Published : 14 Oct 2013 10:22 AM
Last Updated : 14 Oct 2013 10:22 AM

சரஸ்வதி வந்தால் லஷ்மியும் வருவாள்

ஐம்பது நாட்களில் அம்பானி ஆகலாம் என்பது போன்ற "எப்படி எப்படி?" புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி.

தவிர பண்டை நாகரீகங்களில் உள்ள செல்வச் சூட்சமங்கள் என்றால் இன்றைய பொருளாதாரச் சூழலில் பொருந்துமா என்ற கேள்வி கண்டிப்பாக எனக்கு வரும்.

பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தில் அவர்கள் செல்வம் பற்றிய ரகசியங்கள் கூறும் புத்தகம்; அதுவும் ஒரு ஐரோப்பியர் 1926ல் எழுதிய புத்தகத்தின் தூசி தட்டிய புதுப் பதிப்பு என்றால் "ஆளை விடுங்கள் பாஸ்" என்று ஓடியிருப்பேன். என்ன காரணமோ என் மாணவன் ஒருவன் இதை மிகவும் சிலாகித்துச் சொன்னவுடன் அவசர அவசரமாக வலையில் (வலைதளத்தில்) விழுந்து வாங்கினேன்.

சின்ன புத்தகம். எளிமையான தொகுப்பு. ஆங்கிலமும் ஷேக்ஸ்பியர் காலத்து பழசு. தவிர பண்டைய இஸ்லாமிய பண்பாட்டுச்சூழல் அதை மேலும் வேறுபடுத்தியது. ராஜா, போர் வீரன், அடிமை, பாலைவனம், ஒட்டகம், சவுக்கடி, ராணி, அடகுக்காரன், பொற்கொல்லன் என தூக்க கலக்கத்தில் பழைய கமல் படம் "விக்ரம்" இடைவேளைக்குப் பிறகு பார்த்தது போலிருந்தது.

மறு நாள் (தன் முயற்சியில் சற்றும் தளராத - சே, இதுவும் ராஜா கதையா?) மீண்டும் படித்ததில் இது ஏன் அவ்வளவு முக்கியமான புத்தகம் என்று புரிந்தது. பின்னர் இடையில் நிறுத்த முடியவில்லை.

மண் செழிப்போ, மழையோ, இயற்கையின் எந்தக் கொடையும் கிடைக்காத ஒரு தேசம் எப்படி எதிரிகளால் வெல்ல முடியாத தேசமாயிற்று? எப்படி அந்த கோட்டைக் கதவுகள் காலத்தை மீறி நின்றன? அப்படிப்பட்ட ஊரின் மதி நுட்பமும், செல்வம் சேர்க்கும் திறனும் எப்படிப்பட்டது? இந்த சரித்திரப் புகழ் பெற்ற களத்திலிருந்து அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த களிமண் மாத்திரைகளில் உள்ள கதைகளையும் மீட்டெடுக்கிறார் ஜார்ஜ். எஸ்.கிலாஸன். அவரின் உழைப்பால் உலகிற்கு கிடைத்ததுதான் இப்புத்தகம்.

பன்சீர் என்ற தேர் செய்யும் கலைஞனும், கொப்பி என்ற இசைக் கலைஞனும் பேசிக்கொள்கிறார்கள். "என்ன திறமை இருந்தும் ஏன் நம்மால் பணம் சம்பாதிக்க முடியவில்லை?" சரி, ஊரின் மிகப் பெரிய பணக்காரன் அர்கத் என்ற தங்கள் பால்ய நண்பனை கேட்கலாம் என்று செல்கின்றனர்.

அர்கத், தான் செல்வந்தன் ஆன கதையை சொல்கிறான். இடையே பல துணைக் கதைகள். இடையே சில தங்க விதிகள். இது தன் இந்த புத்தகம்.செல்வந்தர் ஆக ஏழு ஆதார விதிகள் கூறுகின்றனர்:பத்து ரூபாய் சம்பாதித்தால் கட்டாயம் ஒரு ரூபாய் சேமியுங்கள்.வரவுகள் ஏற அதற்கேற்ப செலவுகள் ஏறும். தேவைகளையும் ஆசைகளையும் குழப்பிக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். நாளடைவில் அது உங்கள் சொத்து மதிப்பை உயர்த்தும்.தங்கத்தை எந்த தொழில் முதலீட்டிற்காகவும் விற்காதீர்கள். அடகு வைக்காதீர்கள். இருப்பதை முழுவதுமாக காப்பாற்றுங்கள். எந்த இழப்பிற்கும் ஆளாகாதீர்கள்.

சொந்த வீடு மிக முக்கியம். பாதுகாப்பான மன நிலையில் தொழில் செய்ய இது முக்கியம்.

