Published : 01 Mar 2014 10:28 PM
Last Updated : 01 Mar 2014 10:28 PM

வளம் பெறுமா வடசென்னை?

ஞாபகம் இருக்கிறதா, 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' கோஷம். சென்னையைப் பொருத்த அளவில் அது தலைகீழ். தென் சென்னையின் வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் வடசென்னைவாசிகளிடம் வலுவான ஓர் எண்ணமாக உருவெடுத்திருக்கிறது.

# தென்னிந்தியாவின் முதல் ரயில் 1856-ல் இயக்கப்பட்ட ராயபுரத்தை உள்ளடக்கிய தொகுதி இது. 1772-ல் சென்னைக்கான முதல் குடிநீர்த் திட்டமும் இங்கேதான் தங்கச்சாலை அருகே தொடங்கப்பட்டது. ஆனால், இவை எல்லாம் இன்றைக்கு வெறும் வரலாறு. எல்லா வகையிலும் அரசால் புறக்கணிக்கப்படும் பகுதியாகிவிட்டது வட சென்னை என்கிறார்கள் தொகுதி மக்கள். நம்மிடம் பேசும்போது பெரும்பாலானோர் குறிப்பிட்ட தேவைகள், குறைகள், கோரிக்கைகள் மூலம் பின்வரும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.

# வளரும் சென்னையின் நெருக்கடியைத் தவிர்க்க, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைப் போல ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கை. அப்படியானால், தொகுதி வளர்ச்சிக்கு உதவும். ஆனால், அதிகாரிகளோ தாம்பரத்தை நோக்கி நகர்கிறார்கள். அதேபோல, வட சென்னை வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கடும் நெரிசலில் செல்கின்றன. காரணம் ஒன்பது பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன. தாம்பரம், திருவள்ளூர் மார்க்கங்கள்போல 12 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். மேற்கு மாவட்ட விரைவு ரயில்கள் பெரம்பூரிலும் தென் மாவட்ட விரைவு ரயில்கள் மாம்பலத்திலும் நின்று செல்வதுபோல, வட மாவட்ட விரைவு ரயில்கள் திருவொற்றியூரில் நின்று செல்ல வேண்டும் என்பதும் வலுவான கோரிக்கை.

# திருவொற்றியூர் மாட்டு மந்தை அருகே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்கிற 40 ஆண்டு கால கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள்.

# பத்தாண்டுகளாக இழுத்தடிக்கும் எண்ணூர் துறைமுகம் – சென்னைத் துறைமுகம் இணைப்பு சாலைத் திட்டமும் திருவொற்றியூர் பாதாளா சாக்கடைத் திட்டமும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

# நோய்களின் உறைவிடமாக மாறியிருக்கும் கொடுங்கையூர் குப்பை வளாகம் தீராத பிரச்சினை. தொகுதியில் பலருக்கும் சுவாச நோய், சரும நோய் சகஜம்.தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வரை சென்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்; அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

# கடல் அரிப்புப் பிரச்சினை மீனவர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

# ரயில்போல கண்டெய்னர் லாரிகள் சாலையில் தேங்கி நிற்கும் நெரிசல் தீரவில்லை. வியாசர்பாடி, மூலக்கடை, கொருக்குப்பேட்டை மேம்பாலப் பணிகள் நான்கு ஆண்டுகளாகியும் நகரவேயில்லை.

# தொழிற்சாலை மாசு மற்றொரு சுகாதாரப் பிரச்சினை. மாசுக் கட்டுப்பாட்டுக்கு உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எண்ணெய்க் கசிவால் தண்டையார்பேட்டையில் நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பது மக்களைக் கோபத்தில் தள்ளியிருக்கிறது.

# பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததியர் காலனி, மகாகவி பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வலியுறுத்துகிறார்கள்.

# அரசு மருத்துவமனை என்றால், இங்கே ஸ்டான்லி மருத்துவமனைதான் பெரியது. அங்கு இன்னும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

# கழிவு மேலாண்மையில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, குப்பைகள் முறையாக அகற்றப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே சில இடங்களில் சாக்கடைகள் நிரம்பி வழிவதும் பெரும் பிரச்சினை.

# மக்களிடம் திருப்தியை உண்டாக்கியிருக்கும் விஷயங்கள் என்று மின் விநியோகம், ரேஷன் பொருட்கள் விநியோகம், அரசு மருத்துவ வசதிகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x