Published : 08 May 2020 11:16 am

Updated : 08 May 2020 11:17 am

 

Published : 08 May 2020 11:16 AM
Last Updated : 08 May 2020 11:17 AM

ஆண், பெண் பாரபட்சமற்ற நட்புக்கு உரிய நட்சத்திரக்காரர்கள்! 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 37 ; 

27-natchatirangal-a-to-z-37

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் அஸ்தம். இது சந்திரனின் நட்சத்திரம் பற்றியது. இந்த நட்சத்திரம் கன்னி ராசியில் இடம் பெற்றிருக்கும். கன்னி ராசி புதனின் ஆட்சி மற்றும் உச்சம் வீடாகும். நட்சத்திர வரிசையில் இது 13- வது நட்சத்திரம்.

அபயஹஸ்தம் எனும் வார்த்தையைக் கேட்டிருப்பீர்களே. எல்லா தெய்வங்களும் இந்த அபயஹஸ்தம் என்னும் முத்திரையை காட்டிய வண்ணம் “நான் இருக்கிறேன், கவலை வேண்டாம்” என்று சொல்வதுபோல், தனது உள்ளங்கையைக் காட்டி அருளியவாறு காட்சி தருவார்கள். அந்த உள்ளங்கைதான் அஸ்தம் நட்சத்திரம்.
காலையில் எழுந்ததும் கண் விழித்துப் பார்க்க வேண்டியவை என சில விஷயங்களைச் சொல்லிவைத்திருக்கிறது சாஸ்திரம். கண்ணாடி, கோயில் கோபுரம், குழந்தையின் முகம் என்ற வரிசையில் முதலாவதும் மிக முக்கியமானதும் நமது உள்ளங்கைதான். வலது உள்ளங்கையில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். உள்ளங்கையைப் பார்ப்பதால் நன்மைகள் அதிகம், செல்வம் சேரும். தீமைகள் குறையும் என்கிறது சாஸ்திரம்.

நவகிரகங்களின் தலைவன் சூரியபகவான். அந்த சூரிய பகவானே பிறந்தது இந்த அஸ்தம் நட்சத்திரத்தில்தான். அதனால்தான் அஸ்த நட்சத்திரக்காரர்கள் புகழ் வெளிச்சம் தனக்கு கிடைக்கவேண்டும் என ஏங்குபவர்களாக இருப்பார்கள். இந்தப் புகழ் வெளிச்சம் எங்கு உடனடியாக கிடைக்கும்? சந்தேகமேயில்லாமல் திரைத்துறையில்தான்!
ஆமாம். கலைத்துறையில் இருக்கும் பெரும்பாலானோர் அஸ்தம் நட்சத்திரக்காரர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்களே அதிகம். ஆனால் குறிப்பிட்ட காலம் வரைதான் மின்னுவார்கள். பிறகு பழைய பெருமைகளை நினைவு கூர்ந்து காலத்தை ஓட்ட வேண்டியதுதான். இதற்கும் காரணம் உண்டு! இந்த கன்னி ராசியில்தான் கலைக்கு அதிபதியான சுக்கிரன் நீசம் அடைகிறார்.


இந்தப் படத்தை பார்த்தால் புரியும். கைகளைப்போலவும், கிரீடம் போலவும் காட்சி அளிப்பதைப் பாருங்கள்.

விபரீதமாக அல்லது விபத்தாக அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு, அரசியல் பதவியும் கிடைக்கும். காரணம் இந்த கிரீட வடிவம். ஆனால், அதில் பொதுநலத்தை விட சுயநலமே அதிகமிருக்கும் இவர்களுக்கு!


அஸ்தம் நட்சத்திரக்காரர்கள், வசதி வாய்ப்பு மிக்கவர்கள். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். கல்வியில் அபாரமானவர்களாகத் திகழ்வார்கள். கணிதத் திறமை மிக்கவர்கள். படிப்பாளிகள். நுட்பமான விஷயங்களையும் எளிதில் அறிந்து கொள்பவர்கள். கதை, கவிதை, ஓவியம், சிற்பம், நாட்டியம், நடிப்பு என பல திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் இவர்கள். நமக்கெல்லாம் தெரியாத நிறை குறைகள் இவர்களின் கண்களுக்குப் பளிச்சென தெரியும். அவ்வளவு கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள்.

பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் பிறந்தது அஸ்தம் நட்சத்திரத்தில்தான். இதில் நகுலன் குதிரைகளின் மொழிகளையும் அறிந்தவன். சிறந்த குதிரைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவன். பாண்டவர் படைகளுக்குத் தேவையான குதிரைகளைத் தேர்ந்தெடுப்பது இவன் பொறுப்பு.

சகாதேவன் ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணன். சகாதேவன் நாடி முறை என தனியாக ஜோதிட சாஸ்திரமே உண்டு. ஜோதிட சாஸ்திரம் முழுக்க அறிவியல் கிடையாது, 95 சதவிகிதம் கணிதம்தான். கணிதத் திறமையாளர்கள் மட்டுமே ஜோதிடத்தில் நிபுணராக முடியும். இன்னும் இன்னுமாக திகழும் சகாதேவன் பெருமைகள் நீங்கள் அறிந்ததே!

ராமாயணத்தை எழுதியது வால்மீகி. ஆனால் ராமாயணத்தை உலகம் முழுக்க பரவ காரணமாக இருந்தவர்கள் யார் தெரியுமா? ஶ்ரீராமச்சந்திரனின் மகன்களான லவனும் குசனும்தான்! லவ குச சகோதரர்கள் பிறந்தது இந்த அஸ்தம் நட்சத்திரத்தில்தான்.

இப்போது புரிந்திருக்கும், ஒரு விஷயம் நடைபெறுவதை விட அதை மக்களிடம் சேர்க்கும் வித்தை தான் முக்கியம். அந்த வேலையைச் சரியாக செய்பவர்கள் அஸ்தத்தில் பிறந்தவர்கள்.

விளம்பர நிறுவனங்கள், சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் மக்கள் கூடும் இடங்களான பொருட்காட்சி, சர்க்கஸ், இசைக் கச்சேரிகள், பாடகர்கள், ஜோதிடர்கள், கணித வல்லுநர்கள், ஆடிட்டர், கணக்காளர், நிதிமேலாண்மையாளர்கள் என அனைத்துத் துறைகளிலும் அஸ்த நட்சத்திரக்காரர்களின் பங்கு இருக்கும்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள், அலங்காரப் பிரியர்கள், வாசனை திரவியங்கள் மேல் ஆர்வம் கொண்டவர்கள். நகைகளின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள். கழுத்திலும் கையிலும் விரல்களிலும் நகைகள் அணிந்து ஜொலிப்பார்கள். ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நம் அனைவரையும் மிஞ்சுபவர்கள் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்.

மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சட்டவல்லுநர், ஆடை ஆபரண உற்பத்தியாளர் மற்றும் வியாபாரம், ஜவுளிக்கடை, நிலக்கிழார், விவசாய வருமானம், ஆடம்பர பொருள் விற்பனையாளர், வெளிநாட்டுப்பொருள் விற்பனையாளர், நாட்டு மருந்துக்கடை வைத்திருப்பவர், பெண்கள் அலங்கார பொருள் விற்பனைகள் செய்பவர், நில வியாபாரம், மனை விற்பனை, தரகர், கமிஷன் ஏஜென்ட், திருமண தகவல் மையம், மேடை அலங்காரம், விளம்பர நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், மது விற்பனை, மனமகிழ் மன்றம், சூதாட்ட விடுதி வைப்பவர், உளவு பார்ப்பவர் முதலான துறைகளில் சாதிப்பவர்களாக இருப்பார்கள் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்!

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு நட்பு வட்டம் மிகப்பெரியது. ஆண் பெண் பாகுபாடு இல்லாத அளவுக்கு அதிகமான நண்பர்கள் இருப்பார்கள். செலவு செய்யத் தயங்காதவர்கள். கடன் வாங்கியாவது செலவு செய்வார்கள். எந்த நிலையிலும் தனது தகுதியை (ஸ்டேட்டஸ்) விட்டுத் தரமாட்டார்கள். இதன் காரணமாகவே அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு கடன் இருந்துகொண்டே இருக்கும். ஒரு கடன் அடைக்கும்போதே அடுத்த கடனை வாங்கிவிடுவார்கள். உழைப்பில் அசாத்தியமானவர்கள். எடுத்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பார்கள். அலுவலகத்தில் அனைத்து விதமான கடன்களையும் வாங்கிவிடுவார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்திற்கு கஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வார்கள். மனைவி சொல்லுக்கு பணிந்து நடப்பார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ரகசிய நட்பு அதிகமிருக்கும். சிறு வயதிலிருந்தே பாலியல் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். எளிதில் மதுவைக்கு அடிமையாவார்கள். தன் உடல்நலத்தில் சிறிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். சர்க்கரை நோய் இருக்கும். சிறுநீரக பிரச்சினை, ஆண்மைக்கோளாறு, சீக்கிர ஸ்கலிதம், தோல் நரம்பு பிரச்சினைகள், கண் கோளாறு, கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய் பிரச்சினை, முடி கொட்டுதல், கொழுப்பு சேருதல், தொப்பை போன்ற பிரச்சினைகள் இருக்கும் அல்லது ஒருகட்டத்தில் வரும்.

’ஏன் சார், இதற்கு முன்னே உள்ள நட்சத்திரங்களுக்கு நோய்களை ஒன்றிரண்டு மட்டும் சொன்னீர்கள். அஸ்தம் நட்சத்திரத்திற்கு மட்டும் இவ்வளவு அடுக்குகிறீர்களே’ என்று கேட்பது புரிகிறது.


உலகில் உள்ள நோய்களுக்கெல்லாம் பிறப்பிடம் இந்த கன்னி ராசிதான். அதிலும் இந்த அஸ்த நட்சத்திரம்தான் அதிக பங்கு வகிக்கிறது. உண்மையை சொல்லித்தானே ஆகவேண்டும். அதுதானே ஜோதிடத்தின் முக்கிய பணி!


இப்படி வெளிப்படையாக சொன்னால்தான், அஸ்த நட்சத்திரக்காரர்கள், இந்த நோய்கள் வராமலிருக்க எப்படி தற்காத்துக் கொள்வது என்று முயற்சி செய்வார்கள்.
ஆக, இது ஒரு விழிப்பு உணர்வுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் இன்னும் பல தகவல்களை பார்ப்போம்.


- வளரும்
**************************************

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 37 ;  ஆண்பெண் பாரபட்சமற்ற நட்புக்கு உரிய நட்சத்திரக்காரர்கள்!’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author