Last Updated : 18 Jan, 2024 05:15 PM

 

Published : 18 Jan 2024 05:15 PM
Last Updated : 18 Jan 2024 05:15 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.18 - 24

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும்.

வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு பொருளாதாரம் ஓங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: தினமும் செவ்வரளி மாலை சாற்றி முருகனை வழிபட்டு வர மனதில் அமைதி மேலோங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) | கிரகநிலை - பஞ்சமஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கியஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. தூர தேச பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கியஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்:
18-01-2024 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சமஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கியஸ்தானத்தில் ராகு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும்.

வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சமஸ்தானத்தில் செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - பாக்கியஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும்.

கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை -
ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பஞ்சமஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்:
18-01-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.

எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பெண்கள் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சமஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். குடும்பத்தில் எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதங்கள், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சமஸ்தானத்தில் ராகு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத்துணிவு உண்டாகும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - பஞ்சமஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும்.

தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும்.

பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு - பாக்கியஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை -
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்:
18-01-2024 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நல்ல முடிவுகள் வரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கியஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 18-01-2024 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும்.

வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x