

புல்லாங்குழலும், வாய்ப் பாட்டும், வயலினும் அதனுடன் மிருதங்கமும் இணைந்து ஒலிப்பது பொதுவாக நடன நிகழ்ச்சிகளில் தான் நிகழும். ஆனால் பாட்டுக் கச்சேரிகளிலும் இதைச் சிலர் நிகழ்த்துகிறார்கள்.
ஜே.பி. கீர்த்தனா வாய்ப்பாட்டு, அவரது தமையன் ஸ்ருதி சாகர் குழல். மைலாப்பூர் ஆர்.கே. ஸ்வாமி அரங்கில் இருவரும் மாறி மாறி ‘மரிவேற திக்கெவ்வரு’ என்ற பட்ணம் சுப்பிரமணிய ஐயரின் ஷண்முகப்ரியா ராகப்பாடலுக்கு ஸ்வரமளித்துக் கொண்டிருந்தனர். பலப் பரீட்சை யாக அல்ல, உடனுக்குடன் உறுதுணையாக.
அடுத்து நம்மை வசீகரிக்க வந்தது ‘க்ஷிதிஜா ரமணம்’ என்ற தேவகாந்தாரி ராகப் பாடல். இதைப் பாடம் செய்து பாடக்கூடியவர்கள் மிகக் குறைவு. இது விளம்ப காலத்தில் அமைந்த பாடல். இதற்கு ஒரு கான்ட்ராஸ்ட் தேவைதானே! நல்ல வேகத்தில், எம்.எஸ். முதல் வீணை வித்தகர் சிட்டிபாபு முதல் பாடி / வாசித்து பிரபலப்படுத்திய, ‘மநவிநாலகிஞ்சரா தடே’ (நளினகாந்தி, தியாகராஜர்) என்ற பாடலை இருவரும் வழங்கினார்கள்.
உடன் வயலின் வாசித்த கே.ஜே. திலீப்பும் மிருதங்கக் கலைஞர் இ.வி. பாபுவும், இந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து வாசித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தித் தங்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டனர். இந்தப் பாடலுக்கு எண்ணற்ற ஒரு ஆவர்த்தன ஸ்வரங்களை ஒருவர் பின் ஒருவராக, ஒன்றன் பின் ஒன்றாக (முதலில் கீர்த்தனா, பிறகு குழலில் ஸ்ருதி சாகர், பின் வயலின்) வாசித்து, தாள விஷயங்களில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டினர்.
அடுத்து பூர்விகல்யாணி ராக ஆலாபனை. ராகத்தின் போக்கை வாய்ப்பாட்டிலும் குழலிலும், வயலினிலும் அவரவர் கற்பனை வளத்திற்குத் தக்க வண்ணம் விஸ்தாரப்படுத்தியது குறிப்பிடும்படியக இருந்தது. ஒருவர் பரிமளிக்கச் செய்ததை மற்றொருவர் மேலும் வலுவூட்டவும் மெருகூட்டவும் செய்தார். எடுத்துக்கொண்ட பாடல் சுவாதித் திருநாளின் ‘தேவ தேவ ஜகதீஸ்வர ஜயபுஜகா’.
துக்கடா பகுதியில் ஊத்துக்காடு வெங்கட கவியின் ‘முத்து க்ருஷ்ணா மே முதம்’ என்ற பாடலும், ‘பார்த்துப் பிழையுங்கள்’ (கோபாலகிருஷ்ண பாரதி) என்ற பாடலையும் வழங்கிக் கச்சேரியை முழுமை பெறச் செய்தனர். முந்தையதில் ‘முகுந்த மாதவ ராஸவிலாஸ’ என்ற வரிக்கு நல்ல இழைப்புடன் பாடி / வாசித்துச் சிறப்பித்தனர்.
ஒரு நெருடலான விஷயம். கீர்த்தனா எதற்காக வார்த்தை களைச் சற்றே மிகையாகக் கடிக்கிறார் என்று தெரியவில்லை. தேவையில்லாத இடங்களில் அழுத்தத்ததையும் சற்று அதிகமா கவே அளித்துவிடுகிறார்.
ஓவியர் தனது வண்ண வரைபடத்தில் எல்லா இடங்களிலும் தனது தூரிகையை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த மாட்டார். சொல்லிலும் மெல்லின, இடையின, வல்லின வகைகள் உண்டுதானே?
சபா: மயிலாப்பூர் ஆர்.கே. ஸ்வாமி அரங்கம்
நாள்: 24.12.2013
கலைஞர்கள்: ஜே.பி. கீர்த்தனா (வாய்ப்பாட்டு),
ஸ்ருதி சாகர் (குழல்).