வைகோ: கோப்புப்படம் 
தமிழகம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? - வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

செய்திப்பிரிவு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழிவுப் பணிகள் எதையும் மேற்கொள்ள இயலாத அளவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, சுற்றுச்சூழல், காடுகள், காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சகத்துக்கு வைகோ எழுத்துபூர்வமாக அனுப்பிய கேள்விகள்:

"வரைமுறை இல்லாமல் மரங்களை வெட்டியதாலும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்ற தொழிற்கூடங்களை நிறுவியதாலும், காடுகளை அழித்ததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழல் கெட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய, அறிஞர்கள் குழு ஏதும் அமைக்கப்பட்டு இருக்கின்றதா? அத்தகைய அறிக்கை ஏதேனும் பெறப்பட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதன் பரிந்துரைகள் என்ன? சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன?" ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

வைகோவின் கேள்விகளுக்கு சுற்றுச்சூழல் துறையின் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துபூர்வமாக அளித்துள்ள விளக்கம்:

"மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவை, 4.3.2010 அன்று அமைத்தது. அந்தக் குழுவினர், 31.8.2011 அன்று, தங்களுடைய ஆய்வு அறிக்கையை வழங்கினர்.

அவர்களுடைய பரிந்துரைகளின்படி, முனைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில், உயர்நிலை செயலாக்கக் குழு ஒன்றை, 17.8.2012 அன்று, அரசு அமைத்தது. அவர்கள், மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் கருத்துகளைப் பெற்று, நேர்மையோடும், நடுநிலைமையோடும் செயல்பட்டு, பரிந்துரை வழங்க வழி ஏற்பட்டது. அந்த உயர்நிலை செயலாக்கக் குழு, 15.4.2013 அன்று அறிக்கை வழங்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வரையிலும், 59 ஆயிரத்து 940 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்டது. அதற்கு உள்ளே, அடர்த்தியான காடுகளும், அரியவகை செடி கொடிகளும் இருக்கின்றன; இடைவெளியுடன் கூடிய சிறிய காடுகள், குறைந்த அளவில் மக்கள் வாழும் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உலகப் பண்பாட்டு மையங்களும் இருக்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கைச் சூழலைக் கெடுக்கின்ற எந்தவிதமான அழிவுப் பணிகளுக்கும் அரசு ஒப்புதல் தரக் கூடாது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 13.11.2013 அன்று, அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.

மேலும், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கின்ற 56 ஆயிரத்து 825 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை, மிகவும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக, 10.03.2014 அன்று அறிவிக்கை வெளியிட்டது.

அதன்படி, அந்தப் பகுதியில் அழிவுப் பணிகள் எதையும் மேற்கொள்ள இயலாத அளவுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, தொடர்புடையவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக, அந்த அறிவிக்கை, 04.09.2015, 27.02.2017 மற்றும் 03.10.2018 ஆகிய நாள்களில் மறுவெளியீடு செய்யப்பட்டது".

இவ்வாறு பாபுல் சுப்ரியோ பதில் அளித்துள்ளார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT