

1974 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - இதோ: இந்தியக் குடிமக்களே.. உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்! தமது நீண்ட வரலாற்றில் இந்திய மக்கள் பல துயரங்களை பல சோதனைகளை தாண்டி வந்துள்ளனர். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது இப்போது சந்தித்து வரும் பொருளாதார பிரச்சினை. எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், என் இதயத்தில் வருத்தமே நிறைந்து இருக்கிறது. நீங்கள் சந்தித்து வரும் இன்னல்களை நான் அறிவேன். வெள்ளம் வறட்சியும் உங்கள் இன்னல்களை இன்னமும் மோசமாக்கி உள்ளன. இந்த நேரத்தில் உங்களுக்கு என் அனுதாபங்கள்.

இப்போதெல்லாம் நம்முன் உள்ள மிக முக்கிய பிரச்சினையே அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும்தான். இந்த சூழலுக்கு நாம் உள்ளாகக் காரணம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என்று கருத வேண்டாம். நம்முடைய சாதனைகளும் நம்முன் உள்ள நெருக்கடிகளும் சவால்களும் சேர்ந்தே நம்மை இன்னலுக்கு உள்ளாக்கி உள்ளன. இந்த சமயத்தில் இந்த இன்னல்கள் ஏன், எவ்வாறு விளைந்தன என்று வாதித்துக் கொண்டிருக்க வேண்டாம். பதிலாக, அனைவரும் இணைந்து எவ்வாறு இதில் இருந்து வெளிவருவது என்று சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் பல நெருக்கடிகளை இந்திய மக்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். செல்வச் செழிப்பு மிக்க நாடுகள் கூட பழைய யுக்திகளைக் கொண்டுதான் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்கின்றன. பழைய மற்றும் புதிய யுத்திகளைக் கலந்து கையாள்வதன் மூலம் நமது பணிக்கு நல்ல விளைவு கிட்டும்.

இரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு வந்ததும் அது உற்பத்தியைப் பெருக்கும் என்று அறிந்ததும் நம் விவசாயிகள் பசுமை உரங்களை முற்றிலுமாக ஒதுக்கி விட்டார்கள். ரசாயன பற்றாக்குறையை போக்குவதற்கு மட்டுமல்ல, மண் வளத்தை அதிகரிக்கவும் ரசாயன உரங்களுடன் பசுந்தாள் உரங்களையும் பயன்படுத்துவது அவசியம்.

இதேபோன்று, மின் தேவையிலும் பற்றாக்குறை இருக்கிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பெட்ரோலிய தட்டுப்பாடும் இருக்கிறது. எண்ணெய் கண்டுபிடிக்கிற முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். மாற்று சக்திக்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மின்சாரப் பயன்பாடு பற்றிய வழிகளை ஆராய வேண்டும். கோபர் வாயு தொழிற்சாலை ஓர் உதாரணம் என்பேன்.

புதிய கண்டுபிடிப்பு என்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. நகரவாசி, கிராமவாசி என எல்லாருமே புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்; செயல்படுத்த வேண்டும். போருக்கான செலவு மற்றும் வறட்சி நிவாரண செலவுகளை அரசு ஏற்க வேண்டி வந்தது. இவை அல்லாமலும் தவிர்க்க முடியாத பல செலவுகள் கூடிவிட்டன. இதனால் நிதி நெருக்கடி அதிகரித்து விட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டு அரசுடன் ஒத்துழைக்கிற போது, நிலைமையை வெற்றிகரமாக சமாளிக்கலாம்.

நமது விவசாயிகள் கணிசமான அளவுக்கு உதவியும் ஊக்கமும் பெற்றனர். விவசாயமா.. தொழில் துறையா... எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று விவாதம் நடைபெறுகிறது. இதில் முரண்பாடு ஏதும் இல்லை. இரண்டுமே ஊக்குவிக்கப்பட வேண்டும். நம்முடைய விவசாயிகள் தாம் நமக்கு உணவு வழங்குகிறார்கள். அவர்களை உழைப்பினால் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் விவசாய உற்பத்தி பெருகும். கிராமப்புற மேம்பாடு விரிவடையும். அங்குள்ள ஒவ்வொரு நிலத்திலும் பயிரிட வேண்டும்.

விளைநிலம் வீணாகக் கூடாது. இது விவசாயிகளின் கடமை. இதில் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். உரங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. ரசாயன உரங்களுக்கான தேவை வெகுவாகப் பெருகியிருக்கிறது. ஆனால், உர உற்பத்தி குறைந்து விட்டது. சிறு விவசாயிளும் இன்று ரசாயன உரத்தை நாடுகின்றனர். இவர்கள் மாற்றத்துக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்பதில் மகிழ்ச்சி தான். விவசாய உற்பத்தியில் நல்ல வளர்ச்சி கொண்டிருக்கிறோம். உற்பத்தி, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது வளர்ச்சி குறைவுதான். குறிப்பாக இந்த ஆண்டில் உரப் பற்றாக்குறை, தரமான விதைகளுக்குப் பற்றாக்குறை, நமது இன்னல்களை அதிகரித்து விட்டது. ஆனாலும், தாங்க முடியாத அளவுக்குப் பற்றாக்குறை இல்லை. சில வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; பழைய வழிமுறைகளை மாற்றியாக வேண்டும்; சிறிது சங்கடப்படவும் நேரும். இதை நாம் ஒப்புக் கொண்டால், இன்றைய நிலைமை கட்டுக்கடங்காதது அல்ல (என்பது தெரியும்). எதுவுமே நடைபெறவில்லை என்று கருதுவது அபாயகரமானது. இது போன்ற சமயங்களில் நம் அனைவருக்குமே பொறுப்பு இருக்கிறது. அரசுக்குத்தான் முதன்மைப் பொறுப்பு இருக்கிறது. நாம் பின்வாங்க மாட்டோம்.

அரசின் செலவுகளைக் குறைக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சில நல்ல திட்டங்களை, இப்போதைக்கு அத்தனை அவசியமில்லை என்பதால் கைவிட்டுள்ளோம். அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுக்கப் படுகின்றன. தேவையற்ற நுகர்வுப் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து அத்தியாவசிய பொருட்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. ஊதியம், அகவிலைப்படியை நிறுத்துவதோ குறைப்பதோ நமது விருப்பம் அல்ல. இவற்றில் ஒரு பகுதி செலவை சேமித்து வைக்கலாம். இது நமக்கு நல்ல வட்டி தரும். இந்தத் தொகை நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பயன்படும்.

விவசாயிகள் தம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது போலவே தொழில்துறையும் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் உபகரணங்கள் டிராக்டர்கள் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும். பல கோடி ரூபாயில் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் இவை உற்பத்தி ஆகின்றன. விவசாயிகள் இந்த நாட்டுக்கும் இந்த அரசுக்கும் உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறோம். உரப் பயன்பாட்டைப் பெற்ற வசதி படைத்த பெரு விவசாயிகள் கிராமப்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவ வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளலாம். கிராமங்களில் அதிக விழிப்புணர்வு, அதிக உற்பத்தியைத் தரும். உற்பத்தி பெருகும் போது கிராமங்களில் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் கிடைக்கத் தொடங்கும்.

இன்று வரிகளை உயர்த்துவதால் யாருக்கு சுமை கூடுகிறது? பல பெரிய மனிதர்கள் வரி விதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. சிலர் இன்னும், வரி செலுத்துபவராகக் கூட மாறவில்லை. என் முன்னால் பழைய 'சாந்தினி சவுக்' (தில்லியின் புகழ்பெற்ற அங்காடித்தெரு) பார்க்கிறேன். இதேபோன்று பிற மாநகரங்களிலும் தொன்மையான அங்காடித் தெருக்கள் இருக்கலாம். எல்லா வணிகர்களும் மோசமானவர்கள் அல்லர். சிலர் செய்கிற தவறு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சேர்கிறது. சிலர் - வரி செலுத்துவது இல்லை; உணவுப் பொருட்களில், மருந்துகளில் கலப்படம் செய்கிறார்கள்; பதுக்கலில் கள்ளச் சந்தையில் ஈடுபடுகிறார்கள்; கருப்பு பணம் ஈட்டுகிறார்கள்; நாட்டுக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள். தனிநபர் ஆதாயத்துக்காக நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாது, பொதுமக்களின் இன்னல்களை வைத்து சுரண்டுகிறார்கள். இது இந்தியா என்கிற நற்பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகும்.

