Last Updated : 07 May, 2020 04:44 PM

Published : 07 May 2020 04:44 PM
Last Updated : 07 May 2020 04:44 PM

’’ரஜினி மேல காசு வீசினாங்க; ரஜினியும் சிகரெட்டை தூக்கிப்போட்டு புடிச்சாரு’’ - நண்பர் குறித்து நடிகர் சிவசந்திரன் பிரத்யேகப் பேட்டி 

‘’அப்போதெல்லாம் 40 லட்சத்தில் படமெடுத்துவிடலாம். இன்னும் குறைப்பதற்காக, ஈஸ்ட்மெனிலிருந்து ஆர்வோக்கு வருகிறோம். தரத்தைக் குறைத்துக் கொண்டே வருகிறோம். குவாலிட்டியைக் குறைக்கும்போது எல்லாமே குறையும். நல்ல டெக்னீஷியனைப் போட்டால், நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு நல்ல டெக்னீஷியனை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்குவதற்கும், அந்த டெக்னீஷியன் கேட்பதையெல்லாம் கொடுக்கவேண்டும்’’ என்கிறார் நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன்.
‘இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் மனம் திறந்து பேசினார்.


அவர் அளித்த நீண்ட வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :


‘’’நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ பண்ணி முடித்தத்தும் கன்னடத்துக்குப் போய்விட்டேன். அங்கே படத்தை இயக்கினேன். தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை. இங்கே எல்லா நடிகர்களுடனும் நல்ல பழக்கம் உண்டுதான்.


ரஜினியை ‘பட்டினப்பிரவேசம்’ பண்ணும்போதிருந்தே பழக்கம். ‘மூன்று முடிச்சு’ படம் வருவதற்கு முன்பே பழகத் தொடங்கினோம். ரெண்டுபேரும் சி.ஐ.டி.காலனியில் நடந்துபோவோம். சிகரெட் பிடித்துக் கொண்டே நடப்போம். ’பிரிஸ்டல்’னு சிகரெட். ஒரு சிகரெட்டை வாங்கி ரெண்டுபேரும் அடிப்போம்.


அந்தக்காலத்துல ரஜினி ஒரு புரியாத மனிதர்னுதான் சொல்லணும். சொல்லப்போனா, ரஜினியே ரஜினியைப் புரிஞ்சுக்கலைன்னுதான் சொல்லுவேன். ஏன்னா, அப்போ வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியா இருந்த காலகட்டம். எல்லாருமே பாலசந்தர் சாரை நம்பி உக்கார்ந்துட்டிருக்கோம்.


எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ரஜினியோட முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’ படம் மட்டும் வந்திருந்த சமயம் அது. அயனாவரம் சயானி தியேட்டர்ல ‘நீர்க்குமிழி’ படம் போட்டிருந்தாங்க. பாக்கப் போகலாம்னு முடிவு பண்ணினோம். 27d பஸ்ல போனோம்.


பயங்கர புழுக்கம். ஃபேனும் ஓடலை. சட்டையைக் கழற்றிக்கிட்டு படம் பாக்கறார். அவருக்கு, தன்னை யாரும் பாக்கறாங்களாங்கற சிந்தனை. பாக்கணுமேன்னு ஒரு ஆசை. இடைவேளைல, சிகரெட் புடிச்சிக்கிட்டு நிக்கிறோம். ‘என்ன சிவா, யாருமே பாக்கமாட்டேங்கிறாங்களே...’ன்னு ரஜினி சோகமா கேட்டார். ’விடு ரஜினி, கோட்டு, தாடின்னு இருந்ததால தெரியல போல. ‘மூன்று முடிச்சு’ வந்ததும் தெரிஞ்சுக்குவாங்க’ன்னு சொன்னேன்.


படம் பாத்தோம். படம் முடிஞ்சு வெளியே வந்தோம். நான் 27d - ல ஏறினேன். ரஜினி எங்கே வேணாலும் தங்குவாரு. வித்தியாசமான மனிதர். அதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும். ரஜினி தங்கின இடத்தையெல்லாம் பாக்கணும். ரஜினியோட வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு பாடம். படிச்ச மனுஷனுக்கெல்லாம் அந்த தைரியம் இருக்காது. எனக்கெல்லாம் அந்த தைரியம் இல்ல.


தன்னம்பிக்கைன்னு விருது கொடுத்தா, அது ரஜினிக்குக் கொடுக்கணும். அப்புறம், ‘மூன்று முடிச்சு’ படம் வெளியாகி, இவருக்கு நல்லபேரு. அப்போ, மியூஸிக் அகாடமிக்குப் பின்னாடி ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார் ரஜினி. இப்போ ரஜினி கூட இருக்காரே சுதாகர். அவரை எனக்குப் படிக்கும்போதிருந்தே தெரியும். அப்ப ரஜினி கூட இருந்தார்.


புரசைவாக்கம் ராக்ஸி தியேட்டர்ல ‘மூன்றுமுகம்’ ஓடிட்டிருந்துச்சு. ‘வா சிவா போய்ப் பாக்கலாம்’னு சொன்னார் ரஜினி. அன்னிக்கி 49வது நாள். போனோம். முதல்ல ரஜினியை யாரும் கண்டுபிடிக்கலை. இடைவேளைல ரஜினின்னு கண்டுபிடிச்சிட்டாங்க. மேனேஜர் ரூமுக்குப் போயிடலாம்னு நகர்ந்தா... கூட்டம் கூடிருச்சு.
கூட்டத்துலேருந்து ரஜினி மேல காசு வீசுறாங்க. சிகரெட்டை வீசுறாங்க. சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கச் சொல்றாங்க. ரஜினி டக்குன்னு சிகரெட்டை எடுத்துப்போட்டுக் காட்டிட்டே இருந்தாரு. அந்த நிகழ்வை என்னால மறக்கவேமுடியாது. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு ரஜினிக்கு.


இன்னிக்கி கூட நல்லா ஞாபகம் இருக்கு... என் கையை கெட்டியாப் புடிச்சிக்கிட்டே இருந்தாரு. கை ஜில்லுன்னு இருக்கு. அதுக்கு அப்புறம் படம்போட்டதும் படத்துல புத்தியே போகலை. உக்காரமுடியலை. ரஜினிக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ரஜினி பயங்கர ஹேப்பி. நண்பருக்கு சந்தோஷம், உற்சாகம். அதனால எங்களுக்கும் ஹேப்பி.


படம் விட்டு வெளியேவந்து, பஸ்ல இன்னும் கூட்டம் கூடிரும்னு காரைப் புடிச்சோம். சுதாகர்தான் காசு வைச்சிருந்தான். அப்போ காருக்கு 80 காசு. அதையும் பாதி தூரத்துல கட் பண்ணிட்டு, ‘பிரிஸ்டல்’ சிகரெட் வாங்கிக் குடிச்சிக்கிட்டே போனோம்.


அதுக்குப் பிறகு படிப்படியா முன்னுக்கு வந்தார் ரஜினி. அப்படி முன்னுக்கு வந்த ரஜினியோட ஹிஸ்ட்ரிதான் எல்லாருக்குமே தெரியுமே!’’ என்று சொல்லி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகக் குறிப்பிட்டார் சிவசந்திரன்.


- நினைவுகள் தொடரும்


நடிகர் சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x