Published : 31 Dec 2022 06:17 PM
Last Updated : 31 Dec 2022 06:17 PM

கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு 2023 எப்படி? - புத்தாண்டு பலன்கள்

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்): நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருக்கும் நீங்கள், மற்றவர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாதம், விவாதம் என வந்து விட்டால் வளைத்து கட்டிப் பேசும் நீங்கள் பொதுவாக மவுனத்தை விரும்புவீர்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். உங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுக்க பிள்ளைகளுக்கு அருமையாக இருக்கும். சூரியன் 6-ம் வீட்டில் வலுவடைந்திருப்பதால் நிலுவையில் இருந்த அரசுக் காரியங்கள் உடனே முடியும். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உறவினர்கள், நண்பர்களுக்காக அதிகம் உழைக்க வேண்டி வரும்.

இந்தாண்டு தொடக்கம் முதல் 23.4.2023 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீட்டு மனையை புதிதாக வாங்குவீர்கள். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். 24.04.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

இந்தாண்டு தொடக்கத்தில் 7-ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் கணவன் - மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். அதற்கு நீங்களும் இடம் கொடுக்க வேண்டாம். 17.01.2023 முதல் சனிபகவான் 8-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும்.

வியாபாரிகளே! போட்டிகளை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்வீர்கள். சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். சிலர் கடையை நவீனமாக்குவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! சூட்சுமங்களை உணருவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

இந்த 2023-ம் வருடம் உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை திருவொற்றியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவடிவுடையம்மனை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குங்கள். நிம்மதி கிட்டும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் இந்த 2023-ம் ஆண்டு பிறப்பதால் பணவரவு சரளமாக உயரும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். பூர்வீக சொத்தை சீர்செய்வீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். சுக்ரன் 6-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

23.04.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். 24.04.2023 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். விஐபிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றி மூலம் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 17.01.2023 முதல் சனிபகவான் 7-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்து போகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைபயிற்சியும் இருக்கட்டும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக் கூடும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும்.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். கண்டகச் சனி தொடங்கயிருப்பதால் சின்னச் சின்ன நஷ்டங்கள் இருக்கும். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். புது வாய்ப்புகள் தேடி வரும்.

ஆக மொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகள், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினாலும் தன்னம்பிக்கை யால் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: தென்காசிக்கு அருகிலுள்ள திருமலைக் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதிருமலைக் குமார சுவாமியை வியாழக்கிழமையன்று தரிசனம் செய்யுங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள். எதிலும் ஏற்றம் கிட்டும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்): எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் பிரதிபலன் பாராத சேவையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பவர்கள். எல்லோரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பும் நீங்கள், காலம் கடந்து தான் சிலரின் கல்மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கனிவான பேச்சால் காரியத்தை முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அத்தியாவசியச் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை வெளியாரிடம் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம்.

23.04.2023 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளால் உங்களை மதிக்காத உறவினர்கள் முன்னால் மதிக்கப்படுவீர்கள். தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

24.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். வழக்கை நிதானமாக கையாளுங்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவார்கள். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். 17.01.2023 முதல் சனிபகவான் 6-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு, வாகன அமைப்பு போன்ற சுபப்பலன்கள் உண்டாகும்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும்.

வியாபாரிகளே! லாபம் உண்டு. சில்லறை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போர்டிங், லாட்ஜிங், கட்டுமானப் பணி, டிராவல்ஸ், ஏஜென்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் சில நேரங்களில் முரண்டு பிடித்தாலும் இறுதியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். இடமாற்றம் உண்டு. புது சலுகைகளும் கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

ஆக மொத்தம் இந்த 2023-ம் ஆண்டில் குருபகவான் சின்னச் சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், சனிபகவான் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்குவார்.

பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை நெய் விளக்கேற்றி தரிசியுங்கள். பழைய கல்வி நிறுவனத்தை புதுப்பிக்க உதவுங்கள். மேலும் வெற்றி பெறுவீர்கள்.

அனைத்து ராசிகளுக்கான 2023 புத்தாண்டு பலன்கள்

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x