Last Updated : 15 Feb, 2014 04:23 PM

 

Published : 15 Feb 2014 04:23 PM
Last Updated : 15 Feb 2014 04:23 PM

பறந்து வந்த விருந்தினர்

காலையில் ரஹீம் வந்து ஈநாடு பத்திரிகையைக் கொடுத்து,”சார், பக்ஷியிலு லக்க பெடுத்தோமே கதா? தானிங்குறிஞ்சி நியூஸ் ஒச்சிந்தி” என்றார். படித்துக் காண்பிக்கச் சொன்னேன். ஆந்திராவில் பல ஆண்டுகள் இருந்தாலும் தெலுகு எழுத, படிக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உடனே அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிகை நண்பருக்கு போன் செய்து நன்றிகளைச் சொன்னேன்.

குளித்து விட்டு தலையைத் துவட்ட மொட்டை மாடிக்குச் சென்றேன். கூடவே எனது களக்குறிப்பேட்டையும் (field notebook) பேனாவையும் எடுத்துச் சென்றேன். பைனாகுலரை எடுத்துச் செல்லவில்லை. பறவைகளை பார்க்க ஆர்வம் இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பேடு அவசியம். பார்த்ததை உடனே எழுதி வைக்காவிட்டால் ஒரு சில மணி நேரங்களில் நிச்சயமாக மறந்து போய்விடும்.

முதன் முதலில் பார்த்தது பெண் ஊதாத் தேன்சிட்டு. எதிரே இருந்த கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருந்த நைந்து போன ஒரு சாக்கிலிருந்து சணலை அலகால் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தது. கூடு கட்டுவதற்காகத்தான். சற்று நேரத்திற்கெல்லாம் ஆண் ஊதாத் தேன்சிட்டு வந்து எதிரில் இருந்த மின்கம்பத்தில் அமர்ந்தது. அதன் பளபள கரு ஊதா நிறம் சூரிய ஒளியில் தகதகவென மின்னியது. என்ன ஒரு அழகான பறவை. வீச்..வீச்..வீச்...எனக் கத்தியது.

சற்று நேரத்திற்கெல்லாம் இன்னுமொரு ஆண் ஊதாத் தேன் சிட்டு அப்பக்கமாக வந்ததும் அதைத் துரத்த ஆரம்பித்தது. இரண்டும் கத்திக் கொண்டு, ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டே பறந்து சென்றன.

அடுத்ததாகப் பார்த்தது சிட்டுக்குருவிகளை (2- ஆண், 2-பெண்). மைனாக்கள் (4) பறந்து சென்றன. மறுபடியும் ஊதா தேன்சிட்டு ஒன்று வந்து வீட்டின் எதிரிலிருந்த மசூதியின் கூரான கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கத்த ஆரம்பித்தது. முதலில் வந்து போனதாகத்தான் இருக்கவேண்டும். மீண்டும் அதை எனது எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவில்லை. சற்று நேரத்தில் பெண் ஊதா தேன்சிட்டு மீண்டும் சணலை பிய்த்து எடுத்துக் கொண்டு போனது.

தூரத்தில் இரண்டு காகங்கள் வீட்டின் தண்ணீர்த் தொட்டியின் மேல் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தன. உண்ணிக்கொக்கு ஒன்று தலைக்கு மேலே பறந்து சென்றது. கீ...கீ..என்ற குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ஒரு பச்சைக்கிளி எங்கோ வேகமாகப் பறந்து போய்க்கொண்டிருந்தது. ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. ஆண் என்றால் கழுத்தில் கருப்பும் சிவப்புமாக ஒரு வளையம் இருக்கும்.

அடுத்ததாகப் பார்த்தது நீலவால் பஞ்சுருட்டான். நீர்நிலைகளுக்கு அருகில் அதிகம் வலம் வரும் இப்பறவை ஊருக்குள் என்ன செய்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. ஒரு வேளை அவ்வழியாகப் பறந்து செல்லும் போது பூச்சிகளைக் கண்டு பிடிக்க வந்திருக்குமோ என்னவோ. இது ஒரு வலசை வரும் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் இருக்கும் ஊரின் பெயர் பத்வேல். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். கட்டிடங்கள் நிறைந்த ஆங்காங்கே ஓரிரு மரங்களுடன் கூடிய அந்தப் பகுதியில் இருபது நிமிட நேரத்திற்குள் இத்தனை பறவைகள். வீட்டினுள் தொலைபேசி மணி அடிக்கும் ஓசை கேட்டதும் உடனே பறவை பார்த்தலை முடித்துக் கொண்டு கீழே வந்தேன்.

என்னவோ தெரியவில்லை அன்று காலை மின்வெட்டு இல்லாமல் இருந்தது. பொதுவாக இங்கு பகலில் மின்சாரம் இருக்காது. உடனே கணினியை திறந்து எனது பறவைப்பட்டியலை (bird checklist) eBird-ல் உள்ளிட்டேன்.

சேலத்திலிருந்து கணேஷ்வர் எனும் பறவை ஆர்வலர் மகிழ்ச்சி ததும்ப ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கண்ணன்குறிச்சி ஏரியில் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை 6:30 மணிக்கு ஏழு பூநாரைகள் பறந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அதை உடனடியாக பகிர்ந்திருந்தார். அந்த இடத்தில் அந்தப் பறவையை பார்ப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், தன் வாழ்வில் இது ஒரு அற்புதமான தருணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். படிக்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அந்த கணத்தை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார். அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அது போன்ற தருணங்களை அனுபவித்தவன் நான். பறவை பார்த்தலில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அதை நன்கு உணர்வார்கள்.

அந்த ஒரு நிகழ்வில் ஏற்படும் குதூகலத்தையும், பூரிப்பையும் வார்த்தையில் சொல்லி விளக்க முடியாது. அதை அனுபவிக்க வேண்டும்.

இது போன்ற (GBCC) திட்டங்களை நடத்துவது ஏதோ பறவைகளை எண்ணுவதற்கும், பட்டியலைப் பதிவு செய்வதற்காக மட்டுமல்ல. இயற்கையின் விந்தைகளை அனைவரும் கண்டுணரவும், அனுபவித்து மகிழவும் வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தான்.

இதுபோன்ற இயற்கையின் தரிசனங்கள் தான் நாம் வாழும் இப்பூமிப் பந்தினை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் வித்திடும்.

இணையதளம்: >http://www.birdcount.in/events/gbbc/

தமிழில்: >http://uyiri.wordpress.com/2014/02/10/gbbc/

ப. ஜெகநாதன்- பறவை ஆர்வலர், தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x