Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

பொருளியலில் சாதிக்க பொன்னான வாய்ப்பு

எம்.எஸ்சி. என்றதும் அறிவியல், கணிதம் சம்பந்தப்பட்ட பட்டமேற்படிப்புகள் மட்டுமே உள்ளன என்றுதான் பலரும் கருதுகிறார்கள். பொருளியலிலும் எம்.எஸ்சி. படிக்க முடியும். இன்டகிரேட்டட் புரோகிராம் எம்.எஸ்சி. பொருளியல் ஐந்தாண்டு பட்டமேற்படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. திருவாரூரில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு கல்வி நிறுவனத்திலும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்திலும் எம்.எஸ்சி. பொருளியல் பட்டமேற்படிப்பு படிக்கலாம். இப்படிப்பில் சேர பிளஸ் 2-வில் கணிதப் பாடப்பிரிவு எடுத்திருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன. மொத்த மதிப்பெண் சதவீத அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு கிடையாது. தமிழக அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

முதல் மூன்று ஆண்டுகள் திருவாரூரில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு கல்வி நிறுவனத்திலும் இறுதி இரண்டு ஆண்டுகள் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்திலும் பயில வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பில் சேர்ந்தும் படிக்கலாம். ஆனால், கடும் போட்டி இருப்பதால் இடம் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். பிளஸ் 2 முடித்துவிட்டு ஐந்தாண்டு படிப்பில் சேர்வதில் அவ்வளவாக போட்டி இருப்பதில்லை.

எம்.எஸ்சி. பொருளியல் முடித்தவுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் யுனிவர்சிட்டி என மேலைநாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. பொருளியல் துறையில் பிஎச்.டி.

வரையிலான ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்களுக்கு உலக வங்கியில் எளிதில் வேலை கிடைக்கும். பொருளாதார மேதையாக, பொருளாதார வல்லுநராக சாதிப்பதற்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய சிறந்த படிப்பாக எம்.எஸ்சி. பொருளியல் உள்ளது என்று கூறலாம். வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்கள், ஐ.டி. துறை என பொருளாதாரத்தை கையாளக்கூடிய அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

பிளஸ் 2 முடித்தவுடன் ஐந்தாண்டு படிக்கக்கூடிய எம்.ஏ. டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், எம்.ஏ. இன் இங்கிலீஷ் ஸ்டடீஸ் ஆகிய இரண்டு பட்டமேற்படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ளன. பிளஸ் 2-வில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற எந்த குரூப் மாணவரும் இதில் சேரலாம். ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதி இதில் சேரலாம் என்பது தவறான கருத்து. இப்படிப்புக்கு 2 கட்டமாக பிரத்தியேக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்தை சென்னை ஐ.ஐ.டி.யில் ஜனவரி 27-ம் தேதி வரை பெறலாம். நுழைவுத்தேர்வு மே மாதம் நடத்தப்படும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கோல்கத்தா, டெல்லி ஆகிய 6 மாநகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த இரு படிப்புக்கும் தலா 30 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கடுமையான போட்டியை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x