இது மற்றவர்களின் எதிர்காலம் பற்றியது மட்டுமல்ல. அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் கூட. பெரிய மனிதர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஒப்பந்ததாரர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சுயதொழில் செய்வோர் உள்ளிட்ட பலரும் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிற போது, நிலையான ஊதியம் பெறுவோர் மொத்தத்தையும் சுமக்க வேண்டியது ஆகிறது. எல்லா வகையிலும் இவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.

நில உச்சவரம்பு வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இப்போதைக்கு நகர நில உச்சவரம்பை எடுத்துக் கொண்டுள்ளோம். நகரங்களில் பல பெரிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். இவர்களைக் கொண்டு என்ன செய்யலாம் என்று பார்க்கிறோம். பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீதான வரி அதிகரிக்கப் பட்டுள்ளது. இவர்களின் சொத்துகளைக் கட்டுப்படுத்த வேறு சில நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகிறோம். பிற நகரவாசிகளின் சுமைகள் அதிகரிக்கும் போது, இந்தச் சுமையை எல்லாரும் பகிர்ந்து கொள்ளாத போது, தேசம் முன்னேற முடியாது.

இந்த நாடு விவசாயிகளின் தொழிலாளிகளின் தொழிற்சாலை மேலாளர்களின் உழைப்பை சார்ந்தே இருக்கிறது. நகரவாசிகளும் கிராமவாசிகளும் இவர்களைச் சார்ந்தே உள்ளனர். எல்லா தொழிலாளர்களும் எல்லா மேலாளர்களும் சரியாகப் பணி புரிந்து உற்பத்தியைப் பெருக்கினாலே விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் நாம் உதவ முடியும்.

இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. எதிர்காலத்திலும் இது ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கவே செய்யும். இவற்றை நாம் ஒற்றுமையாய் எதிர் கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடி காலங்களின் போது, வசதி படைத்த மனிதர்கள், வசதி படைத்த நாடுகள் சமாளித்துக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்கள் தாம் பொருளாதாரச் சுமையில் நசுங்கிப் போகிறார்கள். இந்தியா ஒரு ஏழை நாடு. இந்திய மக்கள் ஏழைகள். ஆனாலும் பொருளாதார நெருக்கடி சுமைகளில் நாம் நசுங்கி விட மாட்டோம். கடந்த காலத்தில் பல சுமைகளை தாங்கியுள்ளோம். பெரும் இன்னல்களில் இருந்து மேலும் வலிமையுடன் வெளிவந்துள்ளோம்.

சமூக தீமைகளிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று நாம் பரிசீலிக்க வேண்டும். வன்முறை மூலம் இவற்றைத் தீர்க்க இயலுமா? போராட்டங்களின் மூலமோ நமக்குள் சண்டை இட்டுக் கொள்வதன் மூலமோ தீர்க்க முடியுமா? இவை மிகப்பெரிய பிரச்சினைகள். அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு தீர்க்க வேண்டிய பிரச்சினைகள். அரசுக்கு மிக நிச்சயம் பொறுப்பு இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு குடிமகனும் தீர்வுக்கு உதவலாம். வெளிச்சந்தையில் ஒரு பொருள் கிடைக்கவில்லை, அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கிறது என்றால் அந்தப் பொருள் இல்லாமலே சமாளிப்பதற்கு பெண்கள் உறுதி பூண வேண்டும். ஏன் முடியாது? வீட்டை சுற்றி இடமில்லை என்றால் சிறிய டப்பாக்களில் தாவரங்கள் பயிரிடலாம்.

நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவலாம். சுற்றி நடக்கும் சமூகத் தீமைகளை அகற்றுவதில் உதவலாம். தேவைப் படுவோருக்கு உதவிக்கரம் நீட்டலாம். இதையெல்லாம் எல்லாத் தரப்பு குடிமக்களும் செய்ய முடியும். இது தமக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் உதவியாக இருக்கும், வலிமை சேர்க்கும். நல்லது நடக்கும் போது அளவுக்கு மீறி கொண்டாடுகிறோம். நெருக்கடி நேரும்போது மனம் உடைந்து போகிறோம்; தேசம் மொத்தமும் தளர்ந்து போனது போல் தோன்றும். மனம் தளர்வடைவதால் எந்த நெருக்கடியும் எப்போதும் தீர்ந்து போனதில்லை.

இன்றுள்ள பற்றாக்குறை பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை ஏற்கனவே விளக்கி உள்ளேன். மேலும் சில காரணங்களும் உள்ளன. அதில் ஒரு காரணம் - மக்கள்தொகை வேகமாகப் பெருகி வருகிறது; அதனால் (பொருட்களுக்கான) தேவையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. இன்று கிராமங்களில் கூட சைக்கிள், மோட்டார் சைக்கிள், டிரான்சிஸ்டர் ரேடியோ சாதாரணமாகி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி இருந்தது இல்லை. இது நல்லதுதான். ஆனால் நமது கிராமங்களில் நகரங்களில் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் எனில் மக்கள் தொகைப் பெருக்கத்தை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும். இதுகுறித்து ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து தனது கடமையைச் செய்ய வேண்டும்.

எத்தனை கடுமையான இன்னல் வந்தாலும் நாம் சோர்வு அடைவதில்லை; மேலும் வலிமை பெறுவதற்கான நமது முயற்சியைக் கைவிடுவதும் இல்லை. சமீபத்தில் நாம் அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்திக் காண்பித்தோம். தவறான புரிதல்கள், தவறான கண்ணோட்டங்கள் காரணமாக சிலர் கண்டனம் தெரிவித்தனர். சிலர் இதையே நம் மீது களங்கம் ஏற்படுத்த ஒரு வழியாகக் கொண்டனர். நாம் உறுதிபட அறிவித்தோம் - அணுசக்தியோ, வேறேதும் சக்தியோ.. மக்களுடைய நன்மை, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

சர்வதேச அரங்கில் பல புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன; பல புதிய சக்திகள் உருவாகியுள்ளன. எல்லோரோடும் நட்புறவை வளர்க்கவே முயல்கிறோம். நீங்கள் கவனித்து இருப்பீர்கள். இந்த நட்புறவு வளர்ந்து வருகிறது. பதற்றம் தணித்து நட்புறவை வலுவாக்கும் உடன்படிக்கைகளை நமது அண்டை நாடுகளுடன் செய்துள்ளோம். இது உலகம் அனைத்துக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும். ஆனால் நமக்கு அருகே உள்ள ஓர் அண்டை நாடு கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுத்து தொடர்ந்து நம்மையும் அதன் மற்ற அண்டை நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அமைதி குலையாது என்று நம்புகிறோம். இந்த மண்டலத்தில் உள்ள ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்ட எல்லா நாடுகளும் தமிழ் சமூக பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும்; பிற பிரச்சினைகளால் கவனம் திசைமாறிப் போகாமல் பார்த்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். இருந்தாலும் அத்தனை பிரச்சினைகளுக்கு இடையிலும் வெளியில் இருந்து வருகிற அபாயங்களை உதாசீனப் படுத்தாமல் எப்போதும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வோம்.

கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாடு மென்மேலும் வலிமை பெற்று வருகிறது. நம்முடைய நீண்ட வரலாற்றில் இரண்டு பிரச்சினைகள் எப்போதும் இருந்துள்ளன. பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. பல அகதிகளுக்கு தஞ்சம் தர வேண்டியிருந்தது. ஆனாலும் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்; தொடர்ந்து முன்னேறுவோம். எக்காரணத்தை முன்னிட்டும் மனம் சோர்ந்து விட வேண்டாம் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன். இந்திய நாட்டின், இந்திய மக்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து உற்சாகமாய் இருங்கள்.

நமது இளைஞர்கள் சில சமயங்களில் அமைதியின்றித் தோன்றுகிறார்கள். இது இயல்புதான். இந்த அமைதியின்மையும் போராட்டமும் எந்த வடிவில் வெளிப்பட வேண்டும்? தம்முடைய வலிமையைக் குலைக்கிற வகையிலா? தமது வலிமையைக் கூட்டுகிற வகையிலா? நம்மை விடவும் இளைஞர்களுக்கு தான் வலிமையான இந்தியா அதிகம் தேவைப்படுகிறது. அதேபோன்று, இந்த நாட்டுக்கும் ஆர்வம் மிக்க இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி இன்னல்களில் இருந்து விடுபட வேண்டும்.

இருளுக்கு அப்பால் ஒளிமயமான இந்தியாவைக் காணும் தொலைநோக்குப் பார்வை வேண்டும். இன்னல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறாமல் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. நமக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட திசையில் நாம் வெகு வேகமாக வளர்ந்தாக வேண்டும். வறுமை வேற்றுமை சமூக சேவைகள் மற்றும் விரக்தி ஆகிய தடைகளை நீக்கி முன்னேற வேண்டும்.

என் முன்னால் ஏராளமான சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது கிராமங்களில் இருக்கும் பல கோடி குழந்தைகள் நினைவுக்கு வருகிறார்கள். இவர்களுக்கு எது மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோம்? பெருமை மிகுந்த தொன்மையான கடந்த காலத்துக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இடையிலான நிகழ்காலம் என்னும் பாலத்தில் இருக்கிறோம். நம் மீது மிகுந்த பொறுப்பு இருக்கிறது. நாம் எல்லோரும் சேர்ந்து இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம். குழந்தைகள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.

இன்று இந்தியா மீது உலகம் வைத்திருக்கும் மதிப்பு, நம்முடைய கொள்கைகளால், நம்முடைய செயல்களால் வந்தது. சமாதானம் நல்லுறவுக்கான கொள்கை, இந்தியாவை வலிமையாக்கும் கொள்கை, சமத்துவம் சோசலிசத்தைக் கொண்டு வரும் கொள்கை... இந்தக் கொள்கைகள் வெளிநாட்டில் இந்தியாவுக்கு மதிப்பு சேர்த்துள்ளன. இந்தக் கொள்கைகளை மேலும் கொண்டு செல்வது நமது பொறுப்பாகும். இந்தியா வலிமையாக இருக்கிறது. ஆனால் எந்த அளவுக்கு வலுவாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு வலுவாக இல்லை. விரக்திக்கு இடம் தராமல் நம் எல்லா இன்னல்களையும் நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இந்தியா வலுவாக இருக்கும். இதை நம்மால் செய்ய இயலுமா இயலாதா? நிச்சயமாக இயலும். இது அரசையும் ஒவ்வொரு மனிதனையும் சார்ந்தது.

கருமேகங்கள் சூழ்கிற போது இதற்கு முன்னர் சூரியனும் ஒளியும் இருந்தது என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். சூரியனும் ஒளியும் எப்போதும் இருக்கின்றன. யாரால் பார்க்க முடிகிறதோ யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு சூரியனும் ஒளியும் இருக்கின்றன. இந்த மனிதர்கள் இவைகளைப் பார்ப்பது மட்டுமல்ல; இவர்களை நோக்கி, தாமே செல்கின்றனர். இந்தியாவையும் இட்டுச் செல்கின்றனர். இதுதான் இன்றைய நாளின் செய்தி. இந்திய சுதந்திரம் அத்தனை எளிதில் கிடைத்தது அல்ல. நம்முடைய சுயநலமற்ற தியாகத்தினால், நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது ஏதோ ஒரு துண்டுத் துணி அல்ல. நமது கொடியை நாம் மிகுந்த மரியாதையுடன் வைத்துள்ளோம்.

