தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடி செலவில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் இரண்டு அலகுகளை கொண்ட மிக உய்ய (Super Critical) அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து முதல் அலகில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்து, மின் உற்பத்தி சீராக இருந்ததை தொடர்ந்து முதல் அலகின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை திறந்து வைத்து மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்த ராவ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்கு தளத்தை பார்வையிட்டனர்.
உடன்குடி அனல்மின் நிலையம் மிக உய்ய அழுத்த கொதிகலன் மற்றும் அதிக செயல்திறன் சுழலியுடன் (Supercritical Boiler with High Efficiency Turbine) நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இரண்டாவது அலகில் சோதனை ஓட்டம் சில வாரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனைகளும் முடிந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரண்டாவது அலகும் மின் உற்பத்தியை தொடங்கி, இரண்டு அலகுகளும் முழுத்திறனில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வளாகத்தில், மேலும் மூன்று அலகுகள் நிறுவிட விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது உள்ள இரண்டு அலகுகளுக்கும், இனிவரும் மூன்று அலகுகளுக்கும் நிலக்கரி கொண்டுவர பிரத்தியேக கப்பல்தளமும், மூடிய கன்வேயர் அமைப்பும் கட்டப்பட்டுள்ளது. இந்த கரி கப்பல் தளமானது, கடலுக்குள், கரையில் இருந்து 9 கி.மீ தொலைவில், ஒரே நேரத்தில் இரண்டு அதிகொள்ளளவு கப்பல்களை கையாளும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கப்பல் தளத்தில் இரண்டு அதிவேக கரி கையாளும் இயந்திரங்கள் உள்ளன. கப்பல் தளத்திலிருந்து அனல் மின் நிலையத்துக்கு, சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி 9 கி.மீ மூடிய கன்வேயர் பெல்ட் வழியாக நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. கூடுதல் நிலக்கரியை சேமிக்க 6.80 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட திறந்த மற்றும் மூடிய கரி தளங்கள் உள்ளன. இந்த மின்நிலையத்தின் தேவைகளுக்காக, கடல் நீரில் இருந்து நன்னீர் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளன.
இந்த மின்நிலையத்தின் நன்னீர் தேவை அனைத்தும் கடல் நீர் சுத்திகரிப்பான் வழியாகவே பெறப்படுகிறது. இங்கு உற்பத்தி ஆகும் சாம்பலை சேகரித்து, சிமென்ட் ஆலைகள் மற்றும் செங்கல் தயாரிப்பாளர்களுக்கு அளித்திட நான்கு சாம்பல் குதிர்கள் உள்ளன.
இங்குள்ள ஆயிரக்கணக்கான உபகரணங்களை கையாள உலகத் தரமான கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் உடன்குடி அனல்மின் நிலையம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.