

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கலைத் துறையிலும், இன்னும் வேறு பல துறைகளிலும் விளங்கியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் லலிதா. இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓங்கோலைச் சார்ந்தவர்.
ஆரம்பமே ஒரு வித்தியாசமான வர்ணம். இது காலஞ்சென்ற டி.ஆர். சுப்பிரமணியத்தினுடையது - ராகம் பெஹாக். பாடிய விதத்திலும் இயற்றியவர் எதிர்பார்த்த வித்தியாசத் தன்மை இருந்தது. அடுத்து தோடி ராகத்தைச் சற்றே கோடி காட்டினார். இதன் மூலம் இந்த ராகத்தில் உள்ள ஸ்வர ஜதியைப் பாடப்போவதாக ஜாடை காட்டினாரோ? வந்தது ஸ்வர ஜதிதான். இது ஒரு சியாமா சாஸ்திரிகளின் ஆழமான படைப்பு- ராவே ஹிமகிரிகுமாரி. குரல் வளம் அதள பாதாளத்தை எட்டும் அளவிற்குப் பக்குவப்பட்டு இருத்தல் அவசியம். மந்தர ஸ்தாயியில் சுய ஆர்வத்தினால் பல முறை பாடி, தனது பாண்டித்தியத்தை வளர்த்துக்கொண்டவர் போலப் பாடி கௌரவித்தார்.
ஆவலைத் தூண்டும் விதத்திலும், மிகுந்த பாந்தத்துடனும், ராகத்தின் குணம் கெடாமலும், விசாலமாகவும் இருந்தது ரீதிகௌளை ராக ஆலாபனை. பிறகு புறப்பட்டு வந்தது அழகான தேர் ஒன்று. தியாகராஜரின் ‘நன்னு விடிசி கதலகு’ பாடலைத்தான் குறிப்பிடுகிறோம். அசைக்க முடியாத பாடாந்தரத்துடன் இருந்தது.
இதற்கெல்லாம் பலமான அஸ்திவாரம் தேவை. லலிதாவின் பலமே இதுதானோ? தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவராதலால் இந்த முதலடியை ‘கதலகு’ (என்னை விட்டு நகராதே) எனும் பொருள்படவும் ‘வதலகு’ (என்னை விட்டு ஓடிவிடாதே) என்று சற்றே மாறுபட்ட அர்த்தத்துடன் பாடி தான் கற்ற, உணர்ந்த பாவத்தை அங்குள்ளவர்களையும் உணரவைத்தார்.
லலிதா பாடிய மெயின் கரஹரப்ரியா ராகத்தில் அமைந்த ‘ஜானகி பதே’ என்ற பாபநாசம் சிவனின் சம்ஸ்க்ருத மொழிப் பாடல். இவரளித்த மற்ற பாடல்களும் தனக்கென்று வகுத்துக்கொண்ட ஒரு உயரிய தர நிர்ணய கோட்பாட்டின்படியே இருந்தது. மீரா சிவராமகிருஷ்ணன் வயலின். அனுசரணையாக தன்னுடைய வீச்சிற்குத் தக்கவாறு வாசித்தளித்தார். புர்ரா ஸ்ரீராமும் சிறுவன் க்ருஷ்ணாவும், முறையே மிருதங்கமும் கடமும் புத்தி பூர்வமாக இடத்திற்கேற்றவாறு வாசித்து, கச்சேரியைப் பரிமளிக்கச் செய்தனர்.