ஒவ்வொரு தேசக்கொடியும் அதனுடைய தேசத்தால் வலிமை பெறுகிறது. தேசக் கொடியின் மாண்பைப் பாதுகாக்க நமது வீரர்கள் உயிரையும் தரத் தயாராக உள்ளனர். எதற்காக? ஏனெனில் தேசியக்கொடி - ஒரு நாட்டின் நம்பிக்கை துணிச்சல் மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடு. அதனால்தான் கொடிக்கு அதிக மரியாதை தரப்படுகிறது. வெறுமனே சொற்களால் மட்டும் பெருமை கூறுவது அல்ல; கம்பத்தில் கொடியேற்று வதால் மட்டும் பெருமை வந்து விடாது. பட்டொளி வீசிப் பறப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.

போரின் போது நமது பதாகைகளை உயர்த்திப் பிடிப்போம். அதே சமயம், அதன் மாண்பை சீர்குலைக்கும் வகையில் எதுவும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கொடியின் மாண்பை உயர்த்திவிட நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். நமது கொடி எப்போதும் பட்டொளி வீசிப் பறக்க என்ன செய்யலாம்.. நமது குழந்தைகளும் நமது இளைஞர்களும் ஒளிமயமான எதிர்காலம் பெறுவதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்பதை இன்றே தீர்மானிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 15 - தியாகத்துக்கான நாள். நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற நாளும்தான். ஏழை - பணக்காரர், வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு மொழிகள் கொண்ட மக்கள் எல்லாரிடத்தும் பரஸ்பர அன்பு நட்பு ஒற்றுமை நிலவினால் அன்றி எதையும் சாதிக்க முடியாது. சாதியம், மதவாதம் நம்மை பலவீனப்படுத்துகிறது. சில விதங்களில் இவற்றை நாம் கட்டுப்படுத்தி இருந்தாலும் சில இடங்களில் இவை மிகுந்து காணப்படுகின்றன. நம்மால் சில சமயங்களில் சமூகத் தீமைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனும்போது அவற்றை ஏன் முழுமையாக அகற்றி விட முடியாது? எப்போதும் அடக்கப்பட்ட எப்போதும் நீதி மறுக்கப்பட்ட மக்களை நாம் ஏன் உயர்த்தி விட முடியாது?

என்னுடைய இதயம் முழுவதும் வருத்தமும் துயரமும் நிரம்பி இருப்பதாகச் சொல்லி இந்த உரையைத் தொடங்கினேன். நம்முடைய எதிர்காலம் குறித்து அளவுக்கு மீறிய உற்சாகம் நமக்கில்லை. நாம் வருத்தத்தில் இருக்கிறோம். சுமைகளை ஏற்று இருக்கிறோம். இருந்தாலும் ஒளிமயமான எதிர்காலம், வெகு தொலைவில் இல்லை; அருகிலேயே தெரிகிறது. ஒவ்வோர் அடியாக நகர்ந்து நமது இலக்கை எட்டுவோம். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள தீமைகளும் இன்னல்களும் அடுத்த ஆகஸ்ட் 15-க்குள் அகன்று விடும். நமது நாடு இருளில் இருந்து ஒளிக்குள் நுழையும் தன்னம்பிக்கையுடன் நாம் அனைவரும் முன்னேறுவோம்.

இங்கே எதிரில் இருப்பவர்களுக்கும் வானொலி மூலம் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் நாடு முழுவதும் உள்ள எல்லோருக்கும் நல்ல வளமான எதிர்காலத்துக்கான வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். சீருடை அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனைவரும் இந்தியாவின் வீரர்கள். ஒரு தூய வீரனைப் போல நிமிர்ந்து நிற்போம். வைராக்கியத்துடன் தொடர்ந்து முன்னேறி நடப்போம். ஜெய்ஹிந்த்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x