வயோதிகத்திற்கு வயது உள்ளபோதே திட்டமிடுங்கள். எந்த சொத்தையும் கரைக்காமல் அன்றாடத் தேவைக்கு வருங்கால வரவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சம்பாதிக்கும் திறனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் சொத்துகளிலேயே மிகச் சிறந்த சொத்து.

தங்கத்தை பெரிதும் மதிக்கும் சமூகம் என்பதால் தங்க சேமிப்பிற்கு அதிக முக்கியத்துவம் இப்புதகத்தில்.தங்கம் யாரிடம் தங்கும், தங்காது என்ற பட்டியல் அவ்வளவு எளிமையானது:பத்து சதவிகத சேமிப்பு தொடர்ந்து செய்பவனிடம் தங்கம் எப்போதும் தங்கும்.சரியான தொழிலில் உள்ளவனிடம் தங்கம் பெருகும்.

மிக கவனமாக எந்த முதலீட்டையும் செய்பவனை விட்டு தங்கம் எங்கும் போகாது.

தெரியாத தொழில் அல்லது திறமையில்லாத ஆளிடமிருந்து கண்டிப்பாக தங்கம் கண்டிப்பாக ஓடிவிடும்.

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, அனுபவமில்லாத ஆட்களிடம் செய்யும் ஸ்பெகுலேஷன் துறைகள் எதுவும் தங்கத்திற்கு ஆகாது!

இந்த காலத்திற்கு இந்த புத்தகம் பயன்படுமா என்றால் என் பதில்: கண்டிப்பாக பயன்படும்!

ஒரே பாட்டில் பணக்காரன் ஆகும் திரை நாயகர்கள், ஒரே கம்பெனி ஆரம்பித்து கோடீஸ்வரன் ஆகும் நிஜ நாயகர்கள் எல்லாம் பெரும்பாலான மக்களின் மனதில் பல தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான நடுத்தர, அடி மட்ட குடும்பங்கள் பிழைக்க, வளமாக வாழ இந்த புத்தகம் ஒரு குறைந்த பட்ச ஆதார விதிகள் தருகிறது. யோசித்தால் இவை அனைத்துமே நம் மண்ணின் நம்பிக்கைகள் தாம்.

எவ்வளவு உலக மயமாக்கல் வந்தாலும் நம் ஆதார சேமிக்கும் குணமும், கடனை சரியாக திருப்பிக்கட்டும் நேர்மையும், குடும்பம் பற்றிய பொறுப்பும் தான் நம் பொருளாதாரத்தை சரியாமல் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த புராதான விழுமியங்களை அயல் நாட்டு புதினத்தில் கண்டு படிப்பது மிக நிறைவாக உள்ளது.

ஆங்கிலத்தில் சக்கை போடு போடும் இந்த நூல் தமிழுக்குத் தேவை.

பல விஷயங்கள் நம் கலாசாரத்தை நினைவுப்படுத்துகின்றன. தங்கை கணவன் தொழில் செய்ய கடன் கேட்கிறான். அதில் அவனுக்கு அனுபவம் இல்லை. அவன் ஜெயிப்பது மிக கடினம். கொடுத்தால் பணம் திரும்ப வராது. இல்லை என்று சொல்வது சிரமம். என்ன செய்ய?

ஓட்டை பானையில் எவ்வளவு ஊற்றினாலும் நிறையாது. ஊற்றாவிட்டால் பொல்லாப்பு. எது சரியான தீர்மானம்? பணம் கொடுக்கக்கூடாது என்பதை அறிவு பூர்வமாக விளக்குகிறார். அதே நேரத்தில் எப்படியெல்லாம் உதவலாம் என்றும் விளக்கம் உள்ளது.

நம் அன்றாட வாழ்கையில் பல திறமைசாலிகள் பணம் செய்யத் தெரியாததாலும், அதை பேணத்தெரியாத காரணாத்தாலும் மீளாத்துயரில் மூழ்குவதைப் பார்க்கிறோம்.

அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகளை சரியாக கண்டெடுத்து பயன் படுத்திக்கொள்ளுதல்! "தான் அதிர்ஷ்டசாலி என்று முழுமையாக நம்பி ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தித் திறமையாக தொழில் செய்பவனே செல்வந்தன் ஆகிறான்" என்று முடிக்கும் போது புத்தகத்தின் நியாயம் புரிகிறது. தெளிந்த மனமும், தீர்க்க அறிவும், நேரான வாழ்வும் செல்வம் சேர/ ஸ்திரமாக வாழ அத்தியாவசியம் எனும் பொழுது அறம் சார்ந்த பொருள் ஈட்டலை இப்படைப்பு மையப்படுத்துகிறது.

செல்வம் சேர லக்ஷ்மி கடாட்சம் வேண்டும் என்பார்கள். செல்வம் சேர்க்கும் வித்தையைப் படிக்க சரஸ்வதி கடாட்சம் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

Gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x