Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

அப்பன் வேலையை பார்க்கும் பிதாமகள்

‘‘தான் பெத்த மக்கள ஒரு நல்லவன் கையில புடிச்சுக் குடுக்க ணும்கிறதுதான் ஒவ்வொரு தகப்பனுக்கும் கவலையா இருக்கும். அப்படி நெனச்சுத்தான் எங்கப்பனும் ஒருத்தனுக்கு என்னைய கட்டிக் குடுத்துச்சு. அவன், பெத்தவ பேச்சக் கேட்டு என்னைய மாட்டைவிட கேவலமா நடத்துனான். ஆறு மாசம்தான். ‘போங்கடா நீங்களும் ஒங்க கல்யாணமும்’னு சொல்லிட்டு அப்பங்கிட்டயே வந்துட்டேன்’’ - கசந்துபோன கல்யாண வாழ்க்கையை கண்ணீரில் நிறுத்தினார் சின்னத்தாயி.

தேனி - பெரியகுளம் சாலையிலுள்ள கைலாசபட்டியின் வெட்டியாள் சின்னத்தாயி. தான் வைத்திருந்த ‘வெட்டியான்’ செங்கோலை உயிர் பிரியும் நேரத்தில் மகள் சின்னத்தாயிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார் காளியப்பன்! ஐந்து வருடங்களாக கைலாசபட்டி சுடுகாட்டில், பிணங்களை சாம் பலாக்கி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் சின்னத்தாயி.

‘‘புருஷன் வீட்டை விட்டு வந்து பதினஞ்சு வருஷமாச்சு. ஆறுதலா இருந்த அப்பன், அஞ்சு வருஷத்துக்கு முந்தி கண்ணை மூடிருச்சு. மூச்சு நிக்க ப்போற நேரத்துல, ‘நான் கண்ண மூடிட்டா, வெட்டியான் வேலைய எம்மக பாத்துக்குவாய்யா’னு சொல்லி நாட்டாமை கையில வேப்பங்கொத்தை குடுத்துட்டுப் போயிருச்சு. அப்பன் வேலைய பாக்க அண்ணன்மாருங்களுக்கு இஷ்டமில்லை. தம்பி பயப்படுறான். அதனால, நானே பார்க்க ஆரம்பிச்சிட்டேன். பொதைக்கிறதவிட சுடுறதுல வேலை ஜாஸ்தி. கூலி 700 ரூபா கிடைக்கும். அதில்லாம, வருஷத்துக்கு அஞ்சு மூட்டை நெல்லு குடுப்பாங்க. நல்ல நாள் பெரிய நாளுக்கு சீலை எடுத்துக் குடுத்து, சோறு வாங்கிட்டுப் போக வரச் சொல்லுவாங்க’’ வாழ்க்கையை வார்த்தைகளில் வாசித்தார் சின்னத்தாயி.

‘‘எல்லாரும் காலையில எந்திரிக்கிறப்ப, தங்களோட தொழில் நல்லா இருக்கணும்னுதான் கும்புடுவாங்க. நான், ‘இன்னைக்கு நமக்கு வேலை ஏதும் வந்துடக்கூடாது. ஊருக்குள்ள எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி களா’ன்னுதான் வேண்டிக்குவேன்’’ என்று நெகிழ வைக்கிறார் சின்னத்தாயி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x