Published : 31 Dec 2022 06:28 PM
Last Updated : 31 Dec 2022 06:28 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு 2023 எப்படி? - புத்தாண்டு பலன்கள்

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்): இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழக மாட்டீர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்த 2023-ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமை கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடியும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுக்கிரனும், புதனும் வலுவாக இருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குருபகவான் 23.4.2023 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் தேவையில்லாத வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

குருபகவான் 24.4.2023 முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்துக் கிடந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்சினைகளெல்லாம் வந்து செல்லும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது, விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

இந்தாண்டின் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் சுகஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். 17.01.2023 முதல் சனிபகவான் 5-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீக சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.

உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதி காரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். சம்பள பாக்கி கைக்கு வரும்.
இந்த 2023-ம் ஆண்டு வேலைச் சுமை, மன அமைதியின்மையைத் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: சூரியனார்கோவிலுக்கு அருகிலுள்ள கஞ்சனூரில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை): அரசன் முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் குறைகூறி பேசுவார்கள். சடங்கு, சம்பிரதாயங்களை விட சுய கவுரவத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்கு கூடும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். இயலாத காரியங்களையும் இங்கிதமானப் பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். செலவுகள் உங்களை தொடர்ந்து வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு முடிவுகள் தெரியும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணி முழுமையடையும். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கி, பாசமழை பொழிவார்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

ஆனால் குருபகவான் 24.4.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண் டென்ஷன், விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன் - மனைவிக்குள் சந்தேகம், விவாதங்கள் வந்து போகும். பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். ராகுவும் 6-ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.

சனிபகவான் இந்த புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3-வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ஆனால் 17.1.2023 முதல் சனிபகவான் 4-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும்.

வியாபாரிகளே! இந்தாண்டு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மே மாதம் முதல் குரு மறைவதால் திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் பிரிவு வரக்கூடும். உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழல் உருவாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும்.

இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளை தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள புன்னைநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமாரியம்மனை எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள். வழக்கால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்): அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நீங்கள், அதை அடுத்தவர்களுக்காக மட்டும் பயன்படுத்துவீர்கள். அதிகம் ஆசைப்படாமல் அடுத்தவர் சொத்து மீதும் கண் வைக்காமல், உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்கள் நீங்கள் தான். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது இந்தாண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்று புது சொத்து வாங்குவீர்கள்.

23.4.2023 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களை சந்தித்து அருளாசி பெறுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம்.

ஆனால் குருபகவான் 24.4.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுடைய கையில் கொஞ்சம் காசு, பணம் வர ஆரம்பிக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும்.

மகன் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் மனம் மாறி வலிய வந்து பேசுவார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநிலப் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 17.01.2023 முதல் சனிபகவான் 3-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் உங்களின் புகழ், கவுரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். இக்காலகட்டத்தில் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். ஏற்றுமதி -இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் அதிசயிக்கும்படி நடந்து கொள்வார்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும்.

ஆக மொத்தம் இந்த 2023-ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தன் கையே தனக்கு உதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாளை அமாவாசையன்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். மதிப்பு கூடும்.

அனைத்து ராசிகளுக்கான 2023 புத்தாண்டு பலன்கள்

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x