Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM
மேடை நாடக ரசிகர்களுக்கு ‘அப்பா’ ரமேஷ் பற்றி அறிமுகம் தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக நாடக நடிப்பைத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் அப்பா ரமேஷ். கிட்டத்தட்ட 6000 மேடை நாடகங்களில் தோன்றி ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர். பேருந்து வசதி இல்லாத ஊர் முதல் அமெரிக்கா வரை ஏராளமான ஊர்களில் நாடகங்களில் நடித்துள்ள இவருக்கு அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘நாடகத் தென்றல்’ என்ற சிறப்பு விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது. சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினோம்.
டிஜிட்டல் சினிமா, டி.டி.எச் படம் என்று மாறி வரும் சூழலில் மேடை நாடகத்தின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?
சதையும் உணர்வும் சேர்ந்த உயிரோட்டமான விஷயம் மேடை நாடகம். விஞ்ஞான வளர்ச்சியில் டிஜிட்டல் வரைக்கும் வந்தாச்சு. ஆனால், திரைப்படங்கள் ஆண்டுக் கணக்கில் ஓடிய காலம் போய் 2 வாரங்கள் அல்லது 2 நாட்கள் என்று மட்டுமே ஓடக்கூடிய நிலை. மேடை நாடகங்களை அலாதியாக விரும்பும் ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை நவீன வளர்ச்சிகள் அணி அணியாய் வந்தாலும் மேடை நாடகத்தை அவை எதுவும் செய்து விட முடியாது.
கிரேஸிமோகன் நாடகக்குழுவில் 35 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறீர்கள்? அந்த அனுபவம் பற்றி?
டி.வி. நாடகம் வழியே எனக்கு அறிமுகமான நண்பர் கிரேஸிமோகன். வேலை, குடும்பம், எதிர்காலம் என்று எல்லாமும் பகிர்ந்துகொள்பவரும் அவர்தான். சின்னத்திரையில் ஒளிபரப்பான அவருடைய ‘ஒரே ஒரு நிமிஷம்’ நாடகம்தான் என்னையும் அவரையும் சேர்த்தது. 1979ம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கற்பகாம்பாள் சன்னிதியில் பூஜையோடு முதன்முதலாக அவர் நாடக கம்பெனியை தொடங்கினார். அம்பாள் சன்னிதியில் கொடுத்த பூஜை தட்டை ‘நீ வாங்கிக்கோ..!’ என்று அன்போடு சொன்னவர், கிரேஸி மோகன். இப்போ ஆரம்பித்த நாடகக் கம்பெனி மாதிரி இருக்கு. 35 ஆண்டு ஓடி போச்சு. எத்தனை சுகமான அனுபவங்கள். குழந்தை பருவத்தில் இருந்து நாடகங்களில் நடித்தாலும், கிரேஸியின் நாடக் குழுவில் சேர்ந்த பின் எனக்கு கிடைத்த பாராட்டும், நான் அடைந்த மகிழ்ச்சியும் மிக அதிகம். மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் சக்தி கிரேஸிமோகனுக்கு கை வந்த கலை. அவரோடு குழுவில் வாசு, பாலாஜி, இயக்குநர் காந்தன் உள்ளிட்டவர்களால்தான் நான் பண்பட்ட நாடக நடிகனானேன். அந்த பக்குவம்தான் நாடகத்தை இன்றளவும் ஒரு ஃபேஷனாக பார்க்க வைத்திருக்கிறது.
நீங்கள் ‘அப்பா’ ரமேஷ் ஆனது எப்படி?
குழந்தை பருவம் முதலே அவ்வப்போது நாடக மேடை ஏறும் எனக்கு ஆர்.எஸ்.மணி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் நடத்திய நாடகங்கள்தான் ஆரம்ப காலத்தில் அடையாளம் காட்டிக்கொள்ள வைத்தது. ‘மனசுக்கேத்த மாப்பிள்ளை’ நாடகத்தில் வில்லன் நாகன் என்ற கேரக்டரில் நடித்தேன். அப்போதெல்லாம் பலருக்கும் என்னை ‘நாகன்’ ரமேஷாகத்தான் தெரியும். சினிமாவில் ரஜினி, கமலைப்போல, நாடகத்தில் நான் கிரேஸியை சந்தித்தப்பின் படு பிஸியானவனாக மாறினேன். கிரேஸியின் நாடகக்குழு தொடக்கக்காலத்தில் உருவான நாடகம்தான் ‘அலாவுதினும் 100 வாட்ஸ் பல்பும்’. எத்தனையோ மேடைகள் கண்ட நாடகம். அப்போது நாடகத்தில் நாயகனான மாதுவின் அப்பா கேரக்டருக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. கிரேஸிமோகன் கொஞ்சமும் யோசிக்காமல் அப்போதைய 28 வயது ரமேஷ் என்ற இளைஞனை அப்பா கதாபாத்திரமாக்கினார். வெறும் ரமேஷாக சுற்றித்திரிந்தவன் அப்போதிலிருந்து ‘அப்பா’ ரமேஷ் என்றானேன். அந்த 28 வயது இளைஞன், பின் மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாகி, இன்று பேரக்குழந்தைகள் வரைக்கும் பார்த்தாலும், ரொம்பவே ராசியான பெயராகிப்போனதால் அப்படியே விட்டுட்டேன்.
மேடை நாடகத்தில் நடித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் சினிமாவில் நுழைந்துவிட்டார்கள். நீங்கள் ஏன் அந்த வழியில் செல்லவில்லை?
எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ தொடங்கி ‘ராஜா கைய வச்சா’, ‘பொய்க்கால் குதிரை’ , ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட படங்கள், மற்றும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். அது என்னவோ, மேடையில் லைவ் ஷோ கொடுக்கும் மகிழ்ச்சி கேமராவின் முன்னால் நிற்கும்போது எனக்கு வருவதில்லை. ஒரு விஷயத்தை கலகலப்பாக மக்கள் முன் வைத்த அந்த நேரத்திலேயே அவர்களிடம் இருந்து பெறும் கைதட்டல் இருக்கிறதே, அந்த சந்தோஷம்தான் என்னை நாடக நடிகனாகவே இருக்க வைத்திருக்கிறது.
பண்டிகை, திருவிழா நாட்களில் எல்லாம் குடும்பம், குழந்தைகளை மிஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை இருக்குமே?
கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் நாடகத்தை மிஸ் பண்ணத் தோணாது. குடும்பம், குழந்தைகளை மனைவி பார்த்துப்பாங்க என்கிற துணிச்சலும் அதற்கு ஒரு காரணம். இப்போக்கூட வர்ற பிப்.17 ம் தேதி மகன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு சபாவில் நாடகம் இருக்கிறது. வேலை இருக்கிறதே, என்று எண்ணிக்கொண்டு என் கேரக்டரை வேறொருவர் ஏற்று நடிக்க வைக்கலாம். ஆனால், இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் என் கேரக்டரை நான்தான் போய் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். பெரிய சம்பளம் எதுவுமில்லாத தொழில் இது. ஆனால், நல்ல பேரை சம்பாதித்துக்கொடுக்கும் தொழில்.
எல்லோருடைய கவலையையும் மறக்கச்செய்யும் கலைஞன் என்கிற ஒற்றை சந்தோஷம் போதும். ஆயுளுக்கும் நடித்துக்கொண்டே இருக்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT