Last Updated : 16 Feb, 2015 09:23 AM

 

Published : 16 Feb 2015 09:23 AM
Last Updated : 16 Feb 2015 09:23 AM

இன்று அன்று | 1923 பிப்ரவரி 16: திறக்கப்பட்டது மர்ம மம்மியின் கல்லறை!

எகிப்து பிரமிடுகள், மம்மிகள் தொடர்பாகத்தான் எத்தனை செய்திகள்! ‘தோண்டத் தோண்ட’ அந்தப் பாலைவனப் பிரதேசத்திலிருந்து மணல் துகள்களாகக் கொட்டுகின்றன தகவல்கள்! பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமனின் கல்லறை பற்றிய தகவல்களை வைத்துப் பல திரைப்படங்களை உருவாக்கலாம்.

1923. இதே நாள். எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டு களாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பரும் அவரது ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்த கோடீஸ்வரர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர். கல்லறைக்குள்ளே தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் அங்கிருந்தவர்களின் கண்களை மின்னச் செய்தன!

எகிப்து மம்மிகள் பற்றிய தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் தருபவை. பண்டைய எகிப்தியர்கள், தங்கள் மன்னர் களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் ‘கடவுள்’ இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம் மாண்டமான கல்லறையில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். அந்தக் கல்லறைகளுக்குள், விலையுயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் என்று பல பொருட்களை வைத்துவிடுவார்கள். மன்னரின் ‘மறுவாழ்வு’க்காக!

19-ம் நூற்றாண்டில், பல நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்துக்குப் படையெடுத்தனர். அதன் பின்னணியும் சுவாரஸ்ய மானது. 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எகிப்தின் பிரமிடுகளில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கும் செல்வங்களில் பாதியளவைத் தாங்களே வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். மீதிப் பாதியை, அரசுக்குத் தந்தால் போதும். ஆனால், அதற்கு முன்னரே துணிச்சல் மிக்க கொள்ளையர்கள் பல பிரமிடுகளுக்குள் நுழைந்து செல்வங்களைச் சூறையாடிவிட்டனர் என்பது வேறு விஷயம்.

அனைத்துக் கல்லறைகளும் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாக எல்லோரும் கருதினாலும், நிச்சயம் இன்னொரு கல்லறை, கி.மு. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய எகிப்து மன்னர் துட்டன்காமனின் கல்லறை திறக்கப்படாமல் இருக்கிறது என்று ஹாவர்டு கார்ட்டர் நம்பினார். பண்டைய எகிப்தின் 18-வது வம்ச மன்னர். ‘கிங் டட்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவரது கல்லறை இருக்கும் இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார் கார்ட்டர். பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது பணிக்கு, நிதியுதவி செய்த லார்டு கார்னர்வோன் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தார். “இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுவோம்” என்று கார்ட் டரிடம் சொன்னார். ஆனால், இன்னும் ஒரே ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று அவரைச் சமாதானப்படுத்தினார் கார்ட்டர்.

கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டுபிடித்தது. அதன் வழியாகச் சென்றபோது, துட்டன்காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர்தான், 1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது. கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்றால், கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார். இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச் சலால் உயிரிழந்தார். துட்டன்காமனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார். இப்படிப் பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது. எனினும், இந்த மரணங்களுக்கும் மன்னரின் சாபத்துக்கும் அறிவியல்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவியலாளர்கள் விளக்கமளித்துவிட்டனர்.

இன்று துட்டன்காமனின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள், கெய்ரோ